கடல்வாழ் கடின ஓட்டுக் கணுக்காலி வகையைச் சேர்ந்த பார்னகிள் இத்துணை வகுப்பில் உள்ளது. இளவுயிரியாக இருக்கும் போது, நீரில் நீந்தியும், முதிருயிரியாக வளர்ந்ததும், பாறை, கட்டை, ஓடு முதலானவற்றில் ஒட்டியும் வாழும் இயல்புடையது. மென்மையான உடல் முழுதும் சுண்ணத்தாலான கவச உறையால் மூடப்பட்டுள்ளது. உடலில் வாய்ப் பகுதியும், மார்புப் பகுதியுமே உள்ளன. பொதுவாக வயிறு எச்சவுறுப்பாக உள்ளது. வாயில் ஓர் இணை கீழ்த் தாடைகளும் ஓரிணை மேல் தாடைகளும் உள்ளன. மார்புப் பகுதியில், ஆறு இணை இரு கிளைத் தொங்கு உறுப்புகள் உள்ளன. தொங்கு உறுப்புகள் கண்டப் பகுப்புகளுடன் மிகுதியான சுணைகளைப் பெற்றுள்ளன. B. பலாளஸ் பலானாய்டசின் இளவுயிரி C. பலானிசின் வளர்நிலை <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> இளவுயிரியில் மட்டும் கூட்டுக் கண்கள் காணப்படுகின்றன. இதயம் இல்லை. பொதுவாக அனைத்து உயிரிகளும் இரு பாலிகள். பெண் இனவுறுப்புத் துளை முதல் தொங்குறுப்பின் அடிப் பகுதியிலும், ஆண் இனவுறுப்புத் துளை ஆறாம் தொங்கு உறுப்பின் பின் பகுதி மையத்தில் நீண்டு தொங்கும் ஆணுறுப்பின் நுனியிலும் உள்ளன. அயல் கருவுறுதல் நடைபெறுகிறது. உடல் போர்வைக் குழியில் கருவுற்ற முட்டைகள் அடை காக்கப்பட்டு, அவற்றினின்று நாப்ளியஸ் இளவுயிரிகள் வெளி வருகின்றன. அடுத்தடுத்துத் தோலுரித்து ஐந்து நாப்ளியஸ் இளவுயிரி நிலையைக் கடந்து ஆறாம் நிலையில் சைஃபிரிஸ் என்னும் இளவுயிரி நிலையை அடைகிறது. இது இரட்டைச் சிப்பியுடைய சைஃபிரிஸ் என்னும் உயிரியைப் போன்று உள்ளமையால், இப்பெயர் பெற்றது. சைஃபிரிஸ், சிர்ரிப்பீடியாவின் அனைத்துப் பண்புகளும் சிறப்புற அமையப் பெற்றது. நன்கு வளர்ந்த நுண் உணர் கொம்புகளும், சுணைகளும் உள்ளன. சில காலம் நீந்தி வாழ்ந்த பிறகு பாறை, மிதக்கும் கட்டை போன்றவற்றைப் பிடித்து நுண் உணர் கொம்புகளால் பற்றிக் கொள்கிறது. நுண் உணர் கொம்புகளிலுள்ள சுரப்பிகள், சிமெண்ட் போன்ற பொருளைச் சுரக்கின்றன. இதன் உதவியால், சைப்ரிஸ் நன்றாக ஒட்டிக் கொண்டு மேலும் வளர்மாற்றம் அடைகிறது. காண்க: அலசிகள். —கே.கே. அருணாசலம்