அல்சேசிய நாட்டவர்
alcēciya nāṭṭavar
பிரான்சு, மேற்குச் செருமனி ஆகிய இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட வளமிக்க நிலப்பரப்பாகிய அல்சேசி (Alsace) நாட்டில் வாழும் மக்களாவர்.
பிரான்சு, மேற்குச் செருமனி ஆகிய இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட வளமிக்க நிலப்பரப்பாகிய அல்சேசி (Alsace) நாட்டில் வாழும் மக்களாவர். இந்நாட்டின் வரலாறு பல போர்களைக் கொண்டதாகும். மேற்குச் செருமானியரும் பிரான்சு நாட்டவரும் இந்நிலப்பரப்பைத் தத்தம் ஆட்சியின்கீழ்க் கொண்டுவரப் பன்னெடுங்காலமாகப் போர் புரிந்துள்ளனர். இது கி.மு. முதல் நூற்றாண்டில் சூலியசு சீசரின் ஆட்சியின்போது கைப்பற்றப்பட்டு, கி.பி. 5–ஆம் நூற்றாண்டு வரை உரோமானியரால் ஆட்சி செய்யப்பட்டது. அலமான்னி (Alamanni} எனும் செருமானியப் பழங்குடிகளால் இப்பரப்பு கி.பி. 5–ஆம் நூற்றாண்டில் கைப்பற்றப்பட்டது. கி.பி. 1681–இல் பிரான்சின் 14–ஆம் லூயி (Louis XIV) அல்சேசிப் பகுதியைக் கைப்பற்றினார். செருமானியக் கிளை மொழியைப் பேசிவந்த அல்சேசிய நாட்டவர், கி.பி. 1648 – 1871 வரையுள்ள காலத்தில் பிரான்சின் பண்பாட்டோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். 20–ஆம் நூற்றாண்டில் மட்டும் அல்சேசிய நாட்டவர், தம் நாட்டுத் தன்மையை (Nationality) மூன்று முறை மாற்றிக் கொள்ள நேரிட்டது. கி.பி. 1870–ஆம் ஆண்டு முதல் 1918–ஆம் ஆண்டு வரை செருமானிய நாட்டவராகவும், 1918–ஆம் ஆண்டு முதல் 1940–ஆம் ஆண்டு வரை பிரான்சு நாட்டவராகவும், பின்னர் 1945–ஆம் ஆண்டு வரை செருமானியராகவும் வாழ்ந்தனர். பிரான்சின் இலோரய்ன் (Lorraine) பகுதிக்கும் மேற்குச் செருமனியின் எல்லையில் பாயும் இரைன் (Rhine) ஆற்றிற்கும் இடைப்பட்ட இன்றைய அல்சேசி நாடு, பாசு – இரைன் (Bas–Rhine), ஆட்–இரைன் (Haut - Rhine), பெல்போர்ட்டு (Belfort) எனும் மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. செருமானிய நாட்டின் எல்லையில் பாயும் நீண்ட இரைன் நதிப் பகுதியும் அல்சேசிய வடபகுதியும் பிரான்சு, மேற்குச் செருமனி ஆகிய நாடுகளின் கலகப் பகுதியாகவே காட்சியளிக்கின்றன.
அல்சேசி நாட்டவர்கள் பன்னெடுங்காலமாகப் பிரான்சு, மேற்குச் செருமனி ஆகிய நாட்டவரால் ஆளப்பட்டிருந்தும், தங்களைப் பிரெஞ்சு நாட்டவர் என்றோ செருமானியர் என்றோ கருதுவதில்லை. இவர்கள் தங்களை அல்சேசி நாட்டவர் என்றே கருதினர். நீண்டகாலமாக இரு நாட்டவராலும் துன்புறுத்தலுக்குள்ளானதே இதற்குக் காரணமாகும். அல்சேசி நாடு காடு நிறைந்த நிலப்பரப்பாக இருந்த போதிலும் தானிய வகைகள், புசையிலை, மதுபானம் போதைப் பொருள் ஆகியவற்றிற்கு மணமூட்டும் ஆப்சு (Hopes) முதலான பயிர் வகைகள் ஆகியவற்றை விளைவிக்கின்றனர். அல்சேசி நாட்டவர் வேளாண்மையிலும் காடுவளர்ப்பதிலும் மிகுந்த முன்னேற்றம் கண்டுள்ளனர். அல்சேசியர் விருந்தோம்பும் பண்பினர்; பன்றி இறைச்சி உண்பதில் விருப்புடையர். சமயப் பற்று மிகுந்த இவர்களுள் பெரும்பாலானவர்கள் உரோமன் கத்தோலிக்கப் பிரிவையும் குறைந்த எண்ணிக்கையினர் புராட்டசுடண்டு பிரிவையும் சார்ந்துள்ளனர். இருப்பினும், கோயில், மலைத் தெய்வம் முதலானவற்றையும் வழிபடுகின்றனர். தூய ஓடைல் (St. Odile) தலம் இவர்களால் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.
இலொரய்ன் பகுதியில் செருமானியக் கிளை மொழியும் பெரிய நகரப் பகுதிகளில் பிரான்சு மொழியும் பேசப்படுகின்றன. இன்றைய நிலையில் அல்சேசிய நாட்டவர் தொழிற்றுறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளனர். எஃகு, ஆடை, காகிதம், கண்ணாடி, முதலான தொழில்களில் இவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 843)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4andy7hd/
தமிழ்“அல்சேசிய நாட்டவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4andy7hd/APA
Oliyon Research. (2026). அல்சேசிய நாட்டவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4andy7hd/MLA
"அல்சேசிய நாட்டவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4andy7hd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment