(கி.பி. 1786–1846) தஞ்சை மாவட்ட உமையாள்புரத்தில் தோன்றிய கவிஞர். தாய் இலட்சமி; தந்தை சீனிவாச ஐயங்கார். இவர் தம் 13–ஆம் வயதில் தம்மூரிலுள்ள யானை மேலழகர்மீது ‘யானைமேலழகர் நொண்டிச் சிந்து’ பாடியுள்ளார்; திருக்கோயிலில் கணக்கர், தலைமைக் கணக்கர் (சம்பிரதி) ஆகிய தொழில் செய்து வந்தார்; திருவள்ளூரில் ஆசிரியராகப் பணியாற்றினார். திருவிடை மருதூர் இறைவன் மீது இவர் இயற்றிய நாடகத்தைக் கண்டு வியந்த அக்கோயில் அறங்காவலர் ஐயாறப்பத் தம்பிரான் இவருக்குக் ‘கவிராச சாமி’ என்று பட்டமளித்து. ஒரு வீடும் தோட்டமும் பரிசாக வழங்கினார். இவர் வைணவராயினும் சமயவேறுபாடின்றிச் சைவசமயத் தெய்வங்களைப் பாடியுள்ளார். சீர்காழி அருணாசலக் கவிராயர் பாடாதுவிட்ட உத்தரகாண்டத்தை ‘உத்தர ராமாயணக் கீர்த்தனை’ என்னும் பெயரில் பாடினார். இவர் நூல்கள் யானை மேலழகர் நொண்டிச் சிந்து, உத்தரராமாயணக் கீர்த்தனை, பாகவத தசமசுகந்த நாடகம், மருதூர் வெண்பா, முப்பால் திரட்டு, இடபவாகனக் கீர்த்தனை, கல்லணை வைபவக் கீர்த்தனை, திருவிடைமருதூர் நொண்டி நாடகம், வேதாந்த தேசிகர் கீர்த்தனை ஆகியவையாம், திருக்குடந்தைக் கும்பேசுவரசாமி மீது பாடிய இடபவாகன சேவைக்கீர்த்தனையையும், மத்தியார்ச்சுனம் பெருநலமாமுலை அம்மன்மீது பாடிய இடபவாகன சேவைக்கீர்த்தனையையும், மத்தியார்ச்சுனம் மருதீசர் மீது பாடிய இடபவாகன சேவைக்கீர்த்தனையையும் தொகுத்துக் ‘கீர்த்தனைக் கொத்து’ என்னும் பெயரில் வெளியிட்டார். இவர் தேசிகப் பிரபந்தம் என்னும் நூலையும் செய்துள்ளார்.த.கு.மு.