நொபிலியம்
nopiliyam
தனிம மீள் வரிசை அட்டவணையில் ஆக்டினியம் தனிமத்தை அடுத்து வரும் ஆக்டினைடு தொடரில் அணு எண் 102 கொண்ட தனிமம்–நொபிலியம்.
தனிம மீள் வரிசை அட்டவணையில் ஆக்டினியம் தனிமத்தை அடுத்து வரும் ஆக்டினைடு தொடரில் அணு எண் 102 கொண்ட தனிமம்–நொபிலியம். இது யுரேனியம் கடந்த தனிமங்களின் பட்டியலில் செயற்கை முறையில் உண்டாக்கப் பட்ட தனிமமாகும்.
1957இல் ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் இயற்பியல் ஆய்வுக் கூடம், தன் ஆய்வுகள் மூலம் அணு எண் 102 கொண்ட புதிய தனிமத்தைக் கண்டு பிடித்ததாக அறிவித்தது. கியூரியம்–244 அணுவை, கார்பன்–13 உட்கருக்களால் தாக்கியதால், இப்புதிய தனிமம் உண்டாக்கப் பட்டது. ஆனால் அமெரிக்காவின் பிற ஆய்வுக் கூடங்களிலும், சோவியத் ரஷ்யாவிலும், ஸ்டாக்ஹோம் ஆய்வு மீண்டும் நிகழ்த்தப் பட்ட போது, தோல்வி ஏற்பட்டது.
நிறை எண் 254 கொண்ட நொபிலிய ஐசோடோப்பு 1958இல் பெர்க்லி நகரில் உண்டாக்கப் பட்டது. கியார்சோ, சிக்கலண்டு, வால்டன், சீபோர்க் ஆகிய நால்வர் இந்த ஆய்வை நிகழ்த்தினர். இதில் ஹிலாக் (HILAC–Heavy lion Linear Acclerator) என்னும் கன அயனித் துகள் முடுக்கும் நேரில் பொறி பயன் படுத்தப் பட்டது.இது சைக்ளோட்ரானை விடப் பன்மடங்கு கூடுதல் ஆற்றலுடையது. நொபிலியத்தின் ஐசோடோப்புகள் அனைத்தும், மிகக் குறைந்த வாழ்நாள் காலம் கொண்டவையாதலால், அவற்றைத் தனித் தனியே பிரித்தெடுக்க சேய்த் தனிமத்தை ஆய்வுக்குட் படுத்திய போது, தாய்த் தனிமமான நொபிலியமே மீண்டும் உண்டாகியிருப்பதை அறிய நேர்ந்தது. பெர்க்லி ஆய்வுக் கூடத்தில் இரட்டைப் பின்னிழுப்பு (Double Recoil Technique) என்னும் புதிய நுட்பத்தைப் பயன் படுத்திச் சேய்த் தனிமங்களாக ஐசோடோப்புகள் சேகரிக்கப் பட்டன.
பெர்க்லி ஆய்வில் கியூரியம்–246 அணு கார்பன்–12 உட்கருக்களால் தாக்குண்டு, நொபிலியம்–254 அணுவாக மாறுகிறது. (வினை எண்.1). இந்த ஐசோடோப்பில் பாதியளவு மூன்றே நொடியில், ஆல்ஃபாத் துகளை வெளியேற்றி விட்டு, ஃபெர்மியம்–250 தனிமமாகச் சிதைவடைகிறது. (வினை எண்.2) ஓரளவு அளவிடத் தக்க அரை–ஆயுட்காலம் கொண்ட (30 நிமிடங்கள்) ஃபெர்மியம்–250 தனிமத்தை வேதி ஆய்வுக்குட் படுத்திய போது, அணு எண் 102 கொண்ட தனிமம் வினையின் போது, உண்டாகியிருப்பது மெய்ப்பிக்கப் பட்டது.
நிறை எண் 256 கொண்ட நொபிலிய ஐசொடோப் ஒன்று சோவியத் ரஷ்யாவில் 1963இல் கண்டறியப் பட்டது. கன அயனி சைக்ளோட்ரானிலிருந்து (Heavy lon cyclotron) வெளிப்படும் மீவேக ஆற்றல் கொண்ட நியான் அயனிகளால் யுரேனியம் அணுவைத் தாக்கி இப்புதிய ஐசொடோப்பு உருவாக்கப் பட்டது. இந்த ஐசொடோப்பின் வாழ்நாள் காலம் ஒரு நிமிடமேயாகும். நிறை எண்கள் 252,253,255 கொண்ட ஐசொடோப்புகளும் சோவியத் ஆய்வாளர்களால் கண்டறியப் பட்டுள்ளன.
நிறை எண் 255 கொண்ட நொபிலிய ஐசொடோப்பு வேதி ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டது. கரைசலில் காணப் படும் இத்தனிமத்தின் அயனிகளில் ஈரிணை திறன் நிலையே (No+2) நிலைப்புத் தன்மை மிக்கதாகும். இதற்கு மாறாக, குறைந்த அணு எண் கொண்ட பிற ஆக்டினைடுகள் (அணு எண் 89 முதல் 101 வரையிலான தனிமங்கள்) மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிலையான இணை திறன் நிலைகளைக் கரைசல் நிலையில் கொண்டுள்ளன. பதினான்கு எலெக்ட்ரான்களைக் கொண்ட நிறைவுற்ற 5f ஆர்பிட்டால்களைக் கொண்டிருப்பதை(No+2) அயனியின் நிலைப்புத் தன்மைக்குக் காரணமாகும். நிலையான ஈரிணைத் திறன் சேர்மங்களைத் தரும் லாந்தனைடு வரிசைத் தனிமமான இட்டர்பியம் என்பதுடன் நொபிலியத்தை ஒப்பிடலாம் —க. சேது துணை நூல். A.K.De, Text book of Inorganic Chemistry, sixth edition, Wiley Eastern Ltd, New Delhi.1987.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 304)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5fcrggxk/
தமிழ்“நொபிலியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5fcrggxk/APA
Oliyon Research. (2026). நொபிலியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5fcrggxk/MLA
"நொபிலியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5fcrggxk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment