கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சிவ பக்தர். இவர் புலவரைப் போற்றும் புரவலராகவும் விளங்கினார். இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள துறைமங்கலத்தைச் சேர்ந்தவர்; தெலுங்கு ரெட்டி வகுப்பினர். இவர் திருவெங்கனூரில் சிவன் கோயில் ஒன்றினைக் கட்டினார். இவர் கோயில் கட்டிய செய்தி அக்கோயிலிலுள்ள கல்வெட்டு ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டால் இரண்டாம் வேங்கடபதி என்னும் விசயநகர மன்னன் காலத்தில் இவர் வாழ்ந்தவர் என்பது தெரிகிறது இவர் சிவப்பிரகாச சுவாமிகளை ஆதரித்து வந்தார். அதனால் சிவப்பிரகாசர் தாம் இயற்றிய திருவெங்கை உலாவில் ‘பண்டை அறத்தின் படிவமிது வென்னவுருக் கொண்ட இலிங்கையன்’ என இவரைப் பாராட்டியுள்ளார்.