செந்நாய்
cennāy
நாய்க் குடும்பத்தைச் (canidae) சேர்ந்த செந்நாயை டோல் (dhole) என்றும், காட்டு நாய் என்றும் குறிப்பிடுவர்.
நாய்க் குடும்பத்தைச் (canidae) சேர்ந்த செந்நாயை டோல் (dhole) என்றும், காட்டு நாய் என்றும் குறிப்பிடுவர். அடர்ந்த காடுகளில் கூட்டமாக வாழும் செந்நாய்கள், இந்தியா, இந்தோசீனா, ஜாவா, சீனா ஆகிய நாடுகளில் காணப் படுகின்றன. கிழக்கு ஆசியாவில் குவான் அல்பினஸ் அல்பினஸ் (Cuon alpinus alpinus) என்ற சிறப்பினமும், மேற்கு ஆசியாவில் குவான் அல்பினஸ் ஹெஸ்பெரியஸ் (Cuon alpinus hesperius) என்ற சிறப்பினமும் வாழ்கின்றன. இந்தியக் காடுகளில், மூன்று சிறப்பினங்கள் வாழ்கின்றன. குவான் டுக்குனன்சிஸ் (Cuon dukhunensis) என்னும் சிறப்பினத்தைச் சேர்ந்த செந்நாய் கங்கை நதிக் கரையின் தென் பகுதிக் காடுகளிலும், குவான் பிரைமேலஸ் (C.a. primaevus) சிறப்பினம் குமாவோன் (Kumaon) காடுகளிலும், நேபாளம், சிக்கிம், பூடான் நாட்டுக் காடுகளிலும், குவான் லாங்கியர் (C.a. langier) சிறப்பினம் காஷ்மீரக் காடுகளிலும் வாழ்கின்றன.
செவ்வண்ணத்தில் காணப்படும் செந்நாயின் வயிற்றுப் பகுதியிலுள்ள மயிர் மஞ்சளாகவோ, அழுக்கடைந்த வெண்மையாகவோ இருக்கும். அடர்த்தியான நடு முதுகு மயிர்க் கற்றை கறுப்பு நிறத்தில் அமைந்துள்ளது. காதுகளின் அகன்ற பகுதி செந்நிறத்தில் இருக்க, கூரிய முனைப் பகுதிகள் கறுப்பாயுள்ளன. 5 அல்லது 6 அங்குல நீளமுள்ள வாலின் முனைப் பகுதியில் பெரும்பாலும் கறுப்பாகவும், சிறிது சாம்பல் நிறமாகவும் உள்ள மயிர்க் கற்றை காணப்படுகிறது. பழுப்பு நிறமுள்ள செந்நாய்க் குட்டிகள், மூன்று மாதத்தில் முதிர்ச்சியடைகின்றன. அப்போது, அவை செந்நிறத்தைப் பெறுகின்றன. வலிமையான கழுத்தையும், மிகப் பெரிய தாடைகளையும் பெற்றுள்ள செந்நாயின் கீழ்த் தாடையில் இரண்டு கடை வாய்ப் பற்கள் இல்லை. வேகமாக ஓடுவதற்கு ஏற்றவாறு, கால்கள் அமைந்துள்ளன. ஆண் நாய் 22 அங்குல உயரமும், பெண் நாய் 20 அங்குல உயரமும் உள்ளவை. செந்நாயின் சராசரி உடல் எடை 37 கி.கி. Page 750
செந்நாய்கள் 5–12 எண்ணிக்கையாகக் கூட்டமாகச் சேர்ந்து வாழ்கின்றன. ஒரு செந்நாய்க் கூட்டத்தில் 20 நாய்கள் வரை இருக்கும் என்றும், ஒரு செந்நாய்க் கூட்டம் பிறிதொரு செந்நாய்க் கூட்டத்துடன் கலப்பதில்லை என்றும் வன விலங்கியல் அறிஞர்கள் கூறுகின்றனர். டேவிட் மேக்டோனால்ட் என்னும் வன விலங்கியலறிஞர் பந்திப்பூர் வன விலங்கு சரணாலயத்தில் 100 செந்நாய்கள் அடங்கிய ஒரு கூட்டத்தைத் தாம் பார்த்ததாகக் கூறுகிறார். தம் வாழிட எல்லையைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்காக, ஒரு கூட்டத்தைச் சேர்ந்த அனைத்துச் செந்நாய்களும் பொதுவான ஓர் இடத்தில் எச்சமிடுகின்றன. ஒரே கூட்டத்தைச் சேர்ந்த நாய்கள் தம் வாழிட எல்லையை அடையாளம் காண்பதற்கும், நுகர்ந்தறியும் பிறிதொரு கூட்டம் அவ்வாழிட எல்லையை விட்டு அகன்று செல்வதற்கும், பொதுவாக எச்சமிடும் இடங்கள் பயன்படுகின்றன.
செந்நாய்கள் விலங்குகளை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை உண்கின்றன. சிறு பூச்சிகள், ஊர்வன, காட்டுப் பழங்கள் ஆகியவற்றையும் உண்கின்றன. இறைச்சியைப் பற்களால் மென்று உண்ணாமல், பெரிய துண்டுகளாகவே விழுங்கி விடும் என்றும், அவற்றின் எச்சத்தில் எலும்புகளும், மயிரும் காணப்படும் என்றும் டன்பார் பிராண்டர் (Dunbar Brander), ஜான்சிங் என்னும் வன விலங்கியலறிஞர்கள் கூறுகின்றனர்.
செந்நாய்கள் கூட்டமாகச் சென்று காட்டெருமை, கட மான், சதுப்பு மான், புள்ளி மான், காட்டுப் பன்றி போன்ற வன விலங்குகளைத் தாக்கிக் கொன்று அவற்றின் இறைச்சியை உண்கின்றன. வலிமையான புலியையும், செந்நாய்கள் தாக்கிக் கொன்று விடுகின்றன என்கிறார் டன்பார் பிராண்டர். சிறுத்தை, கரடி ஆகிய விலங்குகளையும் கொன்று, அவற்றின் இறைச்சியைச் செந்நாய்கள் உண்டன என்று டேவிட் மேக்டோனால்ட் என்பார் குறிப்பிடுகிறார். இவ்வாறு, கொடூரமாகக் கொலை புரியும் செந்நாய்கள் மனிதனைத் தாக்குவதில்லை; ஆனால் வளர்ப்பு நாய்களைத் தாக்கிக் கொன்று விடுகின்றன. செந்நாய்கள் கூட்டமாகத்தான் வேட்டையாடச் செல்லும். தனியொரு நாய் வேட்டையாடும் கட்டாயம் ஏற்படும் போது, வலிமையான, பெரிய விலங்குகளைத் தவிர்த்து எளிதாகத் தாக்கக் கூடிய மான் குட்டி, காட்டு முயல் போன்ற விலங்குகளையே கொன்று உண்ணும்.
கூட்டமாகச் சென்று வேட்டையாடும் செந்நாய்கள் இரையாகும் விலங்குகளை மிகக் கொடூரமாகத் தாக்கிக் கொல்கின்றன. நுகர்ச்சிப் புலன் மூலம் இரையாகும் விலங்கைக் கண்டு பிடிக்கின்றன. இரையாகும் விலங்கு புதர்களுக்குள் மறைந்திருந்தால், கூட்டத்தில் ஏதாவதொரு செந்நாய் உயரமான அப்புதரை ஒரே எட்டில் தாண்டிக் கடந்து, இரையாகும் விலங்கின் இருப்பிடத்தைக் கண்டறியும்.
ஒன்றன் பின் ஒன்றாகவோ, தாறுமாறாகவோ செல்லாமல், ஒழுங்கான நேர் வரிசையில் அணி வகுத்துச் செல்லும் செந்நாய்கள், இரையாகும் மானையோ, காட்டெருமையையோ உடனே தாக்கிக் கொல்வதில்லை. குறைந்தது 0.5 கி.மீ. வரை துரத்திச் சென்று, மானோ, காட்டெருமையோ களைப்படைந்து அயர்ந்து போகும் தருணத்தில், அவற்றின் கண், காது, மூக்கு, உதடு ஆகியவற்றை வாயால் பற்றிக் கொண்டு தொங்குகின்றன. அட்டைகளைப் போல் இரையாகும் விலங்கின் உடலோடு, தம்மைச் சேர்த்துக் கொள்கின்றன. திடீர்த் தாக்குதலால் அதிர்ச்சியடைந்துள்ள மான் அந்த அதிர்ச்சியினின்றும் மீள்வதற்குள், செந்நாய்கள் மானின் குதத்துக்குள்ளிருந்து அதனுடைய குடலை வெளியில் இழுத்துப் போடுகின்றன. அதிர்ச்சியாலும், குருதிப் பெருக்காலும் தாக்கப்படும் மான், உடனே இறந்து விடும். மான் இறப்பதற்கு முன்பே கூடச் செந்நாய்கள் அதனுடைய தசைப் பகுதிகளைக் கடித்து, உண்ணத் தொடங்கி விடுகின்றன.
சில சமயங்களில், செந்நாய்களால் துரத்தப்படும் மான் ஆழமான ஆற்றின் மையத்திற்குத் தப்பி ஓடி விடுவதும் உண்டு. அப்போது, சில செந்நாய்கள் நீருக்குள் இறங்கிச் சென்று, மானை விரட்டிக் கரைக்குக் கொண்டு வரும். தன்னிலை தளர்ந்து போகும் மான் பக்கவாட்டில் சரிந்து விழுந்து விடும். அப்போதும் கூடச் செந்நாய்கள் மானைத் துரத்துவதை நிறுத்தா. அச்சமுற்ற மான் முதுகில் ஊர்ந்த படியே கரைக்கு வந்து சேரும். கரையில் தயாராக நிற்கும் மற்றச் செந்நாய்கள் உடனே மானைத் தாக்கிக் கொன்று விடுகின்றன. இரையாகும் மான் ஆண் மானாக இருந்தால், செந்நாய்கள் அதனுடைய விந்தகங்களை முதலில் கடித்து உண்கின்றன. பின்னரே இதரப் பகுதிகளை உண்ணத் தொடங்குகின்றன.
புதர்களில் மறைந்திருக்கும் மான்களைத் துரத்தி வெளியில் கொண்டு வந்த பின், அவற்றின் கண்களில் சிறுநீரைப் பெய்து குருடாக்கி விடும். இவ்வாறு யானை, புலி போன்ற வலிய விலங்குகளையும் செந்நாய்கள் கொன்று விடுகின்றன.
செந்நாய்கள் இறந்து கிடக்கும் விலங்குகளை உண்பதில்லை. ஆனால், அவை புலி, சிறுத்தை ஆகியவை உண்டு விட்டுப் போட்டுச் செல்லும் விலங்குகளின் எஞ்சிய உடற் பகுதிகளை உண்கின்றன.
உணவுக்காகச் செந்நாய்கள் தமக்குள் போட்டியிடும் முறை விந்தையானது. கொன்று போட்டுள்ள விலங்கின் தசைக்காக அவை சண்டை போடுவதில்லை. இறைச்சியை விரைந்து உண்பதற்கே, அவை கடுமையாகப் போட்டியிடுகின்றன. ஒவ்வொரு செந்நாயும் 60 நிமிடங்களில் 4 கி.கி. எடையுள்ள இறைச்சியை விழுங்கி விடுகிறது. பெரிய இறைச்சித் துண்டுகளைக் கவ்விச் சென்று, மறைவான இடங்களில் தங்கி உண்ணும்.
இரையைக் கொன்றவுடன், முதலில் இதயம், ஈரல், குதப் பகுதி, கண்கள் ஆகிய பகுதிகளைச் செந்நாய்கள் உண்கின்றன. ஆறோ, குளமோ, வேறு நீர் நிலைகளோ அருகில் இருந்தால், அடிக்கடி நீர் அருந்தச் செல்கின்றன. பின்னர், தொடர்ந்து உண்கின்றன. நீர் நிலைகள் அருகில் இல்லாத போது, இறைச்சி முழுவதையும் உண்டு முடித்த பின்னர், நீர் நிலைகளைத் தேடிச் செல்கின்றன. குளிர் காலத்திலும், செந்நாய்கள் நீர் நிலைகளில் படுத்திருப்பதைப் பெரிதும் விரும்புகின்றன.
செந்நாய்கள் புலியையும் அஞ்சாமல் தாக்குகின்றன என டன்பார் பிராண்டர் தெரிவிக்கிறார். ஒரு புலியைச் சீண்டி, அதனுடன் இரு செந்நாய்கள் சண்டையிட்டனவென்றும், முடிவில் செந்நாய்களும், புலியும் இறந்து விட்டனவென்றும், அவற்றின் தோல்களைக் காட்டுவாசிகள் டன்பார் பிராண்டரிடம் கொடுத்தனரென்றும், கடுமையான புண்களின் வலியை, முனகாமல் தாங்கிக் கொள்ளும் மன வலிமை வாய்ந்தவை செந்நாய்கள் என்றும் டன்பார் பிராண்டர் தெரிவிக்கிறார்.
ஓராண்டு வயதுடைய செந்நாய்கள் உடலுறவுக்குத் தயாராகின்றன. நவம்பர், ஏப்ரல் மாதங்களில் செந்நாய்கள் உடலுறவு கொள்கின்றன. கருவுற்ற பெண் நாய் எட்டுக் குட்டிகளை ஈன்றெடுக்கும். குட்டிகளை ஓடைகளுக்கு அருகிலுள்ள பாறை இடுக்குகளிலும், பிற விலங்குகள் அமைத்திருக்கும் மண் குழிகளிலும் வைத்துப் பராமரிக்கும். ஒரு கூட்டத்தைச் சேர்ந்த அனைத்துப் பெண் நாய்களும் தம் குட்டிகளை மொத்தமாகக் குழிகளில் வைத்துப் பராமரிப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர். பந்திப்பூர் வன விலங்குப் புகலிடத்தில், மூன்று செந்நாய்கள் தம் குட்டிகளை ஒன்றாகவே வைத்துப் பாதுகாத்துப் பராமரித்தன என்று டன்பார் பிராண்டர் தெரிவிக்கிறார்.
பாலருந்தும் குட்டிகள் தாயுடனே தங்கியிருக்கும். மூன்று வாரங்களுக்குப் பின், பாதி செரித்த இறைச்சி உணவைத் தன் குட்டிக்கு ஊட்டுகிறது. எண்பது நாள்கள் நிறைவானவுடன், குட்டிகள் வெளியில் வருகின்றன. ஐந்து மாதங்களுக்குப் பின், அவை வேட்டையாடச் செல்லும் தாயுடன் சேர்ந்து கொள்கின்றன. அவையும் வேட்டையாடப் பழகுகின்றன.
குரைத்தல், கத்துதல், ஓலமிடுதல், விசிலடித்தல் போன்ற பலவகையான ஒலிகளின் மூலம் செந்நாய்கள், தன் கூட்டத்தைச் சேர்ந்த பிற செந்நாய்களுடன் தொடர்பு கொள்கின்றன. உடலுறவுக்கு அழைக்கும் போது விசிலடிக்கும் ஒலியையே அவை பயன்படுத்துகின்றன.
ஆஃப்ரிக்காவில் வாழும் செந்நாய்களும் கூட்டமாகவே வாழ்கின்றன. அவை கூட்டமாகவே வேட்டையாடும்; ஓய்வெடுக்கும்; பாலுறவு கொள்ளும். ஒரு செந்நாய்க் கூட்டத்தில், 20 செந்நாய்கள் வரை இருக்கும். அவை வரிக் குதிரைகளை மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் துரத்திச் சென்று கொல்லும். வலிமையான ஆண் செந்நாய்களுக்குத்தான் பெண் செந்நாய்கள் உடலுறவுக்கு இணங்கும். பிறக்கின்ற குட்டிகளின் கண்கள் மூடியவாறுள்ளன. குட்டிகளுக்குப் பாதி செரித்த இறைச்சி உணவைத் தாய் ஊட்டுகிறது. வரிக் குதிரையைத் தாக்கும் போது, அதனுடைய வால், உதடு ஆகியவற்றை வாயால் பற்றிக் கொண்டே செநநாய்கள் தொங்குகின்றன. செந்நாய்கள் வரிக் குதிரையின் குதத்தின் வழியாக, அதனுடைய குடலையே முதலில் வெளியில் இழுத்துப் போடுகின்றன. உயிருக்குப் போராடும் வரிக் குதிரையின் உடல் பகுதிகளைச் சற்றும் இரக்கமின்றிச் செந்நாய்கள் கடித்து உண்கின்றன. —எஸ்.ஆர்.டி. சுந்தரமூர்த்தி
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 750)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4b2ywkx2/
தமிழ்“செந்நாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4b2ywkx2/APA
Oliyon Research. (2026). செந்நாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4b2ywkx2/MLA
"செந்நாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4b2ywkx2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment