இந்து சமயக் கடவுளான கிருட்டிணனைப் போற்றி வழிபடும் சமய இயக்கத்தைக் குறிக்கும் பெயராகும். உலகின் பல பாகங்களிலும் இந்த இயக்கத்தினர் கிருட்டிண வழிபாட்டைப் பக்தி சிரத்தையோடு செய்து வருகின்றனர். இது ஒரு பன்னாட்டு இயக்கம், தொடக்கக் காலத்தில் இதனைக் “கிருட்டிணர் நனவைப் பரப்பும் பன்னாட்டுக் கழகம்” (ISKCON) என்று அழைத்தனர். ‘அரே கிருட்டிணா’ என்னும் சொற்கள் இவ்வியக்கத்தினர் பரவசமூட்டும் பக்தியுடன் பாடும் மந்திரத்தின் முதற் சொற்களாம். ‘அரே’ என்னும் சொல் வடமொழியில் “அரி”, என்னும் சொல்லின் திரிபேயாகும். “கிருட்டிணா” என்னும் வடமொழிச் சொல் அவதார புருடனாகிய திருமாலைக் குறிக்கிறது. தவத்திரு சுவாமி பக்தி வேதாந்த பிரபுபாதர் என்னும் அடியாரால் தோற்றுவிக்கப்பட்டது அரே கிருட்டிணா இயக்கமாகும் (Hare Krishna Movement). இவர் ஓர் இந்தியர், சுவாமி பக்தி வேதாந்தர் 1965–ஆம் ஆண்டில் இவ்வியக்கத்தை அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் சென்று பரப்பினார். இருபதுக்கும் மேற்பட்ட, அரே கிருட்டிணா இயக்கத்தினைச் சேர்ந்த கிளைகள், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் ஏனைய நாடுகளிலும் நிறுவப்பட்டுள்ளன. ‘அரே கிருட்டிணா’ என்னும் மந்திரத்தை ஆடியும் பாடியும் தாளமிட்டும் உள்ளத்தையும் உணர்வையும் தொடும் வண்ணம் பரவச நிலையில் கருத்தூன்றி வழிபாடு நடத்தும் இதன் தொண்டர்கள் இறைவனுடன் இரண்டறக் கலக்கும் உள்ளொளி பெற்று மகிழ்வர். இதன் உறுப்பினர்கள் சமூகமாகக் கூடிக் கூட்டு வழிபாடு நடந்துவதில் வல்லவர்கள். காம இச்சைகளுக்கு அப்பாற்பட்டு, சூதாட்டம் ஊன் உண்ணும் பழக்கம் குடிப்பழக்கம் போன்ற தவறுகளைச் செய்யாதவர்களாய்த் தூய இறையுணர்வுடன் கூடிய நல்வாழ்வு வாழ்வோர், வீடுபேற்றை அடையலாம் என்பது அவர்களின் கொள்கைகளாம். தலையை மழித்துக் கொண்டும், கழுத்தில் உருத்திராட்ச மாலையணிந்தும், காவியுடுத்தியும், தலையுச்சியில் குடுமி வைத்துக்கொண்டும் வைதிகர்களைப் போல் காட்சியளிக்கும் இவ்வியக்கத்தினருக்குச் சாதி, உணர்வு கிடையாது. இவ்வியக்கத்தைச் சார்த்த பெண்கள் வண்ணச் சேலைகளைக் கட்டிக் கொள்வர். அரே கிருட்டிணா இயக்கத்தினர் மிகுதியாக இருக்கும் நகரங்களில் ‘இரத உற்சவம்’ எனப்படும் தேர் இழுக்கும் திருவிழாவை ஆண்டுக்கொரு முறை நடத்துகிறார்கள். பகவத் கீதை இவர்களின் வேதநூல். உலகெங்கும் இப்பெரும் பக்தி நூலை இவ்வியக்கத்தினர் பரப்புகின்றனர். கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் இந்தியாவில் சிறந்து விளங்கிய பக்தி இயக்கத்தைத் திரும்பக் கொணரும் மறுமலர்ச்சி இயக்கம் என்றும் இதனைக் கருதலாம்.