இனக்குழு அறிவியல்
iṉakkuḻu aṟiviyal
மொழிக்கும் பண்பாட்டின் பிற பகுதிகளுக்குமிடையே நிலவிவரும் தொடர்பினைப் பற்றிய ஆய்வு, நெடுங்காலமாகவே மானிடவியலாளர்களின் கவனத்தை ஈர்த்து வந்துள்ளது.
மொழிக்கும் பண்பாட்டின் பிற பகுதிகளுக்குமிடையே நிலவிவரும் தொடர்பினைப் பற்றிய ஆய்வு, நெடுங்காலமாகவே மானிடவியலாளர்களின் கவனத்தை ஈர்த்து வந்துள்ளது. இதனால், முகிழ்த்த ஒரு மானிடவியற் பிரிவே இனக்குழு அறிவியல் (Ethnoscience) எனப்படும். சில மானிடவியல் கோட்பாட்டினர் பண்பாட்டில் மொழி வகிக்கும் உறுதியான இடத்தை விளக்கவும் முயற்சி செய்துள்ளனர். ‘ஒருவன் தாய்மொழியினுடைய இலக்கணமும் பொருளளின் அமைப்பும் அவனுடைய சில சிந்தனைக் கோலங்களை உறுதிப்படுத்துகின்றன’ என்னும் சப்பீர் ஒர்புக் (Sapir Whorf) கோட்பாட்டினை இதற்குச் சான்றாகக் கூறலாம். எந்த ஒரு தனி மனிதனாலும் தன் மொழி கொண்டு இயற்கையினை முழுவதும் விருப்பு வெறுப்பின்றி விளக்க இயலாது என்று ஒர்பு கூறியுள்ளார். தன்னுரிமையுடன் ஒருவன் சிந்திக்கும்போது சிலவகை விளக்கங்களால் தடை செய்யப்படுகிறான். எனினும், மொழி, பண்பாடு ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களுள் பலர் ஒர்பின் சுருத்தை முழுமையாக மறுக்கும் நிலை இப்போது காணப்படுகிறது.
அண்மைக் காலங்களில், அமைப்பியல்சார் மொழியியல் (Structural Linguistics) பற்றி நன்கறிந்த மானிடவியல்சார் மொழியியலார், மொழிப் பரப்புக்குப் புறம்பேயும் மொழியின் அமைப்பினை விளக்கும் முயற்சியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர். இதுவே இனக்குழுவியல் பொருளின் விளக்க விரிவுக்குக் (Semantic Description) காரணமாகும். இத்தகைய கோட்பாட்டினர், இனக்குழுலியல் (Ethnography) என்பது வெறும் விளக்கவுரை என்னும் கூற்றை ஏற்க மறுக்கின்றனர். இதற்கு மாறாக இனக்குழுவியல் உண்மையான கோட்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பொதுவாக, இவ்வணுகுமுறையைக் கொண்ட பரப்பே இனக்குழு அறிவியல் எனக் கூறப்படுகிறது. இது ‘புதுஇனக் குழுவியல்’ (New Ethnography) எனவும் சொல்லப்படுகிறது. இது இனக்குழுவியலில் நம்பும் நிலை (Reliability), ஏற்புடைமை (Validity}, மிகு விளக்கம் (Exhaustiveness) ஆகியவற்றைக் கொண்டுள்ள மானிடவியல் துறையின் பல்வேறு அணுகுமுறைகளை வளம் பெறச் செய்யும்.
இந்தத் துறைத் தொடர்பாகப் பொருளன் பகுதி (Semantic Domain) என்னும் சிறப்புச் சொல் வழக்கொன்று தோன்றியுள்ளது. பிற தொகுதிகளிலிருந்து மாறுபடும் வண்ணம் தமக்கே உரித்தான சில பண்புகளைக் கொண்ட பொருள்களின் வகையினை இச்சொற்றொடர் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, ‘இருக்கை’ என்பது நாற்காலிகள், சாய்விருக்கைகள், சாய்வு மேடைகள், மேசைகள் ஆகியவற்றைக் கொண்டதாகும். இதில் ‘சாம்பர்’ மான் (Sambar) ஆகியவற்றைச் சேர்க்கவியலாது. படிநிலை முறையில் இத்தொகுதியினைப் பல உட்பிரிவுகளாக வகைப்படுத்தலாம். தாம் ஆராயும் மொழிகளின்கண் உள்ள அமைப்புமுறைக் கொள்கை நெறிகளையும் வகைபாட்டினையும் ஆராய்ந்து வெளிப்படுத்துதலே இனக்குழு அறிவியலாளரின் பணியாகும். ஏனெனில், பட்டறிவுகளை வகைபாடு செய்யும் நிலையில், ஒவ்வொரு பண்பாடும் ஏனைய பிற பண்பாடுகளிலிருந்து மாறுபடுகிறது எனக் கருதப்படுகிறது. இதனால், ‘இனக்குழு அறிவியல்’ என்பது ஒரு குறிப்பிட்ட பண்பாட்டிற்குரிய புலமையையும் அறிதல் தன்மையையும் (Cognition) குறிக்கக் காணலாம். இங்ஙனம் சில பண்பாட்டிடையே (Cross–Cultural) வரன் முறைகளுக்கு மாறாகப் பண்பாட்டுப் பட்டதிலிலிருந்து முகிழ்த்த வகைபாடுகள் (Taxonomies) விவரிக்கப்படுகின்றன. மக்கள் தங்களுடைய பட்டறிவு உலகத்தைப் பற்றிப் பரக்கப் பேசும் முறை, அவர்கள் அவற்றை எங்ஙனம் பொருள் கொள்கின்றனர். அவை நிலவுவதை எவ்வாறு புலப்படுத்துகின்றனர் என்பனவற்றை இனக்குழு, அறிவியலாளருக்குத் தெளிவுபடுத்துகிறது. தூண்டுதலால் விளையும் மறுமொழி பற்றிப் பேசும் உளவியல் (Stimulus–Response Psychology) போலன்றி, இனக்குழுவியல் ‘பண்பாட்டுக்குத் தக்க நடத்தைக்குரிய விதியினை வரையறுத்துள்ளது’ என்கிறார் பிரேக்கு (Frake). மேலும், ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டுள்ள பண்பாட்டைச் சார்ந்த மக்களின் மனங்களில் இழையோடும் எண்ணங்களையும் உய்த்துணர வேண்டும் என்றும் இவர் அறிவுறுத்துகிறார்.
இசுடீபன் தைலர் (Stephen Tyler) இனக்குழு அறிவியலைப் பற்றிக் கூறும்போது ‘பொதுமையானதும் மறு வடிவமானதுமாகிய விளக்க முறைகளையும், பொருத்தமான நடத்தையின் எதிர்பார்ப்புகளை முன்னமே கணக்கிடும் வல்லமை வாய்ந்த விளைவுகளைத் தன்னகத்தே கொண்டதுமாகிய இனக்குழுவியலிலிருந்து பெறப்பட்ட பண்பாட்டின் காட்சியே இங்கு வெளிப்படையாக்கப்பட்டுள்ளது’ என்கிறார். மேலும், கூர்தல் வழியே மறு கட்டமைப்புச் செய்யப்பட்ட வகைபாடு, பகுப்பாய்வுக் கூறுகள் ஆகியவை உள்ளுறையாக இயங்குகின்றன என்றும் கூறுகிறார். அதாவது இப்புதுமுறை இனக்குழுவியல், பண்பாடுகளைப் புற உலகிலிருந்து காணுதற்கு மாறாக, உள்ளிருந்து ஆராய்ந்து புறஉலகைக் காணச் செய்கிறது. இதனால், விளக்கும் கூறுகள் மானிடவியல் துறையின் சொற் கோவையிலிருந்து (Lexicon of Anthropology) பெறப்படாமல் ஒரு பண்பாட்டின் பொருத்தமான பண்புகளிலிருந்தே அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றன என்று இதன் பரப்பை விரிவுபடுத்திக் கூறுகிறார்.
இப்பின்னணியில் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ள இனக்குழு அறிவியலார், எடுகோள்களும் கோட்பாடுகளும் உருப்பெறுதல் ஒப்புநோக்கு ஆராய்ச்சியின் எல்லைக்குள் வரையறுக்கப்படக் கூடாது என்பதில் உறுதியுடன் நிற்கின்றனர். இந்நிலையில் இனக்குழுவியல் அளவிலேயே எடுகோள்களை உருவாக்கும் நோக்கத்தில் எழுந்ததே இனக்குழு அறிவியல்; அதோடு மட்டுமன்றி, பண்பாட்டாளர்களின் அறிதல் உலகு, (Cognitive World) ஆய்வு ஆகியவை பற்றிப் புரிந்து கொள்ளவும் வகைப்படுத்தவும் மொழியியல் வெளிப்பாடுகளைப் பயன்படுத்தலே இனக்குழு அறிவியல் அணுகுமுறையின் முதன்மையான பண்பாகும். அதே காலத்தில் சொந்தப் பண்பாட்டின் (Native Culture) மீது எவ்வித வெளிப்புற வகைபாட்டுக் கூறுகளையும் (External Catagories) திணிக்காமலிருக்க ஓர் உறுதியான முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறாகச் சொந்தப் பண்பாட்டின் சொல் வழக்கு அமைப்புகளுக்கும் வகைபாட்டு முறைகளுக்கும் இங்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுவதைக் கண்கூடாகக் காணலாம்.
பல்வேறு பண்பாடுகளிலுள்ள உறவுமுறை அமைப்புகள், நிறச் சொல் வழக்குகள் (Colour Terminologies), தாவரங்கள், விலங்குகள் முதலானவற்றின் வகைபாடுகளை இனக்குழு அறிவியல் கோணத்திலிருந்து பரவலாக ஆராய ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இனக்குழு அறிவியல் முறைகளால், இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ள ஆய்வுப் பரப்புகளைக் காணும்போது, தனது ஆராய்ச்சிக்குச் சொல்வழக்கு அமைப்புகளையே இனக்குழு அறிவியல் சார்ந்துள்ளது என்பது தெளிவாகும். வி.சு.
துணை நூல்
Dufbin, Marshall, Cognitive Anthropology, In J.J. Honigmann (ed.) Hand book of Social and Cultural Anthropology, Rand McNally & Co., Chicago, 1973.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 575)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4r89cq5j/
தமிழ்“இனக்குழு அறிவியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4r89cq5j/APA
Oliyon Research. (2026). இனக்குழு அறிவியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4r89cq5j/MLA
"இனக்குழு அறிவியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4r89cq5j/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment