இராமசாமி, வ
irāmacāmi, va
முற்போக்குச் சிந்தனையாளரும், பாரதியின் புகழ் பரப்பியவரும், புகழ் வாய்ந்த பத்திரிகையாசிரியரும், தமிழ் உரைநடை வளர்ச்சிக்குப் பணி புரிந்தவரும் ஆவார்.
முற்போக்குச் சிந்தனையாளரும், பாரதியின் புகழ் பரப்பியவரும், புகழ் வாய்ந்த பத்திரிகையாசிரியரும், தமிழ் உரைநடை வளர்ச்சிக்குப் பணி புரிந்தவரும் ஆவார். இவர் திருவையாற்றையடுத்த திங்களூரில் வரதராச ஐயங்கார், பொன்னம்மாள் ஆகியோருக்கு 17.9.1889–இல் பிறந்தார். தஞ்சையிலும் திருச்சியிலும் கல்லூரிக் கல்வி பயின்றார். நாட்டு விடுதலைப் போரில் ஈடுபட்டுப் படிப்பை நிறுத்திவிட்டார்.
புதுச்சேரி சென்று அரவிந்தருக்குத் தொண்டு செய்தார். அங்குப் பாரதியாரின் தொடர்பு ஏற்பட, ஆசிரமப் பணியை விடுத்து அரசியலில் வேகத்துடன் ஈடுபட்டார். சென்னை வந்து, ‘தமிழ்நாடு’, ‘ஊழியன்’, ‘ஸ்வராஜ்யா’ ஆகிய இதழ்களில் ஆசிரியராக முறையே பணியாற்றினார். இவர் 1930–இல் உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார். பின், தஞ்சையிலிருந்து ‘சுதந்திரன்’ என்ற இதழை நடத்தினார். அடுத்து 1933–இல் கு. சீனிவாசன், தெ.ச. சொக்கலிங்கம் ஆகியோருடன் சேர்ந்து ‘மணிக்கொடி’ வார இதழைத் தொடங்கி நடத்தினார். இவர் 1935–இல் இலங்கை சென்று ‘வீரகேசரி’ இதழின் ஆசிரியரானார். அக்காலத்தில் புவனேசுவரி என்ற பஞ்சாபிப் பெண்ணை மணந்து கொண்டார். தமிழ்நாடு திரும்பி, 1943–இல் ‘பாரத தேவி’ ஆசிரியராகிச் சில காலம் பணியாற்றியபின், 1951–இல் காலமானார்.
இவர் பெண்ணுரிமை பேணல், சாதி வேறுபாட்டை ஒழித்தல், மொழி வளர்ச்சி ஆகியவற்றில் ஈடுபாடுடையவர். விதி, பாவ புண்ணியம், மாயை, நிலையாமை, ஊழ் ஆகியவற்றில் கொண்ட நம்பிக்கை இந்தியர்களை வலிமையற்றவர்களாக்கி விட்டதெனக் கருதினார். ‘துட்டனைக் கண்டால் தூர விரட்டு’, ‘அஞ்சாமல் தனிவழியே போக வேண்டும்’ என்பன இவர் படைத்த புதுமொழிகள். சாதி மரபுகளைக் கைவிட்டமையால் உறவினரும் சாதியாரும் இவரைப் புறக்கணித்தனர். எனினும், வேறுபட்ட கொள்கையினரும் ‘அக்கிரகாரத்து அதிசயப் பிறவி’, ‘எழுத்துலகின் இரணவைத்தியர்’, ‘தமிழ்நாட்டின் முதல் எழுத்தாளர்’ என இவரைப் பாராட்டினர்.
‘காந்தி’ இதழில் இவர் எழுதிய பாரதியார் வரலாற்றுத் தொடர் ‘மகாகவி பாரதியார்’ என்னும் நூலாக வெளிவந்தது. இந்நூலில் அரிசன இளைஞர் கனகலிங்கத்துக்குப் பாரதியார் பூணூல் அணிவித்த செயல், காந்தியடிகள்–பாரதியார் சந்திப்புப் போன்ற தாம் நேரில் கண்ட அரிய நிகழ்ச்சிகள் முதலியவற்றை விவரித்துள்ளார்.
இவரது ‘மணிக்கொடி’ இதழ் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்குப் பெரும்பணி புரிந்தது. புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, பி.எசு. இராமையா, கு.ப. இராசகோபாலன், சி.சு. செல்லப்பா முதலிய சிறந்த சிறுகதையாளர்கள் இதில் எழுதினர். தமிழ்ச் சிறுகதை வரலாற்றாசிரியர்கள் இவர்களை ‘மணிக்கொடி எழுத்தாளர்கள்’ எனவும், இவ்விதழ் வெளி வந்த காலத்தை ‘மணிக்கொடி காலம்’ எனவும் குறிப்பிடுவர். பாரதிதாசனின் பல சிறந்த பாடல்கள் முதன்முதலில் ‘மணிக்கொடி’யில் வெளிவந்தன.
வ.ரா. எழுதிய ‘சுந்தரி’ கைம்பெண் மணத்தை வலியுறுத்தும் உயிரோட்டமுள்ள புதினம். இவர் எழுதிய ‘கோதைத்தீவு’ பெண்களே ஆட்சி செய்து, ஆணும் பெண்ணும் சமமாக வாழும் ஒரு நாட்டை இருவர் சென்று கண்டு புகழ்வதாகப் புனையப்பட்டது.
இவரது உரைநடையில் பாரதியாரின் தெளிவையும் வேகத்தையும் காணலாம். ஆங்கிலச் சொற்களைத் தமிழில் கலந்து எழுதுவதை இவர் கடிந்தார். எளிய மக்களுக்கும் புரியுமாறு எழுத வேண்டும் என்பது இவர் கொள்கை, ‘வாழ்க்கைச் சித்திரம்’, ‘தமிழ்ப் பெரியார்கள்’ ஆகிய நூல்களில் இவரது உரைநடையின் அழகைக் காணலாம். ந.மெ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 107)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/434bnc65/
தமிழ்“இராமசாமி, வ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/434bnc65/APA
Oliyon Research. (2026). இராமசாமி, வ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/434bnc65/MLA
"இராமசாமி, வ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/434bnc65/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment