உட்சமூகம்
uṭcamūkam
ஒரு வட்டாரத்தில் கட்டமைந்த சமூக வாழ்க்கையைக் கொண்ட மக்கள் குழுவே சமூகமாகும்.
ஒரு வட்டாரத்தில் கட்டமைந்த சமூக வாழ்க்கையைக் கொண்ட மக்கள் குழுவே சமூகமாகும். இருப்பினும், இதன் தன்மைகள் பலவாறாக வேறுபடுகின்றன. ஒரு குறிப்பிட்ட வாழிட எல்லையைக் கொண்டு பல குழுக்கள் அல்லது ஒரு குழுவினர் சமூக (Community) வாழ்வில் முழுவதுமாக அமைப்புற்றுக் காணப்படுவதே சமூகத்தின் தனிப் பண்பாகும். ஆனால் சமூகம் என்பதன் பொருள் பல பரிமாணங்களைப் பெற்றுவிட்டது. இச்சொல்லின் தோற்றம் ஒரு சிறு பகுதியில் குறைந்த எண்ணிக்கையிலான குடும்பங்கள் வாழ்ந்த நிலையைக் குறிப்பிட எழுந்ததாகும். ஆனால், இன்று மக்களின் சமுதாய வாழ்வில் பல படிமலர்ச்சி (Evolution) நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்ந்து வந்துள்ளமையால் சமூகத்தின் தன்மைகள் மாற்றம் பெற்றுள்ளன. இச்சொல்லின் பயன்பாடும் மிகுதியாக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, உலகச் சமுதாயம் (World Community), பன்னாட்டுச் சமுதாயம் (International community) என இதன் பொருள் பலவாறு விரிந்துள்ள வழக்கினைக் கூறலாம்.
தொன்மைக் காலத்திலிருந்து இயற்கையின் சூழலோடு ஒன்றியமைந்த சமூக வாழ்க்கையைக் கொண்ட தொன்மைச் சமூகத்தினர் (Primitive Community) பெரும்பாலும் பல குடும்பங்களைக் கொண்ட சிறு குழுக்களாகவே (Band) வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வாழ்க்கைத் தொழிலிற்கேற்ப வேட்டுவச் சமூகமாகவும் (Hunting Community), ஆயர் சமூகமாகவும் (Pastoral Community), வேளாண் சமூகமாகவும் (Agricultural Community) காணப்படுகின்றனர்.
சமூகத்தின் அளவு பெருமளவில் மாறுபடும். தொழில் நிறைந்த நகரங்களில் உள்ள சமூகங்கள் பெரிய அளவினவாகும். ஆனால், இதற்கு மாறாகத் தொன்மைச் சமூகங்கள் சிறுசமூகங்களாகக் காணப்படுகின்றன. இது மக்கள் குழுவினர் தம் வாழ்க்கையின் அடிப்படைப் பொருள்களைத் தேடுவதில் ஏற்படும் உறவால் ஏற்படுவதாகும். இந்த இருவகைச் சமூக நிலைகளுக்கிடையில் பல்வேறு அளவில் சமூகங்கள் காணப்படுகின்றன. இந்தத் தொடர்பே நாட்டுப்புற நகரத் தொடர்பு (Rural-Urban Continuum) எனக் கூறப்படும். இந்தத் தொடர்ச்சியில் சமூகங்களின் அளவு பலவகையாகக் குறிப்பிடப்படும். பழங்குடிச் சமூகம் (Tribal Community), ஊரகச் சமூகம் (Rural Community), நகரச் சமூகம் (Urban Community) எனப் பாகுபடும் அனைத்தும் தங்களின் வாழ்விடம், தொழிலுறவு, சமூக உறவு முதலானவற்றால் பெரும்பான்மையாக வேறுபடுகின்றன.
சமூகத்தின் பரந்த அமைப்பில் பல செயற்பாடுகளில் ஒருங்கிணைந்த போக்கைக் கொண்டு, நெருங்கிய உறவினைக் கொண்டுள்ள பல குழுக்கள் உள்ளன. இவற்றை உட்சமூகம் (Sub–Community or Sect) என்றும், சமூகத்தின் ஒரு பிரிவு என்றும் கூறுவர். இக்குழுவினர் உறவின் அடிப்படை, தொழில் முறை, சமயச் செயற்பாடுகள் ஆகிய அனைத்திலுமே ஒருவரின் பங்கேற்பையும் உதவியையும் பெறுவர். இவர்களிடையே உள்ள உறவு நீண்ட கால அடிப்படையிலானது. இந்தியச் சமுதாயங்களில் ஒவ்வொரு சாதிக் குழுவும் ஒவ்வொரு சமூகமாகும். இந்தச் சாதிக் குழுவினருள் பல குழுக்கள் உள்ளன. இந்தக் குழுக்கள் அனைத்துமே உட்சமூகம் ஆகும். இவை இவ்வாறு அமைந்ததற்குப் பல சமூகக் காரணிகளும் பொருளாதாரக் காரணிகளும் உள்ளன. ஒரு மூதாதையர் வழிவந்த குழுவினர்கள் ஒத்த இயல்பைக் கொண்டதனால் நெருங்கி ஒரே பரப்பில் வாழ்கின்றனர்; அல்லது இவர்கள் பொருளாதார அமைப்பில் ஒருங்கிணைந்து செயற்படவும் சில சமூக உட்பிரிவுகள் உள்ளன. பெரும்பான்மையாகப் புற மண அமைப்பை ஏற்றுக் கொள்ளும் பொருட்டு அமைந்த மணவழிக் குழுக்கள் என்னும் நிலையிலும் உட்சமூகம் காணப்படுகின்றது எனக் கூறுவர் சமுதாயவியலார். உட்சமூகத்தினர் தொழில்சார் அமைப்பை ஏற்று வாழ்தலை நகரச் சமூகத்தினரிடம் காணலாம்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 758)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/63u2qgvt/
தமிழ்“உட்சமூகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/63u2qgvt/APA
Oliyon Research. (2026). உட்சமூகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/63u2qgvt/MLA
"உட்சமூகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/63u2qgvt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment