மக்கள், தாம் விரும்பியும் அடைவதற்கு அரிதான பண்டங்கள் அருமைப் பண்டங்கள் எனப்படும். சில வள ஆதாரங்கள் இயற்கையின் இலவச நல்கையாக இருப்பினும், அவை குறிப்பாக ஒருசில இடங்களில் மட்டும் காணப்படுவதால் மற்ற இடங்களில் அருமைப் பொருள்களாகின்றன. சில பண்டங்கள் உலகெங்கும் பெருமளவிலோ அருமைப் பொருள்களாகவோ விளங்குகின்றன. எடுத்துக்காட்டாக வைரம், தங்கம், யுரேனியம், பிளாட்டினம் போன்ற பொருள்கள் உலகெங்கும் பெரிதும் மதித்து விரும்பப்படினும் அவை அருமைப் பொருள்களாகவே இருக்கின்றன. கிடைப்பருமையால் இப்பொருள்கள் மதிப்பில் உயர்வதோடு பிற பொருள்களின் மதிப்பை வரையறை செய்யும் ஓர் அளவுகோலாகியும் விடுகின்றன. இவற்றின் பெருக்கமே ஒரு நாட்டின் செல்வப் பெருக்கமாகவும் கருதும் அளவிற்கு இவை மதிப்புப் பெற்றுவிடுகின்றன. சில பண்டங்கள், ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் பெருமளவு காணப்பட்டுப் பிற இடங்களில் காணப்படவில்லையாயின், அவை கிடைப்பருமைப் பண்டங்கள் என்று பெயர் பெறும். இத்தகைய பண்டங்கள் இயற்கைப் பண்டங்களாகவும் இருக்கலாம்; மனிதனால் படைக்கப்பட்டவையாகவும் இருக்கலாம். எண்ணெய் வளங்கள் பெரும்பான்மையாக அரேபிய நாடுகளில் காணப்படுவதால், வளர்ச்சி மிக்க அமெரிக்க நாடுகளுக்குக்கூடப் பெட்ரோல் எரிவாயு போன்றவை அருமைப் பொருள்களாகி விடுகின்றன. தேயிலை, சணல், மிளகு போன்ற பண்டங்கள் ஒருசில நாடுகளில் உள்ள தட்ப வெப்ப நிலையிலேயே பயிரிடப்படும். இப்பண்டங்கள் விளையாத நாடுகள், இப்பண்டங்களை எதிர்நோக்கி நிற்க வேண்டியதாகின்றன. ஒருசில நிலப்பகுதிகளில் காணப்படும் வள ஆதாரங்களாலும் தொழில் நுணுக்கத்தாலும் ஒரு குறிப்பிட்ட பொருள் குறைந்த செலவில் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும். எடுத்துக்காட்டாகச் சப்பான் நாட்டின் கார் உற்பத்தியைக் கூறலாம். இவ்வாறு காணப்படும் பொருள்களின் மிகுதியான அளிப்பையும் இல்லாமையையும் ஈடுகட்டவே உலகில் பன்னாட்டு வாணிகம் தலையெடுத்தது. ஒரு நாடு தன்னிடமுள்ள தேவைக்கு மிகுதியான பண்டங்களை மற்றொரு நாட்டிற்கு நல்கி, அந்நாட்டிலிருந்து தனக்குத் தேவையான, தன்னாட்டில் உற்பத்தி செய்ய முடியாத அருமைப் பண்டங்களைப் பெற்றுக் கொள்வதே பன்னாட்டு வாணிகத்தின் உட்கருத்தாகும். ஆகவே பன்னாட்டு வாணிகமும் ஒதுக்கீட்டின்பாற்பட்டதே. சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப அருமைப் பண்டங்களின் இயல்பு மாறுகிறது. வருவாயை அடிப்படையாகக் கொண்டு ஏற்றத் தாழ்வுகளைக் கணித்தால் உயர் வருவாயுடையோர், நடுத்தர வருவாயுடையோர், குறைந்த வருவாயுடையோர், பொருளாதார நிலையில் பின்தங்கியோர், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளோர் என்று பலவாறாகப் பிரிக்கலாம். இப்பாகுபாட்டிற்கு அடிப்படையாக அமையும் பணம் ஓர் அருமைப் பொருள். ஒரு கோடீசுவரனுக்கு எலிகாப்டர் ஒருவேளை அருமைப் பண்டமாக இருக்கலாம். ஆனால், வறுமைக் கோட்டின் கீழ் இருப்பவனுக்கு அன்றாடம் உண்ணும் உணவே அருமைப்பொருளாகி விடுகிறது. அதேபோல் ஒருபொறியியல் மாணவனுக்கு ஒரு தொழில் அணுக்க விளக்க நூல் அருமைப் பொருளாக இருக்கலாம். ஒரு திரைப்படக் கலைஞனுக்கு அவனது அலங்காரப் பொருள்கள் அருமையானவையாய் இருக்கலாம். இவ்வாறு பல திறப்பட்ட அருமைப் பண்டங்களைப் பங்கீடு செய்வது தேவையாகிறது. அருமைப் பண்டங்களின் ஒதுக்கீட்டைப் (Allocation of Scarce Resources) பொருள்களின் அருமைப்பாட்டிற்குக் காரணமாக அமையும் உற்பத்தி, நுகர்வு என்ற இரு செயல்களின் கீழ் ஆராயலாம். பண்டங்கள் உலகில் இரு செயல்களுக்காக வேண்டப்படுகின்றன. அவை உற்பத்தியும் நுகர்ச்சியும் ஆகும். உற்பத்தியில் பண்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நுகர்ச்சியில் பண்டங்கள் பங்கீடு செய்யப்படுகின்றன. உற்பத்தி என்பது நிலம், உழைப்பு, மூலதனம், தொழில் அமைப்பு என்ற நான்கு காரணிகளையும் ஒருங்கிணைத்துப் பயன்பாட்டினை (Utility) உருவாக்குவதேயாகும். உற்பத்தி நிலைதான், ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியையயும் ஆக்கத்தையும் சிறப்பையும் காட்டுகிறது. இவ்வுற்பத்தியில் பயன்படுத்தப்படும் காரணிகள் தங்கு தடையின்றிக் கிடைக்குமேயானால், பண்டங்களின் அளிப்புக்குக் குறைவிராது. ஏனெனில், நிலத்திலிருந்து விளையும் பொருள்களின் தேவைக்கேற்ப மிகுதியான அளவு நிலங்கள் பயிரிடப்படலாம். அதனால், உணவுத் தானியங்கள் அருமைப் பொருள்களாக இராமல், அளிப்பு மிகுந்த பொருள்களாக இருக்கும். அத்தகைய பொருள்களை ஒருவேளை கடலில் கொட்டிவிட வேண்டிய நிலை கூட ஏற்படலாம். ஆனால், உற்பத்திக்கு உதவக்கூடிய நிலம் அதன் அளவிலும் தன்மையிலும் குறைவுபடும் போது நிலத்தின் விளைபொருள்கள் அருமைப் பண்டங்களாகிவிடும். வளம் கொழிக்கும் பூமியின் அளிப்பு குறைவுபட்டுக் காணப்படும்போது நிலமும் அருமைப் பண்டமாகிவிடுகிறது. இத்தகைய அருமைப்பாடுடைய நிலத்தையும் பங்கிட்டு ஒதுக்கீடு செய்ய இயலும். எல்லா நிலங்களும் ஒருசிலரிடமே இருக்குமாயின் நாட்டில் நிலப்பசி ஏற்பட்டு, உணவுப் பண்டங்களின் ஆக்கம் குறைந்து. சமுதாய அமைப்பே அழிந்து விடக் கூடும் என்றுதான் உச்சவரம்புத் திட்டம், உழுபவனுக்கு நிலம் சொந்தம் போன்ற சீரமைப்புகள் கொண்டுவரப்பட்டன. மற்றொரு வகையிலும் நிலம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சிற்றூர்களில் வேளாண்மைக்கெனப் பயன்படுத்தப்படும் நிலத்தில், பண்டங்களின் அருமைப்பாட்டிற்கேற்ப நெல், கேழ்வரகு, வேர்க்கடலை, கரும்பு, புகையிலை என்று பல்வேறு அளவில் பயிரிடப்படுகின்றன. உணவு எண்ணெய் பற்றாக்குறை எழுமாயின், அருமைப்பாட்டிற்குட்பட்ட நிலம், பெருமளவில் எண்ணெய் வித்துகள் ஆக்கத்திற்கென ஒதுக்கப்படுகிறது. அதேபோல் நகர்ப்புற நிலங்களும் ஒரு