இலெசோத்தோ நாட்டில் கல்வி
ilecōttō nāṭṭil kalvi
கல்வியானது அரசு, தேவாலயங்கள் ஆகிய இரண்டின் கூட்டு முயற்சியால் தான் இன்னும் இலெசாத்தோ (Lesotho) நாட்டில் வழங்கப்பட்டு வருகிறது.
கல்வியானது அரசு, தேவாலயங்கள் ஆகிய இரண்டின் கூட்டு முயற்சியால் தான் இன்னும் இலெசாத்தோ (Lesotho) நாட்டில் வழங்கப்பட்டு வருகிறது. தொடக்கப் பள்ளிகளில் 97 விழுக்காடும், உயர்நிலைப் பள்ளிகளில் 86 விழுக்காடும் தேவாலயங்களால் நடத்தப்பட்டு வருகின்றன. தேவாலயம் நடத்தும் பள்ளிகளின் மேற்பார்வை. ஆசிரியர் ஊதியம், ஆசிரியர் பணியிடைப் பயிற்சி, தொடக்கப் பள்ளிகளுக்கு நிதியுதவியளித்தல் ஆகிய அனைத்தும் அரசே செய்து வருகிறது. மூன்று விழுக்காடு பள்ளிகளை மட்டுமே அரசு தம் பொறுப்பில் நடத்தி வருகிறது.
தொடக்கப் பள்ளிக் கல்வியின் கால அளவு மொத்தம் ஏழு ஆண்டுகள். ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது. இந்நாட்டின் தாய்மொழியாகிய செசாத்தோ (Sesotho) மொழியில் முதல் நான்காண்டுகள் வரை கல்வி வழங்கப்படுகிறது. அதற்குப் பின், பயிற்று மொழி பெரும்பாலும் ஆங்கில மொழியாகும். தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:49 என்ற அடிப்படையில் உள்ளது.
உயர் நிலைப் பள்ளியில் (Junior Secondary School) எட்டாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை கற்பிக்கப்படுகிறது. மேல்நிலைப் பள்ளி (Senior Secondary School) யில் பதினொன்று, பன்னிரெண்டு ஆகிய வகுப்புகள் உள்ளன. இப்பள்ளிகளில் பயிற்று மொழி ஆங்கில மொழி மட்டுமே. 108 பள்ளிகளில் 24,000 மாணவர்கள் 1980 ஆம் ஆண்டுக் கணக்கின்படி சேர்ந்து பயின்றனர். பதின்மூன்று வயதில் உயர்நிலைப் பள்ளியில் சேரும் மாணவர்கள் பதினேழு வயதில் மேல்நிலைக் கல்வியினைப் பெற்றவர்களாகின்றனர். இப்பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:21 என்ற அடிப்படையில் இருந்தது.
தொடக்கப் பள்ளிக் கல்வி, உயர் நிலைப் பள்ளிக் கல்வி ஆகியவற்றுக்குப் பின், வாழ்க்கைத் தொழிற் கல்வி (Vocational Education) பயிலும் வாய்ப்பும் இந்நாட்டில் உண்டு. தொழிற்சாலை சார்ந்த தொழில் நுட்பத் திறன்களை உயர்நிலைப் பள்ளித் தரத்தில் உள்ள 13 பள்ளிகளில் மாணவர்கள் பயிலுகின்றனர். மேல்நிலைப் பள்ளித் தரத்தில் உள்ள 5 பள்ளிகளில் மாணவர்கள் தொழிற் கல்வியில் பயிற்சி பெறுகின்றனர். அனைத்துப் பள்ளிகளும் அரசு உதவியுடன் செயற்பட்டு வருகின்றன. வேளாண்மைக் கல்வி, ஆறு உழவர் பயிற்சி மையங்களிலும் வேளாண்மைக் கல்லூரியிலும் வழங்கப்படுகிறது.
இந்நாட்டின் கல்வி அமைச்சகம், இலெசாத்தோ தொலைதூரக் கற்பித்தல் மையம் (Lesotho Distance Teaching Centre) மூலமாக, முறைசாராக் கல்வியினைப் பெரும்பாலும் வழங்கி வருகிறது. இக்கல்வியை மக்களுக்கு வழங்குவதில் வேளாண்மை, நல்வாழ்வு, உள்துறை, ஊரக வளர்ச்சி ஆகிய நான்கு அமைச்சகங்களும் ஓரளவு ஈடுபடுகின்றன. இலெசாத்தோ தேசியப் பல்கலைக் கழகமும், முறைசாராக் கல்வியைப் பரப்பி வருவதோடு, தேவாலயங்கள், தனியார் பொதுநல நற்பணி மன்றங்கள் (Voluntary Organizations) ஆகியனவும் இப்பணியில் ஈடுபடுகின்றன.
இலெசாத்தோ தொலைதூரக் கற்பித்தல் மையம். முறைசாராக் கல்வி ஒலிபரப்பு நிகழ்ச்சிகளைத் தயாரித்து உதவி வருகிறது. இம்மையம் மக்களிடம் வானொலி பயன்படுத்தும் பழக்கம், செய்தித்தாள்கள் எண்ணிக்கை, கல்வியறிவு நிலைகள் (Literac Levels) ஆகியவை பற்றிக் கணக்கெடுப்புச் (Survey) செய்துள்ளது. இம்மையம், 750 பள்ளிப் புற மாணவர்களுக்குக் கல்வியறிவுப் பாட வகுப்புகளை நடத்தி வருகிறது.
இலெசாத்தோ தேசியப் பல்கலைக் கழகம், 1975 ஆம் ஆண்டில் தொடங்கப் பெற்று உயர் கல்வியில் பெரும்பணி ஆற்றி வருகிறது. வாழ்வியல், சமூக அறிவியல் பாடங்கள், கல்வியியல், சட்டவியல், உயிரியல் பாடங்கள் ஆகியன இப்பல்கலைக் கழகத்தில் கற்பிக்கப்படுகின்றன. இப்பல்கலைக் கழகத்தில் 1979–ஆம் ஆண்டுக் கணக்கின்படி, 1,150 மாணவர்கள் சேர்ந்து பயின்றனர். பல்கலைக் கழகங்களில் சேர்ந்த அனைத்து மாணவருக்கும் அரசு கடன் வழங்கி உதவி செய்கிறது.
நிருவாகம்
இந்நாட்டின் கல்வியும் நிருவாகச் செலவும் அரசு, பெற்றோர், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றின் பொறுப்பாகும். கல்விக்காக அரசு 1975–76–ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில், 25 விழுக்காடு செலவு செய்தது. பாடநூல்களை மாணவர்களே வாங்கிக் கொள்கின்றனர். அரசே, ஆசிரியர்களுக்கு 1974–ஆம் ஆண்டிலிருந்து நேரடி ஊதியம் வழங்கி வருகிறது.
பாடத் திட்டம்
தேசிய கல்வித் திட்ட வளர்ச்சி மையம் (National Curriculum Development Centre) இலெசோத்தோவில் இயங்கி வருகிறது. இம்மையம் தொடக்கப் பள்ளிக் கல்வித் திட்டத்தை முழுமையாக ஆய்வு செய்து புதிய கல்வித் திட்டத்தை உருவாக்கி வருகிறது. தொடக்கப் பள்ளிக் கல்வித் திட்டத்தில், தாய் மொழியாகிய செசாத்தோ (Sesotho) ஆங்கிலம், கணக்கு, சமூக அறிவியல், உடல்நல அறிவியல், வேளாண்மை ஆகியன உள்ளன. மேல்நிலைப் பள்ளிக் கல்வித் திட்டத்தில் பொதுக் கல்விப் பாடங்களோடு, வேளாண்மை, மரவேலை, சமையற்கலை, தையற்கலை, ஓவியம் வரைதல் ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆசிரியர், ஆசிரியர் பயிற்சி
இலெசோத்தோவின் தலைநகரான மாசெரு (Meseru) நகரில் 1975–ஆம் ஆண்டு தேசிய ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி (National Teacher Training College) திறக்கப் பெற்றது. இங்குத் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பயிற்சி பெறுகின்றனர். நுண்திறன் கற்பித்தல் (Micro – Teaching) முறையில் ஆசிரியர்கள் பயிற்சி பெறுகின்றனர்.
மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் இலெசோத்தோப் பல்கலைக் கழகத்தில் உள்ள கல்வியியல் புலத்தில் ஆசிரியர் பயிற்சி பெறுகின்றனர். ஆசிரியர் கல்வியானது ஈராண்டுப் பட்டப் படிப்பும், ஈராண்டுக் கல்வியியல் பட்டப் படிப்பும் இணைந்ததாக உள்ளது. கல்வியியலில் பட்டப் படிப்பும் பட்ட மேற்படிப்பும் தனியாகவும் உள்ளன.
இலெசோத்தோ நாடு ஆசிரியர் பயிற்சி, கல்வித் திட்டம், முறைசாராக் கல்வி, மேற்பார்வை ஆகியவற்றின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு வருகிறது. படித்த, படிக்காத இளைஞர்கள் வேலை வாய்ப்புத் தேடி அண்மையிலுள்ள நாடுகளுக்குக் குறிப்பாகத் தென் ஆப்பிரிக்காவுக்குக் குடிபெயர்ந்து விடுவதால் இந்நாட்டுக் கல்வியானது, தேசிய வளர்ச்சிக்கு உரிய பங்கினைச் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 436)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5hfp6vcv/
தமிழ்“இலெசோத்தோ நாட்டில் கல்வி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5hfp6vcv/APA
Oliyon Research. (2026). இலெசோத்தோ நாட்டில் கல்வி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5hfp6vcv/MLA
"இலெசோத்தோ நாட்டில் கல்வி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5hfp6vcv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment