இது சிவப்புக் கலந்த இருண்ட நீல நிறத்தில் காணப் படுவதால், இப்பெயர் பெற்றது. செவ்வந்திக் கல் (amethyst) குவார்ட்ஸ் கனிமத்தின் ஒரு வகையாகும். ஆனால், குவார்ட்ஸ் போன்று நிறமற்றதாக இருக்காது. குவார்ட்சில் சிறிதளவு மாங்கனீஸ் மாசு படிந்தால், நிறம் செங்கரு நீலமாகி விடுகிறது என்பர். சூடு படுத்தினால், நிறமற்றதாகி விடும். இதன் நிறத்திற்குக் காரணம், இதில் மாங்கனீஸ் கலந்திருப்பது அன்று எனவும், இக்கனிமத்தின் அறுகோணத் தொகுதி அணு அமைப்பில் உள்ள மிகச் சிறிய அளவிலான மாறுபாடே எனவும் சர். சி.வி. இராமன் விளக்கியுள்ளார். இதன் வடிவம் பார்வைக்குக் குன்றிமணி போல இறுகியதாகக் காணப் படும். இதன் மிளிர்வு கண்ணாடி அல்லது மங்கிய மிளிர்வு வரை காணப் படலாம். ஏனைய கனிமப் பண்புகளில் இது குவார்ட்சை ஒத்திருக்கும். இதன் கடினத் தன்மை 7; ஒப்படர்த்தி 2.65. குறைசங்கு முறிவுடையது; கனிமப் பிளவற்றது. இதன் வேதி இயைபு சிலிக்கான் டைஆக்சைடு (SiO₂). செவ்வந்திக் கல் அறுகோணப் படிகத் தொகுதியில் அடங்கும். பொதுவாக இது மிகவும் முக்கியமான கனிமமாகக் கிரானைட், பெக்மடைட் பாறையில் உள்ளது என்பதை நிலவியல் வல்லுநர் தெளிவாகக் கண்டறிந்துள்ளனர். வாதுமைக் கொட்டை வடிவத் துளை நிரப்பிகளாகப் பசால்ட்டுப் பாறைகளிலும் காணப் படும். இது சோவியத் ஒன்றியத்திலும், பிரேசில், அரிசோனா ஆகிய இடங்களிலும், இந்தியாவில் தக்காண பீடபூமியிலும், கர்நாடக மாநிலத்தில் தார்வாரிலும், ஆந்திர மாநிலத்தில் நெல்லூர், கடப்பை ஆகிய மாவட்டங்களிலும் கிடைக்கிறது. மிக அருகிய அளவில், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களிலுள்ள பெக்மடைட்டுப் பாறைகளில் கிடைக்கிறது. இது அணிமணிகள் செய்யும் அருங்கல்லாகப் பெரிதும் பயன்படுகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> —ந. சந்திரசேகர் நூலோதி. A.N. Winchell and H. Winchell, Elements of Optical Mineralogy, Wiley Eastern private Ltd., New Delhi, 1968.