மேனாட்டிலிருந்து தமிழகம் போந்து, கிறித்தவ சமயத்திற்கும் தமிழுக்கும் தொண்டு புரிந்த பாதிரியார்களுள் ஒருவர்; போர்ச்சுகல் நாட்டுக் குவார்டா நகரில் கி.பி. 1626–இல் தோன்றினார். பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த இவர் கல்லூரிக் கல்விக்குப் பின்னர்க் கிறித்தவ சபையில் சேர்ந்து சமய குருவானார். சமய ஊழியத்திற்காகக் கி.பி. 1647–இல் கொச்சி வந்து சேர்ந்தார். பின்னர் இவர் கி.பி. 1653–இல் மதுரை வந்து, தமிழகத்தில் தம் சமய ஊழியத்தைத் தொடங்கினார். இவர் தமிழில் பரமானந்தசாமி என அழைக்கப்பட்டார். தமிழில் புலமை சான்ற இவர் ‘தமிழ் – போர்ச்சுகீசிய அகராதி’ ஒன்றினை உருவாக்கினார். இவ்வகராதி இவர் காலமாகி மூன்றாண்டுகட்குப் பின்னர் அச்சிடப்பட்டது. இதன் ஒருபடி இப்போது வத்திகன் நூலகத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ‘போர்ச்சுகீசிய – தமிழ் அகராதி’ ஒன்றையும் இவர் இயற்றியதாகத் தெரிகிறது. தம் 40–ஆம் அகவையில் இறந்த இவரது உடலம் திருச்சி மாவட்டத்தில் முசிரிக்கு அருகிலுள்ள தொட்டியம் என்னும் ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.