எழுநூறு இட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றி இன்றும் வாழ்ந்து வரும் பாலூட்டிகள் பல உயரிய பண்புகளைக் கொண்ட விலங்கின வரிசையே (Order) உயர்பாலூட்டிகள் (Primates) ஆகும். உயர்பாலூட்டிகளுள் மனிதன் (Homo sapien), வாலில்லாக் குரங்குகள் (Apes), குரங்குகள், தேவாங்கு (Loris), பெருவிழியுடைய தேவாங்கு வகை (Tarsier), மடகாசுகர் குரங்கு வகை (Lemur) முதலானவை குறிப்பிடத்தக்கனவாகும். உடல்சார் மானிடவியல் (Physical Anthropology) மனிதப் படி மலர்ச்சியை (Human Evolution) முதன்மையாகக் கொண்டுள்ளதால் மனிதன் இடம்பெற்றுள்ள வரிசையைச் சேர்ந்த பிற விலங்குகளும் முதன்மையாக ஆராயப்படுகின்றன. உடல்சார் மானிடவியலார் உயர்பாலூட்டிகளின் படி மலர்ச்சி, நடத்தை முறை, உடற்கூறு முதலான அனைத்துப் பிரிவுகளையும் விரிவாக ஆராயும் பொருட்டுப் பல அணுகு முறைகளை வகுத்துக் கொண்ட இத்துறை உயர்பாலூட்டியியல் (Primatology) எனக் கூறப்படும். விலங்கினத்தில் உயரிய நிலையிலுள்ள மனிதன், மனிதனை ஒத்த ஆப்பிரிக்க வாலில்லாக் குரங்கு (Chimpanzee), ஆப்பிரிக்கப் பெருங்குரங்கு வகை (Gorilla) ஆகியவற்றோடு ஒப்புமைகளை மிகுந்த அளவிலும் பெருங்கைகளையுடைய ஆப்பிரிக்க வாலில்லாக் குரங்கு (Gibbon), மலாய் மொழியில் காட்டு மனிதன் எனக் கூறப்படும் வாலில்லாக் குரங்கு (Orangutan) ஆகியவற்றோடு குறைந்த அளவிலும் தேவாங்கு, பிற கீழின உயர் பாலூட்டிகள் முதலானவற்றோடு மிகக் குறைந்த அளவிலும் பெற்றுக் காணப்படுகின்றான். இருப்பினும், மனிதன் கொண்டுள்ள சிறப்புப் பண்புகளான நுண்ணறிவு, நேரான நடை, கூட்டுறவு மிகுந்த சமூக வாழ்க்கை முதலானவை கீழின உயர்பாலூட்டிகளின் பண்புகளிலிருந்து விரிந்தனவாகும். இதைப்போன்றே உயர்பாலூட்டிகளின் வரிசையில் மேல் நிலையிலுள்ள மனிதன் முதல் கீழ்நிலையிலுள்ள மரமூஞ்சூறுகள் (Tree Shrews) வரை அனைத்தும் உயர்பாலூட்டிகளுக்கெனப் பொதுவான பல பண்புகளைக் கொண்டுள்ளன. அவை: 1. கால்களிலும் கைகளிலும் பற்றும் தன்மையுடைய விரல்களைக் (Prehensile Fingers) கொண்டுள்ளன. சில உயர்பாலூட்டிகள் மரவாழ் வாழ்க்கைக்குத் தகுந்தவாறு எதிர்ப்புறம் வளைந்த விரல்களையும் (Opposable Digit) கொண்டுள்ளன. 2. உயர்பாலூட்டிகள் தங்கள் விரல்களில் தட்டையான நகங்களைக் கொண்டிருக்கும். இதனால் கையினாலும் கால்களினாலும் பற்றும் தன்மை மிகுதியாகிறது. 3. நன்கு வளர்ந்த காறை எலும்பு (Clavicle) அல்லது கழுத்தெலும்பு (Collar Bone) இந்த விலங்கினத்தில் காணப்படுகிறது. 4. சைவ உணவிற்கும் அசைவ உணவிற்கும் ஏற்ற வகையில் உயர்பாலூட்டிகளின் பற்களமைப்பு உள்ளது. இவ்விலங்குகன் தம் வாழ்க்கைக் காலத்தில் குறைந்தது ஏதாவதொரு காலத்தில் வெட்டுப்பற்கள் (Incisors), கோறைப்பற்கள் (Canines), பின்கடைவாய்ப் பற்கள் (Molars) ஆகிய மூன்று பல்வகைகளையும் கொண்டிருக்கும். 5. உயர்பாலூட்டிகள் திட்பப்பார்வையைக் (Steroscopic Vision) கொண்டவை. 6. உயர்பாலூட்டிகளின் மூளை வளர்ச்சி பெற்றது; உடல் அளவிற்கு ஏற்பப் பெரிதானது; பொதுவாக நுண்ணறிவு கொண்டது. 7. சில கீழின உயர்பாலூட்டிகளைத் தவிர்த்துப் பெரும்பான்மையான உயர்பாலூட்டிகள் குறிப்பிட்ட காலத்தில் ஒரு கால்வழியினரை மட்டும் பெற்றெடுப்பவையாகும். பொதுவாக ஓர் இணை முலைகளையுடையவை. உயர்பாலூட்டிகளை முதன்மையான இரண்டு துணை வரிசைகளாகப் (Suborders) பிரிக்கலாம். மனிதன் இடம் பெறும் துணை வரிசை மனிதனை ஒத்த விலங்கினம் (Anthropoidea) என்று கூறப்படும். இந்தத் துணைத் தொகுதியில் குரங்குகளும் வாலில்லாக் குரங்குகளும் அடங்கும். இதனால் இந்த விலங்கினம் ‘மேலின உயர் பாலூட்டிகள்’ (Higer Primates) வரிசை என்றும் கூறப்படும். இரண்டாம் துணை முற்காலக் குரங்கினம் (Prosimi–Premonkeys) எனக் கூறப்படும். இப்பிரிவில் பெருவிழியுடைய தேவாங்கு வகை, மடகாசுகர் குரங்கு வகை முதலானவை சேரும். இந்த உள்வரிசையிலுள்ள குரங்கு வகைகள் வளர்ச்சியுறாச் சில பண்புகளைக் கொண்டுள்ளமையால் இவை கீழின உயர்பாலூட்டிகள் (Lower Primates) எனக் கூறப்படும். முற்காலக் குரங்கினம் இந்தத் துணை வரிசையைச் சேர்ந்த விலங்குகள் சிறிய உருவின; பழைய உலகக் காடுகளில் வாழ்வன. இவ்விலங்குகள் படி மலர்ச்சிக் காலத்தில், குறிப்பாகப் பத்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவிலும் பரவலாக பரப்பிலும் புத்துலகப் வாழ்ந்தன. இப்பகுதிகளில் வாழ்ந்த முற்காலக் குரங்கினம் ஒரு சில பெரிய நாயைப் போன்று காணப்பட்டது. இன்று உயிர் வாழும் இவ்வினம் நடுத்தர மற்றும் சிறிய நாய்களின் உருவ அளவில் காணப்படுகிறது. உடற்கூற்று அளவில் இவ்வினத்தின் விலங்குகள் தொன்மையாகக் பண்புகளைப் காணப்படினும் உயர்பாலூட்டிகளின் பெரிதும் கொண்டுள்ளன. முற்காலக் குரங்கினத்தை மூன்று துணைவரிசைகளாகப் (Infraorders) பிரிக்கலாம். முதல்வகை மடகாசுகர்க் குரங்கு (Lemuriforms) வகையாகும். இவ்வின விலங்குகள் இன்று மடகாசுகர்த் தீவிலும் தென்கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரைக்கப்பாலும் இதனை ஒட்டிய கொமோரோத் தீவுகளிலும் (Comoro Islands) வாழ்கின்றன; பல நிலப்பரப்புகளில் வாழும் பொருட்டுப் பலவகையான தகவமைப்புகளைப் பெற்றுள்ளன. பெரும்பாலான முற்காலக் குரங்கினங்கள் இரவுவாழ்விகளாகவும் (Nocturnal), மர வாழ்விகளாகவும் (Arboreal) உள்ளன. மடகாசுகர்க் குரங்கு வகையின் பல்வாய்பாடு 2–1–3–3–ஆகும். இருப்பினும் இவ்வகையின் ஒரு குடும்பமான நீண்ட முகமுடைய குரங்கு (Indridae) வகையின் பற்களமைப்பு மாறுபட்டது. இரண்டாம் துணை வரிசை தேவாங்கு வகை (Lorisiformes) ஆகும். இதில் இரண்டு குடும்பங்கள் உள்ளன. முதல் வகைக் குடும்பத்தைச் சேர்ந்த குரங்குகள் (Lorises) பொதுவாகச் செல்லும் காட்டுவாழிகளாகும். வெப்பமண்டல ஆப்பிரிக்காவிலும் தென் கிழக்கு ஆசியாவிலும் இவ்வினத்தவை பெரும்பான்மையாக வாழ்கின்றன. இரண்டாம் வகைக் குரங்குகள் (Galagos) பல தகவமைப்புகளுடன் வாழ்வவதால் இவற்றை ஆறு சிற்றினமாகவும் (Species) பகுப்பர். அனைத்துமே ஆப்பிரிக்காவில் வாழ்கின்றன. இவைகளின் பின்னங்கால்கள் நீண்டவை; வேகமாகத் தாவும் இயல்பின. முற்காலக் குரங்கினத்தின் மூன்றாம் துணை வரிசை பெருவிழிகளையுடைய தேவாங்கு வகை (Tarsiformes) ஆகும். இவை மலாய் முந்நீரகத்திலும் (Malay Peninsula) அண்டைய தீவுகளிலும் காணப்படுகின்றன. இவை இரவு வாழ்விகள்; உருவத்தில் சிறியன; கண்கள் பெரியவை; பின்னங்கால்கள் நீண்டவை; நீண்ட தூரம் தாவுந் தன்மையன. மேலின உயர்பாலூட்டிகள் இந்தத் துணைவரிசையில் குரங்குகள், வாலில்லாக் குரங்குகள், மனிதர் ஆகியோர் அடங்குவர். இந்தத் துணைவரிசையைச் சேர்ந்த விலங்குகளும் மனிதர்களும் அனைத்தும் பழைய உலகத்திலும் புத்துலகத்திலும் பரந்து காணப்படுகின்றன. முற்காலக் குரங்கின விலங்குகளைப் போலன்றி மனிதனை ஒத்த விலங்கினப் பிரிவைச் சேர்ந்த உயர்பாலூட்டிகளும் மேலின உயர்பாலூட்டிகளும் பல்வேறு நிலப்பகுதிகளில் வாழ்ந்தாலும் பெருமளவு மாறுபாடு கொண்டிராமல் உள்ளன. மனிதனை ஒத்த விலங்கினத்தைச் (Anthropoidea) சேர்ந்த உயர்பாலூட்டிகளைத் தட்டை மூக்கினம் (Platyrrhini) அல்லது புத்துலக உயர்பாலூட்டிகள் எனவும், நேர்மூக்கினம் (Catarrhini) அல்லது பழைய உலக உயர்பாலூட்டிகள் எனவும் இரண்டு துணை வரிசைகளாகப் பிரிப்பர். பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பிரிவுண்ட இக்குழுக்கள் உடற்கூற்றில் பல ஒத்த பண்புகளைக் கொண்டிருப்பினும் தனித் தனியாகவே வளர்ச்சி பெற்றன. மூக்குத் துளைகளின் அமைப்பில் உள்ள வேறுபாடே இக்குழுக்களை முதன்மையாக வகைப்படுத்தக் காரணமாகிறது. தட்டை மூக்கு விலங்குகளின் மூக்குத் துளைகள் அகன்று பக்கவாட்டில் திறந்திருக்கும். நேர்மூக்கு விலங்குகளின் மூக்குத்துளைகள் சற்றுக் குறுகிக் கீழ் நோக்கித் திறந்திருக்கும். பற்களின் வாய்பாட்டிலும் இரண்டும் வேறுபட்டவையாகும். தட்டைமூக்கின 2–1–3–3 அமைப்பையும், நேர்மூக்கின 2–1–2–3 அமைப்பையும் கொண்டவை. தட்டை மூக்குக் குரங்குகளைப் பொதுவாக புத்துலகக் குரங்குகள் என்றோ அமெரிக்கக் குரங்குகள் என்றோ கூறுவர். இவ்வினம் இரண்டு குடும்பங்களாகப் பிரிக்கப்படும்; முதல் குடும்பம் அமெரிக்க நிலப்பகுதியில் வாழும் மயிர் அடர்ந்த வாலுடைய சிறு குரங்கினம் (Callithricidae) ஆகும். இரண்டாம் குடும்பம் இரவுக் குரங்குகள் (Night Monkeys), ஊளையிடும் குரங்குகள் (Howler Monkeys), சிலந்திக் குரங்குகள் (Spider Monkeys), மயிரடர்ந்த குரங்குகள் (Wolly Monkeys), முகமூடிக் குரங்குகள் (Capuchin Monkeys), அணில் குரங்குகள் (Squirrel Monkeys), தென் அமெரிக்கச் சிறு குரங்கு வகை (Saki) முதலானவற்றை உள்ளடக்கிய குடும்பம் (Cebidae) ஆகும். நேர் மூக்கினக் குரங்குகள் இரண்டு உயர் குடும்பங்களாகப் (Super Families) பிரிக்கப்படும். பச்சைக் குரங்குகள் (Green Monkeys), கருப்பு வாலில்லாக் குரங்கு (Black Ape), நாய்முகக் குரங்கு (Baboon), நீண்ட வாலுடைய குரங்கு (Langur), நெடுநீள் மூக்குடைய குரங்கு (Proboscis Monkey) முதலானவற்றை உள்ளடக்கிய இக்குடும்பம் (Cercopithecoidea) ஒரு பிரிவாகும். இவை பழைய உலகக் குரங்கு வகையாகும். இவை தென்னாப்பிரிக்கா, சிப்ரால்டர் (Gibralter), தென்கிழக்கு ஆசியப் பகுதியின் கிழக்குப் பகுதி, சப்பான் (Japan) முதலான பகுதிகளில் வாழ்கின்றன. இரண்டாம் உயர்குடும்பத்தில் (Hominoidea) பெருங்கைகளையுடைய ஆப்பிரிக்க வாலில்லாக் குரங்குவகை (Gibbon), வாலில்லாப் பெருங்குரங்கு வகை (Siamang), மலாய்மொழியில் காட்டு மனிதன் எனக் கூறப்படும் வாலில்லாக் குரங்கு வகை (Orangutam), ஆப்பிரிக்கப் பெருங்குரங்கு வகை (Gorilla), மனிதனை ஒத்த ஆப்பிரிக்க வாலில்லாக் குரங்கு (Chimpanzee), மனிதன் முதலான அனைத்தும் இடம்பெறுகின்றன. முதலிரண்டும் கீழின வாலில்லாக் குரங்குகள் (Lesser apes) எனக் கருதப்படுகிறன. மனிதனைத் தவிர மற்றவை பெரிய வாலில்லாக் குரங்குகள் (Great Apes) எனப்படும். இந்த வகைப்பாடு உருவ அமைப்பின் அடிப்படையிலானதாகும். பழைய உலகுக் குரங்குகளும் புத்துலகக் குரங்குகளும் பல்வேறு அமைப்புகளில் வேறுபட்டிருந்தாலும் இவற்றிற்கிடையே ஒற்றுமைகளும் காணப்படுகின்றன. இதற்கு இணைப் படிமலர்ச்சியின் (Parallel Evolution) நிகழ்வே காரணமாகும். இந்த இரண்டு வகைக் குரங்குகளின் தனித்தனியான படிமலர்ச்சி வரலாறு குறைந்தது 40 மிலியன் ஆண்டுகளிலிருந்தே செயற்பட்டு வருவதாகும். கே.நி.