குக்குலிபார்மிஸ் வரிசையில் குக்குலிடே குடும்பத்தைச் சார்ந்தது சின்னக் குயில் ஆகும், கோகிலம், அக்காக் குருவி, செண்பகம், குசில் ஆகியனவும் இக்குடும்பத்தனவே. இக்குடும்பத்தைச் சேர்ந்தவற்றில் முதல் விரலும், நான்காம் விரலும் காலில் பின்னோக்கி அமைந்திருக்கும். இவற்றுள், பெரும்பாலான கூடு கட்டாமல், பிற பறவைகளின் கூடுகளில் முட்டையிட்டு, இனப் பெருக்கம் செய்பவை. உடலில் தூவிகள் இன்றி, வெளிப்படும் குஞ்சு இறக்கை முளைக்கப் பெற்று, வளர்வதோடு, கூட்டிற்கு உரிய முட்டைகளையும், குஞ்சுகளையும் வெளியே தள்ளி விட்டு, வளர்ப்பவை கொண்டு வரும் இரை முழுமையும், தானே உண்டு பெரியதாக விரைந்து வளரும். இரண்டு நாளுக்கு ஒன்று என 12 முட்டையிடும். பெண் குயிலின் முட்டை, பிற பறவையின் கூட்டிலுள்ள முட்டைகளை நிறத்திலும், உருவிலும் ஒத்திருப்பது வியப்புடையது. தென்னிந்தியாவில் கோகிலத்தை விடக் குயில், எண்ணிக்கையில் மிகக் குறைவாகவே உள்ளது. கீழ்க் காணும் சிறப்பினங்கள் ஏழனுள் பல குளிர் காலத்தில் வட இந்தியாவிலிருந்து இப்பகுதிக்கு வலசை வருவன. அப்பருவத்தில் இவை வழக்கமான இனிய குரலில் கூவுவதில்லை. இலையடர்ந்த மரக் கிளைகளிடையே இவை இரையாகக் கொள்ளும் கம்பளிப் பூச்சி முதலியவற்றைத் தேடி உயர் கிளைகளிடையே மறைந்து திரிவதால், ஒரு பகுதியில் இவை இருப்பதைக் காணல் அரிதாகிறது. இந்தியக் குயில். உருவில் புறா அளவுள்ள இது மெலிந்த உடலும், நீண்ட வாலும் கொண்டது. உடலின் மேற்பகுதி கரிய சிலேட்டு நிறமாகவும், மார்பும், வயிறும் கறுப்புக் குறுக்குப் பட்டைகளோடு கூடிய வெளிர் சாம்பல் நிறமாகவும் இருக்கும். குளிர் காலத்தில் வட இந்தியாவிலிருந்து தெற்கே வலசை வரும் பறவைகளுடன் இதை மிகுதியாகக் காணலாம். மரங்களடர்ந்த காடுகளிலும், இலையுதிர் காடுகளிலும் ஆங்காங்கே காணலாம். மார்ச்—ஆகஸ்ட் வரையுள்ள வளர் பிறைக் காலங்களில் இரவு முழுதும் இதன் இனிய குரலைக் கேட்கலாம். வானம் மப்பும், மந்தமுமாக இருக்கும் நாளில், பகல் முழுதும் இது குரல் கொடுக்கும். துணையைத் துரத்திக் கொண்டே பறக்கும் போது, ஆண் குயில் குரல் கொடுத்தபடியே பறக்கும். பெண் குயில் நீர் சலசலப்புப் போல மென்குரலில் கூவும். இது கரிச்சான், ஈப்பிடிப்பான், மாம்பழக் குருவி முதலியவற்றின் கூட்டில் முட்டையிடும் பழக்கம் உடையது. குயில் (Cuculus canorus). உருவிலும், பழக்க வழக்கத்திலும், முந்தைய இந்தியக் குயிலை ஒத்த இதைக் குளிர்காலத்தில் மட்டும் தென்னிந்தியக் காடுகளில் காணலாம். சின்னக் குயில் (C. poliocephalus). மைனா அளவுள்ள இது முந்தைய குயில்களை விட உருவில் சிறியது. கோடைக் காலத்தில் இமய மலையில் 1500—3200 மீ. வரையுள்ள பகுதிகளில் இனப் பெருக்கம் செய்யும் இது குளிர் காலத்தில், தென்னிந்தியாவிலுள்ள மலைப் பகுதிகளுக்கு வலசை வரும். அச்சமயம் குரலெடுத்துக் கூவுவதில்லை. எனவே, இதை அடையாளம் கண்டு, பிற குயில்களிலிருந்து பிரித்து அறிவது கடினம். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> வரிக் குயில் (Cacomantis sonneratii). மைனாவை விடச் சற்று உருவில் பெரிய இது, உடலின் மேற்பகுதியிலும், கழுத்து, மார்பு உள்ளிட்ட கீழ்ப் பகுதியிலும், பழுப்பு நிறக் குறுக்கு வரிகளைக் கொண்டது. வால் செம்பழுப்பு நிறமும், கறுப்பு வெள்ளைத் திட்டுகளோடு கூடிய முனையும் கொண்டது. வட இந்தியாவை விடத் தென்னிந்தியாவில் மிகுதியும் காணப்படுவது இது ஒன்றே. இதைச் செங்குயில் எனவும் கூறுவர். ‘வீ-டி-டீ-டி’ என நான்கு அசை கொண்ட சீழ்க்கைக் குரலை, மரங்களின் உச்சிக் கிளையிலிருந்து காலை—மாலை—அந்திகளில் எழுப்பும். அப்போது, வாலைத் தாழ்த்தியும், வால் மேல் இறகுகளைச் சிலிர்த்து எழுப்பியும், இறக்கைகளை விரித்துத் தொங்க விட்டும் இருப்பதைக் காணலாம். கொண்டைக் குருவி, தவிட்டுக் குருவி முதலிய சிறு பறவைகளின் கூடுகளில் கள்ளத் தனமாக முட்டையிடும் பழக்கமும் உடையது, இன்னிசைக் குயில் (C. merulinus). உருவில் மைனா அளவினதான இது, தோற்றத்தில் கீச்சானை ஓத்தது. உடலின் மேற்பகுதி, மார்பு, வயிறு இவை சாம்பல் நிறமாகவும், வாலடிப் புறம் வெள்ளையாகவும் இருக்கும். கறுப்பு நிற வாலிறகுகளின் முனை வெள்ளைத் திட்டுகளைக் கொண்டது. ‘பீட்டீர்’ அல்லது ‘சிவீச்’ என ஒற்றையாகச் சீழ்க்கை ஓலி எழுப்புவதோடு, ‘வீ-ப்பீ-பீ’ எனத் தொடர்ந்து குரல் எழுப்பவும் செய்யும். பிற பழக்க வழக்கங்கள் வரிக் குயிலை ஒத்தன. தென்னிந்தியாவில், இது கதிர்க் குருவி, தையல் சிட்டு, தேன் சிட்டு முதலிய சிறு பறவைகளின் கூட்டில் முட்டையிடுகிறது. செங்குயில் (Chalciles xanthorhynchus). உருவில் சிட்டுக் குருவியை விடச் சற்றுப் பெரியதான இதன் ஆணின் உடல் பளபளக்கும் கருஞ் சிவப்பு நிறமாகவும், வால் கறுப்பாகவும் இருக்கும். பெண்ணின் உடல் பசுமை தோய்ந்த செம்பு நிறமாகக் காட்சி தரும். அலகு நல்ல மஞ்சள் நிறங்கொண்டது. இந்தியாவில் மிக அரிதாகக் காணப்படும் இது, சென்னையில் ஒரு முறை பிடிக்கப்பட்டுள்ளது. கரிச்சான் குயில் (Surniculus lugubris). உருவில் மைனா அளவினதான இதன் உடல், பளபளக்கும் கறுப்பு நிறத்தது. கரிச்சானோ என ஐயுறும் வகையில், அதனோடு ஒற்றுமையுடைய இதன் வாலடியில் உள்ள வெள்ளைப் பட்டைகளையும், இனிய குரல் ஒலியினையும் கொண்டே இதை வேறுபடுத்தி அறியலாம். தென்னிந்தியாவில் காட்டு வளம் நிறைந்த பகுதியின் மரக் கிளைகளில் தனியே திரிந்தவாறு புழு, பூச்சிகளைத் தேடித் தின்னும் இது, இலைகளற்ற உச்சிக் கொம்புகள், பனை மரம் ஆகியவற்றில் வெளிப்பட அமர்ந்து, ‘பிப்—பிப்—பிப். பிப்—பிப்—பிப்’ என உரத்த ஒலியில் ஆறு முறை குரலெழுப்பிப் பாடும். கரிச்சான், தவிட்டுக் குருவி முதலியவற்றின் கூட்டில் முட்டையிடும். —௧. ரத்னம் நூலோதி. Salim Ali and S. Dillon Ripley, Hand Book of the Birds of India and Pakistan, Voll.II, Oxford press, London, 1969.