சூழ் வலைகள்
cūḻ valaikaḷ
ரோமானியர்களே சூழ் வலைகளை (seines) முதன் முதலில் பயன் படுத்தியவர்கள்.
ரோமானியர்களே சூழ் வலைகளை (seines) முதன் முதலில் பயன் படுத்தியவர்கள். ஆழமற்ற கடற்கரைப் பகுதிகளுக்குக் கூட்டங் கூட்டமாகச் சேர்கின்ற நெத்திலி (anchovies), பாறை (carangids) போன்ற மீன்களைப் பெருமளவில் பிடிக்கவே இத்தகைய வலைகள் பயன்படுகின்றன. சூழ் வலைகள் (trawl nets) உருவ அமைப்பில் இழு வலைகளை ஓரளவு ஒத்திருந்தாலும், இயக்கத்தில் இரண்டும் மாறுபட்டுள்ளன. இழுவலைகள் தோணியின் விசையோடு, பல பகுதிகளின் அடிமட்டத்தில் சென்று, மீன், இறால், நண்டு போன்றவற்றைச் சேகரிக்கும். சூழ் வலைகள் ஒரே இடத்திலுள்ள மேல் மட்ட மீன்களைச் சேகரிக்கும். சூழ்வலைகள் பையுள்ள வலைகள், பையற்ற வலைகள் என இரு வகைப்படும். பையுள்ள வலைகள் வால் பகுதியில் புனல் போன்ற பையையும் (bag) அதிலிருந்து பக்கத்திற்கொன்றான சிறகு போன்ற அமைப்பையும், சிறகுகளின் முடிவில் வலிமை இழு கயிறுகளையும் பெற்றிருக்கும். பையுள்ள சூழ் வலைகளில் இரண்டு சிறகுகளின் மையத்திலோ, ஒரு சிறகின் மையத்திலோ பைகள் அமைந்திருக்கும். மேலும், ஒரே சூழ்வலையில் பல பைகளும் காணப்படும். பல செவ்வக வலைத் துண்டுகளால் ஆக்கப்பட்ட பையற்ற வலைகள், முடிவில் வலிவான இழு கயிறுகளைக் கொண்டிருக்கும். (படம் 1–3). இரண்டாம் வகை வலைகளில் பை இல்லாவிடினும், மீன்களைச் சேகரிப்பதற்கு ஏற்ற குமிழ் போன்ற தொய்வான அமைப்புகள் இருக்கும்.
கடற்கரைச் சூழ் வலைகளின் (Beach seines) அமைப்பு. பைகளற்ற சூழ் வலைகள் பருத்தி அல்லது சணலால் ஆக்கப்பட்டவை. 2–6 மீ. நீளமும் 5–11 மீ. உயரமும் கொண்ட, 100–600 செவ்வக வலைத் துண்டுகளால் இவ்வலைகள் உருவாக்கப்படும். ஓரத் துண்டுகளில் 3–5 செ.மீ. துளைகளும் (mesh apertures). நடுத் துண்டில் 1.2–2 செ.மீ துளைகளும் இருக்கும். இச் சூழ் வலைகளின் வால் பகுதியில் பைகள் அமைந்திருக்கும். இப்பைகள் 7.5 மீ. நீளத்தையும் 2.7மீ. அகலத்தையும் கொண்டவை. பையின் இறுதியிலுள்ள துளைகள் 0.8 செ.மீ ஆகவும், வாய்ப் பகுதியில் உள்ள துளைகள் 1.7 செ.மீ. ஆகவும் இருக்கும். இறகு பகுதியின் ஒரு பக்க நீளம் 3–6 மீ. இதன் அடிப் பகுதித் துளை 15–23 செ.மீ ஆகும். இழு கயிற்றின் அண்மைப் பகுதி 60–90 செ.மீ ஆக இருக்கும். பையற்ற ஒரு பெரிய முழு வலையை இயக்க, 60–80 மனிதர்களும், ஒரு பெரிய தோணியும், 4 சிறு தோணிகளும் தேவை. வலையின் ஒரு பக்க இழு கயிற்றைக் கரையில் நிலைப் படுத்திய பிறகு, பெரிய தோணி ஒன்று 10–20 மனிதர்களுடன், வலையின் எஞ்சிய பாகத்தைக் கடலினுள் எடுத்துச் சென்று, குறிப்பிட்ட இடத்தில் அரை வட்ட வடிவமாக வலையை வீசியெறிந்த பிறகு,வலையின் மற்றோர் இழு கயிற்றைக் கரைக்கு எடுத்து வரும். இதன் பின், பெரிய தோணி சூழ் வலையின் நடுப் பகுதியில் நங்கூரத்தால் நிலைப்படுத்தப்படும். சிறிய தோணிகள் ஒவ்வொன்றிலும் 6–8 பேர் சென்று, மீன் கூட்டங்களைச் சூழ் வலைக்குள் துரத்துவர். எதிர் எதிர் உள்ள இழு கயிறுகளை 25க்கும் மேற்பட்டோர் கரையில் நின்றவாறே இழுத்து மீன்களைச் சேகரிப்பர். கரைச் சூழ் வலைகள் மூலம் அவ்வப்போது மீன்களைச் சேகரித்தாலும், 8 நாள் தொடர்ந்து இயக்கியும், மீன்களைச் சேகரிப்பதுண்டு.
சூழ் வலைகள் ஆழ் கடலில் முழுமையாகத் தோணிகளின் உதவி கொண்டு இயக்கப்படுவதுண்டு. இவ்வாறான சூழ் வலைகளைத் தோணிச் சூழ் வலை (boat seines) என்பர். உலகின் பல பகுதிகளில், இத்தகைய வலைகள் பேரளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏறத் தாழ, 500 பேரின் துணை கொண்டு, நியூசிலாந்து கடலில் இயங்கும் 2 கி.மீ நீளமுள்ள கரை வலைகள் குறிப்பிடத் தக்கவை. கரை வலைகள் தோணிகளின் துணை இல்லாமல், நன்கு நீந்தக் கூடிய மீனவர்களால், சில உலகக் கடல்களில் இயக்கப்படுவதும் குறிப்பிடத் தக்கது. எனினும், இத்தகைய சூழ் வலைகளை இயக்குவதற்குக் கரடு முரடற்ற தரைப் பகுதிகளும், அலை வேகம் குறைந்த பகுதிகளுமே மிகவும் ஏற்றவை.
சூழ் வலைகளை இயக்கும் போது ஏற்படும் ஒலியின் காரணமாக, மீன்கள் வலையினுள் வந்து சேர்வதற்கு வாய்ப்பு இருப்பினும், மிகுந்த ஒலியை உண்டாக்க இலை, இலைக் குச்சி போன்றவற்றை இழு கயிறுகளில் கட்டி, மீன்களைத் திகிலடையச் செய்வதுண்டு. எனினும், சூழ் வலைகளின் மீன் பிடி திறனை அதிகரிக்க, இவற்றில் மின்னாற்றலைப் பயன்படுத்தி, மீன்களை அச்சுறுத்தி ஒரே இடத்தில் நிலைக்காதவாறு செய்கின்றனர். இதற்குத் தாமிரக் கம்பிகளை மிதவைக் கயிற்றிலும், பளுக் கயிற்றிலும் இணைத்து, மின்னோட்டக் கம்பிகளாக (electrodes) அவற்றைப் பயன்படுத்தலாம். அருகில் நிலை நிறுத்தப்பட்ட தோணியிலிருந்து, மின் உற்பத்தி செய்து இக்கம்பிகளுக்கு அனுப்புவர். மீன்கள் பிடிபட்டவுடன், சூழ் வலைகளில் நீண்ட நேரம் இருக்க வேண்டியுள்ளமையால், இவ்வலைகளில் பயன்படக் கூடிய மின்ஆற்றலின் அளவைத் தேர்வு செய்வதில் கவனம் கொள்ள வேண்டும். பொதுவாக, மின்னாற்றல் பெறுகின்ற சூழ் வலைகளின் சிறகுப் பகுதிகள் குட்டையாகவே அமைக்கப் படும்.
—இரா, சந்தானம் நூலோதி. A.V. Brandt, Fish Catching Methods of the World, Fishing New (Books) Ltd., London, 1972; C.V. Kurian, and V.O. Sebastian, Prawns and Prawn Fisheries of India, Second Edition, Hindustan Publishing Corporation (India), New Delhi, 1982.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 703)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6cmm7xxu/
தமிழ்“சூழ் வலைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6cmm7xxu/APA
Oliyon Research. (2026). சூழ் வலைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6cmm7xxu/MLA
"சூழ் வலைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6cmm7xxu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment