பெருங்கடல்களின் நீரியல்புகள் பற்றியும், அவற்றில் வாழும் எண்ணற்ற உயிரினங்கள் பற்றியும், ஆழ்கடலில் வாழும் வியத்தகு உயிரினங்கள் பற்றியும் ஆராயச் சில கடல் ஆய்வுப் பயணங்கள் ஆங்காங்கே நடைபெற்ற போதும், இங்கிலாந்து நாட்டின் தேம்ஸ் ஆற்றின் கழிமுகத்திலிருந்து 1872ஆம் நாள் கிளம்பிய H.M.S சாலஞ்சர் எனும் ஆய்வுக் கப்பல் உலகப் பெருங்கடல்களில் நடத்திய ஆய்வுப் பயணம் கடலறிவியலில் பெருஞ்சாதனையாகும். சுமார் மூன்றரை ஆண்டுக் காலம் தொடர்ந்து பயணம் செய்த சாலஞ்சர், பெருங்கடல்களில் கடந்த தொலைவு 68,890 கடல் மைலகளாகும். ஆய்வுப் பயணம். இங்கிலாந்து மன்னரின் கப்பற்படையிலிருந்த போர்க் கப்பலான 2306 டன் எடையுடைய சாலஞ்சர், அதிலிருந்த பீரங்கிகள் அகற்றப்பட்டு, ஆய்வுக் கப்பலாக மாற்றப்பட்டது. பாய் மரக் கப்பலான சாலஞ்சருக்கு, நீராவி ஆற்றலும் உண்டு. இந்த ஆய்வுக் கப்பலில், ஓர் உயிரியல் ஆய்வுக் கூடமும், வேதியியல் ஆய்வுக் கூடமும், குறிப்பு நூலகமும் அமைக்கப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாகியிருந்த சிறந்த ஆய்வுக் கருவிகள் அனைத்தும் இக்கப்பலில் இடம் பெற்றன. மேலும், கடல் பயணக் கருவிகள், ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு ஏற்ற மாதிரி நீர்க் குப்பிகள் (water samplers) ஆழ்கடலின் அடியிலிருந்து மண் வளம் மற்றும் உயிரினங்களை எடுப்பதற்கான கருவிகள், கடல்களின் ஆழங்களை வெவ்வேறு இடங்களில் அறிவதற்கான நீளம் மிகுந்த ஆழமறி கயிறுகள் யாவும் இக்கப்பலில் இடம் பெற்றன. வல்லுநர் குழு. சாலஞ்சர் பெரும் பயணம் தொடங்கிய போது, கப்பலின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தியவர் காப்டன் ஜார்ஜ் எஸ். நேர்ஸ் ஆவார். அவருக்குப் பின், கப்பலின் தலைமைப் பொறுப்பை ஏற்றுத் தொடர்ந்து இப்பயணத்தை நடத்தியவர் காப்டன் ஃப்ராங்க் டி. தாம்சன் ஆவார். ஆய்வுப் பயண வல்லுநர் குழுவுக்குத் தலைமை தாங்கிச் சென்றவர் சர். சார்லஸ் வைவில் தாம்சன் ஆவார். அக்குழுவில் இடம் பெற்ற, குறிப்பிடத்தக்க கடலறிவியலாளர் ஐவர். அவர்களில், டாக்டர் ரூடால்ஃப் வான் வில்மோசும், ஜான் மர்ரே, எச்.என்.மோஸ்லே, ஜி.ஜி.ஒயில்டு ஆகிய நால்வரும் கடலுயிரியல் ஆய்வாளர்களாவர். ஜே. ஒய். பியூக்கனன் என்பார் மட்டும் வேதியியலாளர் ஆவார். ஆய்வுமுறை. பெருங்கடல்களில் மொத்தம் 362 இடங்களில் மையங்களைத் தெரிந்தெடுத்து, ஒவ்வொரு மையத்திலிருந்தும் மிகுதியான ஆய்வுத் தகவல்களை முதன் முதலாக எடுத்தது சாலஞ்சர். அவற்றில் கடலின் அடிப்பரப்பில் வெப்பநிலை, மேற்பரப்பின் வெப்ப நிலை, இவற்றின் இடைப்பட்ட கடற்பரப்பின் வெப்ப நிலை, வெவ்வேறு நீர் மட்டங்களிலுமிருந்து நீரின் மாதிரிகள், வெவ்வேறு நீர்மட்டங்களில் வாழும் விந்தை மிகு உயிரினங்கள் என்பன சிலவாம். மேலும், கடலின் வெவ்வேறு அடித்தளப் பகுதிகளிலிருந்து மண் மாதிரிகள் முதன்முதலாகக் கடலறிவியல் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன. அவற்றைப் பற்றிய குறிப்புகளும், விளக்கப் படங்களும் அவ்வப்போது தயார் செய்யப்பட்டு, முழு விவர ஆராய்ச்சிக்காக உயிரினங்கள், மண் மாதிரிகள் யாவும் முறையாகப் பாடம் செய்யப்பட்டன. ஆய்வு முடிவு. பெருங்கடல் ஆய்வுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, 1876 இல் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஸ்பிட்ஹெட் எனும் இடத்துக்குத் திரும்பியது சாலஞ்சர். மூன்றரை ஆண்டுகளாக சர், வைவில் தாம்சனின் தலைமையில், பெருங்கடல்களிலிருந்து ஆராய்ச்சிக்காக எடுக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களையும், பல ஆய்வுக் குறிப்புகளையும், புள்ளி விவரங்களையும், பகுத்தறியும் பணியும், அவற்றின் முடிவுகளை ஆய்வுப் பயண அறிக்கைகளாக வெளியிடும் பணியும், எடின்பரோ நகரில் நிறுவப்பட்ட சாலஞ்சர் ஆராய்ச்சி அலுவலகத்தில் 1876இல் தொடங்கின. உலகெங்குமிருந்து பல ஆராய்ச்சி வல்லுநர்கள் வருகை தந்து இப்பணியில் இருபது ஆண்டுக் காலம் ஈடுபட்டுச் சாலஞ்சர் ஆய்வுப் பயண அறிக்கைகளை ஐம்பது தொகுதிகளாக வெளியிட்டனர். இன்றும் இவ்வறிக்கை நூல்கள் பெருங்கடலறிவியல் ஆய்வுகளுக்கு அடிப்படையாக விளங்குகின்றன. ஆய்வின் விளைவு. சாலஞ்சர் ஆய்வுப் பயணத்தின் விளைவாக 4700 புதிய கடல்வாழ் உயிரினங்கள் அறிவியல் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. சாலஞ்சர், பெருங்கடல்களில் எடுத்திருந்த புள்ளி விவரங்களைப் பகுத்தறிந்த போது, ஆழ்கடலில் பல ஆழமான மடு இருப்பது முதன் முறையாகத் தெரிய வந்தது. அவற்றுள் வட பசிபிக் பெருங்கடலில் மேரியானா தீவுகளுக்கு அருகே, ஆழ்கடலில் உள்ள சுமார் 8000 மீ. ஆழமுள்ள மடுவே மிகவும் ஆழமானதாகும். பெருங்கடல்களின் அடியில் செல்லும் நீரோட்டங்கள் பற்றியும், வெவ்வேறு நீர் மட்டங்களில் உள்ள நீரின் வெப்ப நிலை பற்றியும் சாலஞ்சர் ஆய்வுப் பயணம் தெளிவான அறிக்கைகளை வெளியிட்டு, அவற்றின் மூலம் கப்பற்பயணங்கள் இடையூறில்லாமல், பாதுகாப்பான கடல் வழியில் செல்ல வழி செய்தது. உலகிலேயே முதன்முதலில் அண்டார்க்டிக் வட்டத்தைக் கடந்த நீராவிக் கப்பல் என்ற பெருமை சாலஞ்சருக்கு உண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டில், பெருங்கடல் ஆய்வுப் பயணத்தைத் தொடங்க, சர். வைவில் தாம்சன் தலைமையிலான கடலறிவியலாளர் குழுவுக்கு இங்கிலாந்து அரசு அனுமதி அளித்திருந்த காலத்தில், அரசாங்கப் பணத்தை இவ்வாறு வீணே செலவு செய்யலாகாது என்று ஒரு சிலர் எதிர்த்து வந்தனர். ஆனால், இறுதியில் இக்கடலறிவியலாளர்களின் ஆராய்ச்சிகளின் விளைவாக, முன்னரே இந்த ஆய்வுப் பயணத்துக்காக இங்கிலாந்து அரசு மதிப்பிட்டிருந்த செலவுத் தொகையை விடப் பெருமளவு வருவாயை இந்த ஆய்வுப் பயணம் இங்கிலாந்து அரசுக்கு ஈட்டித் தந்தது. —இரா.நடராஜன் நூலோதி. R.C. Cowen, Frontiers of the Sea, Doubleday & Co., Inc. New York, 1960.