சிலரிடம் தேங்காமல் பகிர்வு செய்யப்பட வேண்டியே, நகர நில உச்சவரம்பு உருவாக்கப்படுகிறது. நகரங்களின் அருமைப் பண்டமான நிலத்தின் பயன்பாட்டை நல்ல முறையில் ஆய்ந்து வீடு கட்டுவதற்கு எவ்வளவு என்றும், பூங்கா, மருத்துவ நிலையங்கள், விளையாட்டுத் திடல்கள் அமைக்க எவ்வளவு என்றும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உழைப்பு என்பது மனிதனால் அளிக்கப்படும் ஒன்று. உழைப்பு இருவகைப்படும். ஒன்று உடல் உழைப்பு; மற்றொன்று அறிவு உழைப்பு. இவ்விரண்டையும் சேர்த்து மனித ஆற்றல் என்று பொதுவாகக் குறிப்பிடுவதுண்டு. மக்கள் தொகை மிகுதியாகக் காணப்படும் நாடுகளில் மனித உழைப்பு ஓர் அருமைப் பொருள் அன்று. ஆனால் அம்மக்கள் கல்வி அறிவும் தொழிற் பயிற்சியும் இல்லாதிருப்பின், அறிவு உழைப்பின் தரம் குன்றி, அறிவு உழைப்பு அருமைப் பண்டமாகக் கருதப்படும். மனித உழைப்பு மிகுதியாகக் காணப்படுவதால்தான் இந்தியா போன்ற மக்கள் தொகை மலிந்த நாட்டில் வேளாண்மை, தொழிற்சாலை உற்பத்தி ஆகியவற்றை எந்திரமயமாக்கக் கூடிய வாய்ப்பில்லை. ஆகவே உற்பத்தித் துறையில் வேலையின்மையை நீக்கும் வகையில் மனித உழைப்பை மிகுதியாக ஒதுக்கீடு செய்து, மற்றக் காரணிகள் குறைந்த அளவில் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகின்றன. இன்றைய தொழில் எந்திரமயமாக்கப்பட்டதொன்று. இத்தகைய முறையில் தொழில் நுணுக்க அறிவு மிகுதியாகத் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட அறிவைப் பெற, அடிப்படைக் கல்வியும் தொழிற் கல்வியும் தேவை. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இவை இப்பொழுதுதான் வளரத் தொடங்கியுள்ளன. அறிவுக் கூர்மையையும் ஆற்றலையும் ஓர் ஆக்கக் காரணியாகக் கணிக்கும்பொழுது, ஏழை நாடுகளிலும் வளரும் நாடுகளிலும் இவ்வறிவாற்றல் படைத்த அமைப்பாளர்கள் அருமைப்பாடுடையவர்களாகி விடுகிறார்கள். இந்தியா விடுதலைபெற்ற காலத்தில், தொழில் அமைப்பாளர்கள் அருமையாக இருந்ததால்தான் வெளிநாட்டு அமைப்பாளர்கள் பலர் இந்நாட்டில் வந்து, தத்தம் தொழில் அமைப்புகளை அமைத்து, ஆதாயத்தைப் பெருமளவில் ஈட்டித் தம் நாட்டிற்கு எடுத்துச் சென்றனர். இன்று இந்நிலை மாறிவருகிறது. தொழில் தொடங்குவோன், தொழிலின் நன்மை தீமைகளைத் தாங்குவோன், புதிய கண்டுபிடிப்புகளைப் புகுத்துவோன் ஆகிய யாவரும் உற்பத்திக் காரணிகளாகக் கருதப்பட்டு அருமையாக இருப்பினும், கிடைக்கும் அளவை நல்ல முறையில் பயன்படுத்தப் பகிர்ந்து ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. மூலதனம் என்னும் சொல்லுக்குச் சிறப்புப் பொருள் உண்டு. தொழிலில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணம் மட்டும் மூலதனமாகாது. உற்பத்தியில் பங்கு பெறும் கச்சாப் பொருள்கள், எந்திரங்கள், அடிப்படைக் காரணிகள் ஆகிய அனைத்தும் மூலதனம் என்று கொள்ளப்படும். இவ்வகையில் செருப்புத் தைப்பவனின் கையில் அமைந்துள்ள குத்தூசியும் மூலதனமே. இத்தகைய மூலதனம் வளரும் நாடுகளில் அருமைப் பண்டமாகக் காணப்படுகிறது. வருவாய் இரு வழியில் செலவிடப்படுகிறது. ஒன்று நுகர்ச்சிக்காக; மற்றொன்று சேமிப்பிற்காக, நுகர்ச்சிக்கே வருவாய் போதவில்லையென்றால் சேமிப்புக்கு இடமில்லை. சேமிக்கும் பணம் வங்கிகள் வாயிலாகச் சேர்க்கப்பட்டு முதலீடாக உற்பத்தியில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது, பொருளியல் கருத்து. வறிய நாடுகளில் வருமானம் போதிய அளவில் இல்லாததால் சேமிப்பு இல்லை. பணம் படைத்தோர் ஒருசிலரன்றிப் பெரும்பாலோர் சேமிப்பு என்பதை, சமுதாயத்தில் தங்களை உயர்த்திக் காட்டக் கூடிய நுகர்வில், அதாவது ஆடை அணிகளில் செலவிடுகின்றனரே தவிர, உற்பத்தியை மீண்டும் பெருகச் செய்யும் வழிகளின் செலவிடுவதில்லை. ஆகவே, பின்தங்கிய நாடுகளில் மூலதனம் அருமைப் பொருளாக இருக்கிறது. இக்குறைபாட்டை நீக்க வருவாய் பெருக வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்காகப் பாடுபடும் பல நாடுகள், ஒரு தனிப்பட்ட மனிதனின் வருவாய் ஒரு குறிப்பிட்ட நிலைக்கும் போகக்கூடாது என்பதற்காகக் குறைந்த அளவு ஊதியம் என்பதைச் சட்டத்தின் மூலமாக அமுலாக்கி இருக்கின்றன. அதுமட்டுமன்றி, அருமைப் பண்டமாகிய மூலதனம் வீணாகக்கூடாது என்னும் நோக்கில், கிடைக்கும் மூலதனத்தைச் சமுதாயத்தின் இன்றியமையாத் தேவைகளை நிறைவு செய்வதற்காகவும் பயன்படுத்துகின்றன. இதனையே, வள ஆதாரங்களின் ஒதுக்கீடு (Resource Allocation) எனப் பொருளியல் குறிப்பிடுவர். பண்டங்களை உற்பத்தி செய்யும் காரணிகள் அருமைப் பண்டங்களாக இருப்பின், அவற்றால் உற்பத்தி செய்யப்படும் பண்டங்களும் அருமைப் பண்டங்களாகவே மாறிவிடுகின்றன என்பது தெளிவு. இவ்வாறு கூறுவதால் வளம் கொழிக்கும் வளர்ச்சி மிக்க நாடுகளில் அருமைப் பண்டங்களே இல்லை என்பது பொருளன்று. அங்கு உற்பத்திக் காரணிகள் போதிய அளவிற்கு இருப்பினும், எப்பொருள் எவ்வாறு எப்போது உற்பத்தி செய்வது என்ற சிக்கல் தலையோங்கி நிற்கிறது. இச்சிக்கலை அவிழ்க்கவும் ஒதுக்கீடு முறை கையாளப்படுகிறது. இச்சிக்கல் நன்கு கண்காணிக்கப்படாவிட்டால் தேவையற்ற பொருள்களின் மிகுதி ஒரு பக்கமும் தேவையான பண்டங்க- ளின் வறட்சி ஒரு பக்கமும் ஏற்பட்டு, நாட்டின் பொருளாதார நிலை, சீர்குலையும் வாய்ப்புண்டாகலாம். வளரும் நாடுகளின் அருமைப் பண்டப் பங்கீடு அல்லது ஒதுக்கீடு, வளர்ந்த நாடுகளின் செயல்முறையை விட மாறுபட்டுத் தோன்றுகிறது. வளர்ச்சியடைந்த நாடுகள் நுகர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டுகின்றன. ஆனால், வளரும் நாடுகள் உற்பத்தியில் மிகுந்த அக்கறை காட்டுகின்றன. வள ஆதாரங்களையும் உற்பத்திக் காரணிகளையும் உற்பத்தியில் பயன்படுத்தும் பொழுது, இருவகைச் சிக்கல்களைத் தீர்க்க வேண்டிவரும். ஒன்று, காரணிகளை முழுமையாகப் பயன்படுத்துவது; மற்றொன்று, அவ்வாறு பயன்படுத்தப்படும் பொழுது எவ்வாறு காரணிகள் பங்கீடு செய்யப்படுகின்றன என்பதாகும். காரணிகளின் பயன் அவற்றின் உற்பத்தித் திறனைப் பொறுத்தது. பயன்படுத்தப்படாத நிலமோ எந்திரமோ சமுதாயத்திற்கு எந்தப் பலனையும் அளிக்காது. வள ஆதாரங்களையும் காரணிகளையும் பயன்படுத்தும் பொழுது, அவை வீணாவதைத் தவிர்க்க வேண்டும். பொருளியலில், அருமைப்பாடுடைய பண்டங்களை எவ்வாறு ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பதே பெரிய சிக்கலாகும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் உற்பத்திக் காரணிகளின் அளவு, ஆக்கத் திறன், தொழில் முறை ஆகியன நன்கு கொடுக்கப்பட்டனவாகக் கருத்தில் கொண்டு, சமுதாயம் நுகர்ச்சிப் பொருளிலும், மூலதனப் பொருள் உற்பத்தியிலும் ஈடுபடுவதாக ஊகித்துக் கொண்டால், அதில் நுகர்ச்சிப் பண்டங்களை மிகுதியாக உற்பத்தி செய்யும்போது முதலீட்டுப் பொருள்களைச் சமுதாயம் அதே அளவில் உற்பத்தி செய்ய முடியாது. ஏனெனில், காரணிகளின் அளவு, திறன் ஆகிய அனைத்தும் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆகவே உற்பத்தி வாய்ப்பு எல்லை (Production Possibility Boundry) என்று ஒன்று அமைகிறது. இந்த உற்பத்தி வாய்ப்பு எல்லையில், தாம் எப்பகுதியில் இருப்பது என்பது சமுதாயமே முடிவெடுக்க வேண்டிய ஒன்று. இக்கருத்தை ஒரு வரைபடத்தின் உதவிகொண்டு விளக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு சமுதாயம் டிராக்டரும் அரிசியும் உற்பத்தி செய்கிறது. இது, வரைபடத்தில் இரு அச்சுகளில் காட்டப்பட்டுள்ளது. இவ்வரைபடம் X அச்சில் அரிசியையும் Y அச்சில் எந்திரக் கலப்பை (Tractor)யையும் காட்டுகிறது. எந்திரக் கலப்பையையும் அரிசியையும் ஒரே அளவில் உற்பத்தி செய்ய முடியாது. சமுதாயம் உற்பத்தி வாய்ப்பு எல்லையை ‘d’ என்ற புள்ளியில் வரையறை செய்கிறது என்று கொண்டால், அப்போது 9 எந்திரக் கலப்பைகளும் 6 டன் அரிசியும் வரைபடம் கிடைக்கும். மிகுதியான அளவில் அரிசி தேவைப்படின், எந்திரக் கலப்பை உற்பத்தியைக் குறைக்க வேண்டி வரும். இப்பலதிறப்பட்ட சேர்ப்பின் புள்ளிகளை ஒன்று சேர்த்தால், கிடைப்பது உற்பத்தி வாய்ப்பு எல்லைக்கோடு. எந்தப் புள்ளியில் சமுதாயம் தன் உற்பத்தி அளவை வரையறை செய்யும் என்பது, அந்தச் சமுதாயத்தின் தேவைகளைப் பொறுத்தது. உற்பத்தி வாய்ப்பு எல்லைக் கோட்டின் திசை மாற்றத்தைக் கொண்டு சமுதாயத்தின் வளர்ச்சியைக் குறிப்பிடலாம். எடுத்துக்காட்டாக, மேலே காட்டிய வரைபடத்தில் உற்பத்தி வாய்ப்புக் கோடு வலப்புறம் நகர்கிறது என்றால், அந்தச் சமுதாயம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறுகிறது என்பது பொருள். இந்த எல்லைக்கோடு, உற்பத்திக் காரணிகள் எவ்வாறு, எந்த அளவில், தேவையான பண்டங்களுக்கு ஏற்பப் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிவிக்கிறது. சமுதாயத்தின் உடனடித் தேவை டிராக்டர்தான் என்றால், இருப்பில் இருக்கும் காரணிகள் டிராக்டர் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும். அரிசியின் உற்பத்தி அப்பொழுது குறையும். இவ்வாறு எப்பொருள் எந்த அளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பது, அச்சமுதாயத்தின் அரசியல் அமைப்பைப் பொறுத்தது. முதலாளித்துவம் அமைந்த தனியுடைமை நாடாக இருப்பின், தனி மனிதனின் தேவைகள் முதற்கண் நிறைவு செய்யப்படலாம். சமதருமக் கோட்பாட்டில் எழுந்த சமுதாயம், சமூகத் தேவைகளை நிறைவு செய்வதில் உற்பத்தியைக் கொண்டு செல்லலாம். இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், வறுமைக் கோட்டிற்கு கீழ்உள்ள மக்களை உய்விக்க வள ஆதாரங்கள், பெருமளவில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இலவசமாகக் குழந்தைகளுக்கு உணவு அளிக்கப்படுகிறது என்றால், பெருமளவு வள ஆதாரங்கள் இப்பணிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை, இதனால் பிற துறைகளுக்குப் போதிய அளவு உற்பத்திக் காரணிகள் இல்லாமற் போகலாம். ஆனால் சமுதாயத்தின் நிலை, இத்தகைய செயல்களுக்கு முதலீடம் கொடுக்கத் தூண்டுகிறது. தனியுடைமை நாடுகளில் ஆதாய நோக்கு, உற்பத்திக் காரணிகளின் ஒதுக்கீட்டுக்கு அடிப்படையாக அமைகிறது. பொதுவுடைமை நாடுகளில் உற்பத்திக் காரணிகள், சமுதாயத் தேவைக்கேற்பத் தனி மனிதனின் விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காமல், ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. எந்த நாட்டின் அரசியல் கோட்பாடு சமூக நலனைத் தனது எல்லையாகக் கொண்டுள்ளதோ அந்த நாட்டில், அருமை மிக்க வள ஆதாரங்கள், ‘உரிமம்’ (Licence), பங்கு முறை (Quota) ஆகியவற்றைப் பின்பற்றி ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அருமைப் பண்டங்களின் பங்கீட்டை நுகர்ச்சிப் பிரிவில் ஆய்ந்துகாணின் உற்பத்தியில் உருவாகின்ற பண்டங்கள், செல்வம் மிகுந்த நாட்டிலும் வறுமை மிகுந்த நாட்டிலும் போதுமானவையாக இல்லை. ஆகவே, பண்டங்கள் அருமையாகிப் பங்கீடு தேவையாகிறது. அருமைப் பண்டங்களைப் பங்கீட்டு முறையின்றி அப்படியே அங்காடியில் விற்பனைக்கு விட்டு விட்டால், வாங்கும் திறன் (பணம்) உடையோர் மிகுந்த விலை கொடுத்து வாங்குவர். ஏன் மிகுந்த விலை கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுவது இயல்பு. அருமைப் பொருளாயினும் எளிதாகக் கிடைக்கும் பொருளாயினும் உற்பத்திச் செலவிற்கு ஏற்ப விலை வரையறுக்கப்பட வேண்டும். ஆனால், அங்காடியில் காணப்படும் அளப்பரிய தேவையால், விலை செயற்கையாக உயர்த்தப்பட்டு, மிக்க விலை கொடுப்பவர் கையில் போய்ச் சேருகிறது. இந்நிலையில் கறுப்பு அங்காடி முறை செயற்படத் தொடங்குகிறது. இக்கறுப்பு அங்காடி முறையினால், வறியவர் அருமைப் பண்டங்கள் கிட்டாது தவிப்பர். அருமைப் பண்டங்களை ‘முன்வருவோர் முன் பெறுவர்’ என்னும் முறையில் பங்கீடு செய்தால் இனம், மொழி, மதம் போன்ற உணர்வுகளால் உந்தப்பட்டுப் பின் வருவோரையும் முன்வருவோராகக் கொள்ளுதல் கூடும். இக்குறைபாட்டினை இம்முறையினின்று மாற்றிவிட முடியாது. இதனால், அரசு தானே அருமைப் பண்டங்களைப் பகிர்ந்தளிக்கிறது. பெரும்பாலான நாடுகளில், இன்று நல்ல முறை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுச் செயற்பட்டு வரும் சிறந்த பங்கீட்டு முறை, நியாயவிலைக் கடைகளின் மூலம் உருவாகிறது. இக்கடைகளில் விலைகள் வரையறை செய்யப்பட்டனவாகவே இருக்கும். ஒரு குடும்பத்தின் அளவிற்கேற்பப் பண்டங்களின் அளவும் வரையறை செய்யப்படுகிறது. வாழ்விற்கு இன்றியமையாத உணவுப் பண்டங்கன் பெரும்பாலும் இவ்வழியில் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. மக்களின் நலனைத் தம் குறிக்கோளாகக் கொண்டுள்ள அரசுகள், பிற பண்டங்களையும் தம் பொறுப்பில் வைத்துள்ளன. எடுத்துக்காட்டாக, தமிழக வீட்டு வசதி வாரியத்தைக் கூறலாம். இவ்வமைப்பு வீட்டு வசதி வேண்டுவோருக்குக் குறைந்த செலவில் தவணை முறையில் ஆதாய நோக்கின்றி உதவி அளித்து வருகிறது. குடிசைவாழ் மக்கள் தங்கள் வீட்டுத் தேவையை வருவாயைக் கொண்டு நிறைவு செய்ய முடியாதவர்களாய் இருப்பதால், அரசே பண ஈடு கொடுத்து அவர்களுக்கு வீட்டு வசதியை அளிக்கிறது. மனித நலனைக் காக்கும் அரசியலமைப்பு, ஒரு குறிப்பிட்ட பண்டங்களின் நுகர்வு ஒரு நிலைக்குக் கீழே போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அத்தகைய பண்டங்கள் பெரும்பாலும் அருமைப் பண்டங்களாகவே இருக்கின்றன. கல்வியில் பெரும்பாலான மக்கள் பின்தங்கிவிட்டால், நாட்டின் வளர்ச்சி தடைப்படக் கூடும். ஆகவே, இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. இதையும் ஒதுக்கீடு என்றுதான் சொல்லவேண்டும். வளம் படைத்தோர் மட்டும் கல்விச் செல்வத்தை நுகராமல் பலருக்கும் அது பகிர்ந்தளிக்கப்படுகிறது. இவ்வாறே, மருத்துவ வசதியும் அவ்வசதி கிடைக்கப் பெறாத சிற்றூர்களிலும் கிடைக்கும் வகையில், அரசு வழி வகுத்துள்ளது. இந்தகைய ஒதுக்கீட்டு முறையின் நோக்கம் எக்குறிக்கோளுக்காக அது செயற்படுத்தப்படுகிறதோ அதனை அடைவதேயாகும். பயனுள்ள வழியில் பங்கீடு முறைகள் செயற்பட வேண்டுமாயின், சமுதாய அமைப்பும் அரசியல் கூறுபாடுகளும் மனிதனின் மனப்பாங்கும் தன்னலத்தைப் பெரிதும் பாராட்டாமல் சமுதாய நீதியை நிலை லநிறுத்த அடிகோலுவதாக அமைய வேண்டும்.நே.எஸ்.டே. துணை நூல்கள் Left Wich., “A Basic Framework for Economics,” Business Publications INC, Texas, 1980. Hunt E.K., & Howard, J. Sherman., ‘Economics–An Introduction to Traditional and Radical Views’ Harper & Row Publishers, New York, 1978.