ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு முனிவர்களால் ஆக்கப்பட்டது. அது இருக்கு வேதம், யசுர்வேதம், சாமவேதம், அதருவண வேதம் என நால்வகைப்படும். அவற்றுள் இருக்கு வேதம் ஆரியர்களின் முதல் இலக்கியம். அது செய்யுள் வடிவில் அமைந்த மந்திரங்கள், உரைநடையில் அமைந்த பிராம்மணங்கள் என இரு வகைப்படும். மந்திரங்கள், வேள்விகள் நடைபெறும்போது இந்திரன், வருணன், அக்கினி முதலான தேவதைகளை விளித்துத் துதி செய்யப் பயன்படுவன. இவ்வாறு விளிக்கின்றவர் ஓதா எனப்படுவார். பிராம்மணங்களின் முதற்பகுதி மந்திரங்களின் பொருளையும் வேள்வியின் செயல் முறையையும் விளக்குவனவாகும். இரண்டாம் பகுதி வானப்பிரத்தர்களின் தருமத்தைக் கூறும். இது ஆரணியகம் எனப்படும். மூன்றாம் பகுதி ஆன்மாவின் தன்மையை ஆயும், இது உபநிடதம் எனப்படும். வேத வியாசர் நான்கு வேதங்களையும் நான்கு சீடர்களுக்கு உபதேசித்தார் என்றும், அச்சீடர்கள் தத்தம் வேதத்தைப் பல சாகை (கிளை)களாகச் செய்யும் போது அவை அவர்களின் பெயர்களால் வழங்கப்பட்டன என்றும் கூறப்படுகிறது. மாபாடியம் எழுதிய பதஞ்சலி இருக்குவேதத்திற்கு இருபத்தொரு கிளைகள் இருந்தன என்று கூறியுள்ளார். இப்போதுள்ள சாகைகள் காகலம், வாசுகலம் என்ற இரண்டே. இவ்வேதத்திற்குக் கந்தசுவாமி, வேங்கட மாதவர், சாயனர் ஆகியோர் உரை எழுதியிருக்கின்றனர். வேத மந்திரங்கனின் தொகுப்பைச் சம்கிதை என்பர். இருக்குவேத சம்கிதை எட்டு அட்டகங்களாகவும், ஒவ்வோர் அட்டகமும் எட்டு அத்தியாயங்களாகவும், ஒவ்வோர் அத்தியாயமும் பல வருக்கங்களாகவும், ஒவ்வொரு வருக்கமும் பெரும்பாலும் ஐந்து இருக்குகளைக் கொண்டதாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. மற்றொரு வகையில் இவ்வேதம் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மண்டலமும் பல சூக்தங்களாகவும், ஒவ்வொரு சூக்தமும் பல இருக்குகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இச்சம்கிதையில் 1029 சூக்தங்களும், 10415 இருக்குகளும் உள்ளன. ஒவ்வொரு சூக்தத்திலும் அதனை ஆக்கிய முனிவர், துதிக்கப்படும் தேவதை, ஆளப்பட்டிருக்கும் யாப்பு (சந்தம்) ஆகியவற்றின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் மண்டலங்கள் 2 முதல் 7 வரை பழைமையானவை எனவும், முதல் மண்டலத்தின் முற்பகுதி பிற்பகுதிகள், 8–ஆம் மண்டலம், சோம் தேவதையைப் பற்றிய 9–ஆம் மண்டலம், 10–ஆம் மண்டலம் ஆகியவை பின்னர்ச் சேர்க்கப்பட்டிருக்கக் கூடும் எனவும் மேனாட்டாராய்ச்சியாளர் கூறுவர். இருக்குவேத சம்கிதை இன்றுவரை மாற்றமின்றி இருப்பதற்குக் காரணம் பதபாடம், கிரமபாடம், சடைபாடம், கனபாடம், பிராதிசாக்கியம், அனுக்கிரமணிகை முதலிய துணை நூல்களால் மந்திரங்கள் திட்டவட்டமாக வரையறை செய்யப்பட்டிருப்பதேயாகும். இருக்குவேத மந்திரங்களால் போற்றப்படும் அக்கினி, இந்திரன், வருணன், சவிதா முதலான தேவதைகளுள் பெரும்பாலானவை இயற்கைச் சார்புடையனவே என்று மேனாட்டார் – கூறுவர். இத்தேவதைகள் அக்கினி, பிருதிவி போன்ற பூலோக தேவதைகள் என்றும், சூரியன், அசுவினி போன்ற தேவலோக தேவதைகள் என்னும், இந்திரன், வருணன் போன்ற இரண்டிற்கும் இடைப்பட்ட அந்தரிட்சலோக தேவதைகள் என்றும் மூவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். மாந்தரின் பண்புகள், பலமந்திரங்களில் தேவதைகளுக்கு ஏற்பட்டிருப்புதைப் பார்க்கலாம். அக்கினியைப் போற்றும் ஒரு முனிவர், ‘ஓ அக்கினி தேவனே! தந்தை மகனிடம் பரிவு காட்டுவது போல் எளிமையாக எங்களுடன் இருக்க வேண்டும், எங்களுக்குப் பொருளும் வளமும் வான் புகழும் வீர புத்திரர்களும் அருள்வீராக’ என்று வேண்டுகிறார். உருத்திரனை வேண்டும்போது நோயைப் போக்கும் தலை சிறந்த மருத்துவர் என்று குறிப்பிட்டு, அவர்தம் அம்புகள் தம்மைத் தவிர்த்து எதிரிகளைத் தாக்குவதாக என்று வேண்டுகின்றார். சில இருக்குவேத மந்திரங்களில் காவியச் சுவையைக் காணலாம். விடியற்காலைப் பொழுதை ‘உச்சு’ என்ற தேவதையாக ஆரியர்கள் வழிபட்டிருக்கின்றனர். இத்தேவதையை எழில் மிக்க ஆரணங்காக உருவகப்படுத்தி வருணிக்கிறார் ஒரு முனிவர். அவள் கடல் அலைகளைப் போல் வெண்மையான ஒளியுடன் மிளிர்கிறாள். அவளுடைய ஒளி வானை நோக்கிப் பிரிகிறது. எழிலார்ந்த மார்பகத்தைக் கொண்ட அவள் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொள்கிறாள். வில்லேந்திய வீரனைப் போல் எதிரியாகிற இருளைத் துரத்தியடிக்கிறாள். தங்களுக்கு வளத்தைக் கொண்டு வந்து சேர்க்குமாறு முனிவர் அவளை வேண்டுகிறார் (மண்ட. 6. சூ. 64). இருக்குவேதத்தின் இறுதிப் பகுதியான பத்தாம் மண்டலத்தில் உலகத் தோற்றம் குறித்து ஆராயப் புகுந்த மனிதனைக் காணலாம். தத்துவ விசாரணை அப்போதுதான் மெதுவாகத் தொடங்குகிறது. ஒருவர் எண்ணத் தொடங்குகிறார். உலகத் தொடக்க காலத்தில் எதுவுமே இல்லாத சூனிய நிலை. இன்மையும் இல்லை; காற்றும் இல்லை; விண்ணும் இல்லை; இறப்பும் இல்லை; அமுத நிலையும் இல்லை; காற்றினையும் உயிர்ப்புள்ள ஏதோ ஒன்று தான் மேலே தன்னந் தனியே இருந்தது. பிறிதொன்றும் இல்லை. இருக்குவேதத்தில் பின்னர்ச் சேர்க்கப்பட்டதாகக் கருதப்படும் முதல் மண்டவத்தில் ‘ஒருவனே தேவன்’ என்ற கொள்கை ஒரு சிலரிடையே மெதுவாக உருவாகிறது. தேவன் ஒருவனே, ஆயினும், புலவர்கள் அவனை இந்திரன், வருணன், மித்திரன், அக்கினி, இயமன், மாதரிச்சுவா என்றவாறு பல பெயரிட்டு அழைக்கின்றனர் (மண்ட. 1, சூ. 164, மந். 46). பத்தாம் மண்டலத்தில்தான் உரையாடல் வகை (சம்வாதம்) இலக்கியம் காணப்படுகிறது. இதை ஆக்கியானம் என்றும் கூறுவர். பூவுலகில் வாழும் புரூரவசுக்கும் தேவகன்னிகையான ஊர்வசிக்குமிடையே ஏற்படும் காதலை மையமாகக் கொண்ட உரையாடல் (மண்ட 10, சூ. 95) போல்வன சில இதில் காணப்படுகின்றன. மற்றோர் ஆக்கியானம் சூரியன் புதல்விக்கும் சோமனுக்கும் (சந்திரனுக்கும்) நடைபெறும் திருமணம் பற்றியது (மண்ட 10, சூ. 85). சூதாட்டத்தின் தீமையை நகைச்சுவையுடன் எடுத்துக் கூறுகிறது மற்றொரு பகுதி (மண்ட. 10, சூ.34). இருக்குவேத காலத்தில் அரசனும் கிராமத் தலைவனும் இருந்திருக்கின்றனர். மந்திரங்களை ஆக்கியோருள் சிலர் பெண்பாவராகவும் இருந்துள்ளனர். உழுதல், வேட்டையாடுதல், தச்சு, மருத்துவம் முதலான தொழில்கள் பின்பற்றப்பட்டன. வேள்வி இயற்றுதல் பரவலாக இருந்தது. வேள்வி இயற்றாத வேந்தர்களும் இருந்தனர். நால் வருணத்தாருடைய பெயர்கள் பத்தாவது மண்டலத்தில் புருட சூக்தத்தில் காணப்படுகின்றன. பெ.தி