இலெனின் கிராடு
ileṉiṉ kirāṭu
சோவியத்து உருசியாவிலுள்ள மாநகரங்களுள் ஒன்று.
சோவியத்து உருசியாவிலுள்ள மாநகரங்களுள் ஒன்று. முன்பு புனித பீட்டர்சுபர்கு என்ற பெயருடன் உருசியப் பேரரசின் தலைநகராக இருந்தது. இதனைப் பீட்ரோகிராடு என்றும் கூறுவர். இலெனின் பெயரால் இன்று இந்நகரம் இலெனின்கிராடு (Leningrad) எனப்படுகிறது.
இலெனின் கிராடை உருவாக்கியவர் மகாபீட்டராவர். மகாபீட்டர் கி.பி. 1703–ஆம் ஆண்டில் சுவீடன் நாட்டுடன் போரிட்டுப் பின்லாந்து வளைகுடாவில் சதுப்புநிலப் பகுதிகள் சிலவற்றை வென்றார். அந்த ஆண்டிலேயே அவர் பீட்டர்சுபர்குத் துறைமுகத்தைக் கட்டத் தொடங்கினார். ஐரோப்பாவைக் காணும் சாளரம் என்று இந்நகரைப் பீட்டர் பெருமிதத்தோடு கூறினார். அப்பகுதியில் அடிக்கடி வெள்ளப்பெருக்கும், நல்வாழ்வுக்கு ஏற்றதாக அமையாத தட்பவெப்பமும் குடிகொண்டிருந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாது, உழவர்களையும் கைதிகளையும் அங்குப் பணியாற்றத் திட்டம் தீட்டிச் செயற்படுத்தினார். உருசியா நாட்டைச் சார்ந்த குடும்பங்களை அங்குக் குடியேறச் செய்தார். பணியாளர்களுள் பலர் பிணியால் பீடிக்கப்பட்டு உயிர் துறந்தனர். மாசுக்கோ நகருக்கு மாறாக கி.பி. 1712–இல் பீட்டர்சுபர்கைப் பீட்டர் தம் தலைநகராக்கினார்.
பீட்டரின் வழித்தோன்றல்கள் புனித பீட்டர்சுபர்கை ஒரு முதன்மையான துறைமுகமாகவும், தொழிற்சாலைகளின் மையமாகவும் மாற்றினார்கள். பிரபுக்கள் தத்தம் மாளிகைகளில் பகட்டாக வாழ்ந்தனர். ஏழைகள் வறுமையால் வாடி வதங்கினர். கப்பற்கட்டும் தொழிற்சாலைகள், உலோகப் பணிமனைகள், நெசவாலைகள் போன்றவை அங்கு மிளிர்ந்தன. தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்திற்குற்குக் கடுமையாக உழைத்தனர். இங்கு ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு தெற்றென வெளியாயிற்று. அதன் விளைவாக எழுந்ததே 1917–ஆம் ஆண்டைய உருசியப் புரட்சியாகும்.
இலெனின்கிராடு
முதல் உலகப் போரின்போது உருசியா, செருமனிக்கு எதிராகப் போரிட்டது. பல இலட்சக்கணக்கான படைவீரர்கள் கொல்லப்பட்டோ படுகாயம் அடைந்தோ போர்க் கைதிகளாகச் சிறைப்படுத்தப்பட்டோ அல்லலுக்காளாயினர். பீட்ரோகிராடு மக்கள் 1917, மார்ச்சு மாதத்தில் அரசருக்கெதிராகக் கலகஞ் செய்தனர். அவர்கள் சாலைகளில் பெருங்கூட்டமாகக் கூடி, உண்ண உணவும் அமைதியான வாழ்வும் வேண்டினர். இதுதான் உருசியப் புரட்சியின் தொடக்கமாகும். மாசுக்கோ 1918–ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் உருசிய நாட்டின் தலைநகராயிற்று, பீட்ரோகிராடு 1924–இல் இலெனின்கிராடு என்று பெயர் சூட்டப்பெற்றது.
இரண்டாம் உலகப் போரின்போது 1941–ஆம் ஆண்டுக் கோடைக்காலத்தில் செருமானிய நாசிகள் சோவியத்து உருசியாவின்மீது படையெடுத்தனர். ஆகசுட்டு மாத அளவில் அவர்களின் திறன்மிக்க படைவீரர்கள் இலெனின்கிராடை முற்றுகையிட்டனர். இம்முற்றுகை இரண்டரை யாண்டுகள் தொடர்ந்தது. எனினும் செருமானியர்களால் இந்நகரைக் கைப்பற்ற முடியவில்லை. இந்நகரம் கடும் சோதனைகளுக்காளானது. பல்லாயிரவர் பட்டினியால் இறந்தனர். 1944, சனவரியில் இந்நகர் விடுவிக்கப்பட்டது.
இன்று இலெனின்கிராடு வரலாற்றுச் சிறப்பு மிக்க சுறுசுறுப்பான மாநகரமாகும். இந்நகரின் மக்கள்தொகை 46,76,000 ஆகும் (1981). இது சோவியத்து உருசியாவின் தலைசிறந்த துறைமுகமாக இன்று விளங்குகிறது. பின்லாந்து வளைகுடாவில் கலக்கும் நீவா ஆற்றின் கழிமுகத்தில் இலெனின் கிராடு அமைந்துள்ளது. இந்நகரம் உலக நடுக்கோட்டிற்கு 60 பாகை வடக்கில் இருப்பதால், குளிர்காலத்தில் கதிரவன் பிற்பகல் 3 மணிக்கே மறையும், பகல் நேரம் மிகக் குறைவு. கோடைக்காலத்திலோ இரவு நேரமே பெரும்பாலும் தோன்றுவதில்லை.
உருசிய, பிரெஞ்சு, இத்தாலியக் கட்டடக் கலைஞர்கள் இந்நகரில் அழகான சதுக்கங்களையும், அகன்ற சாலைகளையும், பூங்காக்களையும், பெரும் மாளிகைகளையும் அமைத்தற்குக் கட்டட வரைபடங்கள் எழுதித் தந்தனர். சார் மன்னர்களும் பிரபுக்களும் நூற்றுக்கணக்கான அறைகளைக் கொண்டு விளங்கிய மாளிகைகளில் பகட்டாக வாழ்ந்தனர். உருசியப் புரட்சிக்குப் பின்னர் இக்கட்டடங்கள் அரசுடைமையாக்கப்பட்டன
முதன்மையான சாலையாகக் கருதப்படும் நெவசுகி பிராசுபெக்டு என்னும் சாலையின் இருமருங்கிலும் கடைகளும், ஓர் அறை வீடுகளும், திருச்சபைகளும் இருக்கின்றன. அட்மிரால்டிக் கட்டடத்திற்கு முன்னால் காணப்படும் சதுக்கத்துடன் நெவசுகி பிராசுபெக்டு இணைகிறது. இதன் அருகில் புனித ஈசாக்குத் திருச்சபைக்கோயில் பொன்னிறப் பொலிவுடன் காணப்படுகிறது. அங்குள்ள பெருஞ் சதுக்கத்தைக் கடந்தால் ‘எர்மிட்டேசு’ (Hermitage) என்னும் உலகப் புகழ் பெற்ற அருங்காட்சியகத்தைக் காணலாம். அதனை அடுத்துள்ள குளிர்கால மாளிகை (Winter Palace) என்னும் அரண்மனையில் 1917–ஆம் ஆண்டுவரை சார் மன்னர்கள் வாழ்ந்து வந்தனர். இம்மாளிகைக்குப் பின்னால் நீவா ஆறு பாய்கிறது. இவ்வாற்றின் குறுக்கே பல பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மாமன்னர் பீட்டரின் வெண்கலச் சிலையொன்று பாய்ந்தோடும் நிலையிலுள்ள குதிரையின்மீது இருப்பதை ஆற்றுக்கு அப்பால் காணலாம். அதன் அருகில் புனித பீட்டர், புனித பால் திருக்கோயில்கள் அமைந்துள்ளன.
குழந்தைகள் இலெனின்கிராடைப் பெரிதும் விரும்புவர். அங்குள்ள குழந்தைகள் விளையாடும் பூங்காக்களையும், பொம்மலாட்டக் காட்சி அரங்- கங்களையும் அவர்கள் கண்டுகளிப்பர். குழந்தைகளுக்கான திரையரங்குகளும் விலங்குக் காட்சி வட்டரங்குகளும் உள்ளன. இங்குள்ள அரண்மனை ஒன்றைக் குழந்தைகளின் முன்னோடி மனையாக மாற்றி, அங்குப் பணிமனைகள், கலைத் தொழிலகங்கள், விளையாட்டுத் திடல்கள், நடன அறைகள் முதலியவற்றை அமைத்துள்ளனர். அங்குள்ள திரையரங்கம் ஒன்றில் குழந்தைகள் தம் சொந்த நாடகங்களை நடித்துக் காட்டுகிறார்கள்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 450)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5veh97c5/
தமிழ்“இலெனின் கிராடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5veh97c5/APA
Oliyon Research. (2026). இலெனின் கிராடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5veh97c5/MLA
"இலெனின் கிராடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5veh97c5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment