செதில் இறக்கையுடையவை
cetil iṟakkaiyuṭaiyavai
இணைக் காலிகள் (arthropoda) தொகுதியில், பூச்சிகள் (insecta) வகுப்பில், இறக்கை உடையவை (pterygota) துணை வகுப்பில், உள்ளிறக்கைப் பூச்சிகள் (endopterygota) அல்லது நிறை உருமாற்றப் பூச்சிகள் (holometabola) பிரிவில், லெப்பிடாப்டிரா அல்லது செதில் இறக்கையுடையவை (lepidoptera) வரிசையில் வரும் பூச்சிகளுக்கு வண்ணத்துப் பூச்சிகளையும், அந்திப் பூச்சிகளையும் சான்றாகக் கூறலாம். இவ்வரிசையில் வரும் பூச்சிகளுக்கு, வளர்ந்த மெல்லிய சவ்வாலான ஈரிணை இறக்கைகள் காணப்படும். இவ்விறக்கைகள் வண்ணத் துகள்களுள்ள நுண் செதில்களால் மூடப்பட்டுப் பல நிறத்துடன் காணப் படும். முதிர்ந்த உயிரியின் வாயுறுப்புகள் உறிஞ்சுவதற்கேற்பவும், நீள் துருவு தாடைகள் (maxillae), சுருளக் கூடிய உறிஞ்சு குழலாக (proboscis) மாறியும் அமைந்திருக்கும். பிற வாயுறுப்புகள் சுருங்கி இருக்கும். ஆனால், கீழுதட்டுத் (Iabium) தடிப்புகள் நன்றாக வளர்ந்திருக்கும். முன் மார்புக் (prothorax) கண்டம், நடு மார்புக் கண்டத்துடன் (mesothorax) இணைந்திருக்கும். நிறை உரு மாற்றம் நிகழும். இதன் இளவுயிரிகளுக்குக் கம்பளிப் புழு என்று பெயர். இளவுயிரியில் மூன்று இணை மார்புக் கால்களும், ஐந்து இணை வயிற்றுக் கால்களும், கடிக்கும் வாயுறுப்புகளும் காணப்படும். கூட்டுப் புழுப் பருவம் கக்கூன் (cocoon) எனும் உறைகளாலோ, மண் கூடுகளாலோ மூடப்பட்டிருக்கும்.
பூச்சி இனங்களின் மிகப் பெரிய வரிசையில், லெப்பிடாப்டிரா வரிசையும் ஒன்றாகும். இதில், ஏறத்தாழ 1,05,000 சிற்றினங்கள் வரை காணப் படுகின்றன. இவ்வரிசையில் வரும் பூச்சியினங்கள், பொருளாதாரச் சிறப்புடையவை. இப்பூச்சிகளின் இளவுயிரிகள் பல்வேறு தாவரங்களின் இலைகளையும், சேமித்து வைக்கப்பட்டிருக்கும் உணவு தானியங்களையும் உண்டு வாழ்கின்றன. சில முதிர்ந்த அந்துப் பூச்சிகள் பழச் சாற்றை உறிஞ்சி வாழ்வதன் மூலம், மனிதனுடைய உணவுப் பொருளான பழத்தைச் சேதப் படுத்துகின்றன. ஒரு சில அந்தி மற்றும் வண்ணத்துப் பூச்சிகளின் இளவுயிரிகள், செதில் பூச்சிகளையும், உணவுப் பூச்சிகளையும் உண்டு அழிப்பதன் மூலம், மனிதனுக்கு நன்மையை விளைவிக்கின்றன. பூக்களின் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவி புரிவதன் மூலம், இப்பூச்சிகள் மலர்களுக்கு மட்டுமல்லாமல், மக்களுக்கும் உதவுகின்றன. பட்டுப் புழுக்களிலிருந்து பெறப்படும் பட்டு இழைகள், மனிதனுக்குத் தேவையான ஆடைகள் நெய்வதற்குப் பயன் படுகின்றன. இப்பூச்சிகள் அழகாக இருப்பதால், ஓவியங்கள் வரைவதற்கும், பல்வேறு வேலைப்பாடுகளை உருவாக்குவதற்கும் பயன்படுகின்றன.
வகைப்பாடு பெண் இனப் பெருக்க மண்டலத்தை அடிப்படையாகக் கொண்டு லெப்பிடாப்டிரா வரிசையை 3 துணை வரிசைகளாகப் பிரிக்கலாம். அவை சிக்லோடிரா (Zeugloptera), மானோட்ரைசியா (Monotrysia), டைட்ரைசியா (Ditrysia) எனப்படும்.
சிக்லோடிரா. அண்ட நாளமும், மலக் குடலும், ஒரே பொதுத் துளை பெற்றிருக்கும். இளவுயிரிகளும், முதிர்ந்த உயிரிகளும், அரை தாடைகளின் உதவியால், உணவை உட்கொள்ளும். துருவு தாடை (maxilla) நன்கு வளர்ச்சியுற்ற லெசினியாவுடன் இருக்கும். இளவுயிரிகள் எட்டு இணை வயிற்றுக் கால்களை உடையவை.
மானோட்ரைசியா. இனப் பெருக்கத் துளைகள் ஒன்றோ, அரிதாக இரண்டோ இருக்கும். இத்துளை 9ஆம் வயிற்றுப் புறத் தட்டில் திறந்திருக்கும். முதிர் உயிரியில் செயல்படும் அரை தாடைகள் இரா. லெசினியா இல்லாத துருவு தாடையையும், ஏழு இணைகளுக்கு மிகாத இளவுயிரிகள், வயிற்றுக் கால்களையும் பெற்றிருக்கும். முதிர் உயிரிகள், கூர்மையான இறக்கைகளை உடையவை.
டைட்ரைசியா. இனப் பெருக்கப் பையிலிருந்து தோன்றும் ஒரு துளை 8ஆம் வயிற்றுப் புறத் தட்டிலும், முட்டைகளை வெளியேற்றும் மற்றொரு துளை 9ஆம் வயிற்றுப் புறத் தட்டிலும் தனித் தனியே
திறக்கும். முதிர் உயிரியில் செயல்படும் அரை தாடைகள் இரா. லெசினியா இல்லாத துருவு தாடையும், ஐந்து இணைகளுக்கு மிகாத இளவுயிரிகள் முன் கால்களையும் பெற்றிருக்கும். இறக்கைகளில் கூர்மை இல்லை. முன் இறக்கையும், பின் இறக்கையும் ஒத்த அமைப்புடையவை அல்ல.
இறக்கைகளின் அமைப்பை வைத்து ஒத்த இறக்கை அமைப்புடையவை (homoneura), வேறு பட்ட இறக்கை அமைப்புடையவை (heteroneura) என்ற இரு துணை வரிசைகளாகப் பிரிக்கலாம். முதல் வகைக்குக் கரப்பான்பூச்சி போன்று கடிக்கும் வாயுறுப்புடைய ஆஸ்திரேலியாவில் காணப்படும் கூஸ்டு அந்திப் பூச்சிகளையும் (ghost moth), இரண்டாம் வகைக்குப் பெரும்பாலான அந்திப் பூச்சிகளையும், வண்ணத்துப் பூச்சிகளையும் சான்றாகக் கூறலாம்.
வண்ணத்துப் பூச்சியின் வெளித் தோற்றம். முதிர் உயிரிகள் தலைப் பகுதியில் இரண்டு நீண்ட குச்சி வடிவ உணர் கொம்புகளையும், இரண்டு கூட்டுக் கண்களையும், இரண்டு எளிய கண்களையும் பெற்றிருக்கும். வாயுறுப்பு பூக்களிலுள்ள தேனை உறிஞ்சுவதற்கு ஏற்றவாறு அமைந்திருக்கும். அரை தாடைகள் இல்லை. முதல் துருவு தாடை துதிக்கை வடிவில் உறிஞ்சு குழலாக மாற்றமடைந்து, பயன்படா நிலையில் சுருண்டு காணப்படும். கீழுதடு குறைவுற்றும், அதன் இணைப்புடை நீட்சிகள் (palps) குறுகியும் காணப்படும்.
வலிமை குன்றிய 3 இணைக் கால்கள் மார்புப் பகுதியில் காணப்படும். இக்கால்கள் நடப்பதற்கோ, ஓடுவதற்கோ பயன்படுவதில்லை. மாறாக, நிற்பதற்கு மட்டுமே பயன்படுகின்றன. இரண்டு இணை இறக்கைகளைக் கொண்டு பறக்கும் தன்மையுடையது. நிற்கும் போது, இறக்கைகள் செங்குத்தாக மடங்கிக் காணப்படும். இத்தன்மையில், இது அந்திப் பூச்சிகளிலிருந்து வேறுபட்டும் காணப்படுகிறது. இறக்கைகள் கெட்டியாக ஒளி ஊடுருவ முடியாதவாறு, ஒன்றின் மீது ஒன்றாக, நுண் செதில்களால் மூடப் பெற்றிருக்கும். இவற்றில் நிறத் துகள் இருப்பதால், பல வித வண்ண அமைப்புகள் ஏற்படுகின்றன.
வாழ்க்கை வரலாறு. இதனுடைய வாழ்க்கைச் சுழற்சியில், நான்கு பருவங்கள் காணப் படுகின்றன. அவை, முட்டைப் பருவம், கம்பளிப் புழு அல்லது இளவுயிரிப் பருவம், கூட்டுப் புழுப் பருவம், முதிர் உயிரிப் (adult or imago) பருவம் எனப்படும்.
முட்டைப் பருவம். முதிர்ச்சி அடைந்த பெண் வண்ணத்துப் பூச்சிகள், இலைகளின் அடிப் பகுதியில் தங்களின் கருவுற்ற முட்டைகளை இட்டு, அவற்றைத் தம் உடலிலிருந்து சுரக்கும் நீர்மத்தால், ஒட்டச் செய்கின்றன. கரு முட்டை வளர்ச்சி அடைந்து, கம்பளிப் புழுவாக வெளி வருகிறது.
கம்பளிப் புழுப் பருவம். கம்பளிப் புழுவின் உடல் மெல்லிய, மென்மையான உறையால் மூடப் பட்டு, நீண்டு காணப்படும். இதற்கு, ஒரு தெளிவான தலையும், தொடர்ந்து மூன்று மார்புக் கண்டங்களும், 10 வயிற்றுக் கண்டங்களும் உள்ளன. தலையில் ஒரு தடித்த உறையும், அதில் இரண்டு உணர் கொம்புகளும், ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு குழுவாக அமைந்த எளிய கண்களும் இருக்கும். தலையின் கீழ்ப் புறத்தில் கடிக்கும் தன்மையுள்ள வாயும், பற்களுடன் கூடிய 2 அரை தாடைகளும், இரண்டு துருவு தாடைகளும், ஒரு கீழுதடும் அமைந்திருக்கும். கீழுதட்டுக்கு அருகில், பட்டுச் சுரப்பியின் (silk gland) துளை காணப் படுகிறது. மார்புக் கண்டங்களில் மூன்று இரட்டை இணைப்புடைய உண்மையான கால்களும் (true legs) 3. 4. 5. 6 5 மற்றும் 10ஆம் வயிற்றுக் கண்டங்கள் ஒவ்வொன்றிலும், ஓர் இரட்டை இணைப்பற்ற மொட்டையான சதைப்புடைய முன் கால்களும் (pro legs) உள்ளன. 10ஆம் வயிற்றுக் கண்டத்தில் காணப்படும் முன் கால்களுக்குப் புணர்ச்சி உறுப்புகள் (claspers) என்றும் பெயருண்டு. ஒவ்வொரு முன் காலிலும், ஓர் உறையாலான அடிப் பகுதியும், காக்சா (coxa) என்னும் நடுப் பகுதியும், உள்ளிழுக்கக் கூடிய பிளாண்டா (planta) என்னும் நுனிப் பகுதியும் இருக்கும். மலப் புழை, உடலின் பின் முனையில் காணப்படும். சுவாசப் புழைகள், முன் மார்புக் கண்டத்தில் ஓர் இணையும், முதல் எட்டு வயிற்றுக் கண்டங்களில் எட்டு இணையும் காணப்படுகின்றன.
இளவுயிரியின் உணவுப் பழக்கம், வெளி அமைப்பு, உள் அமைப்புப் போன்றவை முதிர் உயிரியிலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கும். இளவுயிரி தன் கடிக்கும் வாயுறுப்பின் உதவியால், தாவரங்களின் இலையை மிக வேகமாகவும், அதிகமாகவும் உட்கொண்டு, நான்கு முறை தோலுரித்து, முழு வளர்ச்சியுற்ற பின், இறுதியில் கூட்டுப் புழுப் பருவத்தை அடைகிறது. இப்பருவத்தை அடைவதற்கு முன்பு, இளவுயிரிகள் உணவு உண்பதை நிறுத்திக் கொண்டு, தமக்குத் தகுந்த இடத்தை இலையில் தேர்வு செய்து, புணர்ச்சி உறுப்பின் மூலம், இலையில் ஒட்டிய பிறகு, பட்டுச் சுரப்பியிலிருந்து சுரக்கும் நீர்மத்தைக் கொண்டு, பாதுகாப்பான பட்டுக் கூடுகளை அமைத்து, அதில் கூட்டுப் புழுக் காலத்தைக் கழிக்கின்றன. அப்போது, கூட்டுப் புழுவின் மேற்புறம் கடினமான ஓர் உறையினால், மூடப் பட்டிருக்கும். இப்பருவத்தில், கூட்டுப் புழு உணவு உட்கொள்வதில்லை. உணவுக் குழலின் நடுப் பகுதி, நரம்பு மண்டலம், சுவாச மண்டலம் போன்றவை நீங்கலாகப் பிற திசுக்கள் இப்பருவத்தில் சிதைந்து, புதிய திசுக்களை உண்டாக்குகின்றன. கூட்டுப் புழுவின் உள், வெளி அமைப்புகள் நன்கு மாற்றமடைந்தவுடன், கூட்டை உடைத்துக் கொண்டு, இறக்கைகளுடன் கூடிய முதிர் பூச்சியாக வெளி வரும். ஒரு வார காலம் முட்டை நிலையிலும், 4 வார காலம் கம்பளிப் புழு நிலையிலும், 10–12 நாள் வரை கூட்டுப் புழு நிலையிலும் இருந்து, வண்ணத்துப் பூச்சிகள் தம் வளர் மாற்றத்தை அடைகின்றன. இவ்வளர் மாற்ற காலம் சூழ்நிலை, உணவு போன்றவற்றைப் பொறுத்து, வண்ணத்துப் பூச்சிக்கு வண்ணத்துப் பூச்சி வேறுபட்டுக் காணப் படுகிறது. வண்ணத்துப் பூச்சியின் வாழ் நாளை வரையறுக்க முடியாது. அது, ஒரு சில நாள் முதல் பல மாதங்கள் வரை நீடிக்கலாம். அனைத்து வண்ணத்துப் பூச்சிகளும், பகலில் திரியக் கூடியவை. இந்தியாவில் காணப் படும் வண்ணத்துப் பூச்சிகளுக்குப் பேப்பிலியோ, டைனாயிஸ் போன்றவற்றைக் காட்டாகக் கூறலாம்.
அந்திப் பூச்சிகள். வண்ணத்துப் பூச்சிகளைப் போன்றே, இப்பூச்சிகளுக்கும், செதில்களையுடைய இறக்கைகள் காணப்படுகின்றன. முதிர் உயிரியின் வாயுறுப்புகள் நீர்ம உணவை உறிஞ்சிக் குடிப்பதற்கு ஏற்றவாறு அமைந்திருக்கும். இதனுடைய வளர்ச்சியின் போது, முழு வளர் உருமாற்றம் நிகழ்கிறது. மங்கலான நிறமுடைய இவற்றை, இரவில் மட்டுமே வெளியில் காணலாம். தரையில் நிற்கும் போது, இறக்கைகள் பின்னோக்கி மடிந்தும், கூர்மையற்ற உணர் கொம்பில் இறகுகளும் காணப்படும். கூட்டுப் புழுப் பருவத்தைக் கக்கூன் என்னும் கூட்டில் கழிக்கும். பெரிய அந்தி பூச்சிகளுக்கு, அக்ரன்ஸ்யா ஸ்டைஸ் (Achaerontia styx), ஆக்டியஸ் செலின் (Actias selene), டேயிலிபில்லா நிரியி (Deilephila nerii), ஹெர்ஸ் கன்வலுலி (Herse convoluli) போன்றவற்றை எடுத்துக் காட்டாகக் கூறலாம். அந்திப் பூச்சிகளின் வாழ்க்கை வரலாற்றிற்குப் பட்டுப் புழுவின் (Bombyx mori) வரலாற்றை ஓர் எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
வாழ்க்கை வரலாறு. இரு பால் உயிரிகளான பட்டுப் புழுக்களில் புணர்ச்சிக்குப் பிறகே, உட்கருவுறுதல் நடை பெறுகிறது. கருவுற்ற சிறு நேரத்திற்குள் 400–500 முட்டைகள் வரை, மல்பரி இலையின் மீது, ஒரு பெண் பட்டுப் புழு இட்டு, அம்முட்டைகளை இலையுடன் ஓட்டச் செய்யும். இம்முட்டை உருண்டை வடிவில், மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்நிறம் நாளுக்கு நாள் மாற்றம் அடையும்.
முட்டையிட்ட 10 நாளுக்குப் பிறகு, முட்டை பொரிந்து, 6 மி.மீ. நீளமுள்ள கம்பளிப் புழுவாக வெளி வரும். மஞ்சள் கலந்த வெள்ளை நிறமுள்ள இப்புழுவிற்கு, 12 கண்டங்கள் இருக்கும். தலையில், அரை தாடையுடைய வாயுறுப்புகள் காணப்படும். வண்ணத்துப் பூச்சியில் உள்ளது போலவே, இதிலும் சுவாசப் புழைகளும், கால்களும் உள்ளன. 8ஆம் வயிற்றுக் கண்டத்தின் மேற்புறத்தில் ஒரு கொம்பு இருக்கும். இளவுயிரிகள் மல்பரி இலைக் குருத்துகளையும், வளர்ந்த இளவுயிரிகள் முதிர்ந்த இலைகளையும் வேகமாகவும், அதிகமாகவும் உட்கொள்கின்றன. பொரிந்த 21–25 நாளுக்குள் கம்பளிப் புழு நான்கு முறை தோலுரித்து, 7.5 செ.மீ. நீளம் வரை வளரும். அதன் பின் உண்பதை விடுத்து, மல்பரி இலையின் ஒரு மூலைக்கு நகர்ந்து, பட்டுச் கரப்பித் துளை வழியாக வெளி வரும். 1000–1200 மீட்டர் நீளமுள்ள நீர்ம இழையைக் கொண்டு, மூன்று நாளுக்குள் கக்கூன் என்னும் பட்டுக் கூட்டைத் தன்னைச் சுற்றி அமைத்து, அதில் தன்னுடைய கூட்டுப் புழு வாழ்க்கையைக் கழிக்கிறது. நீர்ம நிலையில் வெளி வந்த இழைகள் காற்றில் உலர்ந்து, பட்டு இழைகளாக உருவாகின்றன. 10–12 நாள் வரை தொடரும் கூட்டுப் புழுப் பருவத்தில், வயிற்றுப் பகுதியில் அமைந்திருந்த கால்கள் மறைந்து, மார்புப் பகுதியில் 2 இரட்டை இறக்கைகள் தோன்ற, கூட்டை வெட்டிக் கொண்டு, முதிர்ந்த பட்டுப் பூச்சியாக வெளி வரும். கூட்டிலிருந்து வெளி வந்த பட்டுப் பூச்சிகள் புணர்ச்சியில் ஈடுபட்டு, முட்டைகளை இட்ட பின், இறந்து விடுகின்றன.
பட்டுப் பூச்சிகளில், 6 வகைகள் காணப் படுகின்றன. அவை மியூகா (Muga or Antheraea assamensis), ஏரி (Eri or Attacus rechinil), ஓக் (oak or Antheraea pernyl) இராட்சஸ (Giant or Attacus alias), டாசர் (Tasar or Antheraea paphia), மல்பரி (mulberry or Bombyx mori) பட்டுப் பூச்சிகள் எனப்படும். மேலே குறிப்பிட்ட ஆறு வகைகளில், மல்பரி, எரி, மியூகா, டாசர் என்ற நான்கு வகைகளே பட்டு உற்பத்தியில் பயன்படுகின்றன.
இவ்வரிசையில் வரும் முதிர் பூச்சிகளில் பெரும்பாலானவை, நன்மை பயக்கக் கூடியவையாக இருந்த போதும், இவற்றின் இளவுயிரிகள் நெல், சோளம், கரும்பு, மணிலா, உருளை, கத்தரி, முட்டைக் கோஸ், பருத்தி, திராட்சை போன்ற பயிர் வகைகளை மிகவும் பாதிக்கின்றன. —இரா.பக்தவச்சலம் நூலோதி. M. Ekambaranatha Ayyar and T.N. Ananthakrishnan, A Manual of Zoology, Vol-I, Part II, S. Viswanathan Pvt. Ltd, Madras, 1986; K.K. Nayar, et. al., General and Applied Entomology, Tata McGraw-Hill Publishing Company Ltd., New Delhi, 1983.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 742)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5v475mn9/
தமிழ்“செதில் இறக்கையுடையவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5v475mn9/APA
Oliyon Research. (2026). செதில் இறக்கையுடையவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5v475mn9/MLA
"செதில் இறக்கையுடையவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5v475mn9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment