சார்கோசா கடல்
cārkōcā kaṭal
இது வட அட்லாண்டிக் பெருங்கடலில் ஒழுங்கற்ற முட்டை வடிவப் பகுதியாகும்.
இது வட அட்லாண்டிக் பெருங்கடலில் ஒழுங்கற்ற முட்டை வடிவப் பகுதியாகும். இதன் மையம் கானரித் தீவுகளிலிருந்து ஏறத்தாழ 3200 கி.மீ. தொலைவில் உள்ளது. கிரீன்விச்சுக்கு மேற்கே 20-40° வட அகலாங்கிற்கு இடையிலும் 35-75° நெட்டாங்கிற்கு இடையிலும் இது அமைந்துள்ளது. பரந்த பெருங்கடலில் இதற்குத் தனி எல்லை (கரை) இல்லை. இதைத் தனித்தறிய, இதில் மிதக்கும் கடல் தாவரங்களே உதவுகின்றன. இதில் கடல் நீரோட்டத்தின் வேகம் மிகக் குறைவாக உள்ளது. சார்கோசா கடலைச் சுற்றியுள்ள வளைகுடாவிலும், வடக்கு நிலநடு நீரோட்டப் பகுதியிலும் கடல் நீரோட்டம் மிகவும் அதிகமாயுள்ளது.
சார்கோசா என்னும் கடல் தாவரக்களையால் இதற்கு இப்பெயர் வந்துள்ளது. போர்ச்சுகீசிய மொழியில் கடல் களைகளுக்கு வழங்கும் சார்கோசா என்னும் பெயரிலிருந்து, கடலுக்கும் இப்பெயர் வந்துள்ளது. சார்கோசா என்பதற்குத் திராட்சை என்னும் வேறு பொருளும் உண்டு. இக்கடல் தாவரங்களின் சில பகுதிகள் திராட்சை போன்ற மிதவைகளாகக் காணப்படுவதாலும், இப்பெயர் வந்திருக்கலாம்.
இக்கடலைப் பற்றிய முழு விவரங்களையும் முதன் முதலில் ஆய்ந்தளித்தவர் கிரிஸ்டோஃபர் கொலம்பஸ் ஆவார். 1492இல் இவர் பயணம் செய்தபோது, இக்கடலில் பாறைகளேயில்லை என்பதைக் கண்டறிந்தார். கடலியல் வல்லுநர் இக்கடலைப் பற்றி நன்கு ஆய்வு செய்து, இதன் பரப்பளவு ஏறத்தாழ 5 மில்லியன் ச. கி.மீ.எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகளின் கரைகளிலிருந்து காற்றாலும், அலையாலும் தள்ளப்பட்ட கடற்களைகள் இப்பகுதிக்கு வந்திருக்கலாமெனத் தெரிகிறது. இவற்றில் ஒரு பகுதிக் களைகள் பரந்த கடற்பரப்பில் வளர்ந்து, பல்கிப் பெருகுவதற்கான தகவமைப்பைப் பெற்றிருந்தன. இக்களைகள், விதைகள் இல்லாமலே இனப்பெருக்கம் செய்ய வல்லவை. முதிர் களைகளை அலை நீர் அடித்துச் சிதற விட்டு, இச்சிதறல் மீண்டும் அலைகளால் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு வளர்ந்து முதிர்ந்தன. களைகளில் உள்ள காற்று நிறைந்த குமிழ்ப் பகுதிகள், மிதவைகளாகப் பயன்படுகின்றன.
சார்காசம் உலகில் பல கடற்பகுதிகளிலும் உள்ளது. இதில் ஒரு வகையை ஜப்பானில் உணவாகப் பயன்படுத்துகின்றனர். சிறு நண்டு, இறால், பார்னகிள் போன்ற உயிரிகள் இக்களைகள் மீதும், ஊடேயும் வாழ்கின்றன. கடலின் ஆழ்பகுதியில் (350 மீ) வாழும் சார்கோசா மீன்கள் உருவத்திலும், அமைப்பிலும் சார்கோசா களைகளை ஒத்துள்ளமையால், இவற்றை எளிதில் கண்டறிய முடிவதில்லை. —கே. கே. அருணாசலம்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 100)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3g8bkqzf/
தமிழ்“சார்கோசா கடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3g8bkqzf/APA
Oliyon Research. (2026). சார்கோசா கடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3g8bkqzf/MLA
"சார்கோசா கடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3g8bkqzf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment