கரைசல், உருகிய நிலையில் உள்ள திண்மம், வளிமம் போன்றவற்றிலிருந்து பெறப் படும் திண்மத்தைப் படிகமாக்கல் எனப் படுகிறது. கரைசல்களிலிருந்து கிடைக்கும் படிகங்கள், பல்வேறு துறைகளில் பயன் படுவதால், கரைசலிலிருந்து படிகங்கள் தயாரிக்கும் முறை இங்கு தரப் பட்டுள்ளது. மீ தெவிட்டிய கரைசலில், கரை பொருளின் அளவு அதன் கரை திறன் அளவை விட மிகுந்து காணப் படும். பொட்டாசியம் குளோரைடு போன்ற உப்புகளின் கரை திறன், வெப்பம் உயரும் போது உயரும். இது போன்ற மீ தெவிட்டிய கரைசலைப் பெறக் கரைசலை ஆவியாக்கி அல்லது குளிரச் செய்து பெறலாம். ஆனால், சோடியம் குளோரைடு போன்ற உப்பின் கரை திறன், வெப்ப மாற்றத்தால் வெகுவாக பாதிக்கப் படுவதில்லை. இது போன்ற உப்பின் மீ தெவிட்டிய கரைசலைப் பெற, ஆயியாக்கல் முறை மட்டுமே பயனுடையதாகும். மேலும், எத்தில் ஆல்கஹால் போன்ற கரைப்பான்களைக் கரைசலில் சேர்த்துத் திண்மத்தின் கரை திறனைக் குறைத்துப் படிகமாக்க இயலும். ௧ரு உருவாதல், படிக வளர்ச்சி என்னும் இரு கட்டங்களில் படிகமாக்கல் வினை நிகழும். ௧ரு உருவாதலில் புதுப் படிகம் தோன்றும். மீ தெவிட்டிய திண்மக் கரைசலில், குறை கரை திறன் கொண்ட கரைப்பானைக் கலக்கும் போது, ஒரு படித்தான கரு உருவாதல் நிகழும். ஆனால், ஓரளவு தெவிட்டிய கரைசலில், திண்மத் துகள் மேல் நிகழும் படிகக் ௧ரு உருவாதல், பல படித்தான நிலையில் தோன்றும். பெரிய அல்லது சிறிய படிகங்களைப் படிகமாக்கலில் பெறலாம். பெரிய படிகங்கள் பொதுவாகத் தூய்மையானது எனக் கருதப் படுகிறது. ஆனால், பெரிய உருவமுள்ள படிகங்கள் தோன்றும் போது, அதனுள் கரைப்பான் அடைபட்டுக் கிடக்கக் கூடிய வாய்ப்பு தோன்றுவதால், நடுத்தர உருவமுள்ள படிகங்களைப் பெறுவதே சிறந்தது. மீ தெவிட்டிய கரைசலைக் கலக்கும் வேகம், படிக வளர்ச்சியின் நேரம் ஆகியவற்றைப் பொறுத்துப் படிகத்தின் உருவம் அமையும். மீ தெவிட்டலின் அளவு கூடும் போது, படிக வளர்ச்சியின் வேகத்தை விட, படிகக் கரு உருவாகும் வேகம் கூடுகிறது. எனவே, பருமனான படிகங்களைப் பெறத் தாழ்வான மீ தெவிட்டிய நிலை, மெதுவாகக் கலக்குதல், மிகுதியான நேரம் ஆகியன தேவை. தாழ்வான மீ தெவிட்டிய நிலை பெற, கரைசலை ஆவியாக்கும் வேகமும், குளிர வைக்கும் வேகமும் தாழ்வாக இருத்தல் வேண்டும். —இரா. நடேசன்