வெள்ளையரின் ஆதிக்கத்திலுள்ள தென்னாப்பிரிக்கா அரசு அந்நாட்டிலுள்ள வெள்ளையரல்லாத மக்களிடம் கடைப்பிடிக்கும் இனக் கொள்கை ‘இன ஒதுக்கீட்டுக் கொள்கை’ என்று சொல்லப்படுகிறது. அக்கொள்கை கி.பி. 1652–ஆம் ஆண்டு வெள்ளையர்கள் தென் ஆப்பிரிக்காவில் குடியேறத் தொடங்கிய நாளிலிருந்து தோன்றியது எனக் கூறலாம். தென் ஆப்பிரிக்கா அரசு அமைக்கப்பட்ட 1910–ஆம் ஆண்டிலிருந்து அக்கொள்கை, அரசின் அடிப்படைக் கொள்கையைாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆட்சியில் 1948–ஆம் ஆண்டிலிருந்து இருக்கும் ஆப்பிரிக்கத் தேசியக் கட்சியும் (Afrikaner Nationalist Party), எதிர்க்கட்சியும் ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு இன ஒதுக்கீட்டுக் கொள்கையை வலியுறுத்தி வருகின்றன. பல பெயர்களினால் கூறப்பட்டு வந்த அக்கொள்கை 1940–ஆம் ஆண்டிற்குப் பிறகு ‘இனஒதுக்கீடு’ (Apartheid) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது. இப்பொழுது இனஒதுக்கீட்டுக் கொள்கையைத் தென் ஆப்பிரிக்கா அரசு ‘தனி வளர்ச்சிக் கொள்கை’ (Policy of Separate Development) எனக் குறிப்பிடுகிறது. இன ஒதுக்கீட்டுக் கொள்கை நாட்டு மக்களை இனவாரியாகப் பிரித்துத் தனித்தனியாகக் குடியமர்த்த வேண்டுமென வற்புறுத்துகிறது. அவ்வாறு தனித்தனியாகக் குடியமர்த்துவதற்குச் சில இன, சமூகக் காரணங்கள் உண்டு என அக்கொள்கையின் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். மனிதக் குலம் இனவாரியாகப் பிரிந்துள்ளது; ஒவ்வோர் இனத்திற்கும் அதற்கே உரித்தான தனிப் பண்பு உண்டு; அதனை முழுமையாக வளர்க்க வேண்டுமாயின் ஒவ்வோரினமும் தனித்தனியாக வாழ வேண்டும்; மாறாக, பல இனங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு பொதுச் சமுதாயமாக வாழ்ந்தால் அதிலுள்ள ஒவ்வோரினத்தின் வளர்ச்சியும் குன்றிப் போய்விடும் என்பது அவர்களது கூற்றாகும். வெள்ளையர்கள் இனஒதுக்கீட்டுக் கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வலுவான பொருளாதாரக் காரணங்களும் உண்டு. வெள்ளையர்களின் பண்ணைகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் குறைந்த ஊதியத்தில் வேலை செய்ய வேலையாட்கள் தேவைப்படுகின்றனர். வெள்ளையரல்லாதவர்களை நசுக்கி, எவ்வித உரிமைகளும் இல்லாத நிலையில் வைத்திருந்தால்தான் அது இயலுவதாகும். எனவே தான் ஆலை, பண்ணை முதலாளிகள் இன ஒதுக்கீட்டுக் கொள்கையை முழுமூச்சுடன் ஆதரிக்கின்றனர். இன ஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படை நோக்கம் தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையரின் ஆதிக்கத்தை வலுப்படுத்தி உறுதிப்படுத்துவதேயாகும். அந்நாட்டின் மக்கள் தொகையில் வெள்ளையர்கள் 19% மட்டுமே உள்ளனர். அச்சிறுபான்மையினர் மீதியுள்ள 81% பெரும்பான்மை (நீக்ரோக்கள் 68%, ஆசியர்கள் 3%, கலப்பினத்தவர்கள் 10%) மக்களைக் கொத்தடிமைகளாக நடத்துவதன் நோக்கம் இதுவேயாகும். அக்கொள்கையின் விளைவாக வெள்ளையரல்லாத மக்கள் மிக்க தொல்லைகளுக்கு இலக்காகியுள்ளனர். அவர்களுக்கு வாக்குரிமையும் கிடையாது. அரசாங்கம், இராணுவம், காவல்துறை ஆகியவற்றிலுள்ள பதவிகள் எல்லாம் வெள்ளையருக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கிப் போன்ற கருவிகளை வைத்திருக்கவோ எடுத்துச் செல்லவோ கறுப்பர்களுக்கு உரிமையில்லை. வெள்ளையருக்கும் வெள்ளையரல்லாதவர்களுக்குமிடையே பாலுறவும், திருமணமும் சட்ட முறையில் தடை செய்யப்பட்டுள்ளன. வெள்ளையரல்லாதோர் வெள்ளையர் வாழும் நகர்ப்புறப் பகுதிகளுக்கு வருவதற்கும், அங்குத் தங்குவதற்கும் அரசாங்கத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும். இன ஒதுக்கீட்டுக் கொள்கையை எதிர்க்கும் எல்லாக் கட்சிகளும், நிறுவனங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. காரணமின்றிக் காலவரையின்றிக் கறுப்பர் தலைவர்களைக் காவலில் வைக்க அரசாங்கத்திற்கு அதிகாரமுண்டு. வெள்ளையர்களின் பகுதியில் சொந்த நிலம் வாங்கவும், அதை வைத்திருக்கவும் வெள்ளையரல்லாதவர்களுக்கு உரிமையில்லை. இருபிரிவினருக்கும் தனித்தனிக் கல்விக்கூடங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. தொழிற்சங்கங்கள் அமைக்கும் உரிமையும் வெள்ளையரல்லாதோர்க்கு மறுக்கப்பட்டுள்ளது. அவர்களின் குலமரபுத் தலைவர்களை (Tribal Chiefs) நியமிப்பதற்கும், அவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்குமுள்ள அதிகாரம் வெள்ளையர் அரசாங்கத்திற்கு உண்டு. இன ஒதுக்கீட்டுக் கொள்கையின் காரணமாகத் தென் ஆப்பிரிக்க அரசாங்கம் வெள்ளையரல்லாதவர்களுக்குத் தனி நிலப்பகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. வெள்ளையர் வாழும் நகர்ப்புறப் பகுதிகளிலிருந்து தொலைவான இடங்களிலுள்ள அந்நிலப் பகுதிகளுக்குப் ‘பாண்டு தாயகங்கள்’ (Bantu Home–lands) என்பது பெயர். அப்படிப்பட்ட 8 தாயகங்களை உருவாக்க வேண்டுமென்பது தென் ஆப்பிரிக்க அரசாங்கத்தின் குறிக்கோளாகும். அத்தாயகங்கள் வெள்ளையரல்லாதோரின் அரசியல் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பேணி வளர்க்க உதவும் என்று வெள்ளையரின் அரசாங்கம் கூறிக் கொள்கிறது. ஆப்பிரிக்க மக்களின் இன மரபுச் சட்டங்களின் (Tribal Customary Laws) படி அவற்றில் அரசாங்கங்கள் செயற்படுகின்றன. அத்தாயகங்கள் சுயாட்சியுடைய அமைப்புகள் என்றும், காலப்போக்கில் ஒவ்வொரு தாயகத்தையும் ‘ஓரின அரசு’ (Uni Racial State) ஆக வளர்ச்சியடையச் செய்வதுதான் தென் ஆப்பிரிக்க அரசின் நோக்கம் என்றும் வெள்ளையர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், நடைமுறையில் அத்தாயகங்கள் கிராமியச் சேரிகளாகக் காட்சியளிக்கின்றன. மக்கள் தொகைப் பெருக்கம் கல்வியறிவு இன்மை ஆகியவற்றிற்கு அத்தாயகங்களின் வளர்ச்சியைப் பற்றி வெள்ளையர் அரசாங்கத்திற்குள்ள அக்கறையின்மையே முக்கிய காரணமாகும். வரிச்சுமை, வறுமை ஆகியவற்றின் காரணமாக அத்தாயக மக்களுள் பெரும்பாலோர் வெள்ளையர்களின் ஆலைகள், பண்ணைகள் ஆகியவற்றில் வேலை தேடி அலையும் கூலிகளாக இருக்கின்றனர். நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 13% நிலம் மட்டும் தான் பாண்டுத் தாயகங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள நிலம் முழுவதும் வெள்ளையரின் கையிலேயே இருக்கிறது. பாண்டுத்தாயகங்கள் எந்த அளவிற்குச் சுயாட்சியுடைய அமைப்புகளாக விளங்குகின்றன என்பதற்கு ‘திரான்சுகேய்’ (Transkei) ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. பாண்டுத்தாயகங்களில் மிகப் பெரிதான அந்நிலப்பகுதிக்குத் தலைமை அமைச்சரும், ஓர் அமைச்சரவையும் உண்டு; 110 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சட்ட மன்றமும் உண்டு; அதில் 65 உறுப்பினர்களைத் தென் ஆப்பிரிக்க அரசாங்கம் நியமனம் செய்கிறது. மீதி 45 உறுப்பினர்களைக் கறுப்பர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்; அச்சட்ட மன்றத்தின் தீர்மானங்கள் இறுதியானவையல்ல. அவற்றை நீக்கக் கூடிய அதிகாரம் தென் ஆப்பிரிக்கல் குடியரசுத் தலைவருக்கு உண்டு. திரான்சுகேய் உட்பட எல்லாப் பாண்டுத் தாயகங்களும் தென் ஆப்பிரிக்க அரசின் இறைமைக்கு உட்பட்டே செயற்பட வேண்டும். 1963–ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அந்தத் திரான்சுகேய்த் தாயகத்தை, 1976–ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அரசு ஒரு ‘சுதந்திர’ நாடென அறிவித்தது. தொடர்ந்து மேலும் மூன்று பாண்டுத்தாயகங்களுக்கும் ‘சுதந்திர’ நாடுகள் என்ற தகுதியைத் தென் ஆப்பிரிக்க அரசு வழங்கியது. ஆனால், தென் ஆப்பிரிக்காவைத் தவிர வேறு எந்த நாடும் அவற்- றைச் ‘சுதந்திர நாடுகள்’ என ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டன. இன ஒதுக்கீட்டுக் கொள்கையின் ஒரு பகுதியாகத்தான் தென் ஆப்பிரிக்கா பாண்டுத்தாயகங்களுக்குச் ‘சுதந்திரம்’ வழங்கியுள்ளது. பாண்டுத்தாயகங்களைச் சார்ந்த மக்களின் பெரும்பகுதியினர் அத்தாயகங்களுக்கு வெளியேயுள்ள வெள்ளையர்களின் ஆலைகள், பண்ணைகள் ஆகியவற்றில் வேலை தேடித் திரியும் கூலிகளாக வாழ்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்குத் தென் ஆப்பிரிக்காவில் குடியுரிமை இல்லாமல் செய்வதற்காகத்தான் வெள்ளையர் அரசு பாண்டு தாயகங்களைச் ‘சுதந்திர’ நாடுகளென அறிவித்தது. தென் ஆப்பிரிக்காவின் இன ஒதுக்கீட்டுக் கொள்கையினால் பாதிக்கப்பட்ட மக்களில் அந்நாட்டில் வாழும் இந்தியர்களும் உட்படுவர். இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கெதிராகக் காந்தி அடிகள் ஓர் அறப் போராட்டத்தைத் தொடங்கி இந்தியர்களின் உரிமைகளை நிலைநாட்டப் பாடுபட்டார். இந்தியர்கள் அதிகமாக வாழும் தர்பன் (Durban) போன்ற நகரங்களிலிருந்து அவர்களை வெளியேற்றித் தனிப்பகுதிகளில் குடியமர்த்துவதற்காக ‘இனப் பகுதிகள் சட்டத்தை’ (Group Areas Act) வெள்ளையர் அரசு இயற்றி மிகவும் தீவிரமாக அமுல்படுத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்காவின் இன ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக இந்தியா கடந்த அரை நூற்றாண்டாக உலக அரங்கில் அரசியல் முறையில் போராடி வருகிறது. ஐ.நா. நிறுவனத்தினுடைய பொதுச்சபை (General Assembly} 1946–ஆம் ஆண்டு முதன் முதலாகக் கூடிய போது தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் நடத்தப்படும் முறை பற்றி இந்தியா குறை கூறியது. தென் ஆப்பிரிக்காவின் கொள்கை ஐ.நா. நிறுவனத்தின் குறிக்கோள்களுக்கும், மனித உரிமைகளுக்கும் முரணானதாகும் என இந்தியா தென் ஆப்பிரிக்காவின் மீது குற்றம்சாட்டியது. இந்தியர் சிக்கல் ஓர் உள்நாட்டு விவகாரம் என்றும், அதில் தலையிடுவதற்கு ஐ.நா. நிறுவனத்திற்கு உரிமை இல்லையென்றும் தென் ஆப்பிரிக்கா கூறி வருகிறது. ஆயினும், இந்தியாவின் குற்றச்சாட்டிற்குப் பரவலான ஆதரவு சபையில் காணப்பட்டது. அதன் விளைவாக, இந்தியர்களை ஐ.நா. நிறுவனத்தின் குறிக்கோள்களுக்கு ஏற்ப நடத்தப்படவேண்டும் என பொதுச்சபை ஒரு தீர்மானத்தின் மூலம் தென் ஆப்பிரிக்கா அரசைக் கேட்டுக் கொண்டது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா 1952–ஆம் ஆண்டு எடுத்துச் சொன்ன குற்றச்சாட்டில் அங்கு நீக்கிரோக்கள் நடத்தப்படும் முறையும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அதற்குப் பின்னர், ஒவ்வோராண்டும் பொதுச்சபை தென் ஆப்பிரிக்காவின் கொள்கையைக் கண்டித்துத் தீர்மானம் இயற்றியது. அத்தீர்மானங்கள் அனைத்தையும் தென்ஆப்பிரிக்கா புறக்கணித்துக் கொண்டே வந்துள்ளது. ஐ.நா. நிறுவனத்திலும், பொதுநல நாடுகளின் அமைப்பிலும், 1957–ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் எண்ணிக்கை கூடியதால், தென் ஆப்பிரிக்காவின் கொள்கை கடுமையான எதிர்ப்புக்குள்ளாகியது. தென் ஆப்பிரிக்காவின் கொள்கை மனித உரிமைகளை மீறுவதும், உலக அமைதிக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதும் ஆகுமென ஐ.நா. நிறுவனத்தின் பாதுகாப்புக் குழு (Security Council) 1960–ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவைக் கண்டித்தது. 1961–ஆம் ஆண்டு, தன் கொள்கைக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பைச் சமாளிக்க இயலாமல் தென் ஆப்பிரிக்கா பொதுநல நாடுகளின் அமைப்பை விட்டு வெளியேறியது. இன ஒதுக்கீட்டுக் கொள்கையைக் கைவிடத் தென் ஆப்பிரிக்காவை கட்டாயப்படுத்தும் பொருட்டு 1962–ஆம் ஆண்டிற்குப் பிறகு ஐ.நா.வின் பாதுகாப்புக் குழு பல தீர்மானங்களை இயற்றியது. அத்தீர்மானங்கள், தென் ஆப்பிரிக்காவுக்கு ஆயுதத் தளவாடங்களையும், இராணுவ முக்கியத்துவமுடைய பொருள்களைவும் ஏற்றுமதி செய்யக் கூடாது என ஐ.நா. உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொண்டன. ஆனால், தென் ஆப்பிரிக்காவிற்கு ஆயுதங்களை அதிகமாக ஏற்றுமதி செய்யும் பிரிட்டனும், பிரான்சும் அத்தீர்மானங்களை ஏற்க மறுத்து விட்டதோடல்லாமல், தொடர்ந்து ஆயுதங்களை அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்தும் வருகின்றன. உலக நாடுகளின் கருத்து, ஐ.நா. நிறுவனத்தின் தீர்மானங்கள் ஆகியவற்றைச் சிறிதும் மதிக்காமல் தென் ஆப்பிரிக்கா அதனுடைய இன ஒதுக்கீட்டுக் கொள்கையை இன்றும் கடைப்பிடித்து வருகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு மேலை நாடுகளின் மறைமுக ஆதரவு, சுதந்திர நாடுகளாக மலர்ந்துள்ள மற்ற ஆப்பிரிக்க நாடுகளின் பலக்குறைவு, ஒற்றுமையின்மை ஆகியவைவே இந்த மனிதாபிமானமற்ற கொள்கை இன்றும் நடைமுறையிலிருப்பதற்குள்ள முக்கியக் காரணங்களாகும். எஸ்.மு. துணை நூல்கள் Mahajan, V.D., International Relations, since 1914, Chand & Co. Ltd, New Delhi, 1980. Murphy, R.J. and Elinsow, H., Problem & Prospects of the Negro Movement, Belmont Calif, Wadsworth, 1966.