சீதம் இறுகு நோய்
cītam iṟuku nōy
சீதச் சுரப்பின் இயல்பு மாறிய பிறவி ஊனமாகப் பரம்பரையாக வெளிப்படும் நோயே, சீதம் இறுகு நோயாகும்.
சீதச் சுரப்பின் இயல்பு மாறிய பிறவி ஊனமாகப் பரம்பரையாக வெளிப்படும் நோயே, சீதம் இறுகு நோயாகும். கணையத்தையே பாதிக்கும் இதை நார்ப் பைப் பந்து நோய் (fibrocystic disease) எனவும் கூறுவர். சீதத்தைச் சுரக்கும் அனைத்துச் சுரப்பிகளும், குறிப்பாகக் கணையமும், மூச்சுக் கிளை நுண் குழல்களும், சீதம் இறுகு நோயில் பாதிக்கப்படுகின்றன. இறுகிய சீதம், கணைய நாளங்களை அடைத்து, கணையச் சுரப்புகளைத் தேக்கமடையச் செய்கிறது. சில தடுப்புச் சுவர்கள் நசவுற்றுக் கணைய நொதிகள் வெளிப்படுகின்றன. ஆகவே, பிறவியிலிருந்தே அல்லது பிறப்புக்கு முன்பே, குழந்தை நார்ப் பொருளுடன் கூடிய கணைய அழற்சியால் பாதிக்கப்படுகிறது. மற்றுமொரு வெளிப்பாடு குடல் இலிய அடைப்பாகும். இயல்புக்கு மாறான இறுகிய சீதம் மூச்சுக் இளைக் குழலினுட் செல்வதால், மூச்சு மண்டல நோய்கள் உண்டாகின்றன. வெளிப்படும் வியர்வையில் இயல்பு நிலையை விட 3-4 மடங்கு சோடியம் குளோரைடு காணப்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு எந்நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம்.
10% நோயினர், பிறவியிலேயே முதல் மலத்தால் குடல் அடைப்பு ஏற்பட்டுப் பாதிக்கப்படுகின்றனர். அரிதாக முதல் மல உதரவுறை அழற்சியால் பாதிக்கப்படுகின்றனர். பிறந்த சில வாரங்கள் கழித்து, மூச்சுக் கிளைகளில் குழல் அழற்சியும், மூச்சு விடுதலில் கடினமும் ஏற்படுகின்றன. மார்புக் கூடு பீப்பாய் போன்று உருளையாக மாறுகிறது. இத்தகைய குழந்தைகளின் மலம், எண்ணெய் போன்று கெடு நாற்றத்துடன் அடிக்கடி வெளிப்படுகிறது. இருப்பினும், குழந்தைக்கு நன்றாகப் பசி எடுக்கும். வீங்கிய வயிற்றுடன் எலும்பும், தோலுமாகக் குழந்தை காட்சியளிக்கும்.
வயதடைந்த குழந்தைகளில் அடிக்கடி மூச்சு மண்டல நோய்களும், கல்லீரல் சுருக்கமும், குருதி மிகை அழுத்தமும் உண்டாகின்றன. வயது முதிர்ந்தோரில், பின் கண் ரசத்தில் கலங்கலும், விழியடிக் கரும் படல அழற்சியும், தாடையடி உமிழ் நீர்ச் சுரப்பிகளின் வீக்கமும், மூச்சு மண்டல நோய்களும் காணப்படுகின்றன. நுண்ணுயிரிப் பாதிப்புகளால் அல்லலுறுகின்றனர். முன் சிறு குடலில் டிரிப்சினின் குறைந்த அளவு காணப்படும் அல்லது டிரிப்சின் இல்லாமை, நோய் அறுதியிடலில் உதவுகிறது. இயல்பாக, வியர்வையில் ஒரு லிட்டருக்கு 70 மில்லி மோல் சோடியமும், 60 மில்லி மோல் குளோரைடும், 20 மில்லி மோல் பொட்டாசியமும் காணப்படும். ஆனால், சீதம் இறுகு நோயாளிகளில் மேற்கூறியவை மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றன. இதற்கு பைலோ கார்பைன் அயண்டோ போரெசிஸ் என்னும் மருத்துவ முறை அளிக்கப்படுகிறது.
மூச்சு மண்டல நோய்களைக் கட்டுப்படுத்துவதே மருத்துவமாகும். நுண்ணுயிர் எதிர் மருந்துகளுக்கு எதிர்ப்பாற்றல் உண்டாகிறது. மிகையாகப் புரதமும், சர்க்கரையும் கொடுக்க வேண்டும். கொழுப்புப் பொருளைக் கொடுக்கக் கூடாது. பேங்கிரியாடின் 5-10 கிராம், 200 அலகு வைட்டமின் D. 10,000 அலகு வைட்டமின் A ஆகியன மருத்துவமாக அமைகின்றன. —மு.கி. பழநியப்பன் நூலோதி. A.J. Harding Rains, Bailey & Love’s Short Practise of Surgery, Seventeenth Edition, E.L.B.S., London, 1979.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 409)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5crgt2vc/
தமிழ்“சீதம் இறுகு நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5crgt2vc/APA
Oliyon Research. (2026). சீதம் இறுகு நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5crgt2vc/MLA
"சீதம் இறுகு நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5crgt2vc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment