உரோமானியக் கத்தோலிக்கத் திருச்சபையின் போப்பு. இவர் போலக்னா (Bologna) பல்கலைக்கழகத்தில் திருச்சபைச் சட்டத்தைக் கற்பிக்கும் ஆசிரியராக இருந்தார். கி.பி. 1153–ஆம் ஆண்டில் நான்காம் அனாசுடாசியசு (Anastasius–IV), நான்காம் ஏட்ரியன் (Adrian–IV) போன்ற போப்பாண்டவர்களுக்குக் கீழ்ச் சமயத்துறை (Chancellor) நடுவராக இருந்தார். கி.பி. 1159–இல் போப்பு ஆறாம் ஏட்ரியனுக்குப்பின் போப்பாக நியமனம் பெற்றார். இவருக்கு எதிராகச் சிறுபான்மையோரால் நான்காம் விக்டர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். விக்டரை முதலில் அங்கீகரித்த பார்பரோசா வமிசத்தினர், இலெக்னானோ தோல்வியுற்ற பின் அலெக்சாந்தரையே போப்பாக ஏற்றனர். இவர் உரோமானியக் கத்தோலிக்கத் திருச்சபை மதகுருக்களின் மூன்றாவது மாநாட்டை கி.பி. 1179–இல் கூட்டி, உரோமானியக் கத்தோலிக்கச் சமயச் சட்டங்கள் சிலவற்றை இயற்றினார். இங்கிலாந்து அரசர் இரண்டாம் என்றியைத் தாமசு பெக்கட்டு (Thomas Beckett) என்பவரின் கொலையை முன்னிட்டுப் பணிய வைத்தார். போர்த்துகீசிய மன்னராக முதலாம் அல்பான்சோவை ஆட்சியில் அமர்த்தினார். உரோமானியக் குடியரசு, மூன்றாம் இன்னசன்ட் (Innocent III) என்பவரைக் கி.பி. 1179–இல் இவருக்கு எதிராகப் போப்பாக்க முயற்சி செய்தது. ஆனால் அவரைத் தன்வசப்படுத்தி மூன்றாம் இன்னசன்ட்டைக் கி.பி. 1180 இல் பதவியிழக்கச் செய்தார். 1180 இல் இசுகாட்லாந்து (Scotland) அரசரான வில்லியம் என்பவரைச் சமயநீக்கம் செய்தார். கி.பி. 1181 ஆம் ஆண்டு ஆகசுட்டு 30–ஆம் நாள் உயிர் நீத்தார்.