மனித இனத்தில் ஒரு சிலரை மற்றவர் தம் உடைமைப் பொருளாக வைத்திருக்கும் நிலை அடிமைநிலை (slavery) எனப்படும். பழங்காலத்தில் போரில் தோல்வியுற்றுச் சிறைப்படுத்தப்பட்டோர் யாவரும் கொல்லப்பட்டனர். காலம் செல்லச் செல்ல இம்முறை மாறிப் போரில் தோற்றவர் அடிமைகளாக்கப்பட்டனர். போரில் தோல்வி பெற்ற நாட்டைச் சேர்ந்த பெண்கள் மட்டும் பிடிக்கப்பட்டுக் கொல்லப்படாமல் வென்றவர்களால் அடிமைகள் ஆக்கப்பட்டு வந்தனர். இம்முறை மாறித் தோல்வியுற்ற படையினர் யாவரும் அடிமைகள் ஆக்கப்படும் நிலைமை பின்னர்த் தோன்றியது. இத்தகைய அடிமை முறை உலகெங்கிலும் பரவலாக இருந்து வந்தது. இதற்குச் சான்றாகப் பண்டைய சுமேரிய மொழியில் அடிமைப் பெண் என்பதைக் குறிக்கும் சொல் “வெளிநாட்டிலிருந்து வந்த பெண்” என்னும் பொருள்படுவதாக இருந்ததைக் குறிப்பிடலாம். ஆண் அடிமைக்குப் பண்டைய சுமேரிய மொழியில் இத்தகைய சொல் இல்லை. அடிமை முறை பண்டைய பாபிலோனிய நாட்டில் நிலவி வந்ததாகவும் பண்டைய உரோமானிய நாட்டில் அடிமைகளின் எண்ணிக்கை உரோமானியக் குடிமக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது. கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட உரோமானியச் சட்டம் அடிமை முறை என்னும் சொல்லுக்கு “இயற்கைக்கு மாறாக ஒரு மனிதன் சட்டப்படி மற்றவனுடைய சொத்தாக மாறிவிடும் முறை” ஆகும் என்று இலக்கணம் கூறுகிறது. பண்டைய உரோமானியப் பேரரசை வலுப்படுத்துவதற்கும் உரோமானிய நாட்டின் ஆக்கப் பணிகளுக்கும் ஆதாரமாக அடிமைகளே இருந்தனர். உரோமானியப் பேரரசின் மாபெரும் தோட்டங்களிலும் பண்ணைகளிலும் அடிமைகள் வேலை செய்தனர். கி.மு. 73 முதல் கி.மு. 71 வரை இசுபார்ட்டகசு (spartacus) என்னும் உரோமானிய அடிமை, உரோமானியப் பேரரசை எதிர்த்துப் பல்லாயிரக் கணக்கான அடிமைகளை ஒன்று திரட்டிப் போராடித் தோல்வியுற்றான். தோல்வியுற்ற ஆயிரக்கணக்கான அடிமைகள் கொதிக்கும் எண்ணையில் எரிக்கப்பட்டனர். எஞ்சியிருந்த அடிமைகள் சிலுவையில் அறையப்பட்டனர். அகசுடசு சீசர் (Augustus Caesar) என்னும் உரோமானியத் தலைவர் அடிமைகளின் நிலையை ஓரளவு சீர்திருத்தினார். அடிமை முறையின் இழிவு, அநீதி இவைகளை மக்கள் உணர்ந்திருந்த போதிலும் பொருளாதாரக் காரணங்களை முன்னிட்டு உலகெங்கிலும் அடிமை வாணிகம் தொடர்ந்து வந்தது. உரோமானிய நாடுகளில் “கிளேடியேட்டர்கள்” (Gladiator) எனப்படும் அடிமை மல்லர்களைக் குடிமக்களின் மன மகிழச்சிக்காக ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு மடிய வைத்து உரோமானிய மக்கள் அதனைக் கண்டுகளித்தனர். உரோமானியக் குடிமக்களில் எவரேனும் இறந்துவிட்டால் அவனுடைய அடிமைகள் கசையடியினால் கொல்லப்பட்டனர். அடிமைகள் இரும்புச் சங்கிலிகளினால் பிணைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தனர். அடிமைப் பெண்கள் அவர்களுடைய தலைவர்களுடைய வீட்டு வேலைகளைச் செய்ததோடன்றித் தங்கள் உடைமையாளரின் காம இச்சைக்கும் ஆளாக்கப்பட்டனர். உரோமானியச் சட்டம் அடிமைகளைத் தனி மனிதர்களாக மதிக்கவில்லை. அடிமைகளின் சொந்தக்காரர்கள் அடிமைகளைச் சித்திரவதை செய்யலாம், அடித்துத் துன்புறுத்தலாம் என்ற சட்ட அனுமதி இருந்தது. ஓமர் (Homer) என்னும் கிரேக்கக் கவிஞரின் சுவிதைகளில் அடிமைகளைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. பண்டைய கிரேக்கக் குடியரசுகளில் அடிமைகள் தொழில் வல்லுநர்களாகவும் கைவினைஞர்களாகவும் திகழ்ந்தனர். அவர்களுக்கு அரசியலிலோ சமூக வாழ்விலோ எவ்வித உரிமையும் இல்லை. இவர்களை ஒதுக்கிவிட்டு மற்றவர்கள் நடத்தும் அரசிற்குத்தான் மக்களாட்சி என்று அவர்கள் பெயரிட்டனர். அடிமைகள் குடிமக்களாகக் கருதப்படவில்லை. இசுபார்ட்டாவில் இலெட்டுகள் என்னும் அடிமைகள் மிக இழிவான நிலையில் நடத்தப்பட்டு வந்தனர். அரிசுட்டாட்டில் என்னும் கிரேக்க அறிஞர் அடிமை முறையை எதிர்த்தார். கி.மு. 12-ஆம் நூற்றாண்டில் எழுதத்தொடங்கி கி.மு. 2-ஆம் நூற்றாண்டில் முடிக்கப் பெற்ற மானவ தரும சாத்திரம் என்ற நூல் பின்வரும் ஆறுவிதமான பணியாட்கள் அடிமைகள் என்று குறிப்பிடுகிறது. : போர்க்காலத்தில் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள். : உணவு, உடை, இல்லம் இவற்றிற்காக மற்றவர்களிடம் பணியாட்களாக இருப்பவர்கள். : மற்றவர்களால் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வாங்கப்பட்டவர்கள். : அடிமைப் பெண்களின் குழந்தைகள். : தோட்டங்களை வாங்கும் பொழுது அவற்றுடன் வாங்கப்பட்டவர்கள். : தாம் வாங்கிய கடனைத் திருப்பித் தர இயலாத காரணத்தினால் அடிமை ஆக்கப்பட்டவர்கள். மேற்குறிப்பிட்ட ஆறுவிதமான அடிமைகளை எவரும் தங்கள் உடைமையாளரின் விருப்பப்படி கொடுமைகளுக்கு ஆளாக்கவில்லை என்பது முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் மானவ தரும சாத்திரம் அடிமைகள் எவ்வாறு நடத்தப்படவேண்டும் என்பதைத் திட்டவட்டமாக வரையறுத்துக் கூறியுள்ளது. இன, சாதி அடிப்படையில் சமுதாயத்தில் மக்கள் பாகுபாடு செய்யப்பட்டனர். இத்தகைய பல்வேறு சாதிகளுக்குத் தனிப்பட்ட ஒழுங்குமுறைகளும், சட்ட திட்டங்களும் இருந்தன. சூதாட்டத்தில் தோற்றவர்கள் வென்றவர்களுக்கு அடிமையாகும் பழக்கம் பண்டைய இந்தியாவில் இருந்து வந்தது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோல்வியுற்றவுடன் ஆட்டத்தில் வென்றவர்களால் அடிமைகளாக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டு, 12 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்தனர். தாம் வாங்கிய கடனைத் திருப்பித் தர இயலாமல் தாமே கடன் கொடுத்தவருக்கு அடிமையாகும் பழக்கமும் இருந்துவந்தது. இதே காரணத்தை முன்னிட்டுச் சிலர் தம் நெருங்கிய உறவினரை விற்கும் பழக்கமும் இருந்து வந்தது. பண்டைய சீன, சப்பானிய நாடுகளிலும் அடிமை முறை பழக்கத்தில் இருந்து வந்ததாக வரலாறு கூறுகிறது. அந்நாடுகளில் அடிமைகள் விற்கப்பட்டும் வாங்கப்பட்டும் வந்தனர். பௌத்த மதம் சீனத்தில் பரவத் தொடங்கிய காலத்திற்குப் பின் சகிப்புத் தன்மை, இரக்கம் போன்ற கருத்துகள் பரவலாயின. அடிமை முறை இயற்கைக்கு விரோதமானது என்பதை அந்நாட்டு மக்கள் நாளடைவில் உணர்ந்தனர். அடிமை முறை சீன நாட்டில் ஒழிந்தபின்னரும், பல நூற்றாண்டுகள் வரையில் சீனப் பெண்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர். அவர்களுக்கு அடிமைகள் என்ற பெயர் இல்லாத போதிலும் நடைமுறை வாழ்க்கையில் சீனப் பெண்கள் பல நூற்றாண்டுகளாக அடிமைகளாகவே நடத்தப்பட்டு வந்தனர். இரண்டாம் உலகப் போருக்குப்பின் நிகழ்ந்த சீனப் பொதுவுடைமைப் புரட்சிக்குப் பின், இந்நிலை மாறத் தொடங்கியது. இசுலாமிய நாடுகளில் அடிமைகள் ஆண்மை அழிக்கப்பட்டு அரண்மனையைச் சேர்ந்த அந்தப்புரத்தில் பணியாட்களாகவும், பல்வேறு பொறுப்புகளை வகிப்பவர்களாகவும் இருந்துவந்தனர். வேறுசில இசுலாமிய நாடுகளில் அடிமைகள் தம் உடைமையாளர்களால் உயர்ந்த நிலைமைக்கும் கொண்டுவரப்பட்டனர். கி.பி. 1250 முதல் 1517-ஆம் ஆண்டு வரையில் எகிப்து நாட்டை ஓர் அடிமை மரபு (Slave Dynasty) அரசாட்சி செய்தது. இதைப் போன்று இந்தியாவிலும் முகம்மதியர்கன் ஆட்சிக் காலத்தில் சில காலம் அடிமை மரபினர் அரசாண்டனர். அடிமைகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் பல நூற்றாண்டுகள் வரையில் மறையவில்லை. ஆட்டோமன் துருக்கியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் இடையே சிலுவைப் போர் தொடர்ந்து நடந்து வந்தது. சிலுவைப் போர்களில் ஆட்டோமன் துருக்கியப் படையினர் தோற்கடிக்கப்பட்டுக் கிறித்தவர்களால் சிறைபிடிக்கப்பட்டனர். இப்போர்க் கைதிகள் முதலாம் இரிச்சர்டு (Richard I) என்னும் இங்கிலாந்து அரசரால் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். துருக்கியக் கைதிகளுள் சிலர், கிறித்தவ நாடுகளில் அடிமைகளாக்கப்பட்டனர். அடிமை முறைக்கு ஓரளவு இணையான பண்ணையாள் முறை (Serfdom) ஐரோப்பாவில் பல நூற்றாண்டுகள் நிலவி வந்தது. பண்ணையாட்கள் அடிமைகளைப்போல விற்கப்படவும் வாங்கப்படவும் இல்லை. ஆனால் அவர்களது வாழ்க்கைமுறை, வேலைப்பாங்கு இவை யாவும் அடிமை நிலையை ஓரளவு ஒத்து இருந்தன. தங்கள் நிலமானியப் பிரபுக்கள் (Feudal Lords) எத்தகைய கொடுமைகளையும், அநீதிகளையும் அவர்களுக்கு இழைத்தாலும் அவர்களால் அவற்றை எதிர்க்கவோ அரசனிடம் சென்று முறையிடவோ முடியாது. இது மட்டுமின்றி நிலமானியப் பிரபுக்கள் அழைக்கும் பொழுதெல்லாம் மறுக்காமல் வந்து, அவர்களுக்காக போரிட்டு மடியவேண்டும். அவர்களுக்கு இழைக்கப்பட்டசமூக அநீதிகள் கணக்கில் அடங்கா, நிலமானியத் திட்டத்தில் சமுதாயத்தின் அடித்தளத்தில் இருந்த பண்ணையாட்கள் (Serf) நிலமானியப் பிரபுக்களின் கொடுமைகளைத் தாங்காமல் காடுகளில் ஓடி ஒளிந்து வாழ முயன்றனர். இவ்வாறு ஓடியவர்கள் பிடிக்கப்பட்டுக் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டனர். நிலமானியத் திட்டம் கி.பி. 14-ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பாவெங்கிலும் அழிந்து வரத் தொடங்கியது. இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, இசுபெயின் (Spain) போன்ற நாடுகளில் கொள்ளை நோய் ஒன்று (Black Death) பரவிப் பல்லாயிரக்கணக்கான நிலமானியப் பண்ணையாட்களை அழித்துவிட்டது. ஆயினும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நிலமானிய முறை 19-ஆம் நூற்றாண்டு வரையில் நீடித்து இருந்தது. போலந்து, பொகீமியா, அங்கேரி, உருசியா போன்ற நாடுகளில் வேளாண்மை செய்து வந்தவர்கள் அடிமைத்தளையிலிருந்து கி.பி. 19-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில்தான் விடுபட்டனர். உருசியாவில் நிலமானியத் திட்டம் மறைந்தபிறகும் சார் அரசர்களின் ஆட்சிக் காலத்தில், வேளாண் குடிமக்கள் அடிமைகளை ஒத்த நிலைமையிலே வாழ்ந்து வந்தனர். 1917-ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சிக்குப் பின் இந்த நிலைமை மாறியது. போர்த்துகீசிய மாலுமிகள் மூலம் கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அடிமை வாணிகம் ஐரோப்பாவிலும் வடஅமெரிக்காவிலும் மிக விரைவாகப் பரவியது. ஆப்பிரிக்காவில் நைசீரியாவிலும், கினியா நாட்டுக் கடற்கரைகளிலும் போர்த்துகீசியர்கள், ஆப்பிரிக்- கர்களை விலங்குகளைப் போன்று வேட்டையாடிப் பிடித்து, இரும்புச் சங்கிலியால் பிணைத்துத் தங்கள் கப்பல்களில் ஏற்றி, ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவில் இருந்த இசுபானியர்களின் (Spaniards) தோட்டங்களிலும் வேலை செய்வதற்காக அடிமைகளாக விற்றுவந்தனர். வட அமெரிக்காவில் பருத்தித் தோட்டங்களில் ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் வேலை செய்வதற்கு அடிமைகளாக விற்கப்பட்டனர். கி.பி. 1754-ஆம் ஆண்டு அமெரிக்காவில் 2,63,000 ஆப்பிரிக்க அடிமைகள் இருந்தனர். இவர்கள் பருத்தித் தோட்டங்களைத் தவிர வெர்சீனிய மாநிலத்தில் புகையிலைத் தோட்டங்களிலும் அமெரிக்கர்களின் வீடுகளிலும் வேலை செய்தனர். வட அமெரிக்காவில் நீக்கிரோக்கள் அடிமைகளாக ஏலத்தில் விற்கப்பட்டும் வாங்கப்பட்டும் வந்தனர். அடிமைகளை வாங்குவதும் அவர்களைத் தம் உடைமைப் பொருள்களாக வைத்திருப்பதும் வட அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களைச் சேர்ந்த தோட்டச் சொந்தக்காரர்களுக்கு ஒரு சமூக மதிப்பு நிலையாகக் கருதப்பட்டு வந்தது. தெற்கு மாநிலங்களில் ஒருவர் எத்தனை அடிமைகளைத் தம் சொந்தப் பொருள்களாக வைத்திருந்தார் என்பதே அவரது சமூக மதிப்பு நிலைக்கு ஓர் அளவுகோலாக இருந்தது. வடமாநிலங்கள் அடிமை நிலையை எதிர்த்தன. ஆபிரகாம் இலிங்கன் குடியரசுத் தலைவர் பதவிக்கு வருவதற்கு முன், அடிமைகளை விடுதலை செய்தல் என்னும் சிக்கல், உள்நாட்டுப் போருக்கு ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. கி.பி. 1861-ஆம் ஆண்டு அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியபோது, அமெரிக்காவில் இருந்த அடிமைகளின் எண்ணிக்கை 44,41,830 ஆகும். நீக்கிரோ அடிமைகள் அமெரிக்காவின் துறைமுகங்களிலும் சுரங்கங்களிலும் காடுகளிலும் வேலை செய்து வந்தனர். அடிமைகள் ஏலத்தில் விற்கப்படுவதும் வாங்கப்படுவதும் மிகச் சாதாரணமான நிகழ்ச்சியாக இருந்தது. கி.பி. 1863 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் முடிவில் ஆபிரகாம் இலிங்கனின் பெரு முயற்சியால் அமெரிக்க நீக்கிரோக்கள் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டனர். இதனைப் பொறுக்காத அமெரிக்கத் தெற்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவனால் ஆபிரகாம் இலிங்கன் கி.பி. 1865-ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்க நீக்கிரோக்கள் அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட போதிலும், தங்களுக்குக் கிடைத்த உரிமையை முழுமையாக அனுபவிக்க முடியாமல் பல ஆண்டுகள் அவதியுற்றனர். அமெரிக்க நீக்கிரோக்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருந்ததும், அவர்களை அமெரிக்க வெள்ளையர்கள் தங்களுக்குச் சமமானவர்களாக ஏற்றுக்கொள்ளாமல் இருந்ததும், இந்த நிலைமைக்கு முக்கியமான காரணங்களாகும். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் குவேக்கர் (Quaker) என்னும் பிரிவினர், அடிமை விடுதலைக்காகப் பாடுபட்டனர். விடுதலை பெற்ற அடிமைகள் வட அமெரிக்காவில் ஒற்றுமையின்றி, வாழ வழியின்றிச் சமுதாயத்தின் அடித்தளத்திலேயே இருந்துவந்தனர், இவர்களை ஒற்றுமைப்படுத்தி இவர்களின் நலனுக்காகப் பாடுபட்டவர் பலர். இவர்களுள் மிக முக்கியமானவர் மார்ட்டின் உலூதர் கிங் (Martin Luther King) என்னும் அமெரிக்க நீக்கிரோ ஆவார். இவர் அடிமைகளின் ஒற்றுமைக்காக மகாத்மா காந்தியின் இன்முறை வழியில் போராட்டம் நடத்தினார். இவர் வெள்ளை அமெரிக்கர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஐரோப்பிய நாடுகள் கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அடிமை வாணிகத்தை எதிர்த்து மும்முரமாகப் போரிட்டன. முதலாம் உலகப்போரின் இறுதியில் அமைக்கப்பட்ட உலக நாடுகள் குழுவும் (League of Nations) உறுப்பாக இருந்த அதன் உலகத் தொழிலாளர்களின் அமைப்பும் அடிமை வியாபாரத்தை உலகெங்கிலும் இருந்து ஒழித்துக்கட்ட உறுதி கொண்டன. 1924-ஆம் ஆண்டு இக்குழு ஒரு தற்காலிக அடிமை விசாரணைக் குழுவை அமைத்தது. இக்குழு உலகமெங்கிலும் இருந்த அடிமைகளின் நிலைகள் பற்றி ஆராய்ந்து அவர்கள் விடுதலைக்கான பரிந்துரைகளைச் செய்தது, உலகத் தொழிலாளர்கள் அமைப்பு, அடிமை முறையை எதிர்த்துப் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது. மேலை நாடுகளில் அடிமை வாணிகமும் அடிமை முறையும் ஒழிந்த பின்னரும் செருமானிய நாசிகள் (German Nazis) ஆட்சியில் அடிமைமுறை மறுபடியும் தலைதூக்கத் தொடங்கியது. 1939 ஆம் ஆண்டு 20,000 யூதர்களைச் (Jews) செருமானிய நாசி அரசு பிணைக் கைதிகளாக வைத்திருந்தது. அவர்களில் பல்லாயிரக்கணக்கான யூதக் கைதிகள் நாசிப் படையினரின் கட்டாயப் பணிக்கிடங்குகளில் (Nazi Labour Camps) அடிமைகளாக்கப்பட்டனர். இரண்டாம் உலகப்போர் தொடங்கியவுடன் அதன் ஆரம்ப ஆண்டுகளில், கோடிக்கணக்கான ஐரோப்பிய மக்கள் அடிமைகளாக்கப்பட்டு நாசிப் படைகளுக்காக உழைத்தனர். இவர்களை நாசிப்படையினர் பலவிதமான-கணக்கில் அடங்காத-எழுத்தில் வடிக்க இயலாத-கொடுமைகளுக்கு ஆளாக்கிக் கொன்றுகுவித்தனர், நாசிப்படையினர் கட்டாயப் பணிக்கிடங்குகளில் இருந்த போர்க் கைதிகளுக்கு இழைத்த கொடுமைகள் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் செருமனியின் வீழ்ச்சிக்குப் பிறகு உலக மக்களுக்கு வெளியாயின. புகழ் பெற்ற நூரம்பர்க்கு விசாரணையின் (Nuremberg Trials) மூலம் இவற்றை உலக மக்கள் அறிந்தனர். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் மனித சமுதாயம், மனிதனின் அடிப்படை உரிமைகளைப்பற்றி உணர்ந்து விழித்துக் கொண்டது. ஐ.நா.-வின் பொதுச் சபை (General Assembly) அதன் மூன்றாம் கூட்டத்தில் (1948) அனைத்துலக மனித உரிமை அறிக்கையை ஏற்றுக்கொண்டது. இந்த அறிக்கையின்படி “அடிமையாகவோ அடிமை நிலையிலோ எவரும் வைக்கப்படக் கூடாது, அடிமைநிலையும் அடிமை வாணிகமும் உலகெங்கிலும் அனுமதிக்கப் படக்கூடாது”. கி.பி. 1843–ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அடிமை முறை சட்டப்படி ஒழிக்கப்பட்டு விட்டது. இதற்குப் பின் முகமதியர்களிடையேயும் அடிமைநிலை நீங்கிவிட்டது. இந்தியக் குற்றச் சட்டத்தின் 370, 371–ஆம் பிரிவுகளின்படி அடிமைகளை வைத்திருப்பதும், அடிமை வாணிகம் செய்வதும் தண்டனைக்கு உரிய குற்றங்களாகும். கொத்தடிமை முறை அடிமை முறை மறைந்த பின் அதனை ஒத்த கொத்தடிமை முறை இந்தியாவிலும், வேறு பல நாடுகளிலும் இருந்து வந்தது. நிலத்தில் பாடுபடும் பண்ணை ஆட்கள் வறுமை காரணமாகத் தம் நிலச் சொந்தக்காரரிடம் கடன் வாங்கும்பொழுது அவர் பணியாளரிடமிருந்து கொத்தடிமை ஒப்பந்தம் ஒன்று செய்துகொள்வார். இந்த ஒப்பத்தத்தின்படி பணியாள், நிலவுரிமையாளர் வீட்டிலும் நிலத்திலும் ஊதியமின்றி உழைப்பர். ஒரு கொத்தடிமை (Bonded labourer) இறந்துவிட்டால், அவன் சந்ததியினர் உடைமையாளனுக்கு அடிமைகள் போல் உழைப்பர். அவர்கள் வீட்டுப் பெண்களை உடைமையாளர் கற்பழிப்பது, மிகச் சாதாரண நிகழ்ச்சியாக இருந்தது. கொத்தடிமைகள் கல்வி அறிவின்மை, வறுமை ஆகிய காரணங்களினால் தமக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்க்க இயலாமல் அவதியுற்றனர். இந்திய அரசு இருபது அம்சத் திட்டத்தின் மூலம் கொத்தடிமைகளுக்கு விடுதலை வழங்கியது. கொத்தடிமைகளாகப் பணியாட்களை வைத்திருப்பதும் ஒழிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கொத்தடிமை முறை பல்வேறு வடிவங்களில் தலைதூக்குகிறது. ஒப்பந்தத் தொழில் (Contract Labour) என்னும் முறையில் பல முதலாளிகள் இன்னும் பணியாட்களைக் கொத்தடிமை நிலையில் வைத்து வேலை வாங்குகின்றனர், அதிக ஊநியம் கொடுப்பதாக வாக்குறுதியளித்துப் பணியாட்களை, அவர்கள் குடும்பத்துடன் வேற்றூர்களுக்கு அழைத்துச் சென்று, கொத்தடிமை நிலையில் மிகக் குறைந்த ஊதியம் கொடுத்து நீண்ட நேரம் வேலைவாங்கி வதைக்கின்றனர். இந்தச் சமுதாயக் கொடுமைக்கு எதிராகப் பல சமூக நிறுவனங்களும் இயக்கங்களும் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசும் இந்தக் கொத்தடிமை முறையையும் ஒப்பந்தப் பணியின் கொடுமைகளையும் ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.எஸ்.கோ. துணை நூல்கள் Filler Louls, “The Crusade Against Slavery”, Harper, New York, 1960. Fonlay, M.I., “Between Slavery Freedom”, Comparative Studies Slavery & History, 1964.