பன்னாட்டுச் சட்டத்தில் கரையோர நாடுகளின் நன்மையைக் கருதி உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை (Hot Pursuit) உலகில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. துரத்திப் பிடித்தல் என்பது எந்நாட்டு வணிகக் கப்பலேனும் ஒரு நாட்டு எல்லையோரக் கடலில் சட்டத்தை மீறும் வகையிலோ குற்றம் புரியும் வகையிலோ நடந்துவிட்டுத் தப்பிச் செல்ல முயன்றால், எல்லையோரக் கடல் நாடு தன் போர்க் கப்பலின் துணைக் கொண்டு தவறிழைத்துத் தப்பிச் செல்லும் அயல்நாட்டு வணிகக் கப்பலைப் பின் தொடர்ந்து சென்று துரத்திப் பிடித்து அதன் மீது நடவடிக்கை எடுக்கும் உரிமை ஆகும். இவ்வுரிமை கீழ்க்காணும் சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படலாம். அயல் நாட்டு வணிகக் கப்பல் அக்குற்றத்தினைக் கரையோரக் கடல் எல்லைக்குள் தொடங்கியிருக்க வேண்டும். பிறகு ஆழ்கடலில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் தொடர்ந்து துரத்திப் பிடிக்கலாம். துரத்திப் பிடிப்பதில் தொடர்ச்சி விட்டுப்போனாலோ துரத்தப்படும் கப்பல் அந்நாட்டில் எல்லையோரக் கடலிலோ வேற்று நாட்டு எல்லையோரக் கடலிலோ நுழைந்து விட்டாலோ துரத்திப் பிடிக்கும் உரிமை அற்றுப் போகும். மேலும், குற்றம் செய்துவிட்டு அது கரையோரக் கடல் எல்லையைக் கடந்து ஆழ்கடலுக்குள் சென்று விட்டால், பிறகு துரத்திப் பிடிக்கும் உரிமை கிடையாது. இவ்வகை உரிமை இப்போது நெடுங்கடல் பற்றிய செனிவா மாநாட்டு ஏற்பு விதி 23–இல் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி கரையோர நாடு அயல் நாட்டுக் கப்பல் எதுவும் கரையோர நாட்டின் எல்லைக் கடலில் அந்நாட்டின் சட்டத்தையோ ஒழுங்கு முறையையோ மீறும் வகையில் நடந்திருப்பதாக நம்புவதற்கு ஏற்ற காரணங்களிருந்தால், அந்தத் தவறிழைத்த கப்பல்களைத் துரத்திப் பிடித்து வரலாமென்று கூறுகிறது. மேலும், (அ) அவ்வாறு துரத்திப் பிடிக்கும் உரிமையைச் செயற்படுத்த அந்தக் குற்றம் கரையோர நாட்டின் எல்லைக் கடலில் செய்யப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் குற்றம் புரிந்தவுடனே கரையோர நாடு குற்றக் கப்பலைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்- டும். அவ்வாறு துரத்திப் பிடித்தலை எல்லைக் கடலிலே தொடங்கி விட்டால், அந்நாட்டின் எல்லைக் கடலைத் தாண்டி ஆழ்கடலிலும் துரத்திப் பிடித்து வரலாம். ஆனால், குற்றக் கப்பல் ஆழ்கடலைத் தாண்டி வேறு நாட்டு எல்லைக் கடலில் புகுந்து விடுமேயானால் துரத்திப் பிடிக்கும் முயற்சியை அத்துடன் விட்டுவிடுதல் வேண்டும். (ஆ) இத்துரத்துதல் இடையீடோ முறிவோ இன்றித் தொடர்ந்து இருக்க வேண்டும்.