சிறுத்தைப் பூனை
ciṟuttaip pūṉai
பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த ஊனுண்ணியான சிறுத்தைப் பூனை, இந்தியா முழுதுமுள்ள அடர்ந்த காடுகளில் வாழ்ந்து, இரவு நேரத்தில் பறவை.
பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த ஊனுண்ணியான சிறுத்தைப் பூனை, இந்தியா முழுதுமுள்ள அடர்ந்த காடுகளில் வாழ்ந்து, இரவு நேரத்தில் பறவை. எலி முதலான சிறு விலங்குகளை வேட்டையாடி உண்கிறது. வீட்டுப் பூனையளவே உருவ அமைப்பும், சிறுத்தை போன்று தோலின் மேல் கோடுகளும், புள்ளிகளும் அமையப் பெற்ற சிறுத்தைப் பூனைக்கு வேட்டையாடி உண்ணும் தகவமைப்புக்கேற்ப, தாடை, பல், பாதம், நகம் முதலியவை அமைந்துள்ளன. நகங்களைத் தரையில் பதித்து, நான்கு கால்களால் நடக்கிறது. சிறுத்தைப் பூனை வஞ்சனையுடையது. கோழிப் பண்ணைகளில் புகுந்து, கோழிகளைத் திருடிச் சென்று விடும். பயிர் எதிரிகளான எலி, முயல் போன்ற விலங்குகளின் எண்ணிக்கை பெருகாமல் கட்டுப்படுத்துவதில், இது பேருதவி புரிகிறது. பேறு காலத்தில், மூன்று அல்லது நான்கு குட்டிகளை ஈனுகிறது.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> அழகும், கவர்ச்சியும் வாய்ந்த காட்டு விலங்கான இதை அமெரிக்காவில் புலிப் பூனை (tiger cat) என்கின்றனர். சிறுத்தைப் பூனை 60—100 செ.மீ. உடல் நீளமும், 25—40 செ.மீ. உயரமும், 3—4 கி.கி. உடல் எடையும் பெற்றுள்ளது. வீட்டுப் பூனையின் கால்கள் குட்டையானவை; ஆனால், சிறுத்தைப் பூனையின் கால்கள் நீளமானவை; உருண்டை வடிவமுள்ள இதன் வாலின் நீளம் 40 செ.மீ. ஆகும்.
சிறுத்தைப் பூனையின் மேற்புறத்தில் மஞ்சள் நிற மயிரும், வயிற்றுப் புறத்தில் வெள்ளை நிற மயிரும் காணப்படும். மயிர்ப் பரப்பின் மேல் கறுப்பு அல்லது பழுப்பு நிறப் புள்ளிகள் நிறைந்துள்ளன. மயிர்ப் பரப்பின் நிறமும், புள்ளிகளின் நிறமும், சிறுத்தைப் பூனையின் வகைக்கேற்ப, அமைப்பு முறையில் மாறுபடுகின்றன. வடக்குக் காஷ்மீர்க் காடுகளில் வாழ்கின்ற சிறுத்தைப் பூனையின் வயிற்றுப் புற மயிர் வெண்மையாக இல்லாமல், சாம்பல் நிறத்தில் உள்ளது. புள்ளிகள் நேர்கோடுகளாக அமைந்துள்ளன. பருமன் குறைந்த நான்கு கோடுகள், தலை உச்சியிலிருந்து இறங்கி, கழுத்துப் பகுதி வரை பரவியுள்ளன. கன்னத்தின் மேல் இணையான கிடை கோடுகள் காணப்படுகின்றன. கீழ்ப்புறக் கோடு தொண்டையிலமைந்துள்ள கறுப்புக் கோட்டுடன் சேர்கிறது. முன் கால்களின் உட்புறத்தில், இரண்டு கறுப்புக் கோடுகள் உள்ளன. வாலில் அமைந்துள்ள கறுப்புப் புள்ளிகள் வாலின் கறுப்புப் பட்டைகளாக மாறியுள்ளன.
சிறுத்தைப் பூனைகள் காஷ்மீர்—இமய மலைக் காடுகளிலிருந்து கன்னியா குமரி வரையுள்ள காடுகளில் பரவியுள்ளன. இவை வட கிழக்கு ஆசியாவின் வட பகுதியில் உள்ள மஞ்சூரியாவிலும், கொரியாவிலும் வாழ்கின்றன. இந்தியாவில் மூன்று வகைச் சிறுத்தைப் பூனைகள் உள்ளன.
புள்ளித் தோல் சிறுத்தைப் பூனை(Felis rubiginosa). தென்னிந்தியக் காடுகளிலும், காஷ்மீரின் சில பகுதிகளிலும் வாழ்கிறது. வீட்டுப் பூனை போன்று சாம்பல் நிறத்திலும், கோடுகள் பழுப்பு நிறத்திலுமுள்ளன. வட்ட வடிவச் சிறு புள்ளிகள் ஒழுங்கான வரிசையில் அமைந்துள்ளன. தலை, தோள் பட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கோடுகள் பழுப்பு நிறத்திலுள்ளன. தொடை, பின் கால்கள் ஆகிய பகுதிகளில் சிறிய வட்ட வடிவக் குறிகள் உள்ளன.
புள்ளித் தோல் சிறுத்தைப் பூனை புல்வெளிக் காடுகளிலும், பாறை நிலங்களிலும், அடர்ந்த காடுகளிலும் வாழ்கிறது. பெரும்பாலும், மரத்தின் மீதும், அரிதாகத் தரையிலும் வாழும் இது, பேறு காலத்தில் மூன்று குட்டிகளை ஈன்றெடுக்கிறது. இச்சிறுத்தைப் பூனையின் ஒரு வகை இந்தியக் காடுகளிலும், ஒரு வகை இலங்கைக் காடுகளிலும் வாழ்கின்றன.
அமெரிக்காவில் ஆசலாட் (ocelot) என்னும் சிறுத்தைப் பூனை உள்ளது. அது பெரும்பாலும் தரையிலும், தேவையேற்படும் போது, மரத்திலும் காணப்படும். சுண்டெலி, எலி, குழி முயல், பாம்பு, காட்டுப் பல்லி, சிறு பறவை, மான் குட்டி, குரங்குக் குட்டி ஆகியவற்றை வேட்டையாடி உண்கிறது. அதனுடைய மயிர் பழுப்பு நிறத்திலும், புள்ளிகள் கறுப்பு நிறத்திலும் அமைந்துள்ளன. தோலின் மேல் வளைவான கறுப்புக் கோடுகள் உள்ளன.
இயல்புகள். சிறுத்தைப் பூனை சிறு பறவைகளையும், விலங்குகளையும் வேட்டையாடி உண்கிறது. இரவில் திரியும் சிறுத்தைப் பூனை, மரப் பொந்தில் வாழ்கிறது. சிறுத்தைப் பூனைக் குட்டிகளை எளிதில் வீட்டுப் பூனைகளைப் போல் பழக்கி வளர்க்க முடியும். கூர்க் சிற்றூர்களுக்கருகில் உள்ள சிறுத்தைப் பூனைகள் கோழிப் பண்ணைகளுள் புகுந்து கேடு விளைவிக்கின்றன.
நீலகிரிக் காடுகளில் பிடிக்கப்பட்ட சிறுத்தைப் பூனைக் குட்டிகளை வீடுகளில் வளர்த்தனர் என்றும், அவை திடீரெனக் காடுகளுக்கே ஓடி விட்டன என்றும், பல மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் வளர்ப்பவரிடமே வந்து விட்டன என்றும் குறிப்பிடப்படுகிறது. சிறுத்தைப் பூனைகளும், வீட்டுப் பூனைகளும் வேட்கையுடன் உடலுறவு கொண்டன என்றும் அறியப்படுகிறது.
இரையை வேட்டையாடிப் பற்றியவுடன், அதை அடித்துக் கொல்வதற்கேற்ற வலிமையான பாதங்களையும், நகங்களையும் பூனை பெற்றுள்ளது. தசையைக் கடிப்பதற்கும், வெட்டுவதற்கும், கிழிப்பதற்கும்ஏற்ற பற்களையும் பெற்றுள்ளது. பற்களும், நகங்களுமே சிறுத்தைப் பூனையின் வலிமையான ஆயுதங்களாகும். கவர்ச்சி, விரைந்து செயல்படும் தன்மை, வலிமை என்னும் முக்குணங்களின் கூட்டமைப்பிலே இரையை வேட்டையாடுகின்றன.
கேட்டல், பார்த்தல், நுகர்தல் ஆகிய செயல்களுக்கான புலன்கள் சிறப்பாகக் காணப்படுகின்றன. சிறுத்தைப் பூனையின் முக மீசை தொடு புலன் உறுப்பாகப் பயன்படுகிறது. பூனையின் பெரிய, மேல் நோக்கி விறைப்பாக நிற்கும் காதுகள் அனைத்து வித ஒலிகளையும் சிறப்பாகக் கேட்கின்றன.
சிறுத்தைப் பூனையின் கண்களும் பெரியவை. மிகு ஒளி கண்களைத் தாக்கும் போது, கண்மணிகள் செங்கோணத் துளையாகச் சுருங்கி விடுகின்றன. அதனால், ஒளி வெள்ளத்தால் கண்கள் தாக்கப்படுவதில்லை. அடர்ந்த இருளில், அதனுடைய கண்மணிகள் விரிவடைய, பார்வைப் புலன் தெளிவாகிறது.
மின்னல் வேகத்தில் இரையின் மேல் பாயும் திறமிக்க சிறுத்தைப் பூனையின் முன் காலில் ஐந்து விரல்களும், பின் காலில் நான்கு விரல்களுமுள்ளன. நடக்கும் போது, நான்கு விரல்களே நிலத்தில் பதிகின்றன. முன் காலை உயர்த்திப் பின் காலை நிலத்தில் பதிக்கிறது. அதனால், முன் கால் நடைப் பதிவின் மீதே, பின் கால் பதிவும் விழுகிறது. அதனால், சிறுத்தைப் பூனையின் நடைப் பதிவுகள் நான்கு கால்களால் நடக்காதன போன்றும், இரு கால்களே, நடப்பன போன்றும் குழப்பத்தை உண்டாக்கும். பாதங்களுக்கடியில் மென்மையான திண்டுகள் உள்ளன. அவற்றால் அதிர்வுண்டாகாமல் நடந்து சென்று, வஞ்சனையாகத் தன் இரையைத் தாக்குகிறது. இரையின் கழுத்தையே முதலில் முறிக்கிறது. அழுத்தம் தாங்காமல், இரை மூச்சுத் திணறி இறந்து விடும்.
வளைந்து வலிமையாகவும், கூர்மையாகவும் காணப்படும் நகங்கள், பாதங்களின் மெல்லிய உறைகளிலுள்ளன. இரையை அடித்துக் கொல்வதற்காக முன் பாதத்தை உயர்த்தும் போது, தசை நாண்களும் நீள்கின்றன. அப்போது உறைகளை விட்டு நகங்கள் வெளியே நீள்கின்றன.
தாடைகளில் வலிமையான கோரைப் பற்கள் உள்ளன. தாடைகள் குட்டையானவை. கடிப்பபதற்கும், கிழிப்பதற்கும் ஏற்றவாறு கோரைப் பற்களும், முன் பற்களும் அமைந்துள்ளன. நன்கு வளர்ச்சி பெற்றுப் பெரியவாகக் காணப்படும். கடை வாய்ப் பற்கள் பக்கத்திற்கு ஒன்றாக மேல் கீழ்த் தாடைகளில் காணப்படுகின்றன. தசையை வெட்டுவதற்குக் கடை வாய்ப் பற்கள் பயன்படுகின்றன. அவற்றைக் கன்னப் பற்கள் (cheek teeth) என்று குறிப்பிடுவர். தாடைகளைப் பக்கமாகவும், முன்னோக்கியும், பின்னோக்கியும் அசைப்பதால், கடை வாய்ப் பற்கள் இயங்குகின்றன. அளவில் சிறிய ஆறு முன் பற்களும் பற்றும் உருவிலமைந்திருப்பதால், எலும்புகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் தசைப் பகுதிகளை எளிதாக நறுக்கி உண்கிறது.
சிறுத்தைப் பூனையின் நாக்கு, சொரசொரப்புடையது. பிற விலங்குகளின் நாக்கு, சுவையுணர் உறுப்பாகப் பயன்படும் போது, பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த ஊனுண்ணிகளின் நாக்கோ அவ்வாறு பயன்படுவதில்லை. சிறுத்தைப் பூனையின் நாவோரத்தில் சுவைச் சுரப்பிகள் காணப்படுகின்றன. சுவைச் சுரப்பிகளில் பற்பல வலிய கூம்பு வடிவச் சுவை மொக்குகள் உள்ளன. இச்சுவை மொக்குகள் சொரசொரப்பாயுள்ளமையால், எலும்பில் ஒட்டியுள்ள தசையை நாவால் அராவி உண்ண முடியும்.
பூனைக் குடும்ப விலங்கின் மஞ்சள் பழுப்பு விரவிய தோலின் நிறமும், தோலில் காணப்படும் புள்ளிகளும், கோடுகளும் அவை வாழும் சூழலோடு நன்கு பொருந்துகின்றன. காட்டில் வஞ்சமுடன் அவை நடமாடும் போது, இரை விலங்குகளால் அவற்றின் வருகையை உணர முடிவதில்லை. புலியைப் போன்றே சிறுத்தைப் பூனையும் வட திசையிலிருந்தே அசாம் காடுகளுக்கு வந்ததென்றும், பின்னர் இமயமலைச் சரிவுகளின் வழியாக இந்தியாவின் ஏனைய பகுதிகளுக்குப் பரவியது என்றும் கருதப்படுகிறது.
உடலுறவுக்குத் துணையை அழைக்கும் சிறுத்தைப் பூனை மிகு ஆவலுடன் ஒலி எழுப்புகிறது; முனகுகிறது; உறுமுகிறது. உறுமியும், சீறியும் ஒன்றையொன்று துரத்திப் பிடித்து விளையாடிய பிறகே, அவை உடலுறவு கொள்கின்றன. உடலுறவுக்கென்று குறிப்பிட்ட பருவ காலம் இல்லை. அனைத்துப் பருவத்திலும் உடலுறவு கொள்கின்றன. மூன்று முதல் நான்கு குட்டிகள் வரை ஆண்டின் ஏதாவதொரு மாதத்தில் ஈன்றெடுக்கின்றது.
எலி, முயல் போன்ற பயிர் கொல்லிகளின் எண்ணிக்கையைப் பெருக விடாமல் தடுப்பதில் சிறுத்தைப் பூனைகளும் பெரும் பங்கேற்கின்றன. கவர்ச்சியான தோற்றப் பொலிவைக் கொண்டுள்ள சிறுத்தைப் பூனைகள் காடுகளில் மிகுதியாகக் காணப்படவில்லை. அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்குவதற்கேற்ப, காடுகளின் அழிவையும் வேட்டைக்காரர்கள் சிறுத்தைப் பூனைகளைச் சுட்டுக் கொல்வதையும் தடுக்க வேண்டும். —எஸ். ஆர். டி. சுந்தரமூர்த்தி
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 341)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/645gwk9r/
தமிழ்“சிறுத்தைப் பூனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/645gwk9r/APA
Oliyon Research. (2026). சிறுத்தைப் பூனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/645gwk9r/MLA
"சிறுத்தைப் பூனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/645gwk9r/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment