இது ஒரு குளோரைடு கனிமமாகும். இது வெள்ளியும், குளோரினும் (AgCl) சேர்ந்தது. இதிலுள்ள குளோரின் சிறிது சிறிதாகப் புரோமின் தனிமத்தால் பரிமாற்றப்படும். குளோரின் முற்றிலுமாக நீக்கப்பட்டுப் புரோமின் இருக்குமாயின், அக்கனிமம் புரோமிரைட் என்று பெயர் பெறும். முழுதும் குளோரின் உள்ள போது, சிரார்கிரைட் (cerargyrite) குளோராரிகைட் என்று வழங்கப்படும். சிரார்கிரைட் என்னும் சொல்லை வெள்ளியானது புரோமின், அயோடின் ஆகிய ஹாலோஜன் தனிமங்களோடு உள்ள கனிமங்களின் குழுவின் பெயராகவும் வழங்குவர். சிரார்கிரைட் செஞ்சமசதுரத் தொகுதியைச் சேர்ந்தது. படிகங்கள் கனசதுரங்களாக இருக்கும். இது அணுக்கோப்பு முகமைய வகையைச் சேர்ந்தது. ஓர் அணுக்கோப்பில் நான்கு கூட்டணுக்கள் இருககும். சிரார்கிரைட்டின் அணு அமைப்பில் அணுக்களுக்கு இடையேயுள்ள தொலைவு 5.556 ஆகும். சிரார்கிரைட் திண்மங்களாகவும், பொருக்குகளாவும் காணப்படும். சில சமயங்களில் குச்சிகளாக அல்லது இழைகளாக இருக்கும். இதில் (111) தளத்தில் படிக இரட்டுறல் காணப்படும். சிரார்கிரைட்டில் கனிமப் பிளவு இல்லை. இக்கனிமம் சீரற்ற முறிவு அல்லது குறை வளை முறிவு உடையது. இது வெட்டுப் படக் கூடியது. இதைக் கம்பியாகவும் இழுக்கலாம். அரக்கு மிளிர்வு உடையது. சிரார்கிரைட் சாம்பல் நிறம். பசுமை கலந்த சாம்பல் நிறம், மஞ்சள், வெண்மை அல்லது நிறமற்றதாக இருக்கும். இது அரிதாக ஊதா கலந்த நீல நிறத்தில் காணப்படும். இதன் கடினத் தன்மை 2.5; ஒப்படர்த்தி 5.55; இக்கனிமம் ஒளி புகும் அல்லது ஒளி கசியும் தன்மை உடையது. சிரார்கிரைட்டின் ஒளி விலகல் எண் N = 2.071. சிரார்கிரைட் வெள்ளிப் படிவுகளின் ஆக்சைடு தாரைகளில் இரண்டாம் கனிமமாகக் காணப்படுகின்றது. இது பெரும்பாலும் வறண்ட கால நிலை நிலவும் பகுதிகளில் காணப்படுகின்றது. இக்கனிமம் இயற்கை வெள்ளி, ஜரோஸைட், இரும்பு—மங்கனீஸ் ஆக்சைடுகள், செருசைட், மிமிடைட், பைரோமார்ஃபைட், உல்ஃப்னைட், மேலகைட் ஆகிய கனிமங்களுடன் சேர்ந்து காணப்படுகின்றது. சிரார்கிரைட் அமெரிக்காவிலுள்ள கொலராடோ, நிவேடா, கலிஃபோர்னியா, அரிசோனா ஆகிய பகுதிகளில் கிடைக்கின்றது. இக்கனிமம் மெக்சிகோவின் பல இடங்களிலும், பொலிவியா, பெரு, சிலி, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், சோவியத் ஒன்றியக் குடியரசு ஆகிய இடங்களிலும் கிடைக்கின்றது. இது ஆஸ்திரேலியாவிலுள்ள புரோக்கன்ஹில் என்னும் பகுதியில் பெருமளவில் காணப்படுகின்றது. சிரார்கிரைட் வெள்ளி தயாரிப்பதற்கான முக்கிய தாதுப் பொருளாகும். சிரார்கிரைட்டில் குளோரினோடு, புரோமினும் சேர்ந்து இருந்தால், அக்கனிமம் எம்போலைட் (embolite) [Ag(Cl₂Br)] எனப்படும். இந்த வெள்ளி குளோரைடு, புரோமைடு ஆகிய கனிமம் சாம்பல் நிறம் கலந்த பச்சை, மஞ்சள் கலந்த பச்சை அல்லது மஞ்சள் நிறமாக இருக்கும். திண்மமாகக் கிடைக்கும். இதன் ஒளி விலகல் எண் N=2.15 ஆகும். வெள்ளியுடன் குளோரின், புரோமின், அயோடின் ஆகிய மூன்றும் இருந்தால் [Ag(Cl₂Br₂I)] அதற்கு அயோடெம்போலைட் (iodembolite) என்னும் பெயர் வழங்கப்படுகின்றது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் மேல் புறத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> —இல. வைத்திலிங்கம் நூலோதி. L.G. Berry and B. Mason, Mineralogy, Second Edition, CBS Publishers and Distributors, Delhi, 1985.