இனவழி மொழிப் பாகுபாடு என்பது மொழியியலார் மொழிகளைப் பிரித்துக் காணும். இருவகைப் பாகுபாடுகளில் ஒன்றினைக் குறிக்கும். மொழிகள் அமைப்பு அடிப்படையிலும் இனஅடிப்படையிலும் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன. மொழி நூலார் முன்னதை அமைப்பு வகைப்பாகுபாடு (Typological Classification) என்றும், பின்னதை இனவழிப்பாகுபாடு (Tenealogical Classification) என்றும் கூறுவர். முன்வகையில் மொழிகளைத் தனிநிலை மொழி (Isolating Language), ஒட்டுநிலை மொழி (Agglutinative Language), உட்பிணைப்பு நிலைமொழி (Inflectional Language), இணைப்பு நிலை மொழி (Synthetic Language), பல் இணைப்பு மொழி (Polysynthetic Language), உள்ளடக்கு நிலை மொழி (Incorporating Language) என்றெல்லாம் பகுத்துக் காட்டுவர். இன அடிப்படையில் மொழிகளைப் பல்வேறு இனங்களாக அல்லது குடும்பங்களாகப் பிரித்து இந்தோ–ஐரோப்பிய மொழிகள், சீனதிபேத்திய மொழிகள், உரோலிக்கு அல்டெய்க்கு மொழிகள், திராவிட மொழிகள் என்றெல்லாம் பலவாறாகப் பிரித்துப் பகுத்துக் காட்டுவர். உலக மொழிகளுள் பல தம்முள் இனத்தொடர்பு உடையன. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள் ஒரே இனத்தைச் சார்ந்தன. வங்காளி, இந்தி, பஞ்சாபி, செருமன், ஆங்கிலம் போன்றவை மற்றோர் இனத்தைச் சார்ந்தன. இத்தகைய குடும்பப் பாகுபாடுகள் எவ்வடிப்படையில் அமைந்துள்ளன என்பதை ஆராய்ந்து காணுதல் பயனுடையதாகும். உலகில் காணப்படும் பல்வேறு மொழிகளை எடுத்து நோக்கின், பல சொற்கள் ஒரே விதமான ஒலியையும் பொருளையும் கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, 1. தமிழிலுள்ள பேச்சு, தாக்கு போன்ற சொற்கள் ஆங்கிலத்தில் இதே பொருளைத் தரும் Speech, Attack போன்ற சொற்களோடு ஒற்றுமையுடன் காணப்படுகின்றன. 2. தமிழிலுள்ள அப்பா, அம்மா போன்ற சொற்கள் ஆங்கில மொழியிலுள்ள பப்பா, மம்மா போன்ற சொற்களுடன் பொருந்திக் காணப்படுகின்றன. 3. இவற்றைப் போன்றே தமிழில் காணப்படும் தலை, கண், மூக்கு, வாய், தோள், கை போன்ற சொற்களும் மலையாளத்தில் காணப்படும் தலா கண்ணு, மூக்கு, வாய், பல்லு, தோளு, கைய்யி போன்ற சொற்களும் பொருளிலும் ஒலியிலும் பொருந்திக் காணப்படுகின்றன. இத்தகைய சொற்களை எடுத்து ஆராயும்போது முதல் இரண்டு பிரிவிலும் உள்ள சொற்கள் பொருளிலும் ஒலியிலும் ஒற்றுமையுடன் காணப்பட்டாலும், மிக மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. முதற்பிரிவில் காணப்படும் சொற்கள் தற்செயலாக (Accidental) எந்தக் காரணமுமின்றி வருவன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இரண்டாம் பிரிவிலுள்ள சொற்களோ குழந்தைச் சொற்களாகவும் (Nursery) குறிப்புச் சொற்களாகவும் உள்ளன. சில மொழிகளில் இத்தகைய ஒருமைப்பாட்டினைக் காணமுடியும். மேலும், துருவித் துருவி ஆராய்ந்தாலும் இத்தகைய சொற்களை மிகுதியாகக் காணமுடியாது. இருமொழிகள் கலத்து உறவாடுகிறபோது ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழியினர் கடனாகச் சொற்களைப் பெறுவதும் வழங்குவதும் இயற்கை. இவ்வாறு கடன் பெறுவதும் கொடுப்பதும் எல்லாப் பகுதிச் சொற்களிலும் ஒரே தன்மையாக இருப்பதில்லை. தமிழுக்கும் வடமொழிக்குமிடையே நீண்ட காலமாகத் தொடர்பு இருந்து வந்துள்ளது. எத்தனையோ சொற்களைத் தமிழும் கடனாகக் கொடுத்திருக்கிறது; பெற்றிருக்கிறது. இவ்வாறு கடனாகப் பெற்ற சொற்களை ஆராயின் ஓருண்மை புலப்படும். அடிப்படைச் சொற்களை (Basic Vocabularies) மிகுதியாகத் தமிழ்மொழி கடனாகப் பெறவில்லை; பண்பாட்டுச் சொற்களையே மிகுதியாகக் கடனாகப் பெற்றுள்ளது. ஆனால், மூன்றாம் பிரிவுச் சொற்களோ அடிப்படைச் சொற்கள் ஆகும். மலையாள மொழியையும் தமிழையும் நோக்கின் இத்தகைய நூற்றுக்கணக்கான சொற்களைக் காணலாம். இந்நிலையில் இச்சொற்கள் தன்னியலாக ஏற்பட்டவை என்றோ ஒலிக்குறிப்பால் ஏற்பட்டவை என்றோ கடன் வாங்கலால் ஏற்பட்டவை என்றோ கருத முடியாது. எனவே, தமிழும் மலையாளமும் ஏதோ ஒரு வகையில் ஒன்றோடு ஒன்று தொடர்புடன் காணப்படுகின்றன என்பது விளங்கும். இத்தொடர்பு எல்லாவிதமான சொற்களிலும் காணப்படும். பெயர்ச்சொல், வினைச் சொல், இடைச்சொல் ஆகிய முழுச் சொற்களில் மட்டுமன்றி, ஒட்டுகளிலும் கூட ஒரு தொடர்பினைக் காணலாம். மேற்கண்ட சொற்களில் ஒரு தொடர்பினைக் காணமுடிகிறது. தமிழில் காணப்படும் தலை, வலை, பனை போன்ற சொற்கள் அனைத்துமே மலையாளத்தில் தலா, வலா, பனா என ஓர் ஒழுங்கான மாற்றத்துடன் (ஐ–ஆ) காணப்படுவதை உணர்தல் கூடும். இவற்றைப் போன்றே அடித்தான், படித்தான், கடித்தான் போன்ற தமிழ்ச் சொற்கள் அடிச்சு, படிச்சு, கடிச்சு, என ஒழுங்காக (இத்த–இச்ச) மாறியிருப்பதைக் காணலாம். இவற்றைப் போன்றே அந்த என்பது ‘அ’ என்றும், இந்த என்பது ‘இ’ என்றும் ஒற்றுமையான சொற்களைக் கொண்டிருக்கக் காணலாம். இந்நிலையில் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழியின் சொற்கூறுகள் வேறுபட்டிருந்தாலும் அவற்றிடையே ஓர் ஒப்புமையைக் காணமுடிகிறது. இவ்வொழுங்கினை ஒழுங்கான ஒலிமாற்றம் (Regular Phonetic Correspondence) என்பர். இவ்வாறு இருமொழிகளிடையே காணப்படும் தொடர்பு ஏதோ தன்னியல்பாக ஏற்பட்டதன்று என்ற முடிவுக்கு வருதல்கூடும். இதுபோலவே ஒரு மொழி மற்றொரு மொழியிலிருந்து இவ்வாறு கட- னாகப் பெற்றிருத்தல் முடியாது என எண்ணவுங் கூடும். எனவே, இரு மொழிகளுக்குமிடையே ஏதோ ஒருவித அடிப்படையான தொடர்பு இருப்பதைக் காணலாம். இத்தொடர்பினைத் தான் இனவழித் தொடர்பு (Genetic Relation) எனக் குறிப்பிடுவர். உலகிற் காணப்படும் பல மொழிகளிடையே இத்தகைய தொடர்பினைக் காணமுடியும். இந்தியாவின் தென்கோடியிலும் இலங்கையின் ஒரு பகுதியிலும் வாழும் தமிழும், பாக்கிசுத்தானிலுள்ள பிராகுயி மொழியும் ஒரே இனத்தவை என்னும் முடிவிற்கு வந்துள்ளனர். இது போன்றே ஆங்கிலமும் இந்தியும் ஒரே இனத்தைச் சார்ந்தவை. உலகில் வழங்கும் மொழிகள் அனைத்தையும் 30 அல்லது 40 இனங்களாகப் பிரிப்பர் மொழியியல் அறிஞர்கள். உலகில் காணப்படும் எல்லா மொழிகளையும் எவ்வித ஐயப்பாடுமின்றி இனவழியாகப் பிரித்து விட்டனர் எனக் கூறமுடியாது. எனினும், இந்தோ–ஐரோப்பிய மொழியினம், திராவிட மொழியினம், உராலிக்கு அல்டெய்க்கு மொழியினம், சீன-திபேத்திய மொழியினம் எனப் பல இனங்களாகப் பிரித்துள்ளனர். உலக மொழியின் எண்ணிக்கையைப் பற்றியும் அவற்றின் இன உறவு பற்றியும் ஆராய்ந்த பிரெஞ்சு அறிவியல் கழகம், உலகில் 2796 மொழிகள் பேசப்படுகின்றன என்றும், இவை அனைத்தும் 27 இனங்களில் அடங்கும் என்றும் கூறியுள்ளது. ச.அ.