வைணவ ஆசாரியர்களுள் சீரும் சிறப்பும் மிகவுடையவரும், திருவாய்மொழியினைச் செம்மைப்படுத்தித் தொண்டு செய்தவரும் வைணவ ஆசாரியர் தலைவருமான நாதமுனிகளால் உய்யக் கொள்ளப்பெற்றவர். நாதமுனிகளால் உய்யக்கொள்ளப் பெற்றமையால் இவர் இப்பெயரெய்தினார் எனச் சிலர் கூறுவர். இன்னுஞ்சிலர், இவர் தம் பின்னே தோன்றிய மணக்கால் நம்பி போன்ற பலரையும் உய்யக் கொண்டருளியமையால் இப்பெயர் பெற்றார் என்று கூறுவர். இவர், சிதம்பரத்திற்கு அண்மையில் உள்ள காட்டுமன்னார் கோயில் என்னும் சிற்றூரில் வைணவ சமயத் தொண்டாற்றும் அந்தணர் மரபில் புண்டரீகாட்சர் என்னும் இயற்பெயருடன் தோன்றினார். புண்டரீகாட்சர் என்னும் வடமொழிப் பெயர் தமிழில் ‘தாமரைக் கண்ணன்’ எனப் பொருள்படும். இவர் தம் குருவாகிய நாதமுனிகளின் அருளாணைப்படி வைணவ சாத்திர–தோத்திர நூல்களையும், திராவிட வேதமாய் விளங்கும் திருவாய் மொழியினையும் பயின்று, அதன் சீர்பரப்பும் தொண்டில் சிறந்து அவருக்குத் தலைமாணாக்கராய் விளங்கினார். வைணவ சமய மரபிலும் வரலாற்றிலும் தமக்கெனக் குறிப்பிடத்தக்க ஓரிடத்தினை இவர் பெற்றுள்ளார். கி.கோ.