அசின்கோர்ட் போர்
aciṉkōrṭ pōr
இங்கிலாந்து நாட்டு வரலாற்றில் என்றும் நினைவில் நிலைத்துவிட்ட போர்களுள் ஒன்று.
இங்கிலாந்து நாட்டு வரலாற்றில் என்றும் நினைவில் நிலைத்துவிட்ட போர்களுள் ஒன்று. கி.பி. 1415–ஆம் ஆண்டில் பிரான்சிலுள்ள சிற்றூராகிய அசின்கோர்ட்டில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் நடந்த கடும் போரினால் அந்த இடம் உலகப் புகழ் பெற்றுவிட்டது.
இருநூறு ஆண்டுகளாக ஆங்கில அரசர்களும் குறுநில மன்னர்களும் பிரெஞ்சு நாட்டிலுள்ள நிலங்களுக்காகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதையொட்டி நடந்த போராட்டங்கள் நூற்றாண்டுப் போர் எனக் குறிக்கப்படுகிறது. ஆங்கிலேயருக்கு வெற்றி தோல்வி மாறி மாறிக் கிடைத்து வந்தது. மூன்றாம் எட்வர்டு காலத்தில் வெற்றி பெற்ற அவர்கள், இரண்டாம் ரிச்சர்டு காலத்தில் தோல்வியுற்றுச் சில நிலங்களை இழந்தனர். இழந்த நிலங்களை மீட்கவும் பிரெஞ்சு அரியணையைக் கைப்பற்றவும் ஆங்கிலேயர் உறுதி கொண்டனர். ஐந்தாம் என்றி (Henry V) பிரெஞ்சுக்காரர்களுக்குச் சொந்தமான ஆர்பிளார் என்னுமிடத்தைக் கைப்பற்றினார். கைப்பற்றிய பின், வேண்டிய உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும், பல போர் வீரர்கள் உடல் நலக் குறைவுற்றதாலும், தமக்குச் சொந்தமான கலே என்ற இடத்திற்குச் சென்று, கப்பல் மூலம் இங்கிலாந்து செல்ல அவர் முடிவு செய்தார். அவ்வாறே தமது படையை அணிவகுத்துக் கலேயை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
இந்த வாய்ப்பினைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த எண்ணி, கலேக்கு 72 கி.மீ. தொலைவில் உள்ள அசின்கோர்ட், திராம்கோர்ட் என்ற இரண்டு சிற்றூர்களுக்கு இடையேயுள்ள நீண்டதும் மிக ஒடுக்கமானதுமான காட்டு வழியில், பிரான்சு தனது படையை நிறுத்தி, கலேக்குச் செல்லும் வழியைத் தடுத்துவிட்டது. வடவெளியில் அசின்கோர்ட்டிவ் சார்லசு டி ஆல்பர்ட் என்பாரின் தலைமையில் படை வீரர்கள் நின்றனர். நல்ல மழையால் ஆறுகள் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடின. அதனால், ஆங்கிலேயர் சோம் என்ற ஆற்றைக்கடந்து வரக் காலதாமதமானது. இந்தச் சமயத்தைப் பிரான்சு தன் வீரர்களின் எண்ணிக்கையைப் பெருக்கப் பயன்படுத்திக் கொண்டது. ஆர்பிளார் இடத்தை வேண்டுமானால் திரும்பக் கொடுத்து விடுவதாகவும், அதற்குப் பதிலாக கலேக்குச் செல்ல வழி விடுமாறும் ஆங்கிலேயர் வேண்டினர். ஆனால், பிரெஞ்சுக்காரர் அவ்வேண்டுகோளை ஏற்க மறுத்தனர். கி.பி. 1415, அக்டோபர் 24–ஆம் நாள் இரவெல்லாம் மழை. படைகள் வெளித் தரையிலேயே இரவைக் கழித்தன. ஆங்கிலப் படைக்கு ஒதுக்கிடமே கிடைக்கவில்லை. அப்படை பசியுடன் உறங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. பிரெஞ்சுப் பாசறையில் ஒளிவிட்டு தீ எரிந்தது. வெற்றி கிட்டிவிடும் என்ற ஆர்வமும் களிப்பும் பிரெஞ்சுக்காரர்க்கு உண்டாயின.
கி.பி. 1415, அக்டோபர், 25 விடிந்தது. என்றியினிடம் (Henry) ஆயிரம் வீரர்களும் 6000 நீண்ட வில் வீரர்களும் இருந்தனர். படைக்கலம் தாங்கிய வீரர்களை நான்கு அடுக்கு வரிசையாக மையப் படுத்தி நிறுத்தி, வில் வீரர்களைப் படை வகுப்பின் பக்க அணியாக இருபக்கமும் அவர் நிறுத்தினார். அவரே மையப் படைக்குத் தலைமை தாங்கினார்.
அசின்கோர்ட் போர்முனை
எதிர்ப்பக்கத்தில் இருந்த பிரெஞ்சுப் படைக்கும், அவர்களுக்கும் 333மீ. இடைவெளிதான் இருந்தது. அவர்கள் எண்ணிக்கையோ ஆங்கிலேயர் படையை விட நான்கு மடங்கு மிகுதியாக இருந்தது. ஐந்து ஆறு வீரர்களைக் கொண்ட அடுக்கு வரிசையாகப் படைக்கலம் தாங்கிய வீரர்கள் முதல் இரண்டு வரி- சைகளிலும், வீரப் பெருந்தகை எனப்பட்டம் பெற்று, உயர்குடிப் பிறப்பாளர்களைக் கொண்ட குதிரைப் படைகள் மூன்றாம் வரிசையிலும், பக்கத்திற்கு 600 பீரங்கிகளைக் கொண்ட பீரங்கிப் படைகள் இரு மருங்கிலும் நிற்க, குறு வில்லாளர்கள் இறுதியிலுமாக மிகப் பெரும் படை உருவாக்கப்பட்டது. ஆங்கிலப் படைகள் போர்புரிய வேண்டும் அல்லது பசியினாலும் குளிரினாலும் மாண்டுமடிய வேண்டும் என்ற நெருக்கடியான நிலை. மூன்று மணி நேரம் படைகள் அசையாது நின்றன. என்றி (Henry), தலைசிறந்த படைத் தலைவர்; படை வீரர்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றவர். அவர்களின் கடந்த கால வெற்றிகளை நினைவில் கொள்ளவும், தாயகமாகிய இங்கிலாந்து இப்போரில் வாகை சூடவும், அவர்களின் மனைவிமார்களையும் குழந்தைகளையும் பெற்றோர்களையும் நினைவிற் கொண்டு போர் புரியவேண்டுமென அரசர் அவர்களை ஊக்குவித்தார். தங்கக் கவசத்தையும் விலை மதிப்பற்ற கற்கள் பதித்த தங்க முடியையும் அணிந்து கொண்டு அவர் படைகளுக்குத் தலைமை தாங்கினார்; முன்னேறும்படி கட்டளையிட்டார். வில் வீரர்களை எதிரிகளுக்கு அருகில் சென்று அம்பு எய்யும்படி கூறினார். அதன்படி அம்பு மாரி பொழித்தனர். குதிரைப்படை வீரர்களும் படைக்கல வீரர்களும் அம்புகளிலிருந்து தப்பிக்க முடியவில்லை. பிரெஞ்சுப் படை முன் வர முயன்றது. மிகப் பளுவான கவசங்கள் ஒரு பக்கம்; கால்கள் மண்ணில் புதைந்து கொள்ளும் நிலை மற்றொரு பக்கம். அம்பு மாரிக்குத் தப்பி மையத்தினை நெருங்கினர் வீரர்கள். மிகக் குறுகிய இடம். மேலும், பெரும் எண்ணிக்கையில் படைவீரர்களின் குழப்பமும் நெரிசலும் மிகுந்தன. கவசம் அணிந்த வீரர்கள் சுடுவதற்குக் கையைத் தூக்கப் போதுமான இடமில்லை. பின்வரிசை முன்னேற முன் இருந்தவர் பலர் நெரிசலில் கீழே உருண்டனர். இச்சமயத்தில் ஆங்கிலப் படை வீரர்கள் சிறு கோடரியையும் கத்தியையும் எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தத்தளிக்கும் பிரெஞ்சுப் படைக்குள் புகுந்து அவர்களைக் கொன்று குவித்தனர். பிரெஞ்சுக் குதிரைப் படை ஆங்கிலப்படைக்குப் பின் சென்று என்றியைப் பிடிக்க முயன்றது; முடியவில்லை, பிரெஞ்சுத் தலைவரும் கொல்லப்பட்டார். பிரெஞ்சுப் படை பட்டறிவைப் பயன்படுத்திச் செயற்பட மறுத்து விட்டது. தொன்றுதொட்டு வரும் போர்த் தள வாடங்களைப் புதிய தேவைக்கேற்ப மாற்றி அமைக்கத் தவறியதால் பிரெஞ்சுக்காரரிடம் மிகப் பெரிய படையிருந்தும் அவர்கள் பெரும் தோல்வியே அடைந்தார்கள். ஆங்கிலப்படை சூழ்ச்சித் திறனைப் பயன்படுத்தி வெற்றி பெற்றது, என்றிக்கு இது மாபெரும் வெற்றியாகும். செகப்பிரியர் (Shakespeare) தம் நாடகத்திலும் அசின்கோர்ட் போரைச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். எச்.நி.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 179)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3a83kw44/
தமிழ்“அசின்கோர்ட் போர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3a83kw44/APA
Oliyon Research. (2026). அசின்கோர்ட் போர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3a83kw44/MLA
"அசின்கோர்ட் போர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3a83kw44/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment