இமை இணைச் சவ்வு அழற்சியில் (memraneous conjuctivitis) வெளிப் படும் நீர்மம், படலம் போன்று படிகிறது. இப்படலத்தை எளிதில் அகற்றி விடலாம். தொண்டை அடைப்பான் (diphtheria) அல்லது ஏதேனும் நோயே இதற்குக் காரணமாக இருக்கலாம். இரண்டு வகைகளும், எளிய வகையாக அல்லது தீவிர வகையாக அமையும். தொண்டை அடைப்பான் இமை இணைச் சவ்வழற்சி. கோரின் பாக்டீரியம் எனப் படும் (கிளபஸ்லோஃபுளூரின்) நுண்ணுயிர் பெரும்பாலும், குழந்தைகளில் தொற்றும் நோயாக உண்டாகிறது. மெல்லிய, கலங்கிய இமை இணைச் சவ்வு வெளிப்பாட்டில், டிப்தீரியா நுண்ணுயிர்கள் காணப் படுகின்றன. இதனால், பாதிக்கப் பட்ட திசுக்கள் நசிவடைகின்றன. அறிகுறி. நோயாளியின் தொண்டை தாக்கப் படுகிறது. கண் இமைகள் வீங்கிச் சிவந்து, தொடு வலியுடன் உள்ளன. கபில மஞ்சள் நிற வெளிப்பாடு, உள் திசுக்களைப் பாதிக்கின்றது. கண் இமையைப் பிதுக்க முடியாது. நாளடைவில், நீர்ம வெளிப்பாடு அதிகரித்து, சீழ் நிலையை அடைகிறது. கண் இமை முடிகள் விழுந்து விடுகின்றன. இருக்கும் முடிகளும், உள் நோக்கிக் காணப் படுகின்றன. பளிங்குப் படலம் கெட்டுப் பார்வையும் குறைகிறது. நோயாளிக்குப் பெருமளவில் வலிமையிழப்புத் தோன்றுகிறது. மருத்துவமாக டிப்தீரியா எதிர் டாக்சினும், நுண்ணுயிர் எதிர் மருந்துச் சொட்டுகளும் பயனளிக்கின்றன. டிப்தீரியா அல்லாத வகையில் ஸ்ட்ரெப்மோ நியூமோ, கோனோ போன்ற நுண்ணுயிர் காரணமாக இருக்கின்றன. நோயின் காரணியைக் கண்டறிந்து, அதற்குரிய மருந்தை அளிக்க வேண்டும்.பென்சிலின் சொட்டு மருந்தும் 15 நிமிடங்களுக்கு ஒரு முறையெனக் குளோரம்ஃபினிகால், ஆரியோமைசீன் போன்ற மருந்துகளும் பயனளிக்கும். —மு. கி. பழனியப்பன் துணை நூல். Alexander G.Cross, May and Worth's Manual of Eye Diseses, Thirteenth Edition, CBS, New Delhi, 1985.