ஒரு நாட்டின் மூலதனம் பற்றாக்குறை நிலையில் இருக்கும்போது அயல்நாட்டு மூலதனத்தால் (Foreign Capital) உள் நாட்டு வளங்களைப் பயன்படுத்திப் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த இயலும். நாட்டின் உற்பத்தியைப் பெருக்க நிலம், உழைப்பு, மூலதனம், தொழில் அமைப்பு என்ற நான்கு உற்பத்திக் காரணிகள் தேவை. மூலதனம் என்பது, கட்டடம், எந்திரக் கருவிகள், மூலப் பொருள் போன்ற உற்பத்திக் கூறுகளைக் குறிக்கிறது. இதைத் தவிர, தொழில் நுட்பக் கல்வி, சுகாதாரம், திறன் மிகுப்பு ஆகியவற்றிற்கு முதலீடு செய்வதும் மூலதனம் என்றே கூறப்படும். வளர்ச்சி குறைந்த பிற்பட்ட நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தத் தேவையான மூலதனம் கிடைப்பதில்லை. எனவேதான், அத்தகைய நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அயல்நாட்டு மூலதனத்தின் தேவை எழுகிறது. பொருளாதார வளர்ச்சியில் அயல்நாட்டு மூலதனம் சிறந்த பங்கேற்கிறது. பொதுவாக வளர்ச்சி குறைந்த நாடுகள், அயல் நாடுகளிலிருந்து எந்திரம், கருவிகள், துணைக் கருவிகள், மூலப் பொருள்கள் போன்றவற்றை இறக்குமதி செய்து விரைவான வளர்ச்சி அடைய முயற்சி செய்கின்றன. உள்நாட்டில் எந்த அளவுக்கு மூலதனத்தைச் சேகரிக்க முடியும் என்பதைப் பொறுத்தே அயல்நாட்டு மூலதனத்தின் அளவும் அமையும். ஆகவே, அரசு மூலதன ஆக்கத்தை வேகப்படுத்த நான்கு வழிமுறைகளைப் பின்பற்றுகிறது. அவை வரிவிதிப்பு, உள்நாட்டில் கடன் வாங்குதல், பற்றாக்குறை நிதியாக்கம், அயல்நாட்டிலிருந்து மூலதனம் பெறுதல் என்பன. இவற்றுள் அயல்நாட்டு மூலதனம், முதலீட்டில் இறுதிநிலைப் பங்கினைப் பெறுகிறது. இருப்பினும், இதன் சிறப்புறு நிலைக்குக் காரணம், வளர்ச்சி குறைந்த நாடுகளில் நுகர்வு (Consumption) குறைந்த நிலைவில் உள்ளதோடு, மூலதனம் பற்றாக்குறையில் உள்ளதேயாகும். வளர்ச்சியடைந்த நாடுகளும் பொருளாதார முன்னேற்றத்தின் தொடக்கக் கட்டத்தில் அயல்நாட்டு மூலதனத்தைச் சார்ந்தே இருந்தன. இங்கிலாந்து, ஆலந்து (Holland) நாட்டிலிருந்து 17,18–ஆம் நூற்றாண்டுகளில் கடனுதவி பெற்றது. அதனால், இங்கிலாந்து இந்தியாவைச் சுரண்டிப் பொருளாதார உபரியைப் பெற்றது. அமெரிக்கா 19–ஆம் நூற்றாண்டின் இறுதியில் பன்னாட்டுப் பண அங்காடியிலிருந்து மிகுதியான கடன்களைப் பெற்றது. கனடா 20–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், மிகுந்த அளவு அயல்நாட்டு மூலதனத்தை ஏற்றுக்கொண்டது. உருசியா தன் பொருளாதார வளர்ச்சியின் தொடக்கக் காலங்களில் அமெரிக்க நாட்டின் உதவியைப் பெரிதும் நம்பியிருந்தது. உருசியா மிகுதியாக உதவி புரிந்ததால்தான் சீனா விரைவான வளர்ச்சியைப் பெற முடிந்தது. இந்தியாவின் தொழில் முன்னேற்றத்திற்கு அயல்நாட்டு மூலதனம் பெரிதும் உதவியுள்ளது. முதலீடு செய்வோர் 19–ஆம் நூற்றாண்டிலும், 20–ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலும் தொழில்களில் தங்கள் மூலதனத்தை முதலீடு செய்யத் தயங்கினர். சேமிப்பு வீதம் குறைந்த அளவிலும் தொழில் நுணுக்க முன்னேற்றம் ஏற்படாத நிலையிலும் இருந்தமையால், வாணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய வணிகக் குழுவைச் சார்ந்த ஆங்கிலேயர் முதலீடு செய்ய முன்வந்தனர். காப்பி, தேயிலை, சணல், நிலக்கரி, சருக்கரை, போன்ற பெரிய தொழில்கள் வளர்ந்தமைக்கு ஆங்கிலேயரின் மூலதனமே காரணமாகும். திட்டங்களை நிறைவேற்றவும் 1947–ஆம் ஆண்டிற்குப் பின் அயல்நாட்டு மூலதனம் பெறப்பட்டது. வளர்ச்சியடையாத எந்த நாடும் அயல்நாட்டு மூலதனத்தைப் பெறாமல் விரைவான தொழில் முன்னேற்றத்தைப் பெற இயலாது. சப்பான், அயல்நாட்டுத் தனியார் முதலால், பொருளாதார வளர்ச்சியைப் பெறவில்லை. ஆனால், அயல்நாட்டு வல்லுநர்களை வேலைக்கமர்த்திச் சப்பானியர் அவர்களிடமிருந்து தொழில் நுட்பத்தையும் தொழில் துணிவாற்றலையும் சுற்றறிந்தனர். மேலும், உள்நாட்டு மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பித் தொழில் நுட்பத்தில் பயிற்சி பெறச் செய்தனர். இத்தகைய முயற்சிகளால் சப்பான் விரைவான தொழில் வளர்ச்சியைப் பெற முடிந்தது. அயல்நாட்டு மூலதனம், பொருளாதார வளர்ச்சியின் தொடக்கக் காலத்தில் தோன்றுகிற குறைகள், இடர்ப்பாடுகள் ஆகியவற்றை நீக்குவதோடு, தொழில் நுட்பப் பணிகளையும் தோற்றுவிக்கின்றது. இதன் மூலம் உள்நாட்டு முதலாக்கத்தை வேகப்படுத்த முடிகிறது. குறிப்பாக, உள்நாட்டு நுகர்ச்சியைக் குறைக்காமலேயே வளர்ச்சிக்கான மூலதனத்தைச் சேகரிக்க முடிகிறது. அயல்நாட்டு மூலதனம், நாட்டில் பணவீக்க நிலை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. வளர்ந்து வரும் நாடுகளில் பணவீக்கமில்லாமல் முதலாக்கத்தைப் பெருகச் செய்வது கடினம். ஆனால், அயல்நாட்டு உதவி, முதலீட்டுப் பொருள்களாகக் (Capital Goods) கிடைப்பதால் பொருளாதார வளர்ச்சியின்போது பணவீக்கத்திற்கு எதிர் சக்தியாகச் செயற்படுகிறது. அயல்நாட்டு மூலதனம், பற்றாக்குறை நிதியாக்கத்தைப் பின்பற்ற வேண்டிய தேவையைக் குறைக்கிறது. அயல்நாட்டு மூலதனம், ஓரளவிற்கு அயல்நாட்டுச் செலுத்து இருப்பு நிலைக் (Balance of Payments) குறைகளைத் தீர்க்கவும் உதவுகிறது. எனவே, அதனை அயல்நாட்டுச் செலுத்து இருப்பு நிலையைச் சமப்படுத்தும் கருவி எனக் கூறலாம் அன்றியும் அது பன்னாட்டு வேலைப் பகுப்பை (Division of Labour) விரிவுபடுத்திப் பன்னாட்டு வாணிகம் சிறப்பாக நடைபெறத் துணை புரிகிறது. இதனால் ஏழை நாடுகளில் சேமிப்பு, முதலீடு, உற்பத்தி ஆகியவை மிகுந்து, ஏற்றுமதியின் அளவு மிகுதிப்பட வாய்ப்பு ஏற்படுகிறது. வளர்ச்சி குறைந்த நாடுகளில் வட்டிவீதத்தைக் குறைத்து முதலீட்டைப் பெருக்க அயல்நாட்டு மூலதனம் துணை செய்கிறது. இதனால், முதலீட்டு அங்காடியிலும் பண அங்காடியிலும் வட்டி வீதங்கள் குறைய, பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நிதியைக் குறைந்த வட்டிக்குக் கிடைக்கச் செய்கிறது. வளர்ச்சியுறா நாடுகள் அயல்நாட்டு மூலதனம் பெறாத நிலையில் சிறிதளவு உற்பத்தியை மட்டுமே மேற்கொள்ள முடியும்; பேரளவு வளர்ச்சியைப் பெற இயலாது. அயல்நாட்டு மூலதனத்தால் குறிப்பிட்ட சில துறைகள் சீரான வளர்ச்சி பெறச் சிறந்த வாய்ப்பு ஏற்படுகிறது. பேரளவு உற்பத்தி, தொடர் சங்கிலியாகப் பல்வேறு வகையான தொழில்கள் ஏற்பட வகைசெய்கிறது. பல்வேறு தொழில்கள் தோன்றுவதால் சந்தையின் அளவு விரிவடைகிறது. அயல்நாட்டு மூலதனத்தைப் பெறும் ஒரு நிறுவனம், பொருளாதார முறையில் பல வசதிகளையும் பெற்றுவிடுவதால், அந்நிறுவனம் வளர்ச்சி அடைவது மட்டுமல்லாமல், அது வெளிநாடுகளில் கூட முதலீடு செய்யவும் முடிகிறது. எடுத்துக்காட்டாக, இந்தியத் தொழில் நிறுவனங்கள் வெளிநாட்டு மூலதனத்தைப் பெற்றுப் பயனடைந்து, பின் அவை கென்யா, உகாண்டா, நேபாளம், எதியோப்பியா போன்ற நாடுகளில் முதலீடு செய்து வருகின்றன. அயல்நாட்டு முதலீட்டால் அறிவியல் கல்வி, தொழில் நுட்பம், புதுமையான அமைப்பு முறை ஆகிய யாவும் வளர்ச்சியடையாத நாடுகளில் வளரத் தொடங்குகின்றன. மூலதனத்தைப் பெறுகின்ற நாட்டின் வளங்கள், மூலதனத்தை அளிக்கின்ற நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தப்படலாம். விடுதலையடைவதற்கு முன், இந்தியாவில் ஆங்கிலேயர்கள் இருப்புப் பாதைகளை அமைத்தது ஆதாய நோக்கம் ஆகும். இந்தியாவின் மூலப் பொருள்கள் இங்கிலாந்தின் தொழில் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறே பல குடியேற்ற நாடுகளின் வளங்கள், குடியேற்ற ஆதிக்க நாடுகளின் நன்மைக்கே பயனளித்தன. வெளிநாட்டு மூலதனத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையால் ஒரு நாட்டின் உரிமைக்குக் கேடு விளையலாம். பொருளாதாரத் துறையில் செல்வாக்கைப் பெற்று, அரசியலைக் கைப்பற்ற ஒரு நாடு முயற்சி செய்யலாம். பாதுகாப்புத் தொழில்கள் (Defence Industries), மூலத் தொழில்கள் (Key Industries) ஆகியவற்றில் அயல்நாட்டு மூலதனத்தைப் பயன்படுத்துவதால் பல இடர்கள் ஏற்படும். அயல்நாட்டு முதலீட்டாளர்கள், உள்நாட்டில் தொழில்கள் வளர்வதைப் பல வழிகளிலும் தடுப்பார்கள். தங்கள் தொழில் நிறுவனங்களின் முன்னேற்றம், ஏற்றுமதி முதலியன பாதிக்கப்படுமெனக் கருதிப் புதிதாகத் தோன்றும் தொழில் நிறுவனங்களுக்குப் பல இடையூறுகளைத் தோற்றுவிப்பார்கள். அயல்நாட்டு மூலதனத்தைக் கொண்ட நிறுவனங்களில் சிறந்த வேலைவாய்ப்புகள் அயல் நாட்டவருக்கே அளிக்கப்படுகின்றன. உள்நாட்டில் உழைப்பாளர்களின் உற்பத்தித் திறனை உயர்த்துவதிலோ, தொழில் நுட்ப அறிவைப் பரப்புவதிலோ அயல் நாட்டு நிறுவனங்கள் மிக்க ஆர்வம் கொள்வதில்லை. அந்நிறுவனங்கள் ஆதாய நோக்கோடு செயற்படுபவை. முதலீடு செய்யப்பட்டுள்ள நாட்டின் பொருளாதார முன்னேற்றம் அவற்றின் உள்நோக்கமாக அமைவதில்லை. வளர்ச்சியடையாத நாடுகளுக்குச் செல்லும் அயல்நாட்டு மூலதனத்தின் அளவு, பல காரணிகளைப் பொறுத்தது. வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்குரிய மூலதன உபரி இருத்தல் வேண்டும். ஆனால், இந்நாடுகளில் உபரி மூலதனம் மிகப் பெரிய அளவில் இருக்குமென எதிர்பார்க்க இயலாது. அமெரிக்காவைத் தவிரப் பிற நாடுகள் மிகக் குறைந்த மூலதனத்தை மட்டுமே அளிக்கத்தக்க நிலையில் உள்ளன. எனவே, இந்நிலையில் வளர்ச்சியடையாத நாடுகளுக்குப் பன்னாட்டு அளவில் அமைந்துள்ள நிதிக் கழகங்கள் உதவுகின்றன. பொருளாதார முன்னேற்றத்திற்கான அயல்நாட்டு மூலதனத்தின் அளவு, இயற்கை வளங்கள், பிற வசதிகள் ஆகியவற்றைப் பொறுத்தும் அமையும் அயல்நாட்டு மூலதனத்தைச் சிறப்பாகப் பயன்படுத்திப் பொருளாதார முன்னேற்றத்தைப் பெற, மக்கள் வளமும் இயற்கை வளமும் நிரம்பப் பெற்றதாக ஒரு நாடு இருத்தல் வேண்டும். வனங்கள் இல்லாமல் அயல்நாட்டு மூலதனம் மட்டும் முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியாது. அயல்நாட்டு மூலதனத்தை ஏற்கும் திறனைக் கொண்டதாக ஒரு நாட்டின் பொருளாதாரம் அமைய வேண்டும். எந்த அளவிற்கு வேண்டுமானாலும் அயல்நாட்டு மூலதனத்தை ஏற்கும் ஆற்றல் எல்லாப் பொருளாதாரத்திற்கும் இருப்பதில்லை. பேராசிரியர் இக்கின்சு (Higgins) கருத்துப்படி, ஒரு நாட்டின் மூலதனத்தை ஏற்கும் திறன் கீழ்க்கண்ட காரணிகளைச் சார்ந்து அமையும். அவை, பயன்படுத்தப்படாத ஆற்றல், தொழில் நுணுக்க முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள், சிறப்பாகத் தீட்டப்பெற்ற முன்னேற்றத் திட்டம், குறைந்த அளவு உள்நாட்டு நிதி வசதிகள், விரைவாகவும் திறமையாகவும் திட்டங்களை நிறைவேற்றும் நிருவாகிகள், மக்களின் ஆதரவைக் கொண்டு இணைந்த அரசுகள் ஆகியவைகளாகும். அயல் நாட்டு மூலதனத்தின் அளவு ஒரு நாட்டின் மீள அடைக்கும் திறனைப் பொறுத்தும் அமையும். இறுதியாக, மூலதனத்தைக் கடனாகப் பெற்ற ஒரு நாட்டிற்கு முன்னேற வேண்டு- மென்ற விருப்பும் முயற்சியும் இருத்தல் இன்றியமையாதது. மூலதனத் திரட்சியைப் போன்றே இவ்வகை ‘விருப்புத் திரட்சியும்’, மிகுந்த முதலீட்டிற்கு ஊக்கமளித்து, உற்பத்தியின் அளவை உயர்த்த உதவும். எனவே, முன்னேறுவதற்கான விருப்பமும் முயற்சியும் அயல்நாட்டு மூலதனத்தின் அளவை வரையறுக்கும் காரணிகள் ஆகின்றன. அயல்நாட்டு மூலதனத்தைத் தனியார் மூலதனம் (Private Capital) எனவும், பொது மூலதனம் (Public Capital) எனவும் பிரிக்கலாம். அயல்நாட்டுத் தனியார் மூலதனத்தை நேரடி அல்லது மறைமுக முதலீடுகளாகப் பகுக்கலாம். நேரடி முதலீடு செய்கின்ற அயல்நாட்டு நிறுவனங்கள், முதலீட்டைப் பெற்ற நாட்டில் அம்முதலீட்டினால் ஏற்பட்ட சொத்துகளின் மீது கட்டுப்பாட்டு உரிமையைக் கொள்கின்றன. நேரடி முதலீடுகள் பல வழிகளில் செய்யப்படலாம். முதலீடு செய்கின்ற அயல்நாட்டு நிறுவனத்தின் கிளை நிறுவனமாக அது அமையலாம். முதலீட்டைச் செய்கின்ற நாட்டின் நிறுவனம், முழுநிதியையும் அளித்து ஒரு நிறுவனத்தை அயல்நாட்டு மூலதனத்தைப் பெறுகின்ற நாட்டில் அமைக்கலாம். தனிப்பட்ட சில நோக்கங்களுக்காக முதலீட்டைப் பெறும் நாட்டில் கழகங்களும் அமைக்கப்படுகின்றன. முதலீட்டைச் செய்கின்ற நாட்டவர் நிலையான சொத்துகளையும், முதலீடு செய்யப்படுகின்ற நாடுகளில் ஏற்படுத்திக் கொள்ளலாம். மறைமுக முதலீடுகள், மாற்றத்தக்க கடனுறுதிச் சீட்டுகளைக் கொண்டு செய்யப்படுகின்றன முதலீட்டைப் பெறுகின்ற நாட்டின் அரசே இப்பத்திரங்களை வெளியிடலாம். பங்குகளையும் பாதுகாப்பான கடன் பத்திரங்களையும் அயல்நாட்டு மூலதனத்தைப் பெற விற்பனை செய்யலாம். பங்குகளையும் கடனுறுதிச் சீட்டுகளையும் பெற்ற பங்குதாரர்கள் ஆதாயத்தில் மட்டும் பங்கு பெறும் உரிமையைப் பெறுவர். நிறுவனத்தைக் கட்டுப்படுத்த முடியாது. அண்மைக் காலத்தில் “பலநிலை மறைமுக முதலீடுகள்” (Multilateral Indirect Investments) செய்யப்பட்டு வருகின்றன. வளர்ச்சியடையாத நாட்டின் ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு நிதியைப் பெறப் “பன்னாட்டு மறு அமைப்பு வளர்ச்சி வங்கி” (International Bank for Reconstruction and Development) கடன் பத்திரங்களை விற்று உதவுகிறது. பன்னாட்டுக் கழகங்கள் (Multi–national Corporations) உலக முழுவதிலும் பல நாடுகள் மூலதனம் பெற உதவி வந்துள்ளன. இக்கழகங்கள், 1967-ஆம் ஆண்டு 105 பிலியன் தாலரும் (Dollar), 1971-இல் 158 பிலியன் தாலரும். 1976-இல் 287 பிலியன் தாலரும் முதலீடுகளாகப் பல நாடுகளுக்கு உதவியுள்ளன. இவை தனியார் துறை, பொதுத் துறை இரண்டிற்கும் உதவியுள்ளன. இந்திய அரசு 1948 முதல் 1971 வரை 3742 ஒப்பந்தங்களை இக்கழகங்களுடன் மேற்கொண்டுள்ளது. 1956 முதல் 1965 வரை மேலும் 2524 தொழில் நுணுக்க ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்திய மைய இருப்பு வங்கி, (Reserve Bank of India) 877 தனியார் துறை வணிகக் கழகங்களைக் கணக்கிலெடுத்து ஆராய்ந்ததில், 1964–70 வரை 1,098 தொழில் நுணுக்க ஒப்பந்தங்களைத் தனியார் துறையுடன் மேற்கொண்டுள்ள விவரம் கிடைத்துள்ளது. இதன்மூலம் தனியார் துறைக்குக் கிடைத்த அயல்நாட்டு மூலதனம் உரூ. 305.8 கோடியாகும். இந்திய மைய இருப்பு வங்கி 41 பொதுத்துறை நிறுவனங்களை ஆராய்ந்ததில், 39 பொதுத் துறை நிறுவனங்கள், 163 தொழில் நுணுக்க ஒப்பந்தங்களை இக்கழகத்துடன் மேற்கொண்டிருப்பது புலனாயிற்று. பாரத கனரகத் தொழில் (BHEL) நிறுவனத்திற்கு 1974-ஆம் ஆண்டு வரை 12 வகையில் தொழில் நுணுக்க ஒத்துழைப்பு இக்கழகத்திலிருந்து கிடைத்துள்ளது. இக்கழகங்கள் பல நாடுகளில் பணி புரிகின்றன. இவை பல நாட்டில் நிருவாகத்தை மேற்கொண்டு, தொழில் துறை ஆராய்ச்சி முன்னேற்றம் ஆகியவற்றிற்கு உதவுவதோடு, தம்முடைய உற்பத்திப் பொருள் பிற நாடுகளின் மொத்த விற்பனையில் 25% இடம்பெறும் வகையில் ஏற்பாடும் செய்துள்ளன. முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின், மொத்த முதலீட்டின் அளவில் ஐந்தில் ஒரு பகுதி, அயல்நாட்டு மூலதனத்தின் மூலம் பெறப்பட்டது. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்தியா உரூ. 201.67 கோடி அளவிற்கு வெளிநாட்டு உதவியைப் பயன்படுத்தியது. ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் அரசாங்கம் மேற்கொள்ளத் திட்டமிட்ட பொதுச் செலவு உரூ. 42,300 கோடியாகும். இத்திட்டத்தின் நாட்டு மொத்த முதலீட்டில் அயல்நாட்டு மூலதனம் 9% பங்காகும். ஆறாம் ஐந்தாண்டுத் ஐந்தாண்டுத் திட்டத்தின் தொடக்கத்திலேயே வாணிகச் செலுத்து நிலை (Balance of Payments) மிகவும் சிக்கலுக்குரியதாக இருந்தது. எனவே, அயல்நாட்டு மூலதனத்தைச் சார்ந்து இத்திட்டம் தொடங்கியது. இத்திட்டம் 1980 முதல் 1985 வரை, எதிர்பார்க்கும் அயல்நாட்டு மூலதனம் உரூ. 10,929 கோடி ஆகும். மொத்த முதலீட்டில் அயல்நாட்டு மூலதனம் 6.2 விழுக்காடாகும். இந்தியா அயல்நாட்டு மூலதனம் பெற்ற போது இரு வகைகளில் மேற்கொண்டது. ஒன்று, 1974–75–ஆம் ஆண்டு வரை அயல்நாட்டு மூலதனத்தைப் பெரும்பாலும் கடனாகப் பெற்றது. இரண்டு, 1975–76 முதல் அயல்நாட்டு மூலதனக் கொடைகளின் (Grants) பங்கு மிகுந்து வருகின்றது. மொத்த அயல்நாட்டு மூலதனத்தில் 1974–75– இல் 7 விழுக்காடாக இருந்த கொடையின் அளவு, 1975-76 மற்றும் 1976–77–இல் 15.4 விழுக்காடாகவும், 1977–78–இல் 20.2 விழுக்காடாகவும், 1979–80–இல் 22.3 விழுக்காடாகவும் உயர்ந்து வருகிறது. 1980–81–இல் 18.3 விழுக்காடாகவும், 1981–82–இல் 17.3 விழுக்காடாகவும் குறைந்து வருகிறது. இவ்வாறு இந்தியா மிகுந்த கொடையைச் சார்ந்திருந்ததால் கடனும், கடனை வட்டியுடன் திருப்பியடைத்தற்குரிய சுமையும் குறையலாயின. இந்தியாவின் அயல் நாட்டு மூலதனக் கொள்கை விடுதலை பெற்ற ஓர் ஆண்டிற்குள் (1948–இல்) அரசாங்கம் வெளியிட்ட தொழிற் கொள்கையில் அயல்நாட்டு மூலதனத்தைப் பற்றி இந்திய அரசின் கொள்கை பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது: 1. தொழிற் கொள்கையைப் பின்பற்றுவதில் அயல்நாட்டு நிறுவனங்களுக்கும் இந்திய நிறுவனங்களுக்கும் இடையே எவ்விதப் பாகுபாடும் செய்யப்படமாட்டாது. 2. வெளிநாட்டு முதலீடு செய்பவர்கள் இந்தியாவில் கிடைக்கும் ஆதாயத்தைத் தங்கள் நாடுகளுக்கு அனுப்பவும் அல்லது மூலதனத்தை இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லவும் ஏற்ற வசதிகள் அளிக்கப்படும். 3. தொழில்களை நாட்டுடைமையாக்கினால் சமமான, நிலையான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்பன ஆகும். இத்தொழிற் கொள்கையின்படி அயல்நாட்டினருக்கு முதலீடு செய்ய வசதிகள் அளிக்கப்படுகின்றன. கூட்டு முயற்சியிலும் சில நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வகை நிறுவனங்கள் மிகுந்த அளவு மூலதனத் தேவை கொண்டவையாகவும், முன்னேற்றமடைந்த உற்பத்தி முறைகளைப் பின்பற்றத்தக்கவையாகவும் இருக்கின்றன. இவை ஏற்றுமதிப் பொருள்களையும் இறக்குமதிப் பொருள்களையும் உற்பத்தி செய்பவைகளாக உள்ளன. இந்தியாவில் தொழில் நிறுவுவோருக்குப் பயிற்சி அளிப்பவையாகவும் தொழில் நுணுக்க அறிவை உழைப்பாளர்களுக்கு அளிப்பவையாகவும் இவை அமைகின்றன. மேலும், அயற்செலாவணியை ஈட்டித் தருபவையாகவும் இவை இருக்கின்றன. இக்கொள்கைகள், ஐந்தாண்டுத் திட்டங்கள் முழுவதிலும் பின்பற்றப்பட்டன. இருப்பினும், அயல்நாட்டு மூலதனத்தைப் பொறுத்த வரை இரண்டு தெளிவான நிலைகளை இந்தியாவில் காணலாம். அயல்நாட்டு மூலதனத்திற்கு 1951 முதல் 1965 வரை மிகுந்த கட்டுப்பாடுகள் அமைக்கப்படவில்லை. எளிதாக இந்தியாவில் அயல்நாட்டினர் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால், 1965 முதல் தொழில் முன்னேற்றத்தில் அயல்நாட்டு மூலதனம் பங்கு பெறுவது பின்வருமாறு கட்டுப்படுத்தப்பட்டது. அதன்படி 1. அயல்நாட்டு மூலதனம் பெறும் துறை, திட்டக் குறிக்கோளை அடைய உதவுவதாக இருக்க வேண்டும். 2. அயல்நாட்டிலிருந்து பெறும் தொழில் நுணுக்க அறிவு இந்தியாவில் கிடைக்காததாக இருக்க வேண்டும். 3. அயல்நாட்டு உதவி பெறாதபோது அம்மூலதனப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு அயற் செலாவணி வீணாவதைத் தவிர்க்கக் கூடிய நிலை இருந்தால், உதவியை அனுமதிக்கலாம். 4. தொழில் அமைச்சகம் உரிமம் (Licence) வழங்கும் போது, அயல்நாட்டு நிறுவனம் உள்நாட்டு நிறுவனங்களோடு போட்டியிடாததாக இருக்கவேண்டும். என்பதைக் கருத்திற் கொள்ளவேண்டும். இவற்றைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் தொழில் நிறுவனங்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, 1968-இல் பின்வருமாறு இரண்டு பட்டியல்களை வெளியிட்டது. பட்டியல் 1. (அ) அயல்நாட்டு மூலதனம் அனுமதிக்கப்படக்கூடிய தொழில் நிறுவனங்கள், (ஆ) அயல்நாட்டுத் தொழில் நுணுக்க உதவிபெறும் ஒப்பந்தங்கள் தேவைப்படாத துறைகள் பட்டியல் 2. அயல்நாட்டு உதவி எவ்வகையிலும் தேவைப்படாத தொழில் நிறுவனங்கள். இந்தப் பட்டியல் பின்வரும் ஆண்டுகளில் திருத்தி அமைக்கப்பட்டது. 1969–70–ஆம் ஆண்டு நான்காம் ஐந்தாண்டுத் திட்டத் தொடக்கத்தில் மிக்க நெருக்கடி நிலையைத் தவிர்க்க மட்டும் அயல்நாட்டு மூலதனம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்திக் கூறப்பட்டது. 1973–இல் அயல்நாட்டுத் தனியார் மூலதனம் 19 தொழில்களில் மட்டும் அனுமதிக்கப்பட்டது. மேலும், அயல்நாட்டு மூலதனம் உள்நாட்டுக்கு வருவதைத் தடை செய்தது மட்டுமல்லாமல், அயல்நாட்டு மூலதனத்துடன் செயற்படும் இந்திய நிறுவனங்களை முடிந்தவரை ‘இந்திய மயமாக்குந் திட்டம்’ மேற்கொள்ளவும்பட்டது. இந்த நோக்கத்தோடு அயல்நாட்டு மூலதன வரவைக் கட்டுப்படுத்த அயற்செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டம் (Foreign Exchange Regulation Act) 1973–ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன்படி 1. இந்திய நிறுவனங்களில் அயல் நாட்டு மூலதனம் 40 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. 2. நுணுகிய அடிப்படைத் தொழில்களில் மட்டும் 74 சதவிகித அயல் நாட்டு மூலதனம் அனுமதிக்கப்பட்டது. ஏற்றுமதித் துறைகளுக்கும் புதிய தொழில் முறைகளைப் பின்பற்றும் துறைகளுக்கும் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. 3. இந்தியாவில் உள்ள அயல்நாட்டு நிறுவனங்களின் கிளைகள் இந்திய நிறுவனங்களாக மாற்றப்படுதல் வேண்டும். அதில் குறைந்த அளவு 26 விழுக்காடேனும் இந்திய மூலதனம் பங்கு பெற்றிருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. 4. இதைத் தவிர அயற்செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டம், அயல்நாட்டு முதலீட்டாளருக்குக் கொடுக்கவேண்டிய “உரிமைப் பங்கு” (Royalty) எவ்வளவு இருத்தல் வேண்டும்; அயல்நாட்டாருடன் செய்யும் ஒப்பந்தத்திற்கான கால அளவு எவ்வளவு என்பன போன்ற பலவற்றிற்கும் வரையறை குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பு கட்டுப்படுத்தப்படாமல் அனுமதிக்கப்பட்ட அயல்நாட்டு மூலதனம், இப்போது கட்டுப்பாட்டுடன் அனுமதிக்கப்படுகிறது. எனினும், 6–ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தில் நாடு எதிர்பார்க்கும் அல்லது சார்ந்து நிற்கும் அயல் நாட்டு மூலதனத்தின் அளவு உரூ. 10,029 கோடி ஆகும். அயல் நாட்டு மூலதனத்தைப் பெற்றதால் இந்தியப் பொருளாதாரத்தில் விளைந்த நன்மைகள் 1. அயற்செலாவணிப் பற்றாக்குறை நிலையைத் தீர்க்க அயல் நாட்டு மூலதனம் உதவியது. 2. அயல்நாட்டு மூலதனத்தைப் பயன்படுத்தியதால் இந்தியாவில் முதலீட்டு வீதமும், அதனால் சேமிப்பு வீதமும் உயர்ந்தன. 3. நாட்டில் திறமை குறைந்த உழைப்பாளர்களைத் திறமை மிக்கவர்களாக மாற்றவும் தொழில் நுட்ப அறிவு பரவவும், தொழில் உற்பத்தி முறைகளில் சீரிய முன்னேற்றங்கள் ஏற்படவும் அயல்நாட்டு மூலதனம் உதவியுள்ளது. உற்பத்திப்பொருள்களின் அளவையும் தரத்தையும் உயர்த்தத் தொழில் நுட்பப் பயிற்சிகள் உதவியுள்ளன. இப்போது பிறநாடுகளுக்குத் தொழில் நுட்ப உதவி அளிக்கும் அளவுக்கு இந்தியா முன்னேறியுள்ளது. எடுத்துக்காட்டாக, தோகாவில் (Doha) உள்ள இயற்கை வாயுலின் வளத்தைப் பயன்படுத்தி, அங்குத் தொழில் நுணுக்க உதவியை அளிக்க, இந்தியா தயாராக இருப்பதாகக் குடியரசுத் தலைவர் செயில்சிங் 1983-ஆம் ஆண்டு திசம்பர் 19-ஆம் தேதி உறுதியளித்திருக்கிறார். 4. பெருகுகின்ற மக்கள் தொகைக்குப் போதுமான உணவை இறக்குமதி செய்யவும், அதன்மூலம் விலைகளைக் கட்டுப்பாடு செய்யவும் அயல்நாட்டு மூலதனம் உதவியுள்ளது. 5. வேளாண்மை வளர்ச்சிக்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகள், அணைகள், மின்சாரத் திட்டங்கள் ஆகியவை அயல் நாட்டு மூலதனத்தால் ஏற்பட்டவை. 6. பல இரும்பு, எஃகுத் தொழிற்சாலைகள் நாட்டில் அயல்நாட்டு உதவியால் ஏற்பட்டன. 7. அயல்நாட்டு மூலதனத்தால் சாலைப் போக்குவரத்து, துறைமுக முன்னேற்றம், இருப்புப் பாதைப் போக்குவரத்து, ஆகாய விமானப் போக்குவரத்து ஆகியவை மேம்படுத்தப்பட்டு, அதனால் வாணிகம் வளர்ந்து, பிற தொழில் உற்பத்தி உயர வாய்ப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் நுங்கம்பாக்கத்தில் கட்டப்பட்ட சுரங்கப் பாதைக்கு அமெரிக்கா உதவியது; இப்பாதை கட்டுவதற்கு முன் இரயில் போக்குவரத்திற்குச் சாலை அடைக்கப்பட்டதால் ஏற்பட்ட 10 இலட்சம் உரூபாய் இழப்பு இதனால் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதே போன்று சென்னை ஓட்டேரிப் பகுதியிலும் சுரங்கப் பாதை அமெரிக்க உதவியுடன் கட்டப்பட்டுவிடும் என்பது கூறப்படுகிறது. சிக்கல்கள் 1. இந்தியா அயல்நாட்டு மூலதனத்தைக் கடனாகப் பெறுவதால் அக்கடனை வட்டியுடன் திருப்பித்தரும் சுமை மிகுகிறது. முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் உரூ. 23.8 கோடியும், இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் உரூ. 119.4 கோடியும், மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் உரூ. 524.6 கோடியும், நான்காம் ஐந்தாண்டுத் திட்டத்தில் உரூ. 2455 கோடியும் (நான்கு மடங்கு உயர்வு), ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் உரூ. 3770 கோடியும், ஆறாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் மூன்று ஆண்டுகளில் மட்டும் (1983 வரை) உரூ. 2733 கோடியும் இந்தியா கடனைத் திரும்பச் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2. அயல்நாட்டு மூலதனம் கிடைப்பதில் உறுதியற்ற தன்மை இருக்கிறது. 3. அயல்நாட்டு முதலீட்டாளரின் தலையீடு ஒரு சில துறைகளில் பெருகுவது இடர்ப்பாடாக உள்ளது. அதன்பின் அயல்நாட்டு அரசியல் தலையீடு ஏற்படா வண்ணம் பாதுகாக்க வேண்டியுள்ளது. 4. ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்காகக் கொடுக்கப்படும் மூலதனமும் அத்திட்டத்தின் ஒரு பகுதிக்கு மட்டுமே உதவுகிறது. முழுமையான நிதி உதவி கிடைப்பதில்லை. 5. அயல்நாட்டிலிருந்து கிடைக்கும் புதிய கருவிகள், தொழில் நுட்ப அறிவு ஆகியவை இந்தியாவில் சில துறைகளுக்குப் பொருந்துவனவாக இல்லை. 6. அயல்நாட்டு மூலதனத்தை முதலீடு செய்பவர்களுக்கு இந்தியாவிலிருந்து அளிக்கப்படும் ஆதாயப் பங்கு, உரிமைப்பங்கு ஆகியவற்றை உற்று நோக்கினால், நாட்டிலிருந்து அயல் நாட்டிற்கு அனுப்பப்படும் பணத்தின் அளவு மிகுந்து வருவது தெளிவாகும். இது நாட்டிற்கு ஏற்படும் இழப்பு. இவை பற்றிய புள்ளி விவரங்கள் முழுமையாகக் கிடைப்பதில்லை. ஆனால், 1956–57–இலிருந்து 1966–67 வரை மட்டும் வெளிநாட்டுத் தனியார் நிறுவனம் உரூ. 388.2 கோடியை ஆதாயப் பங்காகப் பெற்றது. பன்னாட்டுக் கழகங்கள் (Multinational Corporations) மூலம் பயன்பெறும் கால்டெக்சு (Cultex) நிறுவனத்தின் 1966–70-இன் மொத்த மூலதனம் உரூ. 16.92 கோடி. ஆனால் அது தன் கழகத்திற்கு அனுப்பிய ஆதாயப்பங்கு உரூ. 43 கோடி. அதே ஆண்டில் எசோ (ESSO) நிறுவனத்தின் மொத்த மூலதனம் உரூ. 29.58 கோடி. அது அயல்நாட்டு முதலீட்டாளருக்கு அனுப்பிய ஆதாயப் பங்கு உரூ. 83 கோடி ஆகும். இந்த எடுத்துக்காட்டுகள், முழுநிலையைப் படம்பிடித்துக் காட்டாவிட்டாலும் இந்தியாவிற்கு அயல்நாட்டு மூலதனத்தால் ஏற்படக் கூடிய பண இழப்பைத் தெரிந்து கொள்ள உதவுகின்றன. அயல்நாட்டு மூலதனம், திட்டம் நிறைவேற்றலுக்கு இந்தியாவுக்கு உதவப்பட்டுள்ளது. அனைத்துத் துறைகளிலும் உற்பத்தித் திறன் உயர்ந்துள்ளது. ஆனால், அதற்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் உயர்ந்த செலவையும் வருந்தொகையை மீளச் செலுத்தும் நிலையையும் இந்தியா மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, அயல்நாட்டு மூலதனத்தைப் பெறுவதில் கவனத்துடன் செயற்பட வேண்டும். இயன்றவரை தன்னிறைவு பெற வேண்டும் என்ற ஐந்தாண்டுத் திட்டக் குறிக்கோளை அடைய இந்தியா முனைய வேண்டும். காண்க: அயல்நாட்டு உதவி, அயல்நாட்டுக் கடன்.ச.கி. துணை நூல்கள் ச. அன்சர் அலி, “இந்தியப் பொருளாதார வளர்ச்சிப் பிரச்சினைகள்”, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், முதற்பதிப்பு – 1972. சபாநாயகம், எஸ்., “பொருளாதார முன்னேற்றமும் திட்டமும்”, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், முதற் பதிப்பு–1972. இராக்னர் நர்க்சு, தமிழாக்கம், குமாரசுவாமி, மா., “வளர்ச்சி குறைந்த நாடுகளின் முதலாக்கம் பற்றிய சிக்கல்கள்”, தமிழ் வெளியீட்டுக் கழகம், தமிழ் நாடு அரசாங்கம், 1957. ராவ், வி.கே. ஆர்.வி., தமிழாக்கம், சுப்பிரமணியம் எம்.கே., “பொருளாதார வளர்ச்சிக் கட்டுரைகள்”, தமிழ் வெளியீட்டுக் கழகம், தமிழ்நாடு அரசாங்கம், 1967. Ruddar Datt, K.P.M. Sundaram, “Indian Economy”, S. Chand & Co. Pvt. Ltd., New Delhi, 1981. Ishwar Dhiogra, C., “The Indian Economy Resources Planning & Development Problem”, Sultan Chand & Sons, 23 Daryar Ganj, New Delhi, 1983.