வேளாண்மை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களாகும். தனியார் முயற்சியினாலோ கூட்டுறவு முயற்சியினாலோ பொதுத் துறை முயற்சியினாலோ இப்பண்ணைகள் அமைகின்றன. பொதுத் துறை முயற்சியில் அமையும் பண்ணைகள், அரசுப் பண்ணைகள் (State Farms) எனப்படும். இங்கு அரசு என்பது, பொதுத் துறை (Public Sector) என்கிற பொருளில் அமைகிறது. பொதுவுடைமை நாடுகளில் வேளாண்மை உற்பத்தி முழுவதும் அரசுப் பண்ணைகளில் நடைபெறுகிறது. அங்குத் தனியார் நிலவுரிமை வழக்கில் இல்லை. இந்தியாவில் வேளாண்மைத் தொழில் பெரும்பாலும் தனியார் துறையிலும், ஓரளவு கூட்டுறவு முறையிலும், மிகச் சிறிய அளவில் பொதுத் துறையிலும் நடைபெறுவதால், அரசுப் பண்ணைகள் எண்ணிக்கையிலும் உற்பத்தி அளவிலும் மிகக் குறைவாகவே உள்ளன. அரசுப் பண்ணைகள் அரசிற்குச் சொந்தமான அல்லது தனியாரிடமிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்ட (Leased in) நிலத்தில் அமையலாம். எனவே, இங்கு அரசுப் பண்ணைகளின் அடிப்படைத் தன்மை, பொதுத் துறை உற்பத்தி முயற்சியே தவிரப் பொதுத் துறை நிலவுரிமை (Public Ownership of Land) அன்று. மேலும், இந்தியாவில் அரசுப் பண்ணைகள் சில குறிப்பிட்ட நோக்கங்களுக்காக இயங்குகின்றன. இங்குள்ள அரசுப் பண்ணைகளைப் பலவாறாக வகைப்படுத்தலாம். முதலாவதாக, வேளாண்மை என்பது, பயிர்ச் சாகுபடி மட்டுமன்று; உயிரியல் உற்பத்தி முறைகள் (Biological Production Process) சார்ந்த பலதொழில் முயற்சிகளையும் உள்ளடக்கியது. பன்றி வளர்த்தல், பட்டுப் புழு வளர்த்தல், தேனீ வளர்த்தல், காளான் உற்பத்தி, தோட்டக்கலை, மலை வேளாண்மை, கால்நடைப் பண்ணை, கோழிப் பண்ணை, மீன் பண்ணை, காடு வளர்ப்பு என்று அரசுப் பண்ணைகள் பல துறைகளில் அமைந்துள்ளன. அரசுப் பண்ணைகள் சில குறிப்பிட்ட நோக்கங்களுக்காகச் செயற்படுவன. எனவே, அந்த நோக்கங்களின் அடிப்படையிலும் அவற்றை வகைப்படுத்தலாம். 1) இனப்பெருக்கப் பண்ணை: இது பயிர், விலங்கினங்கள், மீன் போன்றவற்றின் பல இனங்களைப் (Species) பாதுகாத்துப் புது இன உற்பத்திக்குப் பயன்படுத்தும் நோக்கம் கொண்டது. 2) ஆராய்ச்சிப் பண்ணைகள்: இனப்பெருக்கம், பயிர்செய் நேர்த்தி, பயிர்ப் பாதுகாப்பு, மண்வளம், இயந்திரம், மற்றும் கருவிகளின் வடிவமைப்புப் பொருளாதாரம் முதலிய பல துறைகளில் ஆய்வு நடத்த இப்பண்ணைகள் பயன்படுகின்றன. 3) விதைப் பண்ணைகள்: நேர்த்தியான வித்துக்களை உற்பத்தி செய்வது இவற்றின் நோக்கம். இவை விதை உற்பத்திப் பண்ணைகள், விதைப் பெருக்கப் பண்ணைகள் (Seed Multiplication Farms) என இரு வகைப்படும். முன்னது, அடிப்படை விதைகளை (Breeder's Seed) உற்பத்தி செய்வது; பின்னது, அடிப்படை விதைகளைப் பெற்று அவற்றைப் பெருக்கி உழவர்களுக்கு அளிப்பது. 4) நாற்றுப் பண்ணைகள்: பழச் செடிகள், பூச்செடிகள், மரக் கன்றுகள் ஆகியவற்றைப் பெருக்குவதே இப்பண்ணைகளின் நோக்கம். 5) விளக்கப் பண்ணைகள்: இவை பலவகைச் சாகுபடி முறைகளையும், பண்ணை வரவு–செலவுத் திட்டம், பண்ணை நிருவாகத் திட்டம் (Farm planning), பயிர்ப் பாதுகாப்பு முறைகள், பயிர்செய் நேர்த்திகள் ஆகியவற்றைச் செய்து காட்டி விளக்கும் நோக்கம் கொண்டவை. 6) மாதிரிப் பண்ணைகள்: இவை உழவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்தவை. 7) வணிக நோக்கப் பண்ணைகள்: இவை பொது விற்பனைக்காகப் பொருள்களை உற்பத்தி செய்யும் பண்ணைகள், மீன் குஞ்சுகள், இறைச்சிக் கோழி (Broiler Farms), முட்டை, பால், காய், கனி வகைகள், காளான் வகைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து, விற்பனை செய்வது இவற்றின் நோக்கம். 8) பன்னோக்குப் பண்ணைகள்: மேற்சொன்ன நோக்கங்களுள் ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்களுடன் இயங்குவன பன்னோக்குப் பண்ணைகன் (Multipurpose Farms) எனப்படும்.எஸ்.வ.