நிறுவனத்தின் அளவு பெருகும்போது உற்பத்திச் செலவில் மாறுதல்கள் நிகழ்கின்றன. உற்பத்திச் செலவு மாறுதல்களுக்கான காரணங்களை மார்சல் என்பவர் இரு வகைகளாகப் பிரித்தார். அவை (1) அகச் சிக்கனங்கள் (Internal Economics), (2) புறச் சிக்கனங்கள் (External Economics) என்பன. அகச் சிக்கனங்கள் நிறுவனத்தின் செயற்பாட்டால் ஏற்படுவன. நிறுவனத்தின் அளவு பெரிதாகும்போது அந்நிறுவனத்திற்குள்ளேயே தோன்றக் கூடிய நன்மைகளை அகச் சிக்கனங்கள் என்கிறோம். இவை இந்நிறுவனத்திற்கு மட்டுமே கிடைக்கக் கூடியவை. இவற்றை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். 1 தொழில் நுட்பச் சிக்கனங்கள் இவை நான்கு வழிகளில் தோன்றலாம். அ) எந்திர அளவு பெரிய எந்திரங்களைப் பயன்படுத்தும்போது தொழில் நுட்பச் சிக்கனங்கள் தோன்றும். எடுத்துக்காட்டாக, நாளொன்றுக்கு 1000 சட்டைகள் தைப்பதற்குத் தகுதியுள்ள ஒரு எந்திரத்தைப் பயன்படுத்தி, 500 சட்டைகளை மட்டும் தைத்தால், ஒரு சட்டையைத் தைப்பதற்கு ஆகும் செலவு அதிகமாகிறது. ஏனெனில், இவ்வெந்திரத்தைப் பாதுகாப்பதற்கான (Maintenance) நிலையான செலவு 500 சட்டைகளின் மீது பிரித்துக் கணக்கிடப்படுகிறது. ஆனால், எந்திரத்தின் முழு உற்பத்தித் திறனான 1000 சட்டைகளைத் தைக்கும் போது, அதன் நிரந்தரப் பாதுகாப்புச் செலவை 1000 சட்டைகளின்மீது பிரித்துக் கணக்கிடுவதால் ஒரு சட்டையைத் தைப்பதற்கான உற்பத்திச் செலவு குறைகிறது. ஆ) இணைப்பு முறை உற்பத்தி பெருகும்போது தொடர்புடைய பல நிலைகளை இணைக்க முடிகிறது. ஒரு பால்பண்ணை அங்குள்ள மாடுகளுக்குத் தேவையான தீவனங்களைத் தானே உற்பத்தி செய்து கொள்ளலாம். அதுபோலவே, ஒரு சர்க்கரை ஆலை அதற்கு வேண்டிய கரும்பை உற்பத்தி செய்து கொள்ளலாம். இவற்றால், சராசரி உற்பத்திச் செவவு குறையும். இ) உயர் தொழில் நுட்பம் சில எந்திரங்கன் மிக்க தொழில் நுட்பம் உடையவையாக அமையும். பெரிய அளவிலான நிறுவனங்களே இத்தகைய நுட்ப எந்திரங்களைப் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, மின் சக்தியால் இயங்கும் கணிப்பொறி (கம்ப்யூட்டர்), மற்றும் தானியங்கி எந்திரங்களைக் கூறலாம். ஈ) வேலைப் பகுப்பும் தொழில் திறன் மேம்பாடும் உற்பத்தி அளவை அதிகரிக்கும்போது வேலைப் பகுப்பு முறையைப் புகுத்துவது எளிதாகிறது. இக்கருத்தை ஆடம்சுமித்து (Adam Smith) “நாடுகளின் செல்வம்” என்ற தம் நூலில் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். ஒரு சிறிய நிறுவனத்தில் தொழிலாளர்கள் பலவேறு விதமான தொழில்களைச் செய்ய வேண்டியிருக்கும். அதன் விளைவாக வேலைத் திறமை குறைவாகத்தான் இருக்க முடியும். ஆனால், நிறுவனத்தின் அளவு அதிகரிக்கும்போது ஒவ்வொரு தொழிலாளிக்கும் தனிப்பட்ட, சிறப்பான, தகுதி பொருந்திய ஒரு வேலையைக் கொடுக்க முடியும். அதன்மூலம் ஒரு தொழிலாளியின் தனி ஒருவர் உற்பத்தி (Per Capita Production) பெருகும். எடுத்துக்காட்டாக, தையல் நிறுவனம் ஒன்றில் இரண்டு தொழிலாளிகள் இருப்பதாகக் கொண்டால், அவர்கள் இருவரும் தாமே துணியை வெட்டுதல், தைத்தல், பொத்தான் தைத்தல், தேய்த்து மடித்தல் ஆகிய அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கும். அதற்குப் பதிலாக, இன்னும் சில தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தி, ஒருவர் துணிகளை வெட்டுவது, ஒருவர் தைப்பது, ஒருவர் பொத்தான் தைப்பது, ஒருவர் தேய்த்து மடிப்பது என்று பிரித்துச் செய்தால் அதிக துணிகளைத் தைக்க இயலும். அன்றியும் அவரவர் செய்யும் தொழிலில் சிறப்பான திறமையும், விரைந்து செயல்படும் தன்மையும் ஏற்படும். 2 நிருவாகச் சிக்கனங்கள் தேர்ச்சி பெற்ற வல்லுநர்களை ஒவ்வொரு துறையிலும் அமர்த்துவதன் மூலம், அவர்கள் திறமையுடன் செயலாற்றி உற்பத்திச் செலவைக் குறைக்க முடியும். உலகப் புகழ்பெற்ற ‘இம்பீரியல் கெமிகல் இண்டசுட்ரீசு’ (lmperial Chemical Industries) என்ற நிறுவனம் 14 துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு இயக்குநர் குழுவின் மேற்பார்வையில் இயங்கி வருகிறது. இவை தவிர ஏழு துறைகள், தனித்தனி இயக்குநர் தலைமையில் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் நிருவாகமானது திறமை மிக்கவர்களால் நடத்தப்பட்டு நிறுவனம் சிறந்து விளங்க முடிகிறது. 3 வாணிகச் சிக்கனங்கள் பொருள்களை மொத்தமாக வாங்குவது, விற்பது ஆகியவற்றின் மூலமாகக் கிடைக்கும் நன்மைகள் வாணிகச் சிக்கனங்கள் ஆகும். பெரிய நிறுவனங்கள் பேரம் பேசி, மூலப் பொருள்களைக் குறைந்த விலைக்கு வாங்க இயலும். மேலும் மொத்தமாக வாங்குவோருக்கு மற்ற நிறுவனங்கள் பல சலுகைகள் அளிப்பதும், முன்னுரிமை வழங்குவதும் இயல்பு. இருப்புப்பாதை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறையினரிடமிருந்து இந்த நிறுவனங்களுக்கு வாடகைச் சலுகைகளும் கிடைக்கும். மேலும், அங்காடியில் தனக்குத் துணையான சூழ்நிலை இருக்கும்போது, இவை பொருள்களை எளிதில் வாங்கவும் விற்கவும் இயலும். அதுபோலவே விளம்பரம் போன்றவற்றைப் பெருமளவில் மேற்கொண்டு வாணிகத்தைப் பெருக்கி விற்பனைச் செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும் இயலும். 4 நிதிச் சிக்கனங்கள் நிறுவனம் நிதி வசதியைத் திரட்டுவதும் எளிது; பொது மக்கள், வங்கிகள், அரசாங்கம் ஆகியவற்றிலிருந்து எளிதில் கடன் பெற இயலும். அதுபோலவே, இந்நிறுவனம் வெளியிடும் பங்குகளும், இவற்றின் கடன் பத்திரங்களும் எளிதில் விற்பனையாகும் வாய்ப்பும் உண்டு. அதன் மூலம் நிதி வசதி பெருகும். கடன் பெறுவதற்காகத் தரும் ஈட்டின் மதிப்பு அதிகமாக இருப்பதால், பெரிய நிறுவனங்கள் வங்கிகளிடம் குறைந்த வட்டிக்கும் கடன் வாங்க இயலும். பெருந்தொகைகளையும் கடனாகப் பெற இயலும். வெளிநாட்டு வங்கிகளிடமிருந்தும் உலக வங்கியிடமிருந்தும் கூட நிதி வசதி பெறும் வாய்ப்பு ஏற்படும். பெரும் தொகைகளை நீண்ட காலத்திற்குக் கடனாகத் திரட்டும் போது, முதல் சில ஆண்டுகள் கடனைத் திருப்பித் தராமல் இருக்கும் சலுகையையும் பெறலாம்; குறைந்த வட்டி விகிதத்திலும் கடனைப்பெறலாம். 5 இடர்தாங்கு சிக்கனங்கள் (Risk Bearing Economics) பொருள் உற்பத்தியில் ஈடுபடும்போது பல்வேறு இடர்ப்பாடுகள் தோன்றுவது இயல்பு, திடீரென ஒரு பொருளின் தேவை அங்காடியில் குறைந்துவிடலாம். அப்போது, இழப்பு ஏற்படும் நிலை உண்டாகும். சிறு நிறுவனத்தால் இந்த இழப்பைத் தாங்க முடியாமற் போகலாம். ஆனால், நிறுவனம் பெரிதாயிருப்பின் இவ்விழப்பை எளிதில் சமாளிக்க முடியும் இதனைச் சமாளிக்க உற்பத்தியைப் பன்முகப்படுத்துவது ஒரு வகை. பெரிய நூல்வெளியீட்டாளர், புதிய நூல்களை வெளியிடும்போது, அவற்றின் விற்பனையை மட்டும் நம்பியிராமல், பாடப்புத்தகங்கள், மலிவுப் பதிப்புகள் போன்றவற்றால் கிடைக்கும் ஆதாயத்தைக் கொண்டு இழப்பை ஈடுசெய்து கொள்வர். அங்காடியைப் பள்முகப்படுத்துவது மற்றொரு வழி. ஒரே நகரம் அல்லது மண்டலத்தை மட்டும் நம்பியிராமல் பல இடங்களிலும் பொருள்களை விற்பனை செய்வது ஒன்று; ஒரே மாதிரியான வாடிக்கையாளர்களை மட்டும் நம்பியிராமல், அனைத்து விதமான வாடிக்கையாளர்களையும் சார்ந்திருத்தல் மற்றொன்று. நிறுவனத்திற்கு வேண்டிய மூலப் பொருள்களை வாங்குவதில் இடர்ப்பாடுகள் தோன்றலாம். மூலப் பொருள் தேவைக்காக ஓர் இடம் அல்லது மண்டலத்தை மட்டும் நம்பியிராமல், பல இடங்கள் அல்லது நாடுகளிலிருந்தும் மூலப் பொருள்களை வாங்கிக் கொள்வதன்மூலம் இந்த இடர்ப்பாட்டைத் தவிர்க்கலாம். பெரிய நகரங்களிலுள்ள பெரிய நிறுவனங்கள் மின் தட்டுப்பாடு ஏற்படும்போது, மின்வாரியத்தை மட்டும் நம்பியிராமல், தமக்கென்று தனியாக மின் உற்பத்திச் சாதனங்களை (generators) வைத்துக் கொள்வது இதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். உற்பத்தி முறைகளைப் பன்முகப்படுத்துவதும் ஒரு வழியாகும். சான்றாக, இரண்டாம் உலகப் போரின் போது ‘பெட்ரோல்’ தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது, பெரிய நிறுவனங்கள் நிலக்கரி அல்லது மரக்கரி (Charcoal)யினால் ஓடக்கூடிய வகையில், தம் பேருந்துகளை மாற்றியமைத்துக்கொண்டு தொடர்ந்து பணியாற்றி வந்தன. ஒரு நிறுவனம் குறிப்பிட்ட அளவுக்குமேல் வளரும்போது மேற்கூறிய சிக்கனங்கள் தொடர்ந்து கிடைக்கும் என்று கூற முடியாது. ஒருவேளை, இவை மறைந்துவிடலாம்; அல்லது இவற்றிற்கு நேர் மாறான சிக்கனக் கேடுகளும் (Diseconomics) தோன்றக் கூடும். நிறுவனம் சிறிய அளவில் விற்பனை செய்வதைவிடப் பெரிய அளவில் விற்பனை செய்யும்போது செலவுகள் விற்பனைப் பெருக்க விகிதத்துக்கு இணையாக வளர்வதில்லையாதலால், சராசரிச் செலவு குறைகிறது. நிறுவனத்திற்குப் பல சிக்கனங்கள் தோன்றுகின்றன. காண்க: புறச் சிக்கனங்கள். இர.ந.