அரசியலும் போர் நடப்பும்
araciyalum pōr naṭappum
போரினை உருவாக்குவதும் அதன் விளைவுகளைச் சமாளிப்பதும் அரசாங்கத்தின் பணிகளாகக் கருதப்படுகின்றன.
போரினை உருவாக்குவதும் அதன் விளைவுகளைச் சமாளிப்பதும் அரசாங்கத்தின் பணிகளாகக் கருதப்படுகின்றன. போர் என்பது, ஓர் அரசியல் குழுவின் பெயரால் மற்றொன்றின் மீது எதிர்ப்புணர்வு கொண்டு நிகழ்த்தப்படும் திட்டமிட்ட வன்முறைத் தாக்குதலைக் குறிப்பதாகும்.
மக்களைக் கொல்வதும், அவர்களின் இருப்பிடங்களையும் பொருள்களையும் அழிப்பதும் ஆகிய செயல்கள் மனிதவரலாற்றின் தொடக்கக் காலத்திலிருந்தே நடைபெற்று வருகின்றன. சில ஆண்டுக்கால வரலாற்றை நோக்கினாலும் மக்கட் சமுதாயம் மிகுதியான போர்களை மேற்கொண்டிருந்தமை புலனாகும். அக்காலத்தில் பேரரசுகளை உருவாக்குவதில் போர்கள் மிகவும் சிறப்பான பங்கினை வகித்தன. பழைய கல்வெட்டுகள் எகிப்து, மெசபடோமியா, உரோம் போன்ற தொன்மைப் பேரரசுகள் நிகழ்த்திய போர்களைப் பெரிதும் பாராட்டுகின்றன. தமிழில் உள்ள சங்க இலக்கியங்களும் புறப்பொருள் இலக்கண நூல்களும், இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களும், கிரேக்க மொழியில் உள்ள இலியாது, ஒதீசியம் போன்ற நூல்களும், இலத்தீன் மொழியிலுள்ள ஏனீடு என்னும் இலக்கியமும், ஆங்கிலத்தில் உள்ள ஆர்தர் மன்னரின் காவியமும், சேக்சுபியர் எழுதியுள்ள சூலியசு சீசர், மாக்பெத்து முதலிய உயர் நாடகங்களும் போரின் விளைவு, சாதனை, வெற்றி தோல்விகள் போன்றவற்றைச் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றன. உணவு உற்பத்தி முறைகளில் முன்னேற்றம், பல நகரங்களின் தோற்றம், ஒருமுகப்படுத்தப்பட்ட அரசுகள் உருவானமை ஆகியன, தொடக்கக் காலப் போர்களுக்குக் காரணங்களாக அமைந்தன. சில மானிடவியலாளர், போர் நடப்பின் தோற்றத்தை விவசாயத்தின் தொடக்கத்தோடு இணைத்துக் கூறுகின்றனர். பாசன வசதிகள் ஏற்படுத்துவதற்கு முன்பு சிறுபகுதி நிலமே மதிப்புடையதாக இருந்தது. பாசன வசதியில் முன்னேற்றம், உரங்கள், உழுது வேளாண்மை செய்தல் போன்றவை உண்டாவதற்கு முன்பு அவை குறைந்த வளமுள்ளனவாக இருந்ததுடன் பல ஆண்டுகளாகத் தரிசாகவே கிடந்தன. இடம் மாறி மாறி வேளாண்மை செய்து கொண்டிருந்த முதுகுடிகள் ஓயாது தங்கள் வேளாண் நிலப் பரப்பினை விரிவுபடுத்த முற்பட்டபோது போர் நடப்புத் தவிர்க்க முடியாததாகியது. இபான் எனும் போர்னியா குடிகள் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் காடுகளை அழித்து விளைநிலங்களை உண்டாக்குவதற்கு மாறாக, காட்டை அழித்து விளைநிலம் உண்டாக்கியவர்களை வென்று அவர்கள் திருந்திய நிலப் பகுதிகளைக் கைப்பற்றினர்.
எல்லா மாந்தருமே போரினில் ஈடுபடுகின்றனரா என்பது மிக முக்கிய வினாவாகும். சில ஆராய்ச்சியாளர், போர் அனைத்துச் சமுதாயங்களிலும் காணப்படுவதாகக் கூறுகின்றனர். சீரான அரசியல் அமைப்பைப் பெற்றிராத சமுதாயங்களில் போர் நடப்புக் காணப்படுவதில்லை எனச் சிலர் மறுத்துரைக்கின்றனர். எடுத்துக்காட்டாக, மலேசியாவில் வசிக்கும் செமாய்ப் பழங்குடிகளிடையே போர்நடப்போ வன்முறைச் செயல்களோ அவற்றிற்கான கழுவாய் தேடுதலோ அறவே கிடையாது. அதே போன்று எசுகிமோ அல்லது கலிபோர்னிய இந்தியரிடையேயும் போர் முறை என்பது காணப்படவில்லை. ஆனால் எசுகிமோக்களிடம் தனிப்பட்ட வழிவழிப் பழிதீர்க்கும் எண்ணம் காணப்படுகிறது. எனவே போர்நடப்பு அந்தந்தச் சமுதாயத்தைப் பொறுத்து வேறுபடுகிறது எனலாம்.
ஆதிக்குடிகளிடையே போர் நடப்பு
கூட்டமாகத் திரிந்து ஒன்றுபட்டு உழைத்து வாழும் சமூகங்களில், சில அடிப்படைத் தேவைகளை அடைவதற்காகவும் பழிதீர்ப்பதற்காகவும் போர்கள் நிகழ்த்தப் பெற்றன. ஆசுத்திரேலியாவில் உள்ள முரன்கின் எனும் பழங்குடிகளிடையேயும், அருகிலுள்ள ஏனைய முது குடிகளிடையேயும் போர் நடப்பு முதன்மையான சமூகப் பணிகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தகைய திரிந்து வாழும் குழுவினர்களின் போர் நடப்புகளில், பொதுவாகப் போர்க் கருவிகள், போர்த் தந்திரங்கள் ஆகியன பயன்படுத்தப்படுவதில்லை. மேலும், இச்சமுதாயத்தினரிடையே குழுச்சண்டை காணப்படுவது மிகவும் அரிது.
பழங்குடிச் சமுதாயங்களில் திடீர்த் தாக்குதல் போன்ற போர்நடப்புகள் மிகுதியாகக் காணக் கூடியனவாகும். அவை மிகக் கொடுமையானவையாகவும் சாவினை உண்டாக்கக் கூடியனவாகவும் அமைவதால், அருகிலுள்ள சமுதாயம் எப்போதும் இன்னல்களை எதிர்நோக்கி இருக்க வேண்டியுள்ளது. எத்தனை தடவை, எந்த வகையில் ஆதிக்குடிகளிடையே போர்கள் நிகழும் என்பதைக் கணித்துக் கூற இயலாது. வெளியார் ஆதிக்கம், புதிய கருவிகள் கண்டுபிடிப்பு போன்றவற்றால், ஆதிக்குடிகளின் தொன்மை வழக்கப் போர் முறைகளில் பாதிப்புகள் ஏற்பட்டன. பெரும்பாலும் ஆதிக்குடிகளின் போர்முறை, கைப்பற்றுதல் அல்லது வன்கவர்தலை நோக்கமாகக் கொண்டது அன்று. அமேசான் பகுதிவாழ் இந்தியர்கள் தமக்குள் எவ்விதச் சண்டையிலும் ஈடுபடுவதில்லை. ஆனால் தங்கள் எதிரிகளாகிய பழங்குடிகளின் மீது போர்தொடுத்து அவர்களை முற்றிலும் அழிக்கும் நீண்டதொரு தாக்குதலை நிகழ்த்துகின்றனர். இதேபோன்று மெலனேசியாவில் உள்ள சாலமோன் தீவுகளில் கொள்ளையடித்தல், தலைகொய்தல் ஆகிய பழக்கமுடைய உரோலியானா பழங்குடிகள் தம்மைச் சுற்றியுள்ள சமுதாயங்களிலுள்ள பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று அவர்களின் மக்கள் தொகையினைப் பெருமளவு குறைத்தனர். குரோ இந்தியர்கள் குழுக்களாக வாழுகின்றனர். அவர்களிடையே ஒரு குழுவினர் இன்னொரு குழுவினரிடமிருந்து குதிரைகளைக் களவாட முற்படும்போது அவர்களிடையே போர் நிகழுகிறது. துகும்டானி (Dugum Dani) மக்கள் சடங்கு முறையிலான போர் நடப்பைக் கொண்டிருந்தனர். அதனால் தங்கள் அருகில் வசிக்கும் பழங்குடிகளிடையே சீராகத் தங்கள் எல்லைப் பகுதிகளை உருவாக்கிக் கொண்டனர். செம்பாகா மாரிங் (Isembaga Maring) எனும் சமூகத்தினரிடையேயும் தங்கள் ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்தப் போர்நடப்பு ஒரு வழியாகப் பயன்படுத்தப்படுகிறது. யானமாமோ எனும் பழங்குடிகள் தமக்கு அருகில் வசிக்கும் சில சமூகத்தாரிடம் போரையும், சிலரிடம் உடன்பாடுகளையும் கொண்டிலங்குகின்றார்கள். அவர்கள் தங்கள் ஆட்சி நிலப்பரப்பை விரிவுபடுத்திக் கொள்வதுடன் மனைவிகளைப் பெறுவதற்காகவும் சண்டையிட்டுக் கொள்கின்றனர். சில மானிடவியலாளர்கள், எதிர்ப்பு உணர்வுகள் கொண்ட இரு சமுதாயங்களிடையே கலப்பு மணத்தினால் உண்- டான உறவுகள், வாணிகம், இரு சமூகத்தினரிடையே முற்காலத்தில் இருந்ததாகக் கூறப்படும் தொடர்பு போன்ற காரணங்களால் போர் நடப்புத் தவிர்க்கப்படுகிறது என்று கூறுகின்றனர்.
புதிய சமுதாயங்களில் போர் நடப்பு முதுகுடிகளின் போர் நடப்பிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. புதிய சமுதாயங்களின் போர் நடப்பினால் எதிர்ப்புணர்ச்சி அல்லது சினம் போன்றவை மிகச்சிறு பங்கே வகிக்கின்றன; விமானப் போர், ஏவுகணைச் சண்டை, பீரங்கிச் சண்டை போன்ற தனிமனிதனை நோக்கியதல்லாத போர்களில் ஈடுபடுவோர் தன் உணர்ச்சிக்கு இடங்கொடாது, தங்கள் உயர் அதிகார அமைப்புகளுக்குக் கட்டுப்பட்டுச் செயற்படுகின்றனர். போர் நடப்பினை அகப்போர் நடப்பு என்றும் புறப்போர் நடப்பு என்றும் இருவிதமாகப் பிரிக்கலாம். அகப்போர் என்பது, ஒரேவிதமான பண்பாட்டு அலகினை உடைய அரசுச் சமுதாயங்களுக்கிடையே ஏற்படும் போரைக் குறிப்பதாகும். புறப்போர் நடப்பு, வேற்றார் இடத்தைக் கைப்பற்றும் போர் எனவும், பாதுகாப்புப் போர் எனவும் மேலும் இரு வகையாகப் பிரிக்கப்படும். முதல் வகை ஒருநாடு இன்னொரு நாட்டின் மீது கைப்பற்றும் நோக்கத்தோடு தொடுக்கும் போரையும், இரண்டாம் வகை ஒரு நாடு தாக்கப்படும்போது தாக்குண்டநாடு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஈடுபடும் போரையும் குறிக்கும். உலகில் இதுவரை எண்ணற்ற போர்கள் நிகழ்ந்தபோதிலும் மிகவும் சிறப்பு வாய்ந்த போர்களாக முதல் உலகப்போரும், இரண்டாம் உலகப் போரும் கருதப்படுகின்றன.
வன்முறை என்பது இருவேறுபட்ட கருத்துகளுடைய குழுக்களிடையே வெளிப்படும் திடீர் வெடிப்பு; வன்மைச் செயல்களையும், பகை, கோப உணர்வுகளால் உந்தப்பட்டுப் பிறரின் உயிருக்கும் உடைமைக்கும் தீங்கிழைக்கும் விதமாகப் புரியும் செயல்களையும் குறிக்கும். கத்தியால் குத்திக்கொல்லுதல், கற்பழிப்பு, குடித்துவிட்டுப் பேசுதல், அமைதியான ஆர்ப்பாட்டங்களின் மீதான கொடுமையான அடக்குமுறை, அரசியல் எதிரிகளைச் சிறையிடுதல், அடைக்கலம் அளித்திடும் நிறுவனத்திற்கு எதிரான கண்டனம். போர் நடப்பு, வழிவழிப்பகை, பனிக்கட்டியின் மீதான வளைகோல் பந்தாட்டம் ஆகியவை தனிப்பட்ட மனிதர்களுக்கும் குழுக்களுக்கும் செய்யப்படும் வன்முறைகள் எனலாம். சில சமுதாயங்களில் வன்முறை ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் போற்றத்தக்கதாகவும் கருதப்படுகிறது. சுக்சீ சமுதாயத்திலும் பிரேசிலின் அரசியல் உரைகளிலும் வன்முறைச் செயல்கள் போற்றத் தக்கவையாகக் கருதப்படுகின்றன. ஆனால் வினெசியூலான் யாரூரோ (Venezuelan Yaruro) சமுதாயத்தில் வன்முறை மிகவும் கீழ்த்தரமான செய்கையாகக் கருதப்படுகிறது.
போர் நடப்பிற்கான காரணங்கள் பின்வருமாறு கூறப்படுகின்றன; மனித மனத்தில் ஊறிப்போன போர்த் தினவு (Pugnacity) தான், ஒரு சமுதாயத்தைப் போரில் ஈடுபடுத்துவதில் முதன்மையான பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது. பகைமை உணர்வு தனி மனிதனிடையே மட்டுமன்றி மனிதக் குழுக்களிடையேயும் காணப்படுவதாகவும், இத்தகைய உள்ளார்ந்த பகைமை உணர்வு மரபு வழிப்பட்ட ஆற்றல் என்றும் சொல்லப்படுகிறது.
அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் வெறுப்புணர்வு பகைமையை வளர்த்துப் போரில் கொண்டு செல்கிறது. இதனால் வெறுப்புணர்வு மட்டுமே போருக்கான உண்மையான காரணம் என்று கொள்ள முடியாது. படை பலம் பொருந்திய ஒரு நாட்டில் அம்மக்களிடையே வெறுப்புணர்வு மிகுமானால் அது போர் உண்டாக வாய்ப்பாக அமைகிறது.
போர் நடப்பு மனித இனத்திற்கு மட்டுமே உரியதாகச் சில மானிடவியலார் கருதுகின்றனர். மீட் என்பவர் போர் மனித குலத்தின் கண்டுபிடிப்பு என எடுத்துரைக்கின்றார். ஓரிடத்தில் முதன்முதலாகத் தோன்றிய போர் பிறகு எல்லா மக்களிடத்திலேயும் பரவத் தொடங்கியது எனும் கொள்கையுடையவர்களுள் ஒருவரான பெர்ரி எனும் அறிஞர், போர் முதன் முதலில் எகிப்தில் தோன்றியதாகவும், பிறகு உலகின் ஏனைய பகுதிகட்குப் பரவியதாகவும் கூறுகின்றார்.
மக்களின் வாழுமிட இயற்கைச் சூழ்நிலை போர் நடப்பில் மிகவும் சிறப்பான பங்கினை வகிக்கிறது. மனித வாழ்விற்கு உணவு, உடை, உறையுள் ஆகிய மூன்றும் அடிப்படைத் தேவைகளாகும். மக்கள் தொகைப் பெருக்கத்தினால் இவை போதிய அளவு கிடைப்பதில்லை. அவற்றைப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் சில சிக்கல்களை எதிர் நோக்கும் போது மனிதரிடையே கோப உணர்வு, கொந்தளிப்பு அடைகிறது. அது போர் நடவடிக்கைகளில் ஈடுபடச்செய்து விடுகிறது. மேலும், மக்கள் தொகைப் பெருக்கம் அச்சமுதாயத்தை மட்டும் தாக்கக்கூடிய கூறு அன்று; அது அருகிலுள்ள பிற சமுதாயங்களையும் தாக்கக் கூடியதாகும். மரக்கறி உணவையே சிறப்புணவாகக் கொண்டுள்ள குடிகளிடம் போர் நடப்பிற்கான சின உணர்வு குறைவாகவும், புலால் உணவு உண்ணும் சமுதாயத்திடம் இவ்வுணர்வு மிகுதியாகவும் இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் இக்கூற்றை இதுவரை யாரும் மெய்ப்பிக்கவில்லை.
மனிதர்கள் சில குறிப்பிட்ட இலக்குகளை மற்றச் சில மனிதரின் அழிவின் வழியாக அடைவதற்காகப் போர் உருவாக்கப்படுகிறது. இதற்காக மனிதர்கள் சண்டைகளில் கருவிகளைப் பயன்படுத்தும்போது அது போர் எனக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் வசிக்கும் மொகாவே எனும் மக்கள், அச்சமுதாயத்தின் பண்பாட்டோடு ஒன்றிப் போன மந்திர, சமய நம்பிக்கைகனில் தூண்டப்படுவதால் போரினில் ஈடுபடுகின்றனர் என்று பாதியர் (Fathauer) என்பவர் கூறுகிறார். மேலும் நியூகோம்பு என்பவர் கூற்றுப்படி அமெரிக்கச் சமவெளி இந்தியர்கள், அவர்களின் சமூகப் பண்பாடு அமைந்த விதத்தில் போரினில் ஈடுபட்டனர் எனக் கூறுகிறார். போருக்கான இலக்குகள் போரின் தன்மையைப் பொறுத்தும் வேறுபடக்கூடியன. ஒவ்வொரு சமுதாயத்திலும் போர் நடப்பதற்கான இலக்குகள் வேறுபடுகின்றன. அவை பாராட்டு, நன்மதிப்பு, பழிதீர்த்தல் அல்லது வழிவழிப்பகை, சமூக முன்னேற்றம், மன எழுச்சி, சமயக் கடப்பாடு, அச்சம், சமூகப் போட்டிகள் முதலானவை ஆகும். பெண்கள், அடிமைகள் ஆகியோரைக் கவர்ந்து கீழ்ப்பணியச் செய்தல், நிலப்பரப்பை விரிவாக்குதல், கொள்ளை அல்லது சூறையாடுதல், வெற்றிச் சின்னங்களை அடைதல் ஆகியன பொருளாதாரச் செயல் நோக்கங்களாகும். பாதுகாப்புக்காகவும் போர்கள் அமைகின்றன.
குருதித்தொடர்பு, சமயம், உடைமை ஆகியவற்றின் பயனாகத் தோன்றிய சமுதாய அமைப்பில் போட்டிகள் மிகுதியாக இருக்கவில்லை. அந்த அமைப்பு எளிமையானதாக இருந்தது. உறவின் அடிப்படையில் அமைந்த தொன்மைச் சமுதாயத்தில் அயலவருக்கு இடம் இருக்கவில்லை. குருதித் தொடர்பு வலிமையிழந்த போது, அமைதியையும் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் நிலைநாட்ட அதிகாரவன்மை தேவைப்பட்டது. அதிகார வலிமையுடைய வேந்தன் எல்லோரையும் அடக்கி ஆட்சியுரிமை பெறுகிறான். தனக்கு எவ்விதத்திலும் உறவாக அமையாத அயல் சமுதாயத்தை எதிர்த்துப் போர்புரியத் துணிகிறான்.
ஆயத்த நிலையில் இராணுவப் படையினைப் பெற்றிருக்கும் சமுதாயம், படைப்பலமற்ற சமுதாயத்தை மிகுதியாகப் போரில் ஈடுபடுத்துவதற்குரிய காரணத்தை இருவகையாக விளக்கலாம். முதலாவது ஆற்றல் மிக்க படை ஆயத்த நிலையைப் பெற்றுள்ள சமூகங்களின் ஆட்சியாளர்கள் படைப்பலம் குறைவாகப் பெற்றுள்ளதாகத் தாம் கருதும் அருகிலுள்ள சமுதாயத்தின் மீது போர் தொடுக்கத் தூண்டப்பெறுதல். பலம் குறைந்த நாட்டின் மீது தொடுக்கும் தாக்குதலுக்கு அது சிலசமயம் தன்னைத் தாக்கும் பலம் பொருந்திய நாட்டையே மலைக்கச் செய்யும் வகையில் எதிரடி கொடுப்பதும் உண்டு. இரண்டாவது ஒரு நாடு ஆயத்த நிலையில் படைபலத்தை இயக்காமலேயே வைத்திருந்தாலும் கூடத் தாம் தாக்கப்பட்டு விடுவோமோ என அஞ்சிச் சினம்கொண்டு எதிர்பாராத வகையில் தாக்குதலிலும் போரிலும் தானே முதலில் ஈடுபடுவது.
போர் நடப்பு தன்னின உயிருண்ணும் பழக்கத்தில் தோன்றியதாக ஒரு கருத்து நிலவுகிறது. சிலர் ஆதிக்குடிகளின் போர்முறை, விளையாட்டை ஒத்திருப்பதாகக் கருதுகின்றனர். இக்காலத்தில் அரசியல் அதிகாரங்களை ஒருமுகப்படுத்துதல் மிகுந்துவிட்டதால், போர் நடப்பு பாதுகாப்பு நிலையிலிருந்து சமூக நிலை, பிறகு பொருளாதார நிலைக்கென்று மாறி இறுதியாக அரசியலை அடிப்படையாகக் கொள்ள நேர்ந்துள்ளது.
சண்டைகளினால் உண்டாகும் மிகுதியான உயிரிழப்புகளினால் ஒரு சமுதாயத்தின் பால், வயது ஆகியவற்றின் கூட்டமைவுகளில் மாறுதல் ஏற்படுகிறது. இதை டைவேல் என்பவர் தம் ஆராய்ச்சிகளின் மூலம் உறுதிப்படுத்துகிறார். சில பழங்குடிகளிடையே ஆண், பெண் அளவு 3:1 எனும் விகிதத்தில் இருப்பதற்கு அங்குள்ள பெண் குழந்தைக் கொலை காரணமாக உள்ளது என்றும், அதே நேரத்தில் அச்சமுதாயத்தில் வயது வந்தோரிடையே மட்டும் இவ்விகிதம் 1:1 என்னும் விகிதத்தில் இருப்பதற்குக் காரணம் போர்களால் ஏற்படும் சாவுகள்தாம் என்றும் கூறுகிறார். டைவேலின் இபோ (Ibo) போர் நடப்புக்குரித்தான நிகழ்வுக்கூறு மேற்சொன்ன கருத்துக்குக் கூடுதல் வலுச் சேர்க்கிறது. பல்வேறு காரணங்களால் போர் நடப்பு நோய்களைப் பெருக்கி அவற்றால் சாவுகளின் எண்ணிக்கையை உயர்த்துகிறது.
போரின் விளைவாக எதிரியின் மீது வெறுப்பும் தன்னினமக்கள் மீது அன்பும் மிகுதிப்படுகின்றன. இது இனமையக் கொள்கை எனப்படும். போரினால் பண்பாட்டுப் பரவல் நிகழ்கிறது. இதனால் சமுதாயத்தின் பண்பாட்டில் மாற்றம் ஏற்படுகிறது. இது பண்பாட்டுப் பேறு எனப்படும். பண்பாட்டுப் பேறு நிகழா வண்ணம் தடுத்திடப் பியூப்லோ மக்கள் தங்கள் சிற்றூர்களுக்கு விரிவான அரணமைத்தலை வழக்கமாகக் கொண்டனர். மேலும் தென்மேற்குப் பகுதியிலிருந்து வட பகுதிக்குக் குதிரைகள் பரவியமை, போர் முறையைப் பெருமளவுக்கு மாற்றி அமைத்தது.
போரினால் தங்கள் ஆளுகைக்குட்பட்ட நிலப்பரப்பைப் பெருக்குவதிலும் அழிக்கப்பட்ட வளங்களை மீண்டும் மிகுதியாக்குவதிலும் மக்கள் ஈடுபட்டனர். இயற்கை வளங்கள் வேறுசீரான முறையில் உபயோகப்படுத்தப்படுகின்றன. போரினில் ஈடுபடும் சமுதாயத்தினரிடையே தங்களுக்குள் ஒற்றுமை ஏற்படுகிறது. மேலும் ஒரு சமுதாயத்திலிருந்து இன்னொரு சமுதாயத்திற்கு ஏற்படும் தொடர்பால் பண்பாட்டுப் பரிமாற்றம் ஏற்படுகிறது. போர், சமூக அமைப்பில் ஒட்டிணைவாற்றல் (Cohesion), ஏற்றத்தாழ்வு, ஒழுங்குமுறைச்சிதைவு போன்ற விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இரு சமுதாயங்கள் போரில் ஈடுபடும்போது அவற்றுள் ஒருமைப்பாடு மிக்க சமுதாயம் வெற்றியடைகிறது. உள்நாட்டுக் கலகங்கள் பேரரசுகளையே உடைத்து விடுகின்றன. போரில் கிடைக்கும் வெற்றி புதிய பேரரசுகளை உருவாக்குகிறது. அவை மீண்டும் உடைவதை மீண்டும் வெல்லுதல் எனக் கூறுகின்றனர்.
மனத்தளவில் ஏற்படும் உணர்ச்சிதான் போருக்குக்காரணம் எனக் கூறப்படுவதால் வீர விளையாட்டுகள் மற்றும் சடங்கு முறையில் அமைந்த பகைமைப் போட்டிகள் போன்றவை ஆதிக்குடிகளிடையே போர் நடப்புக்கு மாற்று வகையாகக் கூறப்படுகின்றன. ஏனெனில் இத்தகைய விளையாட்டுகளும் போட்டிகளும் மனக்கிளர்ச்சியினால் உண்டாக்கப்படுகின்றன. போரின் கடுத்தீங்கை உலகமக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றார்கள். இத்தீங்கிலிருந்து மீள வேண்டுமானால் அதற்கு மாற்று வேண்டும். போர் நடப்பிற்கு ஒரே மாற்று அமைதிதான், போர் நிகழாமல் தவிர்த்து உலக அமைதியைக் காத்திட வேண்டுவதை அனைவரும் தங்கள் கடமையாகக் கருதவேண்டும். முதல் உலகப் போரினால் ஏற்பட்ட அழிவையும் பொருள் இழப்பையும் உயிர்க் கொலையையும் கண்ட உலக நாடுகள், போரின் பிடியிலிருந்து எவ்வாறேனும் மீள வழிகாண வேண்டும் என முனைந்தன. அம்முயற்சியின் பயனாக ‘உலக நாடுகள் கழகம்’ என்னும் ஓர் அமைப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த அமைப்பால் இரண்டாம் உலகப் போரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை, இரண்டாம் உலகப்போர் முடிவுறுவதற்கு முன்பாகவே, அமெரிக்க நாட்டுத் தலைவர் உரூசுவெல்ட்டும், இங்கிலாந்தின் போர்க் காலப் பேரமைச்சராக விளங்கிய வின்சுடன் சர்ச்சிலும் சேர்ந்து ‘அட்லாண்டிக்கு அறிக்கை’யை வெளியிட்டனர். அவ்வறிக்கைதான் “ஐக்கிய நாட்டுச் சபை” என்னும் உலக அமைப்பின் வித்தாகும். ஐ.நா. சபையின் அடிப்படைக் குறிக்கோள் உலக அமைதியே, சிற்சில போர்களை ஐ.நா. சபை தடுத்து நிறுத்தியுள்ளது. ஆனால் மீண்டும் உலகப் போர் வராமல் தடுக்க ஐ.நா. சபையின் பாதுகாப்புக் கழகம் ஒன்றே போதுமா என்ற ஐயப்பாடு உலக மக்கள் உள்ளத்திலே தோன்றியுள்ளது. அணுக்குண்டுக் கண்டுபிடிப்பு, சில புதிய போர்க்கருவிகளைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் நிலை ஆகியவை, உலக மக்கள் மனத்தில் போர் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இது ‘அமைதிப் போர்’ எனக் கூறப்படுகிறது. இச்சூழல் மாறியாக வேண்டும். ஆங்கில அறிஞர் கோல் என்பார், போரை ஒழிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்குக் கூறும் அறிவுரை பெரிதும் போற்றற்குரியதாகும். “உருசியா நீங்கலாக உள்ள ஐரோப்பிய நாடுகள் யாவும் இனம், வரலாறு, பண்பாடு ஆகியவற்றில் பெரிதும் ஒற்றுமைப்பட்டிருக்கின்றன. எனவே அவை யாவும் ஒன்றுபட்டு ஒரு கூட்டாட்சியாக அமையவேண்டும். எல்லா நாடுகளுக்கும் பொதுவான நாணய முறை அமைய வேண்டும். எல்லா நாடுகளின் ஆற்றுத் தண்ணீரும் பொதுவான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். வாணிகப் போக்குவரத்து யாவும் எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றிப் பொதுவான அடிப்படையில் நடைபெற வேண்டும். எல்லா நாட்டு மக்களுக்கும் விரும்பிய நாடுகளில் வாழக் குடியுரிமை அளிக்கப்படல் வேண்டும்” என்றெல்லாம் இவர் கூறிய இவ்வறிவுரை, ஐரோப்பாவிற்கு மட்டுமன்றி, உலகத்தின் மற்றப்பகுதிகளுக்கும் பொருந்தும். இன்னும் எவ்வளவு காலமானாலும் உலகம் போரை ஒழித்து, இம்முறையில் ஒன்றுபடும் காலம் ஒன்று கட்டாயம் வரும்.ஆ.செ.
துணை நூல்கள்
முருகு சுந்தரம், “பாரும் போரும்”, சிவலிங்க நூற் பதிப்புக் கழகம், ஈரோடு.
Bohannan, (ed)., “Law and Warfare”, Studies in Anthropology on Conflict, New York, Natural History Press, 1967.
Otyerbein, Beith, “The Anthropology of War”, in Hand Book of Social and Cultural Anthropology, (ed) John Honigman Rand Mc. Nally, Chicago, 1973.
Priedm, Harris, M., and Murphy R., “War”, Garden City, N.Y., Natural History Press, 1968.
Vayada, Andreu, P., “Primitive War in International Encyclopaedia of the Social Sciences, ed; D.L. Sills,” 1968.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 717)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5kx3uhxa/
தமிழ்“அரசியலும் போர் நடப்பும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5kx3uhxa/APA
Oliyon Research. (2026). அரசியலும் போர் நடப்பும். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5kx3uhxa/MLA
"அரசியலும் போர் நடப்பும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5kx3uhxa/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment