தாவரத்திற்கும் அதன் சூழ்நிலைக்கும் உள்ள உறவு முறையை எடுத்துரைக்கும் அறிவியல் பிரிவிற்குத் தாவரச் சூழ்நிலையியல் (plant ecology) எனப் பெயர். உயிரினங்களுக்கும், சூழ்நிலைக்கும் உள்ள உறவு முறைகளைப் பற்றிப் படிப்பதைச் சூழ்நிலையியல் என்பர். வாழ்விடம், அதன் சூழல் ஆகியவை பற்றி அறிவது வாழ்விடச் சூழ்நிலையியல் (habitat ecology) எனப்படும். தனியுயிரிகளின் தேவை, அவை செயல் படும் முறை, சூழ்நிலைக் காரணி ஏற்படுத்தும் விளைவு முதலியன தனி உயிரிச் சூழ்நிலையியல் எனப் படும். ஒரே இனத்தைச் சார்ந்த உயிரிகள் தொகுதியரகக் காணப்படுவதால், அவை ஒன்றையொன்று சார்ந்து வாழும் வாழ்க்கையில் சிக்கல் உண்டாகிறது. உயிரினத் தொகையில் ஒன்றுடன் ஒன்று செயல் படும் முறை, சூழ்நிலையோடு செயல்படும் முறை ஆகியவற்றால் ஒரு விலங்கு அல்லது தாவர உயிர்த் தொகையின் அளவும், அதனுடைய வளர்ச்சியின் வீதமும் ஒழுங்குபடுத்தப் படுகின்றன. இவை யாவும் உயிர்த் தொகைச் சூழ்நிலையியல் (population ecology) எனப்படும். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் தாவர, விலங்குகளிடையே உள்ள உறவுகள் பற்றிய படிப்பு, சமுதாயச் சூழ்நிலையியல் (synecology) எனப்படும். ஒரு குறிப்பிட்ட தட்ப வெப்ப நிலையில் காணும் மிகச் சிறந்த உயர் நிலைத் தாவரக் கூட்ட அமைவிற்கு உச்ச நிலை அமைவு எனப் பெயர். ஒவ்வொரு தாவர அமைவிலும், ஒன்று அல்லது இரண்டு ஓங்கு தன்மை பெற்ற இனங்கள் காணப்படும். அவை, ஒரே வகையான வளரியல்பைக் கொண்டுள்ளமையால், தாவர அமைவின் வெளித் தோற்றத்திற்கு அடிப்படையாகின்றன. மேலும், பிற தாவரங்கள் பரவிப் பெருகுதலையும் கட்டுப் படுத்துகின்றன. இந்தியாவில் வெப்ப மண்டல மழைக் காடுகள், இலையுதிர் காடுகள், முட்காடுகள், உவர் நிலத் தாவரங்கள் என்னும் தாவர அமைவுகள் காணப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட சிறிய நிலப் பரப்பில் சமமாக உள்ள தட்ப வெப்ப நிலையிலிருந்து மாறுபட்டு, நுண் தட்ப வெப்ப நிலை (microclimate) ஏற்படும். ஒவ்வோர் உச்ச நிலை அமைவும், இரண்டு அல்லது மூன்று தாவரச் சேர்க்கைகள் என்னும் பெரும் உட்பகுதிகளைக் கொண்டிருக்கும். ஓரினச் சேர்க்கை என்பது ஓங்கு தன்மை பெற்ற ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த தாவரத் தொகுதி ஆகும். ஓர் இடத்தில், ஓங்கு தன்மை பெற்ற தாவர இனங்களின் கீழே காணப்படும் இரண்டாம் நிலை ஓங்கு தன்மை பெற்ற தாவரங்களுக்குத் தாவரச் சமூகம் எனப் பெயர். புறத் தோற்றத்தின் இயல்பைக் கொண்டு தாவர சமூகத்தைத் தோற்றச் சமூகம், அடுக்குச் சமூகம், பூவாத் தாவர சமூகம் என வகைப்படுத்தலாம். வளர் பருவத்தின் வேறுபட்ட காலங்களில் மிகை வளர்ச்சி, பூக்கள், கனிகள் ஆகியன தாவரச் சேர்க்கைக்குப் புதிய தோற்றத்தை அளிக்கும். இது தோற்றச் சமூகம் எனப்படும். அடுக்குச் சமூகத்தில், தாவரக் கூட்டங்கள் பல அடுக்குகளில், பல வரிசைகளில் அமைந்திருக்கும். பூவாத் தாவரச் சமூகத்தில், மரங்களின் கீழே தரையில் பாசி போன்ற பூவாத் தாவரங்கள் காணப்படும். தாவரக் கூட்டம் வளர்ச்சி அடையும் போது, ஒரே வாழ்விடத்தில் மாறுபட்ட பல தாவரத் தொகுதிகள் வந்தடையும். வழி முறை வளர்ச்சி, படிப் படியாகத் தொடர்ந்து, இறுதியில் வாழ்விடக் காரணிகளுக்குச் சமமான தாவரத் தொகுதியில் நிலையாக்கப் படும். உச்ச நிலைத் தாவரக் கூட்டமே இறுதியில் நிலையாகும். வழி முறை வளர்ச்சி, நீர் வளமுடைய இடத்திலிருந்து தொடங்கினால், அது நீர் வழி முறை வளர்ச்சி எனப்படும். வறண்ட வாழ் இடங்களிலிருந்து தொடங்கினால், வறள் நில வழி முறை வளர்ச்சி எனவும், தாவரங்களே இல்லாத பாறையிலிருந்து தொடங்கினால், பாறை வழி முறை வளர்ச்சி என்றும் குறிக்கப்படும். ஒரு நிலையில் உள்ள தாவரத் தொகுதிகள், அடுத்த நிலைக்குரிய தாவரத் தொகுதிக்கு வழி வகுத்து, வழி முறை வளர்ச்சியை உச்ச நிலைத் தாவரக் கூட்டத்திற்குக் கொண்டு செலுத்தும். வழி முறை வளர்ச்சிகள் எத்தகைய சூழலில் தொடங்கினாலும், இறுதியில், இடைநிலைத் தாவரங்களை நோக்கியே அமைகின்றன. சூழ்நிலைக்குத் தக்கவாறு, தாவரங்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றன. அதிக மழை அல்லது அதிக வெப்ப நிலை அல்லது மேடு, பள்ளத்தாக்குப் போன்ற சூழ்நிலை வேறுபாடுகளுக்குத் தகுந்தவாறு, பல வகைத் தாவரக் கூட்டங்கள் உருவாகியுள்ளன. வெப்ப மண்டலக் காடுகளில், அடுக்குத் தாவரத் தொகுதி உச்ச நிலை அடைகிறது. இலையுதிர்க் காடுகளில், தாவரங்கள் வெப்பக் காலத்தில் இலைகளை உதிர்த்து விடும். இவை, பெரும்பாலும், இடை நிலைத் தாவரத் தன்மையைக் கொண்டவை. முட்காடுகள், குறைந்த மழையும், அதிக வெப்பமும் உள்ள இடங்களில் காணப்படும். பெரும்பாலான தாவரங்கள், இடை நிலைத் தாவரங்களாகவும், வறள் நிலத் தாவரங்களாகவும் (xerophytes) இருக்கும். தொற்றுத் தாவரங்கள் பிற தாவரங்களின் மேல் வளரும். ஆனால், எந்தவித உணவையும் பிற தாவரங்களிலிருந்து அவை பெறா. கடற்கரை மணல் தாவரங்கள் பெரும்பாலும், வறள் நிலத் தாவர உருவ அமைப்பைப் பெற்றிருக்கும். உவர் தாவரங்கள், உவர் நிலங்களில் வளரப் பல தகவமைப்புகளைப் பெற்றுள்ளன.உவர் சதுப்புத் தாவரங்களை வெப்ப மண்டலக் கடல்களிலும், தட்டையான மண் நிறைந்த கடல்களிலும், கழிமுகப் பகுதிகளிலும் காணலாம். இவை சூழ்நிலைக்கு ஏற்றவாறு வளர, பல தகவமைப்புகளைக் கொண்டுள்ளன. தங்களுடைய உணவைத் தாங்களே தயாரித்துக் கொள்ளும் தாவரங்கள், தன்முனைப்பு உயிரிகள் (autotroph) என்றும், உணவிற்காகப் பிறவற்றைச் சார்ந்துள்ளவை பிற முனைப்பு உயிரிகள் (heterotroph) என்றும் பிரிக்கப்படும். பச்சைத் தாவரங்கள் தன்னிச்சையானவை அல்ல. அவை சூழ்நிலைக் காரணிகளால் கட்டுப்படுத்தப்பட்ட உயிரினங்களாகும். மண், ஈரம், காற்று, வெப்ப நிலை போன்ற காரணிகளின் கூட்டே சூழ்நிலை என்று கூறலாம். உயிரினத்தைப் பாதிக்கும் எந்த நிலையும்–எந்தப் பொருளும் காரணி எனப்படும். ஒரே வகையான அமைப்புடைய இடமே வாழ்விடம் என்று குறிப்பிடப் படும். காரணிகளைத் தட்ப வெப்பக் காரணிகள், நிலக் காரணிகள், உயிர்க் காரணிகள் எனப் பிரிக்கலாம். மழை, வளிம மண்டல வெப்ப நிலை முதலியன தட்ப வெப்ப நிலைக் காரணிகளில் அடங்கும். நிலக் காரணிகளில், மண்ணின் தன்மை, ஈரம், வெப்ப நிலை முதலியன அடங்கும். உயிர்க் காரணிகளில் சாறுண்ணிகள், புல் உண்ணும் விலங்குகள் முதலியன அடங்கும். சூழ்நிலையின் அனைத்துக் காரணிகளும், உயிரினத்தைப் பாதிக்க வல்லன. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட காரணி மட்டுமே முதன்மை வாய்ந்ததாக, ஆளுமையுடன் வரையறை செய்ய வல்லதாக இருக்கும். சுற்றுப்புறச் சூழல் காரணிகளால், தாவரங்களின் வளர்ச்சிக்கு ஏற்படும் விளைவுகளை ஆராய்ந்தால், ஒவ்வொரு காரணியும் தனிப்பட்ட வினையியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது தெரிய வரும். காரணிகள், உயிரினங்களைப் பாதிப்பதோடு அல்லாமல், தங்களுக்குள்ளேயே ஒன்றையொன்று பாதிக்கக் கூடியவையாகவும் உள்ளன. பல காரணிகள் ஒரே சமயத்தில் தாவரத்தைப் பாதிப்பதால், தாவரத்தின் ஒவ்வொரு செயலும், பல காரணிகளால் கட்டுப் படுத்தப்படும். தாவரத்தின் செயல்பாடு சூழ்நிலையால் தூண்டப்பட்டு நிகழ்கிறது. தூண்டுதல் நின்று விட்டால், துலங்கலும் தடைப்படும். தாவரங்களைப் பாதிக்கும் சூழ்நிலையின் பல்வேறு தன்மைகள் அல்லது காரணிகளை அளந்தறிவது எளிதன்று. வளி மண்டலத்திலுள்ள தன்மைகளின் அளவை விட, தாவரத்தைச் சூழ்ந்துள்ள வளி மண்டலத்தில் ஏற்படும் தட்ப வெப்ப வேற்றுமைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அவையே தாவரத்தைப் பாதித்து, பல விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஒரு காரணி, பிறிதொரு காரணியின் குறைபாட்டை ஈடு செய்கிறது. எடுத்துக் காட்டாக, குறைவான மழையால் ஏற்படும் விளைவை உயர்ந்த நீர் மட்டம் அல்லது தாழ்ந்த வெப்ப நிலை சீர் செய்து விடும். மண்ணிலுள்ள தாது உப்புகள் ஒன்றையொன்று ஈடு செய்கின்றன. காரணிகள் தனித் தனியாகத் தோற்றுவிக்கும் விளைவும், அவை ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் விளைவும் ஒரே வகையாக இருப்பதில்லை. சூழ்நிலையின் காரணிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டும், தொடர்ந்து மாறிக் கொண்டும் உள்ளமையாலும், விளைவுகளைத் தாமதமாகப் எதிர்பலிப்பதாலும், எந்தக் காரணியை மாற்றினாலும், எதிர்பாராத விளைவுகள் உண்டாகும். சூழ்நிலையில் ஏற்படும் தட்டுப்பாடுகளையும், குறைபாடுகளையும் சிறிது காலமே தாவரங்கள் சரி செய்து கொள்ள இயலும். தாவரத்தின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட நிலையில், தாங்க முடியாத அளவிற்கு எந்தக் காரணியின் முனைப்பு மிகுந்தாலும், குறைந்தாலும், அந்தக் காரணியைச் சீர் திருத்தித் தாவரத்தின் செயல் முறையை மாற்றலாம். —கு. பத்மநாபன் நூலோதி. R.L. Smith, Ecology and Field Biology, Harpe Publication, New York, 1966.