கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பாரசீகக் கவிஞர். இவருடைய கவிதைகளால் இவர் அடைந்த சிறப்பினைக் காட்டிலும் மிகுதியான சிறப்பினை அவற்றில் இவர் வலியுறுத்திக் கூறிய நல்லொழுக்கம், உள்ளுணர்வு ஆராய்ச்சி முதலியவற்றால் அடைந்தார். இவருடைய இயற்பெயர் சேக் பரீதுத்தீன் (Shaik Fariduddin) என்பதாகும். நீசாபூரில் தோன்றிய இவர் தம் இளமைக் காலத்திலேயே மெய்ஞ்ஞான நாட்டம் மிக்கவராய், இமாம்ரிசா என்னும் இசுலாமிய ஞானியின் அருளை விரும்பி, அவர் சமாதியருகே பல்லாண்டுகள் தவம்புரிந்தார். பின்னர்ப் பாரசீகத்திலுள்ள சில இடங்களுக்கும், மக்கா மதினா ஆகிய புனித நகரங்களுக்கும் எகிப்து இந்தியா போன்ற நாடுகளுக்கும் சென்று வந்தார், இவரும் இவர் தந்தையாரும் மருத்துவத் தொழில் புரிந்தனர். அதனால் மருந்து விற்போர் என்னும் பொருளிலமைந்த அத்தார் என்னும் பெயர் இவருக்கு அமைந்தது. இவர் இல்றைவாழ்வில் ஈடுபட்டிருந்தாராயினும் இவருடைய உள்ளம் சூபிக்கொள்கை எனப்படும் உள்ளுணர்வார்ந்த மெய்ஞ்ஞான நாட்டத்திலேயே ஈடுபட்டிருந்தது. மருந்துக்கடைத் தொழில் செய்து கொண்டிருந்தபோதே, நோய்களைப் பற்றிக் கூறும் ‘முசீபத் நாமா’ என்னும் நூலையும், இறைவனைப் பற்றிக் கூறும் ‘இலாசி நாமா’ என்னும் நூலையும் இயற்றினார். இவை இவருக்குப் பெரும் புகழ் தந்தன. அறிவுரை கூறும் ‘பந்த நாமா’, பறவைகளின் சிந்தனைகளாக ‘மன்திக்குத்தைர்’ ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார். மன்திக்குத்தைர் என்னும் நூல், பிறிது மொழிதல் என்னும் அணி வகையிலமைந்த உருவக நூலாய், இறை நாட்டமுடையதாகத் திகழ்கிறது. இதன்கண் எல்லாப் பறவைகளும் ‘சிமூர்க்’ என்னும் பறவையைத் தேடி அலைவதாகக் கூறப்பட்டுள்ளது. இறைவன் அப்பறவையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளான். இவருடைய கவிதைகள் உணர்ச்சியைத் தூண்டுவனவாக இல்லாமல், அறிவைத் தூண்டுவனவாக உள்ளன. இன்னார் என்று அறியாமல் ஒருவன் இவரைக் கொன்று விட்டான். பின்னர் அவன் உணர்ந்து, இவர்தம் கல்லறைக் காவலாளியாகத் தொண்டு புரிந்தான்.