இலக்கணம்
ilakkaṇam
இக்கால மொழியியலார், ‘இப்படியிருக்கவேண்டுமென்று சிலர் விதித்துக் கூறுவதை விட, இவ்வாறு மொழி உள்ளது என்று விளக்குவதே இலக்கணம்’ என்று கூறுகின்றனர்.
இக்கால மொழியியலார், ‘இப்படியிருக்கவேண்டுமென்று சிலர் விதித்துக் கூறுவதை விட, இவ்வாறு மொழி உள்ளது என்று விளக்குவதே இலக்கணம்’ என்று கூறுகின்றனர். இலக்கணம் என்பது அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட மொழி வழக்குகள், சொற்றொடர்களில் உள்ள கூறுகளின் உறவுகள் ஆகியவற்றைப் பற்றியதாகும். அண்மைக் காலம் வரை இலக்கணம் பிழையற்ற வழக்கு நிலையையே வற்புறுத்தி வந்துள்ளது. ஆயின், இக்காலத்தில் பேச்சு வழக்குகளுக்கு முதன்மை கொடுப்பதால் வழுவமைதிகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
மொழியின் அமைப்பும், பொதுவாக ஒத்துக்கொள்ளப்பட்ட மொழி வழக்குகள் பற்றிய விதிமுறைகளும், கோட்பாடுகளும் இலக்கணமாகும் என்று மொழியியல் அகராதிகள் விளக்கும். இக்கால மொழியியலாரிடையே இலக்கணத்தை வரையறுப்பதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. எவ்வாறாயினும் மொழியினை ஒழுங்குபடுத்த எண்ணிய அறிஞர் கண்ட அமைப்பு முறையே மரபு இலக்கணம் எனலாம்.
இலக்கணம் என்னும் தமிழ்ச்சொல் ‘இலட்சணம்’ என்னும் வடமொழிச் சொல்லின் திரிபு என்று சிலர் கூறுவர். ஆனால், வடமொழியில் ‘இலட்சணம்’ என்னும் சொல் குறிக்கும் பொருளைத் தமிழில் இலக்கணம் என்னும் சொல் குறிக்கவில்லை. தமிழில் இலக்கணம் என்னும் சொல் குறிக்கும் பொருளை உணர்த்த வடமொழியில் ‘வியாகரணம்’ ‘சப்தசாத்திரம்’ என்றும் சொற்களைப் பயன்படுத்துவர்.
தொல்காப்பியத்தில் ‘இலக்கணம்’ என்னும் சொல் காணப்படுகிறது. தமிழ் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூன்று பாகுபாடுகளையுடையதென்றும், இம்முத்தமிழுக்கும் முன்னோர் இலக்கணம் கண்டனர் என்றும், இன்று கிடைக்காத அகத்தியம் முத்தமிழ் இலக்கணம் என்றும் கூறுவர். ஆயின், இயற்றமிழ் இலக்கணமே இலக்கணம் என்னும் பெயர்க்குத் தனியுரிமை பூண்டதாய் விளங்குகிறது.
உரோம் நாட்டில் வாரோ (Varro) எழுதிய இலக்கண நூல் (De Lingina Latina) கிரேக்க இலக்கணத்தைப் பின்பற்றியது. குவிண்டலியன் (கி.பி. 35–90), தோனாட்டசு (கி.பி. 4–ஆம் நூற்.), பிரிசுகியன் (கி.பி. 6–ஆம் நூற்.) ஆகியோர் இலத்தீன் மொழி இலக்கணம் எழுதினர்.
வடமொழியில் இலக்கணம்
வடமொழியில் வேதத்தை மையமாகக் கொண்டு இலக்கண நூல் தோன்றியது. யாசுகரின் நிருத்தம் என்பதே மிகப் பழைய இலக்கணநூல் என்பர். அடுத்துப் பாணினியின் அட்டாத்தியாயி சிறந்த இலக்கண நூலாகக் கருதப்படுகிறது. இதனையடுத்துக் கார்த்தியாயனரின் வார்த்திகமும் பதஞ்சலியின் மாபாடியமும் இடம்பெறுகின்றன.
இத்தகைய உலக இலக்கண மரபில் எழுத்து, சொல், பொருள் என்னும் அமைப்பில் பொருளுக்கும் இலக்கணம் வகுத்தது புதிய மரபாகும். தமிழில் பொதுவாக ஐந்திலக்கணம் உள்ளதாகக் கூறப்படும். எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம் என்பன அவை. எழுத்து, சொல் இலக்கணங்கள் மொழி பற்றியவை; ஏனையவை இலக்கியம் பற்றியவை.
தமிழில் எழுந்துள்ள இலக்கண நூல்களை இரண்டாகப் பிரிக்கலாம். முதல் வகையுள் ஐந்திலக்கணமும் கூறுவனவும், இரண்டாம் வகையுள் தனித்தனி இலக்கணம் கூறுவனவும் அடங்கும்.
ஐந்திலக்கணம்
தமிழில் ஐந்திலக்கணம் கூறும் நூல்கள் தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம் என்பனவாம்.
தொல்காப்பியமே தமிழ்மொழியில் கிடைக்கும் முதல் நூலாகும். அதனை ஐந்திலக்கணம் கூறும் நூல் என்பர். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் பொருளதிகாரம் என மூன்றாகப் பகுக்கப்பட்டாலும், ஐந்திலக்கணம் மட்டுமன்றி அதற்கும் மேலாக மெய்ப்பாட்டைப் பற்றியும் அகராதி பற்றியும் நூலமைந்துள்ளமை குறிக்கத்தக்கது. வீரசோழியம் கி.பி. 11–ஆம் நூற்றாண்டில் புத்தமித்திரரால் எழுதப்பட்டது. ஐந்திலக்கணம் என்னும் மரபில் எழுந்த முதல் நூல் இது என்பர். இலக்கண விளக்கம் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் வைத்தியநாத தேசிகரால் எழுதப்பட்டது. இது ‘குட்டித் தொல்காப்பியம்’ எனக் கூறப்படும். தொன்னூல் விளக்கம் கி.பி. 1730–இல் வீரமாமுனிவரால் எழுதப்பட்டது. முத்துவீரியம் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உறையூர் முத்துவீரப்ப உபாத்தியாயரால் எழுதப்பட்டது. சுவாமிநாதம் 19–ஆம் நூற்றாண்டில் சுவாமிநாத கவிராயரால் எழுதப்பட்டது.
ஏனைய இலக்கண நூல்கள்
மொழியின் இலக்கணத்தை மட்டும் உரைப்பவை பிரயோகவிவேகம், நன்னூல், நேமிநாதம், இலக்கணக் கொத்து ஆகியவை. எழுத்து, இலக்கணங்களைக் கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் பவணந்தியார் நன்னூலில் விளக்குகிறார். நேமிநாதம் சமண சமயத்தைச் சார்ந்த குணவீரபண்டிதரால் எழுத்து, சொல் இலக்கணங்களைச் சுருக்கி எழுதப்பட்ட நூல். சின்னூல் என்றும் இது வழங்கப்படும். இலக்கணக் கொத்து வடமொழிக் கருத்தினைத் தொகுத்துச் சாமிநாத தேசிகரால் எழுதப்பட்டது. பிரயோகவிவேகம் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் வடநூலார் கொள்கையைப் பின்பற்றி எழுதப்பட்டது.
பொருளிலக்கணத்துள் அகப்பொருளுக்குரிய இலக்கண நூல்களாக இறையனார் அகப்பொருள், அகப்பொருள் விளக்கம், களவியற் காரிகை, மாறனகப் பொருள், தமிழ்நெறி விளக்கம் ஆகியவை தோன்றியுள்ளன. இறையனார் அகப்பொருளும் அதன் உரையும் கி.பி. எட்டாம் நூற்றாண்டளவில் எழுந்தன. அகப்பொருள் விளக்கம் என்னும் அகப்பொருளுக்குரிய இலக்கண நூல் நாற்கவிராச நம்பியால் எழுதப்பட்டது. இறையனாரகப் பொருளை அடியொற்றி எழுந்தது இந்நூல். இதன் ஆசிரியர் சமண சமயத்தவர் என்று கருதுவர். இது அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என்று ஐந்து பகுப்புகளுடன் உள்ளது. இந்நூல் முதன்முதலாக 1901–ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது. களவியற்காரிகை எசு. வையாபுரிப்பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட அகப்பொருள் இலக்கண நூல், தமிழ்நெறி விளக்கம் (கி.பி. 12–ஆம் நூற்.) ஐந்திலக்கணம் கூறும் நூல் எனக் கூறப்பட்ட போதிலும், இன்று அந்நூல் கூறும் அகப்பொருள் இலக்கணம் மட்டுமே கிடைக்கிறது.
புறப்பொருள் இலக்கணம் கூறும் நூல்களாகப் பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியன கூறப்படும். பன்னிருபடலம் நூல் கிடைக்கவில்லை. புறப்பொருள் வெண்பாமாலை ஐயனாரிதனாரால் எழுதப்பட்டது. புறப்பொருள் இலக்கணத்தைக் கூறும் இலக்கிய மேற்கோளாக வெண்பாக்களையும் கூறுவதால் இந்நூல் இப்பெயர் பெற்றது. பன்னிரண்டு படலங்களையும் இறுதியில் ஒழிபியலையும் கொண்டுள்ளது. மாகறலூர்க்கிழார் சாமுண்டிதேவநாயகர் இந்நூலின் உரையாசிரியர் ஆவார்.
யாப்புப் பற்றித் தமிழில் பல நூல்கள் தோன்றியுள்ளன. அவை யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, காக்கைபாடினியம், சிறுகாக்கைபாடினியம், மாறன் பாப்பாலினம், சிதம்பரச் செய்யுட்கோவை, விருத்தப்பாவியல், அவிநயம், அமுதசாகரம், இந்திர காவியம், திருவலங்கல் திரட்டு முதலியனவாகும்.
யாப்பருங்கலம்
யாப்பிலக்கணத்தை மட்டும் கூறும் நூல்களுள் பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய இந்நூல் முதல் நூலாக அமைகிறது. அமுதசாகரர் எனவும் அமிதசாகரர் எனவும் அழைக்கப்படுவர் இதன் ஆசிரியர். இந்நூலின் விருத்தியுரை வாயிலாக அவிநயம், காக்கை பாடினியம், நாலடி நாற்பது, பல்காயம், மயேச்சுரர் யாப்புப் போன்ற பல யாப்பிலக்கண நூல்களின் சில நூற்பாக்களும் அவை பற்றிய செய்திகளும் கிடைக்கின்றன.
யாப்பருங்கலக்காரிகை
இந்நூல் பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய யாப்பிலக்கண நூல். யாப்பருங்கல ஆசிரியர் அமுதசாகரராலேயே எழுதப்பட்ட இந்நூற்கு உரை குணசாகரரால் எழுதப்பட்டுள்ளது.
காக்கை பாடினியம்
இந்நூல் 89 நூற்பாக்களைக் கொண்டுள்ளது. இதன் ஆசிரியரான காக்கை பாடினியார் கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்கும் முற்பட்டவராவார். யாப்பிலக்கண நூல்களுள் இது சிறப்பிடம் பெறத்தக்கது. உரைகளில் மேற்கோளாகக் காட்டப்பட்ட நூற்பாக்கள் தொகுக்கப்பட்டுப் புலவர் இரா. இளங்குமரனால் 1947–ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
காக்கை பாடினியாருக்குப் பின்னே அப்பெயருடன் மற்றொருவரும் விளங்கினார். அவரும் யாப்பிலக்கணம் செய்தார். இருவருக்கும் வேறுபாடு விளங்கச் சிறுகாக்கை பாடினியார் எனப் பின்னவர் வழங்கப்பட்டார். அவரது நூல் சிறுகாக்கை பாடினியம் என வழங்கப்பட்டது.
அவிநயம்
அவிநயனார் இந்நூலைத் தவிர, அவிநயனார் யாப்பு, அவிநயப்புறநடை, அவிநயனார் களவியல் என்னும் நூல்களையும் இயற்றியுள்ளார். இவரது காலம் கி.பி. ஐந்து முதல் ஆறாம் நூற்றாண்டு என்பர். அமுதசாகரம் ஆசிரியர் அமுதசாகரர், இந்திரகாளியம் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. திருவலங்கல் திரட்டு பாம்பன் சுவாமிகளால் பாடப்பட்டது.
யாப்புப் பற்றியும் இலக்கிய வகைகள் பற்றியும் கூறும் பாட்டியல் நூல்கள் தமிழில் தோன்றின. அவை பன்னிருபாட்டியல், வெண்பாப்பாட்டியல், நவநீதப் பாட்டியல், வரையறுத்த பாட்டியல், பிரபந்த மரபியல், சிதம்பரப்பாட்டியல், பிரபந்த தீபிகை முதலியன ஆகும். பன்னிரு பாட்டியல் ஆசிரியர் தெரியவில்லை. இதனைக் கி.பி. 17–ம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகக் கூறுவர். இது இலக்கிய வகை பற்றிக் கூறுகிறது. இந்நூல் எழுத்துகளை வருண அடிப்படையில் பகுப்பது புதியதாகும்.
வெண்பாப்பாட்டியல் ஆசிரியர் குணவீர பண்டிதர் கி.பி. 12–ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். வெண்பா யாப்பால் ஆன இந்நூலில் 103 வெண்பாக்கள் உள்ளன.
நவநீதப்பாட்டியல் நவநீதநடன் என்னும் வைணவரால் இயற்றப்பட்டது. கலித்துறை யாப்பால் ஆன இந்நூல் ‘கலித்துறைப் பாட்டியல்’ எனவும் பெயர் பெறுகிறது.
வரையறுத்த பாட்டியல் ஆசிரியர் பெயர் தெரியவில்லை, ‘சம்பந்தப் பாட்டியல்’ என்றும் இது சொல்லப்படும். மங்கலப் பொருத்தத்தினை மட்டுமே இது வரையறுப்பதால் இப்பெயர் பெற்றது.
பிரபந்த மரபியல் காலம் கி.பி. 16–ஆம் நூற்றாண்டின் தொடக்கம் என்பர். இதன் ஆசிரியர் இன்னார் என்பது தெரியவில்லை. பிரபந்த தீபிகை, பாப்புவையர் எனப்படும் முத்துவேங்டசுப்பையரால் பாடப்பட்டது. இந்நூல் கி.பி. 19–ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. சிதம்பரப்பாட்டியல் பிற பாட்டியலிலிருந்து வேறுபட்டது. இது பரஞ்சோதியாரால் கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.
தமிழில் அணியிலக்கணம் பற்றிய நூல்கள் தண்டியலங்காரம், மாறனலங்காரம், சந்திராலோகம், குவலயானந்தம் முதலியன ஆகும். தண்டியலங்காரம் வடமொழி அலங்கார நூலை மொழிபெயர்த்து தண்டி என்பவரால் எழுதப்பட்டதாகும். இது கி.பி. 12–ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. மாறன் அலங்காரம் திருக்குருகைப் பெருமாள் கவிராயரால் எழுதப்பட்டது. இது கி.பி. 17–ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. குவலயானந்தம் என்பதன் நூலாசிரியர் மாணிக்கவாசகர் ஆவார். இந்நூல் 299 நூற்பாக்களைக் கொண்டது; வடமொழி நூலை முதல்நூலாக உடையது. இந்த அணியிலக்கண நூல் வடமொழி நூலான குவலயானந்தத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இதனைச் சங்கரநாராயண சாத்திரிகள் என்னும் வடமொழி அறிஞர் மொழிபெயர்த்துள்ளார். சந்திராலோகம் என்பது வடமொழித் தனிநூலாகிய சந்திராலோகத்தின் மொழிபெயர்ப்பாகும். இது முத்துசாமி ஐயங்காரால் இயற்றப்பட்டது. இது 1909–ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் பதிப்பிக்கப்பட்டது.
ஐந்திலக்கணத்தோடு புலமை இலக்கணத்தையும் சேர்த்து அறுவகை இலக்கணம் என்னும் பெயரில் தண்டபாணி சுவாமிகள் ஓர் இலக்கண நூல் எழுதியுள்ளார். ஏழாம் இலக்கணமும் அவரால் எழுதப்பட்டதென்பர். தண்டபாணி சுவாமிகளின் வண்ணத்தியல்பு, குலாம்காதிறு நாவலரின் பொருத்த விளக்கம். சீனிவாசராகவாசாரியாரின் யாப்பொளி ஆகியவை இக்காலத்தில் தோன்றிய இலக்கண நூல்கள்.
இலக்கண நூல்கள் மட்டுமன்றி இலக்கண உரையாசிரியர்களாகிய இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், பேராசிரியர், தெய்வச்சிலையார், கல்லாடர், மயிலைநாதர், சங்கரநமச்சிவாயர், சிவஞானமுனிவர், ஆறுமுகநாவலர், இராமானுசக் கவிராயர், சடகோப இராமானுசாச்சாரியார், களவியலுரைகாரர் ஆகியோரும் மூல இலக்கண நூல்கள் பல தோன்ற முன்னோடிகளாய் அமைந்துள்ளனர். யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம், புறப்பொருள் வெண்பாமாலை, நம்பியகப்பொருள், தமிழ்நெறி விளக்கம், களவியற்காரிகை, வீரசோழியம், நேமிநாதம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதிய சான்றோர்களும் உரையாசிரியர் வரிசையில் குறிப்பிடத்தக்கவர்கள்.
தமிழில் காலந்தோறும் மொழியின் வளர்ச்சிக்கேற்ப இலக்கண நூல்கள் பல்கிப் பெருகி வளர்ந்துள்ளன. வழாநிலைகளும் வழுவமைதிகளும் சமுதாய வளர்ச்சிக்கேற்ப மொழியினையும் இலக்கியத்தையும் ஓரளவு நெகிழ்ந்து கொடுக்கச் செய்யும் வகையில் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளன.
தமிழிலக்கண வளர்ச்சியில் சமணசமயத்தாருக்கும் பிற சமயத்தாருக்கும் பெரும் பங்குண்டு. கிறித்தவர்கள் தங்கள் சமயத்தைப் பரப்பும் சமய அறிஞர்களுக்கென்று பற்பல இலக்கணங்களை எழுதினர். வீரமாமுனியர் கொடுந்தமிழ் இலக்கணம், செந்தமிழிலக்கணம், கிளாவிசு என்னும் இலக்கண நூல் ஆகியவற்றை எழுதியுள்ளார்.
தொல்காப்பியரது உரியியலைப் பின்பற்றித் தமிழில் எழுந்த நிகண்டுகளும் அகராதிகளும் குறிக்கத்தக்கவையாகும்.
தமிழ் இலக்கணம் மொழி, இலக்கிய மரபுகளைக் காக்கும் வேலிகளாகப் பயன்பட்டு வந்துள்ளன. ஒருசில வெறும் பழமைச் சின்னங்களாக மட்டுமே கருதப்படும் நிலையும் காணப்படுகிறது. நா.செ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 277)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5cus4tt2/
தமிழ்“இலக்கணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5cus4tt2/APA
Oliyon Research. (2026). இலக்கணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5cus4tt2/MLA
"இலக்கணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5cus4tt2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment