உம்மை என்பது தமிழ் மொழியில் வழங்கும் பெயர், வினை, இடை, உரி எனப்படும் நால்வகைச் சொற்களுள் இடைச் சொல் வகையினைச் சார்ந்ததாகும். ‘உம்’ என்னும் இடைச்சொல் ‘ஐ’ என்னும் சாரியை சேர்ந்து உம்மை என வழங்குகிறது. அதன் பொருள் ‘உம்’ என்னும் இடைச்சொல்லின் பொருளேயாகும். இடைச்சொல்லினை விளக்கும் தொல்காப்பியர், ‘இடையெனப் படுப பெயரொடும் வினையொடும் நடைபெற்றியலும், தமக்கு இயல்பிலவே’ (தொல்.சொல்.இடை. 1) என்று கூறியுள்ளார். உம் என்னும் இடைச்சொல் எச்சம், சிறப்பு முதலான பொருள்களை உடையதேனும், பெயரையோ வினையையோ சார்ந்து வந்தாலன்றித் தனித்த நிலையில் அப்பொருளை உணர்த்தாது. ‘உம்’ என்னும் இடைச்சொல் உணர்த்தும் பொருளைத் தொல்காப்பியர், ‘எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை, முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கமென்று அப்பால் எட்டே உம்மைச் சொல்லே’ என்னும் நூற்பாவில் (தொல்.சொல்.இடை. 7) உணர்த்தியுள்ளார். இதனை இவ்வாறே ஏற்றுக் கூறிய நன்னூலார், எண் என்பதனை அளவை என்னும் சொல்லாற் குறிப்பிட்டுள்ளார். உணர்த்தும் பொருள் வேறுபட்டால் உம்மை, எச்சஉம்மை, சிறப்பும்மை, ஐயஉம்மை, எதிர்மறை உம்மை, முற்றும்மை, எண்ணும்மை, தெரிநிலைஉம்மை, ஆக்க உம்மை என்று எட்டு வகைப்படும். எஞ்சி நிற்பதனை உணர்த்துவது எச்சம் ஆகும். அவ்வகையில் அமையும் எச்சவும்மை, இறந்தது தழீஇய எச்சவும்மை என்றும், எதிரது தழீஇய எச்சவும்மை என்றும் இருவகைப்படும். ‘சாத்தனும் வந்தான்’ என்று கூறியவிடத்து, அத்தொடர் சாத்தன் வந்தமையேயன்றிக் கொற்றனும் வந்தான் என்னும் பொருள் பயக்குமாயின், ‘சாத்தனும் வந்தான்’ என்பதிலுள்ள உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை யாகும். அவ்வாறே, ‘சாத்தனும் வருவான்’ கூறியவிடத்து, அத்தொடர் சாத்தன் வருவதேயன்றிக் கொற்றனும் வருவான் என்னும் பொருள் பயக்குமாயின், ‘சாத்தனும் வருவான்’ என்னும் தொடரிலுள்ள உம்மை எதிரது தழீஇய எச்ச–உம்மை எனப்படும். இதனை, நச்சினார்க்கினியர் வேறு வகையாகவும் விளக்குவர். மேலும், எச்சவும்மையினை முற்றும் தழுவுதல், ஒருபுடை தழுவுதல் என வகைப்படுத்திக் கூறுவதும் உண்டு. ஒருவன், ‘யான் கருவூருக்குச் செல்வேன்’ என்று கூறக்கேட்ட மற்றொருவன், ‘யானும் அவ்வூர்க்குச் செல்வேன்’ என்று கூறுவானாயின், அவன் கூற்றில் யானும் என்பதிலுள்ள உம்மை, ‘கருவூருக்குச் செல்லல்’ என்னும் கருத்து முழுவதையும் உடன்பட்டு நிற்கிறது. கேட்டவன் அவ்வாறு கூறாமல், ‘யானும் உறையூர்க்குச் செல்வேன்’ என்று கூறுவானாயின் அப்பொழுது அவன் கூற்று, ‘செல்லுதல்’ என்பதனோடு உடன்பட்டும், ‘கருவூருக்கு’ என்பதனோடு உடன்படாமலும் அமைகிறது. அப்பொழுது, யானும் என்பதிலுள்ள உம்மை, ஒருபுடை தழுவிய எச்சவும்மையாகும். சிறப்பும்மை உயர்வு சிறப்பும்மை என்றும் இழிவு சிறப்பும்மை என்றும் இருவகைப்படும். ஒரு பொருளின் உயர்வினைச் சிறப்பித்துக் கூறுவது உயர்வு சிறப்பு என்றும், இழிவினைச் சிறப்பித்துக் கூறுவது இழிவு சிறப்பு என்றும் பொருள்படும். ‘குறவரும் மருளும் குன்று’ என்னும்போது, மலையினைக் கண்டு மருளாத இயல்புடைய குறவர்களும் கண்டு மருளும் தன்மையது என அக்குன்றின் தன்மையைச் சிறப்பித்துக் கூறுவதால் அதன்பால் அமைந்துள்ள உம்மை உயர்வு சிறப்புமமையாகும். ‘நாயும் உண்ணாத உணவு’ என்னும் தொடர், எதனையும் உண்ணும் நாயும் உண்ணாத நிலையில் அமைந்த மிக இழிந்த உணவு எனப் பொருள்படுகிறது. இங்கு நாயும் என்பதிலுள்ள உம்மை இழிவு சிறப்பும்மையாகும். ‘அவன் போரில் வெல்லினும் வெல்வான்’ என்று கூறுமிடத்து, அத்தொடர் போரில் வெல்வான் என்றோ தோற்பான் என்றோ தெளிவுறப் பொருள் தாராமல், வென்றாலும் வெல்லுவான் தோற்றாலும் தோற்பான் என்னும் ஐயப்பொருள் தந்து நிற்பதால் ‘வெல்லினும்’ என்பதில் உள்ள உம்மை ஐயவும்மை எனப்படும். ‘கொற்றன் வருவதற்கும் உரியன்’ என்று கூறுமிடத்து அத்தொடர், அவன் வாராமைக்கும் உரியன் என்னும் பொருளையும் தந்து நிற்கிறது. அதனால் அத்தொடரில் ‘வருவதற்கும்’ என்பதிலுள்ள உம்மை எதிர்மறை உம்மை எனப்படும். சேர சோழ பாண்டியர் ஆகிய மூவரும் வந்தார் என்னும் தொடர் தமிழகத்தை ஆண்டவர் மூவர் என்றும், அம்முவேந்தர்களும் வந்தனர் பொருள்தந்து நிற்கிறது. எஞ்சாமைப் பொருட்டாகிய அனைவரும் என்பதனை ‘மூவரும்’ என்பதிலுள்ள உம்மை புலப்படுத்துவதால் அது முற்றும்மை எனப்படும். இரண்டு அல்லது இரண்டிற்கு மேலாகச் சொற்களை இணைத்து, அவை உணர்த்தும் பொருளை ஒன்றோடொன்று எண்ணிக் கொள்ளுமாறு அமையும் உம்மை எண்ணும்மை எனப்படும். ‘நிலனும் நீரும் தீயும் வளியும்’ என்பதில் சொற்களுக்கு இடையே அமைந்துள்ள உம்மை, அச்சொற் பொருள்களை எண்ணிக் கொள்ளும் பாங்கில் அமைவதால் எண்ணும்மை எனப்படும். ‘இரு அடிகளும் நிலத்தில் தோய்வதனால் இவள் திருமகளும் அல்லள்; அரமகளும் அல்லள்; இவள் யாராகும்’ என எண்ணும்போது இதன்கண்ணுள்ள உம்மை இவள் திருமகளா அரமகளா என்று ஐயமுற்று வினவுவதற்காக அல்லாமல் மற்றுயார் என்று ஆராய்வதற்காக அமைந்துள்ளமையால் இது தெரிநிலைஉம்மை எனப்படும். ‘பாலும் ஆயிற்று’ என்னும்போது அதுவே மருந்தும் ஆயிற்று என்னும் பொருள் தந்து நிற்பதால் ‘பாலும்’ என்பதிலுள்ள உம்மை ஆக்க உம்மையாகும். சொற்களிடையே உம்மை விரிந்து நிற்பதேயன்றித் தொக்கு நிற்பதும் உண்டு. இராப்பகல் என்பது இரவும் பகலும் என்று பொருள் படுங்கால் உம்மைத் தொகையாகும். உம்மைத் தொகை உம்மையால் இணைக்கப்பட்ட சொற்பொருளை எண்ணும் வகையில் அமையும். உம் உன்னும் இடைச்சொல் பலர்பால் ஒழிந்த படர்க்கை நிகழ்கால எதிர்கால முற்றுக்களின் விகுதியாக அமையும். அவன் செய்யும்; அவள் செய்யும்; அது செய்யும்; அவை செய்யும் என்பன எடுத்துக்காட்டாகும். நீங்கள் இதனைச் செய்யவேண்டும் என்னும் பொருளில், ‘நீர் செய்யும்’ என்று கூறும் போது உம்மை ஏவற்பன்மையாக அமைந்துள்ளது. நடப்பதாக எனப் பொருள்படும் ‘நடக்கட்டும்’ என்னும் சொல்லில் உம்மை வியங்கோள் துணை விகுதியாக அமைந்துள்ளது. ‘வரும் பையன்’ என்னும் போது உம்மை எதிர்காலப் பெயரெச்ச விகுதியாக உள்ளது. உம்மை இடைச்சொல் சிலவிடங்களில் விரைவுப் பொருளை உணர்த்தி நிற்பதுண்டு. ‘நனவிற்புணர்ச்சி நடக்கலும் ஆங்கே’ என்னும் கலித்தொகைப் பகுதியில் (கலி. 39–35), ‘நடக்கலும்’ என்பதிலுள்ள உம்மை நடந்த உடனேயே என்னும் விரைவுப் பொருளை உணர்த்தி நிற்கிறது. இதனை, ‘உம்மீற்று வினையெச்சம், விரைவுதோன்ற நின்றது’ என்று நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளார். உம்மை, செய்யுளில் அசையாகவும் இடம் பெறுவதுண்டு. ‘காமக்கடல் மன்னும் உண்டே’ என்னும் திருக்குறள் தொடரில், மன், உம் ஆகிய இரண்டும் அசைநிலைகள் என்று பரிமேலழகர் காட்டியுள்ளார். உம்மை என்பது உம் என்னும் இடைச்சொல்லை உணர்த்தாமல், மறுபிறப்பு மறுவுலகம் என்ற பொருளைத் தருதலும் உண்டு. அப்போது சொல்லின் தொடக்கத்திலுள்ள உகரம் சுட்டுப் பொருளதாகும். உம் என்னும் இடைச்சொல் சிலவிடங்களில் உந்து என்று திரிந்து நின்று அதேபொருளை உணர்த்துதலும் உண்டு. உம் என முடியும் பெயரெச்சமே இவ்வாறு திரியும், ‘நீர்க்கோழி கூய்ப்பெயர்க்குந்து’ (புறம். 395–11) என்னும் போது, பெயர்க்கும் என்னும் பெயரெச்சம் பெயர்க்குந்து என்று திரிந்து பொருள் மாறுபடாது நிற்கிறது. இவ்வாறாதலைத் தொல்காப்பியர், ‘உம் உந்தாகும் இடனுமாறுண்டே’ (தொல். சொல். இடை. 44) என்று கூறியுள்ளார்.