இதன் விலங்கியல் பெயர் டையஸ் மியுக்கோசஸ் (Ptyas mucosus) ஆகும். இது ஊர்வன வரிசையில் ஸ்குவாமேட்டா துணை வரிசையில் ஒஃபீடியா குடும்பத்தில் கொலுபரிடே என்ற இனத்தில் அமையும். இயற்கையில் சாரைப் பாம்பு பிறருக்கு ஊறு விளைவிக்காததும், நச்சற்றதும் ஆகும். பருவ வளர்ச்சி அடைந்த சாரைப் பாம்பு 1.65-3.52 மீ. நீண்டு வளரும். ஆண் பாம்பு, பெண் பாம்பை விட நீளம் மிகுந்தது. இச்சாரைப் பாம்பை இனங் கண்டறிய உடல் மேற்பரப்பில் போர்த்தப்பட்டுள்ள செதில்களும், தகடுகளும் குறிப்பிட்ட முறையில் அமைந்துள்ளன. தலைப் பகுதி மேற்பரப்புத் தகடுகளாலும், வயிற்றுப் புறம் அகன்ற வயிற்றுத் தகடுகளாலும், வாலின் வயிற்றுப்புறம் இரு வரிசைத் தகடுகளாலும், உடலின் மேற்பரப்புச் செதில்களாலும் போர்த்தப்பட்டிருக்கும். உடலின் மேற்புறச் செதிலமைப்புத் தலையை அடுத்து 17-19 நீள் வரிசைகளிலும், உடல் மையப் பகுதியில் 16-17 நீள் வரிசைகளிலும், மல வாய்க்கு முன் பகுதியில் 12-14 நீள் வரிசைகளிலும் செதில்கள் அமைந்துள்ளன. சாரைப் பாம்பின் தலை நீண்டும், கழுத்து குறுகலாகவும் அமைந்திருக்கும். கண்கள் பெரியனவாகவும் பரிவுடன் உற்று நோக்கும் அமைப்பாகவும் காணப்படும். புற மூக்குத் துளைகள் முகத் தகட்டின் இரு மருங்கிலும் பெரியவையாக உள்ளன. உடல் மிக வலிமையுள்ளதாக, உறுதியாக, மேலும் கீழும் அழுந்தியதாக, இரு நுனிகளை நோக்கிக் குறுகியதாக இருக்கும். வால் உடல் நீளத்தில் நான்கில் ஒரு பங்கும், உருள் வடிவும் கொண்டது. சாரைப் பாம்பின் நிறம் வாழிடச் சூழ்நிலைக்கேற்றவாறுள்ளது. சில சூழ்நிலைகளில், முதுகுப் புற நிறம் பசுமை கலந்த மஞ்சளும், சில சூழ்நிலைகளில் பழுப்பும் கொண்டிருக்கும். கருமையான குறுக்கமைப்புக் கோடுகள் வலைப் பின்னல் போன்று ஒழுங்காக அமைந்திருக்கும். வயிற்றுப் பகுதி சாம்பல் கலந்த வெண்மையாகவோ, மஞ்சள் நிறமாகவோ இருக்கும். தோல் கருமையாக, வெண்மையான குறுக்குக் கோடுகளுடையதாகச் செதில்களால் மறைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் சாரைப் பாம்புகள் சமவெளிப் பகுதிகளில் வாழ்வன. ஆனாலும், மலைப் பகுதிகளில் 1,800 மீ உயரம் வரையில் இப்பாம்புகள் வாழ்கின்றன என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும், ஸ்ரீலங்கா, பர்மா, சுமத்திரா, ஜாவா, ஆப்கானிஸ்தானம், சீனா போன்ற வெப்ப நாடுகளிலும் சாரைப் பாம்பு வாழ்கிறது. இரவு, பகல் ஆகிய இரு வேளைகளிலும் சாரைப் பாம்பு இரை தேட இருப்பிடத்தை விட்டு வெளி வரும். ஆனால், மனிதர்கள் வாழும் பகுதிகளில் இரவு நேரத்திவ் மட்டுமே இருப்பிடத்தை விட்டு வெளி வந்து இரை தேடும். தரையில் வாழும் இப்பாம்பு, நீரில் தலையை நீர் மட்டத்திற்கு மேலே உயர்த்தி மிக வேகமாக நீந்தும். மரக் கிளைகளில் மிக எளிதாகவும், வேகமாகவும் தாவி ஏறும். மரக்கிளை உச்சியிலிருக்கும் போது, இடையூறு ஏற்பட்டால், அங்கிருந்து கீழே விழுந்து, தப்பித்துக் கொள்ளவும் தயங்காது. மனிதர்களைக் கண்டால், மறைந்து ஓடி விடும் இயல்புடையது. ஆனால், அதற்குத் தீங்கு விளைவித்தால், சினத்துடன் தன் ஆற்றல் அனைத்தையும் ஒருங்கிணைத்துத் தாக்கும் பண்புடையது. அது போன்ற சமயங்களில், தலையை S வடிவத்துடன் தரையிலிருந்து மேலே உயர்த்தி, நாகப் பாம்பு போன்று போலியாக நடித்து, எதிரிகளைத் துணிவுடன் தாக்கும். அதே சமயத்தில் வால்பகுதியை வளைத்து, உராய்ந்து, ஒரு வகை அச்ச உணர்வு தரும் ஒலி எழுப்பும். சாரைப் பாம்பு தன் உணவிற்காகப் பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து, தனக்கு விருப்பமான உணவைத் தெரிந்தெடுத்து உண்ணும் வழக்கமுடையது, தவளை, தேரை, பல்லி, இளம் ஆமைக் கூட்டிலுள்ள குஞ்சு, வெளவால், பிற பாம்பு போன்றவற்றை உணவாகக் கொள்ளும். ஆங்கிலத்தில் எலிப் பாம்பு எனப்படும் சாரைப் பாம்பு அச்சொல்லுக்கேற்றவாறு எலிகளை உண்ணும் என்றாலும் ,அதற்கு எலி விருப்பமான உணவு என்று கூற முடியாது. எலிகளை உணவாகத் தேர்ந்தெடுக்கும் சமயத்தில், அவற்றைத் தன் உடலால் சுற்றி வளைத்துத் தரையில்அழுத்திக் கொன்று தின்னும். தேடிய உணவைக்கண்டவுடன், ஆவலுடன் மிகுந்த வேகத்துடன் விழுங்கி விடும் ஆற்றலுடையது. அவ்வாறு விழுங்கப்படும் உணவு உயிருள்ள தவளையானால், பாம்பின் இரைப்பையை அடைகிற வரை தவளை எழுப்பும் குரலொலி வர வரக் குறைந்து தேய்ந்து மறைந்து விடுவதைத் தெளிவாகக் கேட்க முடியும். தவளையை விழுங்கிய சில நொடிகளில் பாம்பை அறுவை செய்து, தவளையை உயிருடன் மீட்க முடியும். மே, ஜூன் மாதங்களில் ஆண், பெண் பாம்புகள், கூடிக் கலவி மேற்கொண்டு, ஆகஸ்ட் மாதத்தில் 5—14 முட்டைகளிடும். முட்டைகள் அனைத்தும் ஜெல்லி போன்ற பொருளால் ஒன்றிணைக்கப்படும். பெண் பாம்பு, முட்டைகளைத் தன் உடலால் சுற்றி வளைத்து அடை காக்கும். செப்டம்பர்—ஜனவரி வரை முட்டைகள் பொரிந்து, இளம் பாம்புகள் வெளி வரும். இவ்விளம் பாம்புகள் முட்டையிலிருந்து வெளி வரும் சமயத்தில், 371-472 மி. மீ. நீளம் வரை இருக்கும். இவ்விளம் பாம்புகள் வளர்ந்து மூன்றாண்டுகளில் முதிர்ச்சி அடையும். இப்பாம்புகளை எளிதில் பழக்கலாம். பழக்கத்திற்கு உட்படுத்தப்படும் பாம்புகள் 11 ஆண்டுகளும், அதற்கு மேலும் வாழக் கூடியவை. இரு ஆண் பாம்புகள் சந்தித்துப் போரிட நேர்ந்தால், ஒன்றுக்கொன்று உடலால் பின்னிக் கொண்டு, தலையைத் தரையிலிருந்து மேலே உயர்த்தி, போராட்ட நடனம் ஆடும். இவ்வகை நடனம் வேறு எந்த இந்திய பாம்பினத்திலும் இல்லை. சாரைப் பாம்பின் தோல் பல்வேறு கைவினைப் பொருள்கள்செய்வதற்குப் பயன்படுகிறது. கேரள மாநிலத்தில், மலபார் என்னுமிடத்தில் உள்ள சிலர் சாரைப் பாம்பின் இறைச்சியை வேக வைத்துத் தரை வாழ் கெழுத்தி மீன் என்னும் பொருள்பட, பரம்புவாலா அல்லது கரவாலா என்ற பெயரில் உணவாக உட்கொள்கின்றனர். இப்பாம்புகள், வயல்வெளிகளில் எலிகளைக் கட்டுப்படுத்தி, உழவர்களுக்கு நன்மை செய்கின்றன. சாரைப் பாம்பும் நல்ல பாம்பும் புணரும் என்ற மூட நம்பிக்கை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே மக்களிடையே உள்ளது. நல்ல பாம்பில் ஆண் பாம்புதான் சாரைப் பரம்பு என்ற மூட நம்பிக்கையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்களிடம் உள்ளது. பசு மாட்டின் மடியில் பாலை உறிஞ்சிக் குடிக்கும் பழக்கம் இப்பாம்பிற்குண்டு என்னும் தவறான கருத்தும், சாரைப் பாம்பிற்கு வாலில் முள் உண்டு, அது வாலால் அடித்துக் கொன்று விடும் என்னும் மூட நம்பிக்கையும் காணப்படுகின்றன. —பா. வேல்முருகன் நூலோதி. P.J. Deoras, Snakes of India, National Book Trust, New Delhi, 1965,