அர்சுமத் பானு பேகம்
arcumat pāṉu pēkam
சாசகானுடைய (Shah Jahan) அன்புத் துணைவியார்.
சாசகானுடைய (Shah Jahan) அன்புத் துணைவியார். இவர் நினைவாகக் கட்டப்பெற்றது தாசுமகால் சின்னம். மொகலாயப் பேரரசி நூர்சகானுடைய அண்ணன், ஆசப்கானின் மகள். அர்சுமத் பானுபேகம் கி.பி. 1592–இல் பிறந்தாள். நூர்சகானின் தூண்டுதலால் 16 வயதான அர்சுமத் பானுபேகத்திற்கும் 20 வயதான இளவரசன் குர்ரத்திற்கும் (சாசகான்) கி.பி. 1612 ஏப்பிரலில் திருமணம் நடைபெற்றது. பலதார மணப்பழக்கம் நிரம்பிய மொகலாய அரண்மனையில், இந்தத் திருமணம் வெற்றி மிக்கதாக விளங்கியது. பேரழகுமிக்க அர்சுமத் பானுபேகம், தம் கணவரிடம் பேரன்பு கொண்டிருந்தார். சகாங்கீருக்கு எதிராக இளவரசன் சாசகான் கிளர்ச்சி செய்து தோற்ற பின் அவருடன் சேர்ந்து எல்லாத் துன்பங்களையும் அனுபவித்தார். கி.பி. 1627 நவம்பர் மாதத்தில் சகாங்கீர் இறந்தபின், இவர்தம் தந்தை ஆசப்கானின் முயற்சிகளால்தான் கி.பி. 1628–ஆம் ஆண்டு பிப்பிரவரியில் சாசகான் மொகலாயப் பேரரசராக முடிந்தது. மாலிகா–இ–சமானி என்ற பட்டப் பெயருடன் அர்சுமத் பானு பேகம் பட்டத்து அரசியானார். சாசகான் இவளுக்கு ஆக்ராவில் அரண்மனை ஒன்றை அமைத்துக் கொடுத்தார். சொர்க்கத்தில் உள்ளது போன்ற மாளிகை என்று, அதனைச் சாசகான் நாமா வருணிக்கிறது. அர்சுமத் உயர்கல்வி, ஒழுக்கநெறி, எளியோருக்கு உதவும் கனிந்த உள்ளம் ஆகியவற்றைக் கொண்டிருந்தார். இசுலாமிய சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அர்சுமத் இறைவழிபாடு, நோன்பு ஆகியவற்றைத் தவறாமல் பின்பற்றி வந்தார். சாசகான் கிறித்தவர்கள், இந்துக்கள் ஆகியோரிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கு இவரும் ஓரளவு காரணமாவார். மும்தாசு மகால் (அரண்மனை ஆபரணம்) என்று அழைக்கப்பெற்றார். ஏறத்தாழ 19 ஆண்டுகள் இவர்கள் நடத்திய இன்பமான இல்லற வாழ்வின் பலனாக 6 பெண் குழந்தைகளும், 8 ஆண் குழந்தைகளும் பிறந்தனர். அவர்களுன் எழுவர் குழந்தைப் பருவத்திலேயே இறந்து விட்டனர். மற்றவர்களின் பெயர்கள் சகானரா, தாரா சூகா, சூசா, இரோசனாரா, அவுரங்கசீப், மூரத்பக்சி, குத்சியா என்பனவாகும். அர்சுமத் பானுபேகம் பதினான்காவது குழந்தைப் பேற்றின்போது தம் 39–ஆம் வயதில், கி.பி. 1631 சூன் 7–ஆம் நாள் பர்கான்பூரில் இறந்துவிட்டார். அருகிலிருந்த சைனாபாத்துத் தோட்டத்தில் இவருடைய உடல் புதைக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்குப் பின் தக்காணத்திலிருந்து திரும்பிய சாசகான் இவள் உடலை ஆக்ராவிற்குக் கொண்டு சென்று, அங்கிருந்த தோட்டத்தில் புதைத்தார். இவருடைய கல்லறையின் மீதுதான் உலக விந்தைகளுள் ஒன்றான தாசுமகாலை கி.பி. 1632–இல் சாசகான் கட்டத் தொடங்கி, கி.பி. 1653–இல் முடித்தார். இவள் இறந்த பின் 35 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த சாசகான், அர்சுமத்தின் மீது கொண்டிருந்த அன்பின் அடையாளமாக மறுமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார்.அ.இரா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 604)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/533e5xfs/
தமிழ்“அர்சுமத் பானு பேகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/533e5xfs/APA
Oliyon Research. (2026). அர்சுமத் பானு பேகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/533e5xfs/MLA
"அர்சுமத் பானு பேகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/533e5xfs/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment