சின்னபார்
ciṉṉapār
இது ஒரு சல்பைடு கனிமம். இதில் பாதரசமும், கந்தகமும் சேர்ந்துள்ளன.
இது ஒரு சல்பைடு கனிமம். இதில் பாதரசமும், கந்தகமும் சேர்ந்துள்ளன. இதைப் பாதரச சல்ஃபைடு (HgS) என்பர். இதில் களிமண், இரும்பு—ஆக்சைடு, பிட்டுமன் எனும் கரிப்பொருள் முதலியன மாசுகளாக இருக்கும். இக்கனிமம் மெட்டா—சின்னபார் என்னும் கனிமத்துடன் ஈருருவத் தொடர்பு உடையது. நுண்மணிகளாகவும், திரட்சியாகவும் காணப்படுகிறது.
சின்னபார் (cinnabar) அறுகோணத் தொகுதியின் சாய்சதுர வகையைச் சேர்ந்தது. இது கோடகை (trapezohedron) வகுப்பைச் சேர்ந்ததாகும். இக்கனிமம் அணுக்கோப்பில் அடிப்படை அல்லது இயல்பு வகையைச் சேர்ந்தது. இதன் ஓர் அணுக் கோப்பில் மூன்று கூட்டணுக்கள் உள்ளன. இதன் அணு அமைப்பில், அணுக்களுக்கு இடையே உள்ள தொலைவு பக்க வாட்டத்தில் 4.160Å ஆகவும், கீழ் மேலாக (குத்து வாட்டத்தில்) 9.540Å ஆகவும் இருக்கும். சின்னபார் படிக அச்சுகளின் நீள விகிதம் a:c = 1: 1.1453 ஆக இருக்கும்.
சின்னபார் படிகங்கள் சாய் சதுரப் படிகங்களாகவும், தட்டையானவையாகவும் இருக்கும். சில தடித்து அல்லது மெலிந்து, நீண்ட பட்டகங்களாக இருக்கும். பெரும்பாலும் திண்மங்களாகவும், நுண் துகள்களாகவும் காணப்படும். இதன் படிகங்கள் ஊடுருவல், இரட்டுறல் பெற்று இருக்கும். சின்னபாரில் (1010) கனிமப் பிளவு தெளிவாக இருக்கும். இது சங்கு முறிவு அல்லது சீரற்ற முறிவு உடையது. நொறுங்கக் கூடிய இது சற்று வெட்டுப்படக் கூடியது. இக்கனிமம் ஆரஞ்சு கலந்த சிவப்பு (scarlet), சருகு நிறம் கலந்த சிவப்பு, சருகு நிறம், கறுப்பு அல்லது ஈயம் போன்ற சாம்பல் நிறத்தில் காணப்படும். இது வைர மிளிர்வு உடையது. இதன் தூள், பளபளப்பான ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறமாக இருக்கும். மண் போன்றவை மங்கலான மிளிர்வுடன் காணப்படும். சில குறை—உலோக மிளிர்வு உடையன. இது ஒளி புகும் அல்லது ஒளி கசியும் தன்மை உடையது. இதன் கடினத் தன்மை 2—2.5; ஒப்படர்த்தி 8.09—8.18.
தூய நிலையில், சின்னபார் வைர மிளிர்வும், நிறமும் கொண்டு காணப்படுகிறது. மாசு கலந்து காணப்பட்டால், மங்கலான மிளிர்வுடன் பழுப்புச் சிவப்பு நிறமாகக் காணப்படும். சின்னபாருடன் மெட்டா—சின்னபார் பல்லுருவமாகக (polymorphous) காணப்படுகிறது. இவ்விரு கனிமங்களும் இணைந்து காணப்படுகின்றன. மெட்டா—சின்னபாரின் கடினத் தன்மை 3; ஒப்படர்த்தி 7.6. சாம்பல் கலந்த கறுப்பு நிறத்துடன் காணப்படுகிறது, 400-500°C வரை சூடுபடுத்தினால், நிலையான சின்னபாராக மாற்றமடைகிறது. சின்னபார் ஓர் ஒளி அச்சுடைய கனிமம். இது நேர் ஒளிக் குறியை உடையது. இதன் ஒளி விலகல் எண்கள் ω=2.905; ξ=3.256 ஆக இருக்கும்.
சின்னபார் குறைந்த வெப்ப நிலையில் தோன்றிய படிவுகளில் பெரிதும் காணப்படுகிறது. இது எரி மலை அல்லது வெப்ப ஊற்றுகளின் அருகே காணப்படுகிறது. இது நரம்புகளைப் போன்ற மெல்லிய தாரைகளாகப படிவுப் பாறைகளிலும், குவார்ட்சைட், பார்ஃபைரிஸ் (தூள் சூழ் படிகப் பாறை), செர்ப்பன்டைன் ஆகிய பாறைகளிலும் காணப்படும். சின்னபார் இயற்கையாகக் கிடைக்கும் பாதரசம், ரியல்கார், மார்க்கசைட், பைரைட், ஸ்டிப்நைட், கால்சைட், குவார்ட்ஸ் (பளிங்கு), ஓபல் முதலியவற்றுடன் சேர்ந்திருக்கும்.
சின்னபார் அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா, நிவேடா ஆகிய இடங்களிலும், மெக்சிகோ, சிலி, பெரு, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, சோவியத் ஒன்றியக் குடியரசு, சீனா ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது. சின்னபார் பாதரசத்தின் முக்கியமான தாதுப் பொருளாகும். —இல. வைத்திலிங்கம் —இரா. சரசவாணி நூலோதி. P. Ramdohr, The Ore Minerals and their Intergrowths, Pergamon Press, Oxford, 1969.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 389)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6229rj34/
தமிழ்“சின்னபார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6229rj34/APA
Oliyon Research. (2026). சின்னபார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6229rj34/MLA
"சின்னபார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6229rj34/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment