இலிங்க வழிபாடு
iliṅka vaḻipāṭu
சிவ இலிங்க வழிபாடு இலிங்க வழிபாடு எனச் சொல்லப்படுகிறது.
சிவ இலிங்க வழிபாடு இலிங்க வழிபாடு எனச் சொல்லப்படுகிறது. அரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழாய்வு செய்தபோது அங்கு அட்டபந்தனம் பூசப் பெற்ற இலிங்கங்கள் கண்டு பிடிக்கப் பெற்றுள்ளன. இவற்றிலிருந்து இலிங்கத்திற்கும் வீர சைவம், சைவ சமயம் ஆகிய வற்றிற்கும் தொடர்பு உண்டு எனத் தெரிகிறது.
பழங்கால மக்கள் இயற்கைத் தெய்வங்களை வழிபட்டனர். அவையாவன: நீர், காற்று, நெருப்பு, மரம், கல் முதலியன. வீரர்களுக்குக் கல்நாட்டி வழிபடும் வழக்கம் தொல்காப்பியர் காலத்திலிருந்து வந்துள்ளது. இதனைத் தொல்காப்பியர், ‘காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல், சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல் என்று, இரு மூன்று வகையின் கல்லொடு புணர’ என்று கூறுகிறார்.
இருக்கு வேத பாடலில் ‘சிசனதேவா’ என வரும் குறிப்புக்குப் பிறவிக்குக் காரணமான ஆண் உறுப்பு என விளக்கங் கூறி, அதன் மூலம் இலிங்க வழிபாடு என்பது ஆண் உறுப்பு வழிபாடு என்று கருதியுள்ளார் பேராசிரியர் மெக்டனால். இலிங்கம் ஆரியர்களல்லாதவரான தசுயூக்களுடையது; தசுயூக்கள் நாகரிக மற்றவர்கள்; ஆதிகால மனிதரை ஒத்தவர்கள், நாகரிகமும் விரிந்த நோக்கும் இன்மையால் அவர்கள் தாங்கள் பிறப்பதற்குக் காரணமான தங்கள் தாய் தந்தையரை வழிபட வேண்டும் என்ற எண்ணத்தில் தந்தை உறுப்பையும் தாய் உறுப்பையும் இணைத்து வழிபாடு செய்தார்கள். இலிங்கம் என்பது இவ்விரு உறுப்புகளின் இணைப்பே என்ற ஒரு கருத்தும் நிலவி வந்துள்ளது.
இலிங்கம் என்பது தூய்மையான அக்கினியைக் குறிக்கும். வேள்வியின் உயிர்நாடியாக விளங்கிய அந்தத்தீ, பின்னர்க் கோயிலில் உயிர்நாடியாக விளங்கும் மூர்த்தமாக அமைந்தபோது, அம்மூர்த்தத்திற்கும் அதுவே பெயராக அமைந்தது. இவ்வகையில் இலிங்கம் தோன்றியிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.
சைவ தத்துவ நூல்களில் அருவத்தையும் உருவத்தையும் இணைக்கும் அருவுருவ வடிவமே இலிங்கம் எனக் கூறப்படுகிறது. இலிங்கம் என்ற சொல் ஆரியமல்லாத மொழியிலிருந்து–ஆகட்ரோ – எபியாடிக்கு (Austro – Abiatic) மொழியிலிருந்து வந்திருக்கிறது. எனச் சீன் பரிலங்கி கூறுகிறார். இலிங்கம் சிவலிங்கம், இட்டலிங்கம், மகேசுவர இலிங்கம் எனப் பலவாறு பாகுபடுத்திக் கூறப்படும்.
தொடக்க காலம் முதற்கொண்டு மனித முன்னோர்கள் பேணி வளர்த்த செல்வங்களுள் கோயிலும் ஒன்று. புனித வாழ்க்கை மூலம் வளர்ச்சி பெறுவதற்கான வழி முறைகளையெல்லாம் கோயில்கள் வகுத்துத் தந்துள்ளன. சிவபெருமான் திருக்கோயில்களில் முதன்மையான தெய்வமாகத் திகழ்கிறார். சிவபெருமான் பிரமன், திருமால், உருத்திரன் ஆகியோர்களுள் ஒருவராக இருந்துவிடாமல், அவர்களுக்கு மேல் நிலையிலிருந்து அவர்களை இயக்குபவராகிய பரம்பொருளாவர். இவ்வுண்மையைக் ‘காந்தம் சிவமதத்தைவம் சாதுர்த்தம்’ என மாண்டூக்கியம் போன்ற உபநிடதங்களும், ‘மூவர் கோனாய் நின்ற முதல்வன்’ என மாணிக்கவாசகர் போன்ற சமய ஆசிரியர்களும் எடுத்துக் காட்டுவதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். சிவபெருமானுக்கு உருவமோ பெயரோ இல்லை. இருப்பினும் தம் அடியார்களுக்குக் கருணைபுரியும் முறையிலும் இவ்வுலகினைத் திருத்தும் முறையிலும் அவர் எத்தகைய உருவத்தையும் தாங்கிக் காட்சியளிக்க வல்லவராக உள்ளார். அம்பலக் கூத்தர், சந்திரசேகரர் போன்ற மூர்த்தங்கள் உருவ நிலையை விளக்குவதைக் காணலாம்.
இம்மூர்த்தங்கள் அருவத்தைக் கடந்து உருவத்தைக் கொண்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, அருவத்தையும் உருவத்தையும் கொண்டுள்ள சிவலிங்கத்தின் அமைப்பை அறிந்து கொள்வது முறையாகும். கண்ணால் காண முடியாத அருவத்தையும் கண்ணால் காணும் உருவத்தையும் ஒரே சமயத்தில் ஒரே அமைப்பில் காட்டும் அடையாளம் சிவலிங்கம் என்பதைப் பெரியபுராணத்தால் உணரலாம். ‘காணாத அருவினுக்கும் உருளினுக்கும் காரணமாம். நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்’ என்று சேக்கிழார் சாக்கிய நாயனார் புராணத்தில் குறிப்பிடுகிறார்.
சிவலிங்கம் என்னும் சொல் தெரிவித்தல் என்னும் பொருளைக் கொண்ட ‘லிக்’ என்பதிலிருந்து வந்தது எனவும், ஒவ்வொரு பொருளும் சிவபெருமானிடமிருந்து தோன்றி அவரிடம் ஒடுங்குவதைச் சிவலிங்கம் காட்டுகிறது எனவும் சிலர் கருதுவதுண்டு. கடவுள் நாத தத்துவர் ஆதலினால், நாதத்திலிருந்து விந்து தத்துவம் தோன்றிற்று எனவும், நாதம், விந்து ஆகியவை பிறைச் சந்திர வடிவம் அல்லது அரைவட்டவடிவமாகக் குறிக்கப்படுவதால், இவ்விரண்டும் சேர்ந்து சிவலிங்க வடிவத்தை அமைக்கின்றன எனவும் அறிஞர் சிலர் கருதுகின்றனர். மேலும் சிவலிங்கத்தின் உள் அமைப்பும் வெளியமைப்பும் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தைக் குறிப்பதாகத் திருமூலர், ‘இலிங்க நற்பீடம் இசையும் ஓங்காரம், இலிங்க நற்கண்டம் நிறையும் அகாரம். இலிங்கத் துள்வட்டம் நிறைவு முகாரம், இலிங்க மகாரம் நிறை விந்து நாதமே’ எனக் கூறுகிறார்.
சிவலிங்கத்தின் அடிப்பாகம் படைக்கும் தெய்வமாகிய பிரமனுக்கு உரியது எனவும்; இரண்டாம் பாகம் அல்லது நடுப்பாகம் எட்டுப் பாகங்களைக் கொண்டதாய், இவ்வகையில் எட்டுச் சத்திகளையும் மற்றும் ஒரு சத்தியாகிய ஒன்பதாம் சக்தியையும் சேர்த்து, நவசக்திகளாய்த் திருமாலாகிய காக்கும் தெய்வத்திற்கு உரியது எனவும்; மேலுச்சிப் பாகம் பெருங்கருணைப் பேராளராகிய சிவபெருமானுக்கு உரியது எனவும் சொல்லப்பெறுகிறது.
காமிக ஆகமம், சுப்பிரபாத ஆகமம். மகுடாகமம், ஆகிய ஆகமங்கள் மிகுதியான அளவில் சிவலிங்கத்தைப் பற்றிக் கூறுகின்றன. புராணங்கள் காஞ்சிபுரத்தில் உமையம்மையார் மூல லிங்கவடிவில் வழிபாடு புரிந்ததாகவும், திருமாலும் பிரமனும் திருவண்ணாமலையில் சிவலிங்க வழிபாடு செய்ததாகவும், கணேசர் மூகாசுரனை வென்ற பின்னர்த் தஞ்சை மாவட்டத்துத் திருச்செங்காட்டங்குடியில் சிவலிங்க வழிபாடு நிகழ்த்தியதாகவும், முருகப் பெருமான், சூரபதுமன் முதலியோர்களை வென்றபின் திருச்செந்தூரில் இத்தகையதொரு வழிபாடு இயற்றியதாகவும், இராவணனை வென்றபின்னர் இராமர் இராமேசுவரத்தில் சிவலிங்க வழிபாடு செய்ததாகவும் கூறுகின்றன. இராவணன் தான் சென்ற இடங்களிலெல்லாம் எப்போதும் வழிபடுவதற்காகப் பொன்லிங்கம் ஒன்றைக் கொண்டு சென்றான் என்பதும் புராணத்தாலறியப்படுகிறது.
கந்தழி என்பது சிவலிங்கத்தைக் குறிப்பதாக ஒரு சிலர் கருதுகின்றனர். திருவிளையாடற் புராணத்தின் இறுதி நிலைப் பாடல்களில், அகத்தியர் நிறுவிய சிவலிங்கத்தில் சிவபெருமான் மறைந்தார் என்னும் செய்தி கூறப்படுகிறது. திருவிளையாடற் புராணத்தில் காணப்படும் அறுபத்து நான்கு திருவிளையாடல்களுள் ஒன்று ‘வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த திருவிளையாட’லாகும். ஒரு கிணற்றின் அருகில் வன்னிமர நிழலில் இருந்த சிவலிங்கம், சான்றளித்தற் பொருட்டு அக்கிணற்றோடும் வன்னி மரத்தோடும் நீதிமன்றத்தில் காட்சியளித்ததாக ‘வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்’ விரிவாகக் கூறுகிறது. அண்டலிங்கம், பிண்டலிங்கம், ஆன்மலிங்கம், ஞானலிங்கம், சதாசிவலிங்கம் என்னும் பாகுபாட்டின் கீழ்ச் சிவலிங்க தத்துவத்தை விளக்குகிறார் திருமூலர். அண்டலிங்கம் என்பது ஆகாயம். ஆகாயம் அந்த இலிங்கத்தின் மேற்பகுதியாகவும் அதன் கீழ் உள்ள பேருலகம் அதன் கீழ்ப் பகுதியாகவும் அமைகின்றன. பேருலகமும், மரம், செடி, கொடி, மனிதன், ஆகியவையும் இக்கீழ்ப் பகுதியில் அடங்கியுள்ளன. பிண்டலிங்க தத்துவத்தில் மாந்தராதி பிண்டமாகிய உடல் சிவலிங்கமாகக் கருதப்படுகிறது. ஆன்மலிங்கம் என்பது மெய்யடியார்களின் ஆன்மாவே சிவலிங்கமாகக் கருதப்படுவது. ஞானலிங்கம் என்பது ஞானிகள் ஞானத்தையே சிவலிங்கமாக வழிபடுவதைக் குறிக்கும். சதாசிவலிங்கம் என்பது சிவபெருமான் ஐந்தெழுத்து மந்திர வடிவில் மெய்யடியார்களுக்கு நன்மை பயப்பதைக் குறிப்பது, கோயிலின் கோபுரம், கொடி, கருப்பக் கிரகம் ஆகியவையும் சிவலிங்கங்களாக வழிபடத்தக்கன. சில கோயில்களில் நூற்றெட்டுச் சிவலிங்கங்கள் உள்ளன. சில கோயில்களில் 1008 சிவலிங்கங்கள் உள்ளன. தம் நாட்டின் வட கோடியில் கேதாரலிங்கமும் தென் கோடியில் இராமேசுவரலிங்கமும் மேற்கில் சோமநாதர்லிங்கமும் சற்றுக் கிழக்கில் சிரீசைலத்து மல்லிகார்ச்சுனலிங்கமுமாக நான்கு திக்கிலும் அமைந்திருப்பதிலும் ஒரு சிறப்பு உள்ளது.
நாசிக் பஞ்சவடிக்கு அண்மையில் திரியம்பகலிங்கமும் உச்சயினில் மகாகாளேசுவர லிங்கமும், நருமதை நதிக்கரையில் ஓங்கார ஈசுவரலிங்கமும், பூனாவை அடுத்த மலைப்பகுதியில் உள்ள பீமசங்கர் லிங்கமும், குங்குமப்பூப் போன்ற மேனியர் என மராத்திய மொழிப்பெயரைக் கொண்டுள்ள குருட்ணேசுவரலிங்கமும், எல்லோராக் குகைக்கருகிலும் சௌண்டி, பர்கனி ஆகிய இரயில் நிலையங்களுக்கு அருகிலும் உள்ள நாகநாதலிங்கமும் வைத்தியநாதலிங்கமும், கங்கைக் கரையில் காசியில் உள்ள விசுவநாதலிங்கமும் பன்னிரு சோதிலிங்கங்கள் எனப்படும். இப்பன்னிரு சோதிலிங்கங்களைத் தரிசனம் செய்யவும், சிந்து, காவிரி, கங்கை, யமுனை, சரசுவதி, நருமதை, கோதாவரி என்னும் ஏழு புண்ணிய நதிகளிலும் நீராடவும் அடியார்கள் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர்.
காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு கி.பி. 600 முதல் 630 வரையில் அரசாண்ட மகேந்திரவர்ம பல்லவ அரசன், தான் சிவலிங்க வழிபாடு செய்து உயர்ந்ததாகத் திருச்சி மலைக்கோட்டைச் சிகரத்தில், தான் நிறுவிய வடமொழிக் கல்வெட்டு ஒன்றில் தெரிவித்துள்ளான்.
சிவலிங்க வழிபாடு தென்னாட்டில் மட்டுமன்றிப் பிற நாடுகளிலும் இருந்து வந்துள்ளது என்பதை மேனாட்டு ஆசிரியர் ஒருவர் குறிப்பிடுகிறார் இவ்வழிபாடு எகிப்து, சிரியா, பாரசீகம், ஆசியா மைனர், கிரீசு, இத்தாலி ஆகிய நாடுகளில் வளர்ச்சியடைந்திருந்தது என்கிறார். இவ்வழிபாடு இப்போதும் இந்தியாவிலும் ஆப்பிரிக்காக் கண்டத்தின் பல பகுதிகளிலும் வலிவுடையதாக இருந்து வருகிறது. இசுபெயின் நாட்டினர் அமெரிக்கநாட்டை முதன் முதலில் கண்டுபிடித்தபோது, அங்குச் சிவலிங்க வழிபாடு புனித வழிபாடாசுக் கொண்டாடப் பெற்றதை அவர்கள் கண்டார்கள். இவ்வழிபாடு, மனித இனத்திற்கே மிக உயர்ந்த கோட்பாடாகவும் மதிப்பிடத்தக்க உணர்வளிப்பதாகவும் கருதப்பட்டது.
சுயம்புலிங்கம் என்பது தானாகவே தோன்றும் இலிங்கம் எனப் பொருள்படும். ஏதோ ஒரு காலத்தில் அன்பர்கள் வழிபட்டு உய்ய வழி வகுக்கத் திருவுளம் கொண்ட சிவபெருமான் ஒரு கல்லில் எழுந்தருளுகிறார். அதுவே சிவலிங்கமாக மக்கள் காண்கிறார்கள்; வழிபடுகிறார்கள். திருவான்மியூரில் உள்ள இலிங்கம் இத்தகைய சுயம்புலிங்கமாரும். இது ஒரு வகையான சிவலிங்க வழிபாடாகும். மு.மு.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 394)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3pmnf8k8/
தமிழ்“இலிங்க வழிபாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3pmnf8k8/APA
Oliyon Research. (2026). இலிங்க வழிபாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3pmnf8k8/MLA
"இலிங்க வழிபாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3pmnf8k8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment