அரபு இலக்கியம்
arapu ilakkiyam
உலகின் தொன்மையான இலக்கியங்களுள் ஒன்றாகும்.
உலகின் தொன்மையான இலக்கியங்களுள் ஒன்றாகும். இது அகன்ற இலக்கியப் பரப்பினை உடையது; காலந்தோறும் புதுப்புது இலக்கிய வகைகளைப் பெற்று வளர்ந்து வரும் பெருமை சான்றது. மேலும், உலகெங்கும் வாழும் அரபியர் அரபியரல்லாதார் ஆகியோரால் வளர்க்கப்படுவதாலும், பேணிக் கற்கப்படுவதாலும் இம்மொழி இலக்கியம் உலகளாவிய இலக்கியமாக மிளிரும் சிறப்பினைப் பெற்று விளங்குகிறது.
இதன் தோற்றம் திட்டமாக வரையறுக்கப்படவில்லை. அரபுத் தீபகற்பத்தின் தென் பகுதியாகிய ஏமனிலிருந்து கிடைத்துள்ள கல்வெட்டுகள் சில கி.மு. 8–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இக்கல்வெட்டுகளின் எண்ணிக்கை மிகுதியும், இவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபு இனக்குழுக்களின் வரலாறும், இவற்றில் காணப் பெறும் அரபுமொழி நடையும் அரபு இலக்கியத்தின் தொன்மையைச் சுட்டிக் காட்டும் சான்றுகளாகத் திகழ்கின்றன. எழுத்து வடிவம் பெற்ற பழமையான அரபு இலக்கியங்கள் என்னும் வகையில், கி.பி. 5–ஆம் நூற்றாண்டில் வடக்கு அரேபியாவில் எழுதப்பட்ட பழமொழிகளும் கவிதைத் துணுக்குகளும் முதலிடம் பெறுகின்றன. எனினும் ‘முதன்முதலில் எழுத்து வடிவம் கொடுக்கப்பெற்றுக் கருத்தும் வடிவமும் சிதையாவாறு பேணிப் பாதுகாக்கப்பட்ட சிறப்பினையுடைய அரபு இலக்கியம்’ என்னும் பெருமை இசுலாமியர்களின் திருமறையாகிய குர்ஆனுக்கே உண்டு. இசுலாம் தோன்றுவதற்கு முன்னர்த் தோன்றிய அரபு இலக்கியங்கள், அரபு இலக்கிய வரலாற்றில் ‘அறியாமைக் காலம்’ (அல் சாகிலியா) சார்ந்தன எனக் குறிக்கப்படுகின்றன. இது கி.பி. 500 முதல் கிசுறத் ஆண்டு தொடங்கும் கி.பி. 622 வரை அமையும் 122 ஆண்டுக் காலப் பகுதியாகும். இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் வாய்மொழி இலக்கியங்களாக உலவி, இசுலாம் தோன்றிய பின்னர் எழுத்து வடிவம் பெற்றன.
தொன்மையான அரபுக் கவிதைகளை வடிவம், பொருள் ஆகிய அடிப்படையில் இரு வகைகளாகப் பகுக்கலாம். 2 அடி முதல் 200 அடி வரை அமையும் குறுங்கவிதைகள் (இரசுசு) முதல் வகையின. இயைபுத் தொடை பெற்ற ஒழுங்கான ஈரடிகள் கொண்டனவாகும். இனப் புகழ்ச்சி, அங்கதம், போர், காதல், கையறுநிலை ஆகியவற்றைப் பாடுபொருளாகக் கொண்டவை.
குறுங்கவிதை எழுதுவதில் வல்ல பெண் கவிஞர் பலர் இக்காலத்தில் வாழ்ந்திருந்தனர். இவர்களுள் கன்சா என்பவர் குறிப்பிடத்தக்கவர்.
இரண்டாம் வகையினவாகிய நெடுங்கவிதைகள் (கசீதா) 60 அடி முதல் 100 அடி வரையில் அமைந்தனவாகும். இவற்றின் முற்பகுதி (நாசிப்) பயணம் மேற்கொண்ட கவிஞன், தன்னுடைய காதலியின் அழகையும் பிரிவின் கொடுமையையும் தன்னைத் தொடர்வோருக்குச் சொல்வதாக அமைந்துள்ளது. அடுத்த பகுதி ஒட்டகம், குதிரை போன்றவற்றின் வருணனையாகவும் இயற்கைப் புனைவாகவும் அமைந்துள்ளது. இறுதிப் பகுதி கவிஞனின் பெருமையைப் புலப்படுத்துவதாகவோ பாலைநில வாழ்க்கையை விளக்குவதாகவோ புகழ்ந்து பாடப் பெறும் வள்ளலின் பெருமையைக் குறிப்பிடுவதாகவோ அமைந்துள்ளது.
இக்காலப் பகுதியைச் சேர்ந்த இலக்கியங்கள் கவிதைத் தொகுப்புகள் (திவான்) எனவும், தொகை நூல்கள் எனவும் இருவகையில் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. கவிதைத் தொகுப்புகள் ஒரு புலவரின் கவிதைத் தொகுப்புகள் எனவும், ஓரினக்குழுப் புலவர்களின் கவிதைத் தொகுப்புகள் எனவும் இருவகையாகப் பகுக்கப்பட்டுள்ளன. நாபிகா, அந்தாரா, தராபா, சுகேர், அல்கமா, அம்ருல் கயசு என்னும் ஆறு கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு நூல்களும் குதலிய்யா இனக்குழுவின் கவிதைத் தொகுப்பு என்னும் நூலும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
தொகைநூல்கள்
கி.பி. 8–ஆம் நூற்றாண்டில் அம்மத் அர்ராவியா என்பார் தொகுத்த முஅல்லகத் மிகச் சிறந்த தொகை நாலாகும். மக்காவிற்கு அருகிலுள்ள உக்காசா என்னும் இடத்தில் ஆண்டு தோறும் கூடும் சந்தையின்போது பல்வேறு கவிஞர்கள் தத்தம் புலமையை வெளிப்படுத்திப் பாடுவார்கள். அக்கவிதைகளுள் மிகச் சிறந்தன, மக்காவிலுள்ள இறை இல்லத்தில் (கஃபத்துல்லா) ஓராண்டுக்காலம் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட்டுத் தொங்கவிடப்பெறும். அவ்வாறு தொங்கவிடப்பட்ட கவிதைகள் முஅல்லகத் (தொங்கவிடப்பட்ட கவிதை) என அழைக்கப்பெறும் என்பர். அக்காலத்தில் அரபு மொழியின் வரிவடிவம் செம்மையுறவில்லை. போர்க்குணம் கொண்ட அரபு இனக் குழுக்கள், ஒரு குறிப்பிட்ட இனக் குழுவைச் சேர்ந்த ஒருவரைச் சிறந்த கவிஞராக ஒப்புக்கொண்டிருக்க மாட்டா. சிறந்த கவிஞர் யார் என்பதை முடிவு செய்ய எல்லோரும் ஒப்புக் கொண்ட நடுவர் குழு இருந்திருக்க முடியாது. இவை போல்வனவற்றைக் காரணங்களாகக் காட்டி முஅல்லகத்தின் பெயர்க்காரணத்தை எதிர்ப்பாரும் உளர். அவர்கள் முஅல்லகத் என்பதற்கு மணிமாலை (‘இல்க்’ – விலை மதிப்பற்றது; மணி) எனப் பொருள்கொள்வர். அம்ருல் கயசு, தராபா, சுகேர், இலாபித், அந்தாரா, அமிர் இப்னு குல்சும், ஆரித் இப்னு இல்லிசா ஆகிய ஏழு கவிஞர்களின் கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. பிற்காலத்தில் நாபிகா, ஆசா, ஆபித் இப்னு, அப்ராசு என்போரின் கவிதைகளும் இத்தொகுப்பில் இடம்பெறத் தொடங்கின.
அல் அமாசா என்பது அபூ தம்மாம் அபீப் பின் ஆவ்சு (இ. 850) என்பார் தொகுத்த தொகை நூல், ‘வீரச் செயல்கள்’ (அல் அமாசா) என்னும் பொருள் பற்றிய கவிதைகள் அடங்கிய இந்நூலின் உட்பிரிவு (பாபு) ஒன்றால் பெயர் பெற்றுள்ளது. இத்தொகுப்பில் இசுலாமியச் சமயம் தோன்றிய காலத்தில் எழுதப்பட்ட கவிதைகளும் கலந்துள்ளன என்பர். இக்கவிதைகளில் பல பண்டைய அரபு இலக்கியத்தின் சான்றுகளாகத் திகழ்வதை சிறப்பினை விளக்கும் இலக்கியத் திறனாய்வாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள்.
முபாதல்லியாத் என்னும் தொகை நூல், அதனைத் தொகுத்த முபாத்தல் அல்தப்பி (இ. 786) என்பார் பெயரால் அழைக்கப்படுகிறது. இத்தொகை நூலில் 68 கவிஞர்கள் எழுதிய 128 கவிதைகள் காணப்படுகின்றன.
புகழ்பெற்ற இம்மூன்று கவிதைத் தொகுப்புகளும் நீங்கலாக, புக்தூரி (இ. 897) என்பார் தொகுத்த ‘அமாசா’ என்னும் தொகை நூலும், அரபு சய்யது முகம்மது அல் குறைசி (ஏ. 1000) என்பார் தொகுத்த 49 நெடுங்கவிதைகள் அடங்கிய ‘சம்கரத்து அசா அரி அல் அரப்’ என்னும் தொகை நூலும் குறிப்பிடத்தக்கனவாகும்.
இக்காலப் பகுதியில் வாழ்ந்திருந்த ஆதி இப்னு சயத் என்னும் கிறித்துவக் கவிஞரும் சாமுவேல் இப்னு அதியா என்னும் யூதக் கவிஞரும் எழுதியுள்ள கவிதைகள் வெளிவந்துள்ளன. அம்ருல் கயசின் கவிதை பண்டைய அரபு இலக்கியத்தின் இயல்பினை விளக்குவதாக அமைந்துள்ளது.
சமகால அரபு இலக்கியம்
இசுலாத்தின் தோற்றத்திற்குப் பின் திருமறையும் (குர்ஆன்), நபிமொழியும் (ஆதீது) அரபு இலக்கியத்தை இயக்கும் சக்திகளாகத் திகழ்கின்றன. திருமறை இறைவனால் அருளப்பட்ட வேத வெளிப்பாடாதலால் இது ஆய்வுக்கு அப்பாற்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்நூல் முகம்மது நபிக்குக் கி.பி. 610 தொடங்கி 632 வரை அமையும் 22 ஆண்டுக்காலப் பகுதியில் சிறுகச் சிறுக அருளப்பட்டது. அவ்வப்போது சிறிதும் பெரிதுமாக அருளப்பட்ட திருமறையின் பகுதிகள் தக்காரால் மனப்பாடம் செய்யப்பட்டும், தோல், விலங்குகளின் எலும்பு போன்றவற்றில் எழுதப்பட்டும் பாதுகாக்கப்பெற்றன. இயமாமாப்போரில் (633) மனப்பாடம் செய்திருந்தவர்கள் பலர் இறந்து விட்டமையால், இந்நூலிற்கு முழுமையான எழுத்து வடிவம் கொடுத்துத் தொகுத்துப் பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இசுலாத்தின் மூன்றாவது கலீபாவாகிய உதுமானால் 651–இல் இந்நூல் முறைப்படி தொகுக்கப்பட்டு முழுமையான எழுத்து வடிவம் பெற்றது. பின்னர் அச்சாசு பின் யூசுப் (714) என்பார், திருமறையில் உயிர்க் குறிகளையும் மெய்யெழுத்துகளுக்கான மேல் கீழ்ப் புள்ளிகளையும் ஏற்படுத்தித் திருமறை எத்தகைய மாறுதலும் இல்லாது எல்லா இடங்களிலும் ஒன்று போல் வழங்குமாறு செய்தார்.
திருமறை 114 அத்தியாயங்களை (சூரா) உடையது. இந்நூலில் 6666 வசனங்கள் (ஆயத்) உள்ளன. எனினும் இந்தியாவில், சிறப்பாகத் தமிழ்நாட்டில் வழங்கும் திருமறை, கபா (ஈராக்) அறிஞர்களின் கருத்தினைப் பின்பற்றி 6236 வசனங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. (சில வசனங்களைப் பிரித்து 6666 வசனங்களையும் அடையாளமிட்டுக் காட்டுவர்.) திருமறை மீண்டும் மீண்டும் ஓதப்படும் நூலாகையால் இது திங்களின் 30 நாட்களிலும் ஓதும் வகையில் 30 பாகங்களாகவும் (சூசு), வாரத்தின் 7 நாட்களிலும் ஓதும் வகையில் 7 பிரிவுகளாகவும் (மன்சில்) பகுக்கப்பட்டுள்ளது. திருமறையின் தூய்மையைப் பேணிக் காக்க வேண்டும் என்னும் எண்ணம், அரபு மொழியில், அகராதியியல் முதல் தத்துவவியல் வரை பல்வேறு கலைகள் வளரக் காரணமாயிற்று.
முகம்மது நபி மறைந்து நீண்ட காலத்திற்குப் பின்னர் இசுலாமிய நெறியை வலிமை உடையதாக்குவதற்காக அவருடைய மொழிகளைத் (அதீது) தேடிச் சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு தேடித் திரட்டியவைகளில் உண்மையானவை என ஒப்புக் கொள்ளப்படும் ஆறு நபிமொழித் திரட்டுகளில் புகாரி (870) என்பார் திரட்டிய ‘சகீகு புகாரி’ (சகீகு–உண்மையானது), முசுலீம் (874) என்பார் திரட்டிய ‘சகீகு முசுலீம்’ என்பவை குறிக்கத்தக்கன ஆகும். புகாரி என்பார் தாம் திரட்டிய 6,00,000 நபி மொழிகளில் 7,000 நபி மொழிகளை மட்டுமே தம்முடைய நூலில் தொகுத்துத் தந்துள்ளமை, அவரது அயராத உழைப்பையும், உண்மையே நிலைக்க வேண்டும் என்பதில் அவருக்கிருந்த ஆழ்ந்த பற்றுதலையும் விளக்குகிறது. “இவ்வுலகம் இறை நம்பிக்கை உடையவனது சிறைக்கூடமாகும். மேலுலகம் இறை நம்பிக்கையற்றவனின் சிறைக்கூடமாகும்” என்பது சகீர் முசுலிமில் காணப்படும் ஒரு நபிமொழி ஆகும்.
திருமறையின் விரிவுரைகளாகவும் விளக்கவுரைகளாகவும் அரபியராலும், அரபியரல்லாதாராலும் அரபு மொழியில் ஆயிரக்கணக்கான நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றைப் போன்று நபி மொழிகளையும், முகம்மது நபியின் பழக்க வழக்கங்களையும் (சுன்னா), வரலாற்றையும் (சீறா) ஆராயும் நூல்கள் பல அரபி மொழியில் தோன்றியுள்ளன. இந்நூல்கள் அரபு இலக்கியப் பரப்பை வளப்படுத்தியுள்ளன.
முகம்மது நபியின் காலத்தில் இசுலாத்தை ஏற்றுக் கொண்ட காப் இப்னு சுபைர் என்னும் கவிஞர் முகம்மது நபியைப் புகழ்ந்து எழுதிய ‘பானத் சுஆத்’ (சுஆத்–புறப்பட்டாள்) என்னும் அகப்பொருள் சாயல் பொருந்திய கவிதை நூல், அரபு இலக்கியத்தில் பெரும்புகழ் பெற்றதாகும். இந்நூலுக்கு அரபு மொழியில் நூற்றுக்கணக்கில் விரிவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன; இது உலக மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. இக்கவிதை நூலில், கவிஞர், முகம்மது நபியை ‘இந்தியாவில் செய்யப்பட்ட வாள்’ எனப் புனைந்துரைத்துள்ளார்.
இசுலாத்திற்குப்பின் தோன்றிய அரபு இலக்கியங்கள்
இசுலாமியச் சமயத்தின் குடியாட்சி நெறிப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு கலீபாக்களின் காலத்திற்குப் பின், பரம்பரை உரிமையுடன் உமையாக் கலீபாக்கள் அரபுநாட்டை ஆண்டனர் (661–750). இவர்கள் காலத்தில் வாழ்ந்திருந்த அக்தால், பராசுதாக், சரீர், துர்ரும்மா ஆகிய கவிஞர்கள் சிறந்த இலக்கியங்களைப் படைத்தார்கள்.
இக்கால அரபு இலக்கியத்தில் இசைப்பாடல்களும் தெய்வீகக் காதல் கதைகளும் இடம்பெறத் தொடங்கின. முதல் யசீது (680–683), இரண்டாம் வாலிது (743–744) ஆகியோரின் மறுப்புப் பாடல்களும் வேட்டைப் பாடல்களும் குறிப்பிடத்தக்கவை. இக்காலத்தில் வாழ்ந்த உமர் பின் அபிராபியா எழுதிய காதல் கவிதைகள் இலக்கியத் தரம் வாய்ந்தவையாக மதிக்கப்படுகின்றன. சமீல் என்பாரின் புகழ்பெற்ற ‘மசுனூன் பனி ஆமிர் வ லைலா’ இக்காலத்தில் தோன்றிய இலக்கியமாகும்.
பிற்காலத்தில் ஓங்கி வளர்ந்த சூபித் தத்துவமும் சூபி இலக்கியமும் இக்காலத்தில் தோற்றுவாய் பெற்றன. அசன் அல் பசரா, இராபியா அல் அதாவிய்யா ஆகியோர் அரபு இலக்கியத்தில் இடம்பெறும் குறிக்கத்தக்க தொடக்கக் கால சூபி ஞானிகளாவர். இக்காலத்தில் தோன்றிய உரைநடை நூல்களில் வகாப்பின் முனைப்பியின் ‘அவாஇல்’ (தோற்றங்கள்), அசத் பின் மூசாலின் ‘கிதாபுல் அல் சூக்த்’, (மெய்ஞ்ஞான நூல்) போல்வன குறிப்பிடத்தக்கவை.
அப்பாசியக் கலீபாக்களின் காலத்தில் (750—1250) இசுலாம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் விரைந்து பரவியது. எனவே, அரபு மொழி உலகில் பல்வேறு மொழிகளோடு தொடர்பு கொண்டது; கிரேக்க, உரோம, பாரசீக, இந்திய நாட்டு இலக்கியங்களின் செல்வாக்கு அரபு இலக்கியத்தில் படியத் தொடங்கியது.
முதி பின் இயாசின் காதல் கவிதைகள் இக்காலத்தில் எழுதப்பட்டன. ‘ஆயிரத்தொரு இரவுகள்’ வாயிலாகப் புகழுடன் வாழும் அபூநுவாசின் (810) கவிதைத் தொகுப்பில் அங்கதங்கள், கையறு நிலைகள் நிரம்பக் காணப்படுகின்றன. இவ்வுலகில் இரண்டு வாழ்க்கை இருப்பதாக அபு அல் அதாகியா கூறுகிறார்.
இக்காலத்தில் வாழ்ந்த தா அலிபியின் இரங்கற்பாக்கள் குறிக்கத்தக்கவை. பழங்கால அரபு போர்ப் பாடல்களுக்குப் புதிய சுவை சேர்த்துப் பாடிய முத்தனப்பியின் (915–965) கவிதைத் தொகுப்பு மிகச் சிறந்த உலக இலக்கியங்களுக்கு இணையாகக் கருதப்படுகிறது. அரபு மொழியை இனிமை தோயப் பயன்படுத்தி இனிக்க இனிக்கப் பாடியுள்ள முத்தனப்பியை அரபுக் கவிஞர்களின் தலைவர் என இலக்கியத் திறனாய்வாளர் போற்றிப் பாராட்டுவர். ‘சக்து அல் சந்த்’ (தீப்பொறி), ‘இலுமிய்யாத்’ போன்ற கவிதைத் தொகுப்புகள் எழுதிய அபு அல் அலா அல் மாவுரி (973–1057) இக்காலத்தில் வாழ்ந்தவர் ஆவார். மணம் புரிந்து கொள்ளாது வாழ்ந்த இவர், தம்முடைய கல்லறையில், ‘இந்தத் தவறு எனக்கு என் தந்தை செய்தது; நான் யாருக்கும் செய்யவில்லை’ என எழுதும்படி செய்தார் என்பர்.
இப்னுல் இதாசு (861–908) எழுதிய சிறந்த அணி இலக்கண நூலாகிய ‘கிதாபுல் பாதி’, துக்ராகு (1120) எழுதிய ‘இலாமியத்துல் அசம்’ (லகரத்தில் முடியும் அடிகளை உடையது) ஆகியன இக்காலத்தில் எழுதப்பட்ட சிறந்த நூல்கள். இமாம் பூசுரி (1296) எழுதிய ‘கசீதத்துல் புர்தா’ (போர்வைக் கவிதை) இக்காலத்தில் எழுதப்பட்ட மிகச் சிறந்த நூல்களுள் ஒன்று. இந்நூலுக்குத் தமிழில் மட்டும் இதுவரை செய்யுளிலும் உரைநடையிலும் ஐந்து வெவ்வேறு மொழி பெயர்ப்புகள் வெளி வந்துள்ளன.
பதீஉல் அல் சமான் அல் அமதாளியின் (1007) ‘மகாமத்’ (பேரவை), அதைத் தொடர்ந்து எழுதப்பட்ட ஆரீரியின் (1054–1122) ‘மகாமத்’ என்பன இக்காலத்தைச் சேர்ந்த இலக்கியங்களாகும். இவை சந்த இனிமையுடைய உரைநடையில் (சாசு) புதினம் போன்ற அமைப்பினை உடையனவாக எழுதப் பெற்றுள்ளன.
அபு தாலிப் அல் மக்கி (996) எழுதிய ‘குதூஉல் குலூப்’ (இதயத்தின் உணவு), அபு அப்துல் இரகுமான் அல் சுலாமி (1021) எழுதிய ‘தபாகத்துல் சூபிய்யா’ (சூபிகளின் பிரிவுகள்), முகியித்தீன் அப்துல் காதர் செய்லானி (1077–1166) எழுதிய ‘புதூ குல் கைப்’ (இரகசியங்களின் திறவுகோல்), இயாபுல் அல்தீன் அபு அப்சு உமர் அல் சுகுராவர்த்தி (1234) எழுதிய ‘அவாரிபுல் மஅரிப்’ (அறிவுக் கொடைகள்) போல்வன இக்காலத்தில் எழுதப்பட்ட சிறந்த சூபி இலக்கியங்களாகும்.
‘இச்சத்துல் இசுலாம்’ (இசுலாத்தின் சான்று) எனப் புகழ்ந்து போற்றப்பெறும் அபு ஆமித் அல் கச்சாலி (1058–1111)யின் மிகச்சிறந்த நூலாகிய ‘இகுயா உலாமுத்தீன்’ (சமய அறிவுகளின் மறுமலர்ச்சி) இக்காலத்தைச் சேர்ந்ததாகும்.
இக்காலத்தில் சிறந்த நீதிநூல்கள் பல எழுதப்பட்டன. இப்னு அல் முகாபா (760) எழுதிய ‘கலிலாவ திம்னா’ (அரசர்களின் கண்ணாடி), பாரசீக மொழி வழியாக வந்த வடமொழி நூல் ஒன்றின் மொழி பெயர்ப்பு எனக் கருதப்படுகிறது. சாகிசு (இ. 869) என்பார் எழுதிய ‘உயூனுல் அக்பார்’ (வரலாறுகளின் தேர்வு), இப்னு குதைபா (இ. 889) எழுதிய ‘கிதாபுல் மஅரிப்’ (பொது அறிவு நூல்), ‘கிதாபுல் அல்சிஅர் வஅல் சூ அரா’ (கவிதைகளையும் கவிஞர்களையும் பற்றிய நூல்) என்பன சிறந்த உரைநடை நூல்களாகும். இப்னு அப்தர் செப்பில் (இ. 940) எழுதிய ‘அல் இக்த் அல் பரித்’ (இணையற்ற மணி மாலை) பல்வேறு மணிகளின் பெயர்தாங்கிய 25 தொகுப்புகளை உடையது.
இப்னு இசாக் (768) எழுதிய ‘சீறத்து இரசூலில் லாக்’ (இறைதூதரின் வரலாறு), அகமத் பின் இயகுயா அல் பலாதூரி (892) எழுதிய ‘கிதாபுல் அன்சாபி அல் அசுராப்’ (பெருமக்களின் பரம்பரை பற்றிய நூல்) என்பன, இக்காலத்தில் எழுதப்பட்ட சிறந்த வரலாற்று நூல்களாகும். தபாரி (838–923)யின் ‘தாரிக்குல் அல் இருசூல் வ அல் முலூக்’ (தூதர்கள், அரசர்களைப் பற்றிய வரலாறுகள்) அவருக்குச் சிறந்த வரலாற்று நூலாசிரியர் என்னும் புகழினைப் பெற்றுத் தந்துள்ளமை போன்று, அவருடைய ‘தப்சீர்’ (திருமறை விளக்கவுரை) அவருக்குச் சிறந்த சமயவியல் அறிஞர் என்னும் புகழினைப் பெற்றுத் தந்துள்ளது. மசூதி, பிரூனி, அபுல் பரச், இப்னு கல்துன் ஆகியோரின் வரலாற்று நூல்கள் சிறந்தனவாக மதிக்கப்படுகின்றன. பிரூனியின், ‘தாரிக்குல் இந்து’ (இந்திய வரலாறு) மிகச் சிறந்த நூலாகும். இப்னு அல் ஆதிர் (1234) எழுதிய ‘கிதாபுல் காமில் பி அல் தாரிக்’ (முழுமையான வரலாற்று நூல்) உலகத்தின் தோற்றம் தொடங்கி கிசுறத் 628 (1230–1231) வரையுள்ள உலக வரலாற்றைக் கூறும் நூலாகும்.
ஐரோப்பாவில் இசுபெயின் போன்ற பகுதிகள் அரபுகளால் வெற்றி கொள்ளப்பட்டபோது அரபு இலக்கியம் அந்தப் பகுதிகளில் விரைந்து வளர்ந்தது. இசுபானிய அரபு இலக்கியத்தை வளர்த்தவர்களுள் இப்னு அனி (இ. 973), இப்னு ராசிக் கய்ரவான் (இ. 1070), இப்னு செய்த்தூன் (இ. 1071), முதாமித் (இ. 1095), இப்னு அம்மார் (இ. 1078) ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். இப்னு அசம் (1064) எழுதிய ‘கிதாபுல் மிலால் வ அல் நிகால்’ (சமயங்களையும் உட்பிரிவுகளையும் பற்றிய நூல்) சமய வரலாற்றில் மிகவும் புகழ்பெற்றது. இப்னு கல்துனின் (1332–1406) ‘கிதாபுல் இபார்’ (எடுத்துக் காட்டுகளின் நூல்) சிறந்த வரலாற்று நூலாக இன்றும் மதிக்கப்படுகிறது.
கலீபா மாமூனின் (813–833) காலத்தில் ‘பைத்துல் இக்மா’ (அறிவுப் பேரவை) என்னும் கழகம் அமைக்கப்பட்டுக் கிரேக்க, உரோம, பாரசீக, இந்திய நூல்கள் பல அரபு மொழியில் பெயர்க்கப்பட்டன. இப்னு சீனா (980) அபு பக்கர் அல் ராசி (923) ஆகியோர் மிகச் சிறந்த அறிவியல் நூல்கள் எழுதியுள்ள அறிவியல் அறிஞர்களாவர்.
மங்கோலியப் படையெடுப்பிற்குப்பின் இக்காலம் வரை
மங்கோலியரின் படையெடுப்பால் அப்பாசியக் கலீபாக்களின் தலைநகராகிய பகுதாது வலிமை இழந்தது. இக்காலத்தில் மூவாச்சாகுசசல் போன்ற நாட்டுப்பாடல் வடிவங்கள் வளரத் தொடங்கின. இப்னு கல்லிகளின் (1211–1282) ‘வபாத்து அல் அயான்’ (குறிக்கத்தக்கவர்களின் மரணச் செய்தி) இக்கால நிலையைத் தெளிவாக விளக்கும் வரலாற்று நூலாகும்.
அபுல் பிதா (1302) எழுதிய உலக வரலாறு, இப்னு அரப்ச (1450) எழுதிய ‘அசபுல் மக்தூர்’ (விதியின் வியப்புகள்) போல்வன இக்காலத்தைச் சேர்ந்த சிறந்த நூல்கள், சலாலுத்தீன் அல் சுயூதி (1445–1505) எழுதிய ‘தரீக்குல் குலாபா’ (கலீப்பாக்களின் வரலாறு) இப்னு அசர் (1449) எழுதிய ‘இசாபா பி தமயிசு அல் சகாபா’ (நாயகத் தோழர்களின் வரலாறு), சமாலுத்தீன் இப்னுமுகரம் (1311) எழுதிய ‘இலிசானு அல் அரப்’ (அரபு அகராதி) என்பவை அவ்வத் துறைகளில் தலைசிறந்த நூல்களாகும்.
‘அல்பு இலைலா வ இலைலா’ (ஆயிரத்தொரு இரவுகள்) இக்காலத்தில் முழுமையான வடிவம் பெற்றது. அசுமாஇ என்பாரால் ‘சிறத்து அந்தார்’ (அந்தாரின் வரலாறு) என்னும் காதல் இலக்கியம் படைக்கப்பட்டது.
மங்கோலியர்களின் படையெடுப்பு அரபு இலக்கிய வளர்ச்சியில் ஒரு தேக்க நிலையை ஏற்படுத்தியமையால் இக்காலம் பொதுவாக அரபு இலக்கிய வரலாற்றில் இருண்ட காலம் என அழைக்கப்படுகிறது. முன்னர்க் கூறிய ஒரு சில இலக்கியப் படைப்புகள் நீங்கலாகக் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க நூல் எதுவும் இக்காலத்தில் தோன்றவில்லை.
கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் அரபு இலக்கியம் மறுமலர்ச்சி அடையத் தொடங்கியது. பரந்து விரிந்த அரபுப் பேரரசின் அழிவில் சிறுசிறு நாடுகள் தோன்றின. எனவே பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து மறுமலர்ச்சி அடைந்த அரபு இலக்கியம், எகிப்திய இலக்கியம், சிரியா இலக்கியம் எனத் தனித்தனியாகப் பிரிந்து வளரத் தொடங்கியது.
இக்கால எகிப்தியக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் அல் பாரூதீ ஆவார். ஆயின் அகமது சாங்கி (1868–1932) ‘கவிஞர்களின் இளவரசர்’ எனப் பாராட்டப் பெறுகின்றார். எகிப்தின் நாட்டுப் பாடல் பெருந்திரட்டு ஒன்று 1959–இல் வெளியாயிற்று. இந்நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சியில் இதழ்கள் பெரும் பங்காற்றுகின்றன.
சிரியாக் கவிஞர்களில் இரசசு, முவாச்சாரு போன்ற நாட்டுப் பாடல் வடிவங்களைப் பயன்படுத்தி வெற்றி கண்ட கலீல் முத்ரான் குறிக்கத் தக்கவர், 1932–இல் நிறுவப்பட்ட ‘அப்பல்லோ’ என்னும் இதழ் சிரியா அரபு இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் தொண்டாற்றியது. சுலைமான் அல் புசுதானியின் ‘இலியாத்’ மொழிபெயர்ப்பே (1904) இக்காலத்தைச் சேர்ந்த சிறந்த இலக்கிய முயற்சியாகும்.
ஈராக்கியக் கவிஞர்களில் அல் சகாவியும், அல் ருசாபியும் சிறப்பிடம் பெறுகின்றனர். முன்னர்க் குறித்த அப்பல்லோவின் இலக்கியத் தாக்குதலால் ‘அல் சிஅர் அல் கூர்’ என்னும் புதுக்கவிதை பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. இது ‘அல்சி அர் அல் முர்சல்’ என்னும் வசன கவிதையிலிருந்து வேறுபட்டதாகும்.
சூடானியக் கவிஞர் கர்துல்லா, தென் அராபியக் கவிஞர் யக்யா உமர், ‘அல் சத்’ என்னும் வசன கவிதை நாடகம் படைத்த தூனிசியக் கவிஞர் மகமூது அல் மசு அதி ஆகியோர் இக்காலத்தைச் சேர்ந்த சிறந்த இலக்கியப் படைப்பாளிகள், அமெரிக்காவில் வாழ்ந்த கலீல் சீப்ரான் (1883–1931) தம்முடைய தத்துவக் கருத்துகள் செறிந்த வசன கவிதைகளால் உலகப் புகழ் பெற்றுத் திகழும் பெருங் கவிஞராவர்.
மகமூத் சாவின் அமைச்சராகிய அப்துல் அசீசு ஆசப் கான் இந்திய அரபு இலக்கியத்தின் முன்னோடி ஆவார். அப்துல் அக் தக்லவி, சா வலியுல்லாக், அப்துல் அசீசு, பக்ருல் உலூம் ஆகியோர் இந்திய நாட்டு அரபு இலக்கியப் படைப்பாளிகள். வடமொழியிலுள்ள பண்டை நூல்கள் பலவும் பகவத் கீதையும் அரபுமொழியில் பெயர்க்கப்பட்டுள்ளன. பஞ்ச தந்திரக் கதைகள், புத்த சாதகக் கதைகள் போல்வனவும் அரபுமொழியில் பெயர்க்கப்பட்டுள்ளன. யூகப் கோக்கன் என்பார் திருக்குறளை அரபுமொழியில் பெயர்த்துள்ளார்.
தமிழ்நாட்டு அரபு இலக்கியம்
சதக்கத்துல்லா அப்பா தமிழ்நாட்டில் தோன்றிய சிறந்த அரபுக் கவிஞராவார். இவர் எழுதியுள்ள ‘வித்ரியா’வின் பின்னிணைப்பாகிய 2982 செய்யுள்கள் அடங்கிய நூலும், ‘குத்பிய்யா’ (முகியித்தீன் அப்துல் காதீர் செய்லானியைப் புகழும் நூல்), ‘கசிதா இராயியா பி கஞ்ச சவாரியா’ (நாகூர் சாகுல் அமீதின் புகழ்கூறும் நெடுங்கவிதை) என்னும் நூல்களும் குறிக்கத்தக்கவை. முகம்மது நபியைப் புகழ்ந்து கீழக்கரை தைக்கா சாகிபு ஒலியுல்லாவும், காயல் பட்டினம் தைக்கா சாகிபு ஒலியுல்லாவும் எழுதியுள்ள புகழ்ப்பாக்கள் சொற்சிறப்பும் பொருட்சிறப்பும் உடையவை. உமர் ஒலியுல்லாவின் ‘இலாசி கம்து பக்கீனி’ என்னும் இசைப் பெற்றுத் பாடல் அரபு இலக்கியத்தில் சிறப்பிடம் திகழ்கிறது. குணங்குடி மசுதான் சாகிபு அரபுக் கவிதை நூல் செய்துள்ளார்.
முகம்மது நபிபையும் இசுலாமியச் சான்றோர்களையும் புகழும் வகையில் பற்பல ‘மௌலித்’ (புகழ் மாலைகள்) நூல்கள் தமிழ்நாட்டு அறிஞர்களால் இயற்றப்பட்டுள்ளன. கீழக்கரை சையிது முகம்மது ஆலிம் எழுதிய ‘பஞ்சரத்தின மௌலிது’ என்னும் நூல் இவ்வகையில் சிறந்ததாகும். முகம்மது நபி, கலீபா அலி, பாத்திமா, அசன், உசேன் ஆகியோரின் பெருமை கூறும் இந்நூல் தமிழ்நாட்டு முசுலிம்களிடையே மிகவும் புகழ்பெற்றதாகும்.
தமிழிலுள்ள நீதி இலக்கியங்களுள் பல தமிழ் நாட்டு அறிஞர்களால் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. காயல்பட்டினம் சலாகுத்தீன் மொழி பெயர்ப்புத் துறையில் புகழ்பெற்ற கவிஞராவார்.செ.அ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 753)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4k3zxx76/
தமிழ்“அரபு இலக்கியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4k3zxx76/APA
Oliyon Research. (2026). அரபு இலக்கியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4k3zxx76/MLA
"அரபு இலக்கியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4k3zxx76/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment