இராமானுச நூற்றந்தாதி
irāmāṉuca nūṟṟantāti
தென் மொழியையும் வட மொழியையும் நன்கு கற்ற இராமானுசரால், உலகமும் உயிர்களும் இறைவனும் நித்தியம் என்னும் விசிட்டாத்துவிதம் மலர்ச்சி பெற்றது.
தென் மொழியையும் வட மொழியையும் நன்கு கற்ற இராமானுசரால், உலகமும் உயிர்களும் இறைவனும் நித்தியம் என்னும் விசிட்டாத்துவிதம் மலர்ச்சி பெற்றது. இப்பெருமகனாரின் திருப்புகழை ஓதும் பிரபந்தமே இராமானுச நூற்றந்தாதி. இந்நூலின் திட்ப நுட்பம் கண்ட சான்றோர்கள் இதனை நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திற் சேர்த்தனர்.
இராமானுச நூற்றந்தாதி திவ்வியப் பிரபந்தத்தின் சாரமாக உள்ளது. இதனை உணர்ந்த வடிவழகிய நம்பிதாசர், தமிழ் மறைகள் அனைத்தையும் வடித்த சாரத்து ஓங்கிய நூற்றந்தாதி என்று குரு பரம்பரையில் விவரித்தார்.
ஒருவன் அந்தணனாக வேண்டும் என்றால் காயத்திரி மந்திரத்தை முப்போதும் பயில வேண்டும். அதுபோல் ஒருவன் வைணவனாக வேண்டும் என்றால் இராமானுச நூற்றந்தாதியை அனுசந்திக்க வேண்டும். ஆதலால், இராமானுச நூற்றந்தாதியைப் பிரபந்த காயத்திரி என்று கூறுவர். ‘எம்பெருமானார் திருநாமத்தில் முனிதந்த நூற்றெட்டு சாவித்திரி’ என்று தனியன் பேசும். இதில் சாவித்திரி என்பது காயத்திரியைக் குறிக்கும்.
திருவரங்கக் கோவிலைப் பரம்பரையாகப் பாதுகாக்கும் உரிமை பெற்ற அணியரங்கத்தமுதனாரின் மகனாராகிய திருவரங்கத்தமுதனார் இந்த நூற்றந்தாதியை இயற்றினார். இவர் கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராவார். இந்நூல் தெளிவும் ஒளியும் பெற்றுப் பொலிகிறது. பாடல்கள் ஒவ்வொன்றும் வைணவத் தத்துவத்தினை நுட்பமாகத் தெரிவிக்கும். இவ்வந்தாதி எம்பெருமானாரின் திருவருட் பெருக்கையும், தத்துவ ஞானத்தையும், பெருமிதத்தையும் பேசுகிறது.
வேதாந்த தேசிகர், ‘செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே’ என்று பாடியது இராமானுசரின் அனுபவ எதிரொலியே என்பதை அறிஞர் அறிவர். இக்கருத்தினைப் பலபடியாகத் திருவரங்கத்தமுதனார் இலக்கிய நயமுறப் பேசுகிறார். இவ்வந்தாதியின் தொடக்கத்தில் இதனைத்தான் விளக்குகிறார்.
இராமானுசர் செல்வமாகவும் தாயாகவும் தந்தையாகவும் ஆசாரியனாகவும் திருமாலாகவும் திருவாய் மொழியைப் போற்றுபவர் என்பதனை அமுதனார், ‘உறுபெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர்குருவும் வெளி தரு பூமகள் நாதனும் விளங்கிய சீர் நெறிதரு செந்தமிழ் ஆரணமே என்று அறிதர நின்ற இராமானுசன்’ என்று நயமுறப் பாடுகிறார்.
இராமானுசர் திருக்குருகூரில் தோன்றிய நம்மாழ்வாரின் திருவாய்மொழியினைப் பத்தி என்னும் கருப்பக் கிருகத்தில் தெய்வமாக வைத்து வழிபாடு செய்பவர் என்பதனைத் தென் குருகைப் பிரான் என்னும் வேதப் ‘பசுந்தமிழ் தன்னைத் தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த இராமானுசன்’ என்று பாடுவது நுட்பமானது.
‘இராமாயணம் பயிலும் இடங்கள் தோறும் அனுமன் எழுந்தருளியிருப்பது போல, எங்கெல்லாம் திருவாய் மொழியின் மணம் உள்ளதோ அங்கெல்லாம் இராமானுசர் இருப்பார்’ என்கிறார் அமுதனார்.
இராமானுசர் திருப்பாவையின்பால் கொண்ட ஈடுபாட்டினை ‘அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் குடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் இராமானுசர்’ என்று நயமுறப் பாடுகிறார். இவர் போற்றிய ஆழ்வார்களைத் திருவரங்கத்தமுதனார் பத்திச் சுவை சொட்டக் குறிப்பிடுவது, ஆழ்வார்கள் வரலாற்றையும் அவர்களின் கால அடைவையும் உணர்த்தும் சான்றாகவுள்ளது.
வைணவ சமயம் தமிழ் மறையையும் வடமொழி வேதத்தையும் இரண்டு கண்களாகக் கருதிப் போற்றுவது. ஆதலால் வைணவ ஆசிரியர்களை உபய வேதாந்திகள் என்பர். அமுதனார், ‘சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லையில்லா அறநெறி யாவும் தெரிந்தவன் இராமானுசன்’ என்று குறிப்பிடுகிறார். இராமானுசரே! என் மனத்தைப் பொன் வண்டாக வளர்த்தேன். அது நும் திருவடித் தாமரையில் உள்ள தேனை அருந்த விரும்பிற்று. அதனைத் தங்கள்பால் விடுத்துள்ளேன். அதற்குத் திருவடித் தேனை வழங்குங்கள் என்று அமுதனார். வேண்டுவது பத்திச் சுவை நிரம்பியதாகும். அமுதனார் இராமானுசரை, செம்மை இராமானுசமுனி என்னும் மெய்யன் இராமானுசன் என்றும், புவனம் எங்கும் ஆக்கிய கீர்த்தி இராமானுசன் என்றும், உண்மை நன் ஞானம் உரைத்த இராமானுசன் என்றும், மெய்யைப் புரக்கும் இராமானுசன் என்றும் பேதைமை தீர்த்த இராமானுசன் என்றும் குறிப்பிடும் தொடர்கள் பத்தியின் விளைவுகளாகும்.
இராமானுச நூற்றந்தாதிக்கு மணவாளமா முனியும், பிள்ளைலோகஞ் சீயரும் விரிவுரை இயற்றியுள்ளனர். இந்த நூற்றந்தாதியை எறும்பியப்பரும், பிள்ளை லோகஞ் சீயரும் தம் நூல்களிலும் விரிவுரைகளிலும் மேற்கோள் காட்டுகின்றனர். திருவரங்கத்தில் மார்கழி மாதம் நடைபெறும் அத்தியயன விழாவின் இறுதியில் இராமானுச நூற்றந்தாதியைச் சேவிக்கும் மரபு இன்றும் உள்ளது. மறுநாள் அமுதனாரைப் பிரமரதத்தில் எழுந்தருளப் பண்ணி, வரிசைகளுடன் அவருடைய திருமாளிகையில் விட்டு வருவார்கள். வைணவ உலகில் இராமானுச நூற்றந்தாதி சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது. எஸ்.கே.இரா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 155)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5s7d5suc/
தமிழ்“இராமானுச நூற்றந்தாதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5s7d5suc/APA
Oliyon Research. (2026). இராமானுச நூற்றந்தாதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5s7d5suc/MLA
"இராமானுச நூற்றந்தாதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5s7d5suc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment