இறக்குமதி
iṟakkumati
பன்னாட்டு வாணிகத்தில், ஒரு நாடு பிற நாடுகளிலிருந்து பொருள்களைப் பெற்றுக் கொள்ளும் செயல் இறக்குமதி (Import) எனப்படும்.
பன்னாட்டு வாணிகத்தில், ஒரு நாடு பிற நாடுகளிலிருந்து பொருள்களைப் பெற்றுக் கொள்ளும் செயல் இறக்குமதி (Import) எனப்படும். நாட்டு வருவாய், அயல்நாட்டுச் செலுத்து நிலை போன்ற புள்ளி விவரங்களிலும் ஆய்வுகளிலும் இறக்குமதி விரிவான கூறுகளைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு நாட்டிற்கு அயல் நாட்டிலிருந்து கிடைக்கும் பணிகளும் இறக்குமதியைச் சார்ந்ததே. அண்மைக் காலங்களில் வாணிக முறையில் பிற நாடுகலிலிருந்து வாங்கப்படும் பொருல்கள், பயணம், போக்குவரத்து, செய்தித் தொடர்பு, அயல்நாடுகளில் ஆகும் இராணுவச்செலவு, உரிமங்கள், உரிமைத் தொகை, அயல்நாட்டு மூலதனத்திலிருந்து கிடைக்கும் ஆதாயம் ஆகியன யாவும் இறக்குமதியெனக் கருதப்படுகின்றன.
ஒரு நாட்டின் இன்றியமையாத் தேவையான விளைபொருள், மூலப் பொருள், உற்பத்திப் பொருள் ஆகியவை பற்றாக்குறையாயிருப்பின், பிற நாடுகளிலிருந்து அவற்றை இறக்குமதி மூலம் பெற வேண்டிய தவிர்க்க இயலாத நிலை ஏற்படுகிறது. பற்றாக்குறை மட்டுமன்றி, இப்பொருள்களை உள்நாட்டில் பெறக் கூடிய விலையைவிடக் குறைந்த விலையில் இறக்குமதி மூலம் பெற இயலுமாயினும் இறக்குமதி விரும்பப்படுகிறது. நாடுகளின் பொருளாதார நிலையும் வாணிகக் கொள்கையும் அரசியல் அமைப்பும் இறக்குமதியை வரையறை செய்கின்றன.
இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து தொழில்நுட்பம் விறு விறுப்பாகப் பரவினமையாலும், வாணிகக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமையாலும் பயணமும், செய்தித் தொடர்புகளும் பெருகி, நாடுகளின் இறக்குமதி மிகுந்தது. இக்காலத்தில் வாணிகச் சிக்கல்கள் தாமாகவே தீர்க்கப்பட்டு, அரசுகளின் ஈடுபாடுகளும் கட்டுப்பாடுகளும் மிகக் குறைந்த அளவே இருந்தமையால், உலக வாணிகம் சிறந்து செழித்தோங்கியது. பன்னாட்டு வாணிகத்தில் 1970–ஆம் ஆண்டு வாக்கிலிருந்து பாதுகாப்பு வரிகளும் கட்டுப்பாடுகளும் மிகுந்து, இறக்குமதிகள் பாதிக்கப்பட்டன. உலக வாணிகமும் செழிப்பிலிருந்து சரிந்து வாட்டநிலையில் உள்ளது.
வளர்ச்சியடையாத பின்தங்கிய நாடுகள், தங்கள் வேளாண்மை, தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், அயல்நாட்டுப் பொருள்களின் குவிப்பால் ஏற்படும் கடும் போட்டியைத் தவிர்ப்பதற்கும், அயற் செலாவணி இருப்பைப் பாதுகாப்பதற்கும் இறக்குமதிகளின் மேல் முன்னுரிமைகளின் அடிப்படையில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தன. இந்நாடுகள், குறைந்த விலைக்கு வெளிநாட்டிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வனவாக இருந்தாலும் அவை உள்நாட்டில் செய்யக் கூடியவையாயின், அத்தகைய பொருள்கள் இறக்குமதி செய்யப்படுவதைத் தடைசெய்கின்றன. அகக் கட்டுமானத் தொழில்களுக்குத் தேவையான பொருள்கள், எந்திரங்கள், மூலப் பொருள்கள், இன்றியமையாத மருந்து, உணவு, இராணுவப் பொருள்கள் ஆகியவை மட்டும் இறக்குமதி செய்ய உரிமம் வழங்கப்படுகிறது. ஆடம்பரப் பொருள்கள் இறக்குமதியாவதும் அனுமதிக்கப்படுவதில்லை.
சில நாடுகளின் அரசியல் அமைப்பும் அவை பின்பற்றும் கொள்கையும், இறக்குமதியைப் பிற நாடுகளைச் சார்ந்து விடுதலையை இழக்க வைக்கக்கூடிய சின்னம் எனக் கருதி அதை அறவே ஒழிக்கப் பாடுபடுகின்றன. ஆனால், அது செயல்முறையில் ஏற்றுமதியையும் பாதித்து உலகில் ஒதுக்கப்பட்ட நிலைக்குச் செலுத்துமாதலால் நடைமுறையில் செயற்படாதிருக்கிறது. வளர்ச்சியடைந்ததும் பின்தங்கியதும் ஆகிய இருவகை நாடுகளிலும், இறக்குமதி மிகும் பொழுது அது வேலைவாய்ப்பு நிலையைப் பாதிக்கிறது. வேலை வாய்ப்பு நிலையை நிலை நாட்டவும், வேலைவாய்ப்புகளை உண்டாக்கவும் பெருக்கவும் இறக்குமதியைக் குறைப்பதும் தவிர்ப்பதுமே சிறந்த வழி இதுக்குமதியினால் பெறக்கூடிய பொருள்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வது அல்லது அதற்கு ஈடான மாற்றுப் பொருள்களைக் கண்டுபிடிப்பது சாலச் சிறந்ததாகும். இறக்குமதி உள்நாட்டுப் பொருள்களின் விலையையும் பாதிக்கும். மொத்த ஏற்றுமதியைவிட மொத்த இறக்குமதி கூடுதலாகும். போது நாட்டுச் செலாவணியின் மதிப்பும் கீழிறங்கும்.
நடைமுறையில் எப்பொருள், ஒரு நாட்டின் வளம், ஆற்றல் ஆகியவற்றிற்கு மிகவும் ஏற்றதோ, அப்பொருளாக்கத்திற்கு அந்நாடு சிறப்பாக ஈடுபடுகிறது; எப்பொருள்களை உற்பத்தி செய்தல் கடினமாக இருக்கிறதோ அப்பொருள்களை இறக்குமதி செய்கின்றது. சில நாடுகளில் புவியியல் அமைப்பின் காரணமாக அந்நாடுகளில் தனிப்பட்ட வளம் மிகுந்து (எடுத்துக்காட்டு: எண்ணெய்) அதைச் சார்ந்த தொழில் நடவடிக்கைகள் மட்டுமே செம்மையாக நடைபெற முடியும். ஆசிய வளைகுடா நாடுகள் (Gulf countries) எண்ணெய் சார்ந்த உற்பத்திக்கு மட்டிலுமே உகந்ததாயுள்ளன. அத்தகைய நாடுகள், பிற பொருள்களின் தேவை அனைத்திற்கும் இறக்குமதியையே நாடுகின்றன. ஒரு தனிப்பட்ட பொருளின் இறக்குமதியை மட்டும் கருதாமல், ஒரு நாடு இறக்குமதியினால் தாக்கப்படும் பிற கூறுகளையும் ஆராய்ந்து, தன் கொள்கையை வகுத்துக்கொள்ள வேண்டும்.
இறக்குமதிகளுக்குத் தீவிரக் கட்டுப்பாடுகள் விதிப்பதும், இறக்குமதிப் பதிலீடு பண்டங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய ஊக்குவிப்பதுமே இந்திய இறக்குமதிக் கொள்கையாக விளங்குகிறது. நாடு விடுதலையடைந்தவுடன், பொருளாதாரத் தேலையினிமித்தமும் அயற் செலாவணிக் கையிருப்பும் மிகுந்திருந்ததால் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் குறைந்த அளவிலிருந்தன. இரண்டாம் ஐந்தாண்டுக் காலத்திலிருந்து கட்டுப்பாடுகள் புகுத்தப்பட்டன. கட்டுப்பாடுகளைச் செயற்படுத்துவதற்காக 1956–57–ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கொள்கை, இறக்குமதிக்குத் தடைசெய்யப்பட்டவை, கட்டுப்படுத்தப்பட்டவை, நெறிப்படுத்தப்பட்டவை, பொது திறந்த உரிமம் (Open General Licence) பெறுபவை எனப் பொருள்களை வகைப்படுத்தியது. இறக்குமதிகள், 1977–78–ஆம் ஆண்டுகளில் முன்னுரிமைகள் அடிப்படையில் சிறிது தளர்த்தப்பட்டன. ஏற்றுமதிக்கான பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில்களுக்கும் இறக்குமதிப் பதிலீடு பண்டங்களை உற்பத்தி செய்யும் தொழில்களுக்கும் அவற்றிற்குத் தேவையானவற்றை இறக்குமதி செய்ய முன்னுரிமை அளிக்கப்பட்டது. தடை செய்யப்பட்டிருந்த பொருள்கள் 59–இலிருந்து 17–ஆகச் குறைக்கப்பட்டன. பொது திறந்த உரிமம் பெறும் பண்டங்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.
ஏற்றுமதி உற்பத்தியாளர்கள் இறக்குமதி உரிமங்களை இலகுவாகப் பெற 1983–84–ஆம் ஆண்டுக் கொள்கை அறிக்கையில், திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இவர்கள் பயன்படுத்தப்பட்ட எந்திரங்கள், மின் சக்தியை உருவாக்கும் எண்ணெய் எந்திரங்கள் (Diesel Generators), பொருள்களைப் பாதுகாக்கும் பொருள்கள் பொருள்கள், கட்டும் ஆகியவற்றை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். அயல்நாட்டிலுள்ள இந்தியர்கள், தங்கள் சேமிப்பை இந்தியாவில் முதலீடு செய்யத்தக்கமூறையில் எந்திரம் போன்ற பொருள்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பொது திறந்த உரிமம் பெறும் பண்டங்களின் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்துள்ளது. திட்டமிடப்பட்ட கட்டுப்பாடான இறக்குமதிக் கொள்கையினால், இந்தியா உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கவும் அயல்நாட்டைச் சார்ந்திருக்கும் தன்மையைக் குறைக்கவும் வழி வகுத்திருப்பதைப் பட்டியலின் மூலம் அறியலாம்;
இந்தியாவில் மதிப்பிடப்பட்ட மொத்த அளிப்பில் இறக்குமதியின் பங்கு (விழுக்காடு விகிதத்தில்)
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 507)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5j746xw4/
தமிழ்“இறக்குமதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5j746xw4/APA
Oliyon Research. (2026). இறக்குமதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5j746xw4/MLA
"இறக்குமதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5j746xw4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment