அரிசுடைடு பிரியாண்டு
aricuṭaiṭu piriyāṇṭu
பிரான்சு நாட்டின் தலைமை அமைச்சராகப் பதினொரு முறை ஆட்சிபுரிந்தவர்.
பிரான்சு நாட்டின் தலைமை அமைச்சராகப் பதினொரு முறை ஆட்சிபுரிந்தவர். நான்டெசு (Nantes), என்னும் ஊரில் பிறந்த இவர், வழக்குரைஞராகவும் பத்திரிக்கையாளராகவும் பணியாற்றியபின், 1902-இல் சமதருமவாதி (Socialist)யாகப் பொதுமக்கள் அவையின் உறுப்பினரானார். இவர் அப்பதவியைத் தம் வாழ்நாள் முழுவதும் அனுபவித்தவர். இவர் பிரான்சு நாட்டில் திருச்சபைக்கும் அரசுக்கும் இருந்த அறுபடாத தொடர்பை எதிர்த்துச் சட்ட முன்வரைவொன்றைக் கொணர்ந்தபோது பொதுமக்களின் கருத்தைக் கவர்ந்தார். கி.பி. 1906–இல் தீவிரவாதிகளும் முடியரசுக் கட்சியினரும் இணைந்த கூட்டாட்சியில் அமைச்சராகப் பொறுப்பேற்றார். இதன் விளைவாகக் கட்சியிலிருந்து சமதருமக்கட்சி இவரைக் வெளியேற்றியது. கிளமன்சு (Clemenceau) என்பாரின் அமைச்சரவையில் இவர் நீதித்துறை, பொது வழிபாட்டுத் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். 1909–இல் இவர் தலைமை அமைச்சரானார். தொழிலாளர் குழப்பத்தைக் கட்டுப்படுத்த இவர் அரும்பாடுபட்டார். 1915 முதல் 1917 வரை முதல் உலகப் போரின் போது தலைமை அமைச்சராகப் பதவி வகித்த பிரியாண்டு, தீர்மானமான முடிவுக்கு வர இயலாத தலைவராக இருந்தமை இவருடைய பெருங்குறையாகும். எனினும் 1920–இல் சர்வதேசச்சங்கத்தின் (League of Nations) இன்றியமையாமையினை வலியுறுத்திப் புகழ் பெற்றார். 1926–இல் இவருக்கும் இசுட்ரெசுமன் (Stresemann) என்பாருக்கும் கூட்டாக, அமைதிக்கான நோபெல் பரிசு கிட்டியது. 1927–இல் அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெளியுறவு அமைச்சராக இருந்த கெல்லாக்கு (Kellogg) என்பாருடன் இணைந்து பன்னாட்டு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கினார், போர் வெறியைத் தவிர்க்க வேண்டிக்கொள்ளும் அவ்வொப்பந்தத்தை 65 நாடுகள் ஆதரித்தன. அரிசுடைடு பிரியாண்டு (Aristide Briand) 1932–இல் காலமானார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 784)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6h3f3g7e/
தமிழ்“அரிசுடைடு பிரியாண்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6h3f3g7e/APA
Oliyon Research. (2026). அரிசுடைடு பிரியாண்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6h3f3g7e/MLA
"அரிசுடைடு பிரியாண்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6h3f3g7e/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